சட்டசபையில் கமல்ஹாசன்…

கமல் தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது என்று இங்கே எழுதியிருந்தேன். கமல் சரத்குமார் அல்ல என்பது நமக்குத் தெரியும். நான் எழுதியிருந்ததன் உள்ளர்த்தம், அவர் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றால் அவர் கட்சிக்கு ஒன்று இரண்டு சீட் கிடைப்பது கூட நிச்சயம் இல்லை என்பதுதான். கமலுக்கும் டெபாசிட் கிடைக்காமல் போகலாம். ஆனால் அவர் திமுகவுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் டெபாசிட் காப்பாற்றப்படும். ஆனால் வேறு எல்லா விஷயங்களும் கப்பல் ஏறி விடும். இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்றுதானே கட்சியே ஆரம்பிக்கிறார்? ராமதாஸும், திருமாவளவனும் தனியாகவே நின்று தேர்தலை எதிர்கொண்டிருந்தால் இன்று இப்படி ஒரு வெற்றிடம் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்காது. அன்புமணியோ திருமாவோதான் முதல்வராக இருந்திருப்பார்கள்.

இப்போது என் அன்பு நண்பர் எஸ்.வி. சேகர் என் கருத்து பற்றி பின்வருமாறு சொல்கிறார்:
”KAMAL நிற்கும் தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அப்படியான வியூகம் அமைக்கப்படும். எல்லார் ஆதரவுடன். அதுதான் அரசியல்.”

எஸ்.வி.சேகர் சொல்வது போல் கமல் மட்டும் வெற்றி பெற்று எம்மெல்லேவாக சட்டசபையின் உள்ளே தனியாகப் போனால் அந்த நாளை நான் வரவேற்க மாட்டேன். அவர் எடப்பாடியோடும் ஓபிஎஸ்ஸோடும் டிடிவி தினகரனோடும் சட்டசபையில் விவாதம் செய்யும் காட்சியை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. மகாநதியில் தன் பணமெல்லாம் மோசடி செய்யப்பட்டதை அறிந்து ஒரு பரிதாபமான முகத்தோடு இருப்பார் இல்லையா, அதை நேர் வாழ்வில் அவர் அனுபவிப்பதை விரும்ப மாட்டேன். முப்பது ஆண்டு காலம் அவரை நான் என் ஸஹ்ருதயராகக் கருதியிருக்கிறேன். மகாநதியில் இன்னொரு உருக்கமான காட்சி உண்டு. எதைச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். என்ன ஒரு அழுகை, என்ன ஒரு துக்கம். அதற்குச் சமமான மன அழுத்தத்தையும் சோர்வையும் தேர்தலில் தனியாக ஒற்றை ஆளாக ஜெயித்தால் அனுபவிக்க வேண்டும்.

முதல்வராக ஆசைப்பட்டவர், வெறும் எம்மெல்லேவாக ஆவது… வேண்டாம் அந்தக் கற்பனை…