வயது

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் என்னை பெருசு என்று குறிப்பிட்டார்.  விளையாட்டாக எடுத்துக் கொண்டேன்.  பொருட்படுத்தவில்லை.  இரண்டு நாட்கள் கழித்து மீண்டும், உங்களுக்கு வயதாகி விட்டது என்றார்.  பிறகு இன்றும் அதே பேச்சை அவரிடமிருந்து கேட்க நேர்ந்தது.  ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை கொண்டவர்கள் என்பதால் அவருக்கு நான் நேரடியாக பதில் சொல்ல விரும்பவில்லை.  அறுபதுக்கு மேல் ஆனால் வயதாகி விட்டது என்பது ஒரு அணுகுமுறை.  ஆனால் 90 வயது ஆனாலும் வயதாகாது என்பது இன்னொரு அணுகுமுறை.  எங்கள் ஊரில் 70 வயது ஆனவர்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். அப்படிக் குழந்தை பெற்றுக் கொண்ட ஒருவரிடம் ஒரு இளைஞன்  தாத்தா, உங்க குழந்தை உங்க ஜாடையில் இல்லையே என்று கேட்க, டேய் பைத்தியாரா, உன் குழந்தையோட ஜாடையும் என் ஜாடையும் ஒண்ணா இருக்கே, அதைப் பத்தி என்னிக்காச்சும் யோசிச்சு இருக்கியா என்று ஊருக்கே தெரிந்த ரகசியத்தைப் போட்டு உடைத்து அவனை மான பங்கம் செய்தார்.

சமீபத்தில் ஒரு நீண்ட கால நண்பரைச் சந்தித்தேன்.  வயது 62.  அடிக்கடி கைபேசியை உருட்டிக் கொண்டிருந்தார்.  பார்த்தால் கேர்ள் ஃப்ரெண்ட்.  அதுவும் இரண்டாம்.  சும்மா கதை அல்ல; அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியும் வைத்தார்.  அவர் ஒரு எழுத்தாளர்.  அவரைப் பார்த்தால் அந்த மாதிரி ஆள் என்று சொல்லவே முடியாது.  வயது பற்றி அவர் ஒரு சம்பவம் சொன்னார்.  இளம் வயதில் நோஞ்சானாக இருந்தாராம்.  அப்போது 90 வயதான அவர் தாத்தா நீ என் பெயரைக் கெடுத்து விடுவாய் போலிருக்கிறதே என்று ஆரம்பித்து பெரிய அறிவுரை சொல்லியிருக்கிறார்.  90 வயதிலும் அவருக்குத் தொடுப்பு எடுப்பு எல்லாம் இருந்திருக்கிறது.

நகரங்களில் வாழும் மனிதர்கள் மாத்திரைகளாய் முழுங்கி முழுங்கி நாற்பது வயதிலேயே கிழடு தட்டிப் போய் விடுகிறார்கள்.  சிறுநீர் கழிப்பதற்கு மட்டுமே உபயோகப்படும் வஸ்துவாக எங்கோ முடங்கிப் போய் விடுகிறது சாமான்.  பாவம்.  இது பற்றித்தானே ஆயிரம் பக்கம் எக்ஸைல் என்று நாவலே எழுதியிருக்கிறேன், என்னிடம் வந்து வயது பற்றிப் பேசலாமா?

நம் மக்களின் மனோபாவம் இது.  சினிமா நடிகன் என்றால் மட்டும் அவனுக்கு வயதே ஆகாது; எழுத்தாளன் என்றால் நாற்பதிலேயே கிழவன் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.  கமலுக்கு இப்போது என்ன வயது?  62.  அவரைப் பார்த்து முதியவர், கிழவர் என்று சொல்வீர்களா?  ரஜினியைப் பார்த்து அப்படிச் சொல்வீர்களா?  நான் திரும்பத் திரும்ப சொல்லி விட்டேன், நான் ஒரு ஐரோப்பியனைப் போல் வாழ்பவன் என்று.  ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் டென் டௌனிங் பப்பில் ஒரு சனிக்கிழமை அன்று என் தோழியோடு இரண்டு மணி நேரம் டான்ஸ் ஆடினேன்.  ஆனால் தப்பான ஒரு டச் இல்லை.  டான்ஸ் வேறு; காதல் வேறு.  மூன்று தினங்களுக்கு முன்பு பெங்களூரில் Humming tree என்ற பப்பில் ஒரு மணி நேரம் டான்ஸ் ஆடினேன்.  இதெல்லாம் ”தமிழன் ” மனோபாவம் கொண்ட தமூள் எழுத்தாளரால் முடியுமா?  அது ஏன் ஐயா, சினிமா ஹீரோ செய்தால் ஜொள்ளு விடுகிறீர்கள், எழுத்தாளன் செய்தால் வலிப்பு காட்டுகிறீர்கள்?  ஷாருக் கானுக்கு எத்தனை வயது?  உடம்பு அவர்களுக்கு மூலதனம், அதனால் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்கள்.

என்னால் இப்போதும் ஒரு திருமணம் செய்து ஆறேழு குழந்தைகளைப் பெற்றுத் தள்ள முடியும்.  ஏக பத்தினி விரதனாக இருக்கிறேன்.  அதுதான் தடை.  இப்படியெல்லாம் எழுத எனக்குத் தயக்கமாகவே இருக்கிறது.  இருந்தாலும் இதை – என்னை வயதானவன் என்று சொல்வதை – என் மீது செலுத்தப்படும் கலாச்சாரத் தாக்குதல் என்று கருதுவதால் மட்டுமே இதை எழுதுகிறேன்.  உங்களுக்கு மாமிசம் ஆகாது; எனக்கு அதுதான் ப்ரீதியான உணவு என்பதைப் போல் ஆனது இந்த விஷயம்.  உங்களுக்கு 40 வயதில் வானப்ரஸ்தம்.  எனக்குத் தொண்ணூறிலும் காமப்ரஸ்தம்தான்.  எங்கள் கலாச்சாரம் அப்படிப்பட்டது.  உங்கள் கலாச்சார விழுமியங்களைத் தயவு செய்து என் மீது திணிக்காதீர்கள்.

ஆனால் மேற்கில் இந்த நிலை இல்லை.  சல்மான் ருஷ்டி ஒரு இளம் பெண்ணோடு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.  அதே போல் ஓரான் பாமுக்குக்கும் கிசுகிசுக்கள் உண்டு.  அவர்களும் அறுபதைத் தாண்டியவர்கள்தான்.  என் போறாத காலம்.  இங்கே வந்து மாட்டிக் கொண்டு இது போன்ற பேச்சுக்களைக் கேட்க வேண்டியிருக்கிறது.