வாழ்வும் இலக்கியமும்

சமயங்களில் நண்பர்கள் கேட்பதுண்டு, ஹெடோனிசம் என்று சொல்லி விட்டு ஏதோ ஆன்மீக சமாச்சாரங்களைப் பற்றி எழுதுகிறீர்கள், என்ன விஷயம்? ஹெடோனிசம் என்றால் வாழ்க்கையைக் கொண்டாடுதல். ஒரு மனிதனை அரசு சிறையில் போட்டு விட்டது; அவன் எப்படிக் கொண்டாடுவான்? கொண்டாட முடியும். அந்தச் சிறை வாழ்க்கையையே ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டால் முடியும். 1972- ஆம் ஆண்டு. மொராக்கோ மன்னர் இரண்டாம் ஹசன் தனது 42-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே சில ராணுவ லாரிகள் வந்தன. அதிலிருந்த 1100 சிப்பாய்களுக்கும் அவர்களின் அதிகாரிகள் உத்தரவிட்டனர்: ”மன்னரையும் விருந்தினர்களையும் சுட்டுக் கொல்லுங்கள்.” ஒருக்கணம் சிப்பாய்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அரண்மனைக்குப் போக வேண்டும் என்று சொல்லித்தான் அழைத்து வந்தார்கள். இப்போது மன்னரையே சுடுவதா? ஆனால் சிப்பாய்களைப் பொருத்தவரை, அதிகாரிகள் சொல்வதுதான் வேதவாக்கு.
எல்லாம் முடிந்த பிறகுதான் அது ஒரு ராணுவப் புரட்சி என்றே தெரிந்தது. நூறு விருந்தினர்கள் – மன்னரின் நண்பர்களும் உறவினர்களும் – பலி ஆயினர். ஆனாலும் மன்னர் நல்ல புத்திக்கூர்மையும் சமயோஜித அறிவும் கொண்டவர் என்பதால் தன்னுடைய அந்தரங்கப் பாதுகாவலர்களைக் கொண்டு கலகத்தை அடக்கி விட்டார். அப்போது அவர் மனதில் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பு எப்படி இருந்திருக்கும்? தான் நம்பியவர்களே தனக்கு துரோகம் இழைத்து, தன்னையும் தன் குடும்பத்தையும் அழிக்க முடிவு செய்து விட்டார்களே? இவர்களைக் கொல்வதா தண்டனை? க்ஷண நேரத்தில் இறப்பது அவர்களுக்கு அளிக்கப்படும் பரிசு அல்லவா? இவர்களை எப்படித் தண்டிக்கலாம்? பலவாறு யோசித்தார். பிறகு உலகத்தில் எங்கேயும் இல்லாத வகையில் யாருமே கேள்விப்பட்டிராத முறையில் ஒரு சிறையை உருவாக்கி அதில் அவர்களை அடைத்தார்.
அப்படி ஒரு சிறை இருப்பதே மன்னரையும் அவரது நம்பிக்கைக்குரிய சிலரையும் தவிர யாருக்கும் தெரியாது. பல ஆண்டுகள் சென்ற பிறகுதான் அந்த விஷயம் வெளியே வந்தது. சவப்பெட்டியை வைப்பதற்காக வெட்டப்படும் புதைகுழியை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதுதான் அந்தச் சிறை. பூமிக்கு அடியில் பத்து அடி நீளம், ஐந்து அடி உயரம் கொண்ட ஒரு அறை. மொராக்கர்கள் ஆறு அடிக்கும் மேல் உயரமானவர்கள் என்பதால் அதில் அடைக்கப்பட்டவர்களால் எழுந்து கூட நிற்க முடியாது. சிறைக்கு உள்ளே தரையில் ஒரு சிறிய பொந்து இருக்கும். அதில்தான் மலஜலம் போக வேண்டும். சிறையின் மேலே ஒரு சிறிய திறப்பு இருக்கும். அதன் மூலம் ஒரு ஆள் அரைப்பட்டினியோடு உயிர் வாழ்வதற்கு எத்தனை ரொட்டி தேவையோ அத்தனை ரொட்டியும் சிறிது தண்ணீரும் அனுப்பப்படும். சிறைச்சாலையின் விசேஷம் இதெல்லாம் அல்ல. மன்னர் ஹசனின் மனதில் ஒரு நூதனமான எண்ணம் தோன்றியது. ஒரு மனிதன் தான் சாகும் வரை வெளிச்சத்தையே பார்க்காமல் இருந்தால் எப்படி இருக்கும்? அதைச் செய்தார் ஹசன். கல்லறைச் சிறையின் உள்ளே ஒரு பொட்டு வெளிச்சம் இருக்காது. கையால் அள்ளலாம் போல் இருட்டு. கைதிகள் சாகும் வரை அந்தக் கும்மிருட்டிலேயே கிடந்து மடிய வேண்டியதுதான். இப்படி ஒரு அறை அல்ல; 58 அறைகள். 58 கைதிகள். ஆனால் அவர்களில் பலர் மீது எந்தத் தவறும் இல்லை. அதிகாரிகளின் உத்தரவைக் கேட்டு நடந்தார்கள். மேலும் பல சிப்பாய்கள் அதிகாரிகளின் உத்தரவை நிறைவேற்றவும் இல்லை. மன்னரைப் போய் எப்படிச் சுடுவது என்று சும்மா இருந்து விட்டார்கள். ஆனால் மன்னர் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. எதிர்த்தவனைத் தீர்த்துக் கட்டு.
சிறை என்ற அந்த இருட்டுப் பொந்தின் உள்ளே எக்கச்சக்கமான கரப்பான்பூச்சிகளும் தேளும் பூரானும் இருந்தன. அதையெல்லாம் தொட்டும் கடிபட்டும்தான் உணர முடிந்தது. பைத்தியம் பிடிக்கச் செய்யும் இருட்டு ஆயிற்றே? சிலருக்குப் பைத்தியமும் பிடித்தது. பைத்தியம் முற்றிச் செத்தார்கள். சிலர் தேள்கடியில் செத்தார்கள். சாகும் வரை இருட்டு என்றாலும் மன்னர் ஒரே ஒரு சலுகையை அவர்களுக்கு வழங்கியிருந்தார். (அந்தச் சலுகையே அந்தச் சிறை பற்றி ஃப்ரான்ஸுக்கும் அதன் மூலம் மற்ற நாடுகளுக்கும் தெரிய காரணமாகி விட்டது என்பது வேறு விஷயம்.) சலுகை என்னவென்றால், கைதி யாராவது இறந்தால் அவர்களை அடக்கம் செய்வதற்கு எல்லா கைதிகளும் மையத்தாங்கொல்லைக்குப் போகலாம். ஆக, அந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் அவர்களால் வெளிச்சத்தைப் பார்க்க முடிந்தது. ஆனால் கடும் பாதுகாப்பு உண்டு.
அப்படி ஒருமுறை மைய்யத்துக்கு (மரணம்) வெளியே வரும் போது ஒரு கைதியின் உறவினர் பாதுகாப்புப் பணியில் இருந்ததால் அந்தக் கைதி ஒரு சிறிய தாளில் குறிப்பு ஒன்றை வெளியே அனுப்பி அதன் மூலம் அந்தச் சிறை பற்றி வெளியுலகம் அறிந்தது. சிறையை மூட வேண்டும் என்று ஐந்து ஆண்டுகள் ஐரோப்பிய நாடுகள் மன்னர் ஹசனோடு பேசி கடைசியில் சிறை மூடப்பட்டது.
உயிர் பிழைத்த ஐந்து பேரில் சலீமும் ஒருவர். சிறைக்குப் போகும் போது சலீமுக்கு அத்தனை இறை நம்பிக்கையெல்லாம் கிடையாது. ஆனால் உள்ளே தன் சகாக்கள் ஒவ்வொருவராக நம்பிக்கை இழந்து இருட்டில் கிடந்து செத்துக் கொண்டிருந்த போது சலீம் தனக்கு மனனம் ஆகியிருந்த குரானை வாய் விட்டு ஓதிக் கொண்டிருந்தார். நேரம் தெரியாது, நாள் தெரியாது, எத்தனை மாதங்கள் கடந்தன என்று தெரியாது, எத்தனை ஆண்டுகள் இந்த இருட்டுப் பொந்தில் கிடந்தோம் என்று தெரியாது. சாகும் வரை இந்த இருட்டுதானா? தெரியாது. காலமே அந்த இருட்டைப் போல் உறைந்து போய் இருந்தது. நரகம் என்று சொல்வார்களே, அது இப்படித்தான் இருக்குமோ? எப்படி இருந்தாலும் குரான் ஓதுவதை மட்டும் விடக் கூடாது என்று ஓதிக் கொண்டே இருந்தார் சலீம். திடீரென்று சலீமின் குரல் கேட்காது. ”சலீம், ஏன் ஓதுவதை நிறுத்தி விட்டீர்? சலீம்… சலீம்…?” சலீமுக்கு அந்தக் குரல் எங்கோ தொலைதூரத்திலிருந்து கேட்பது போல் இருக்கும். கனவா நனவா தெரியாது. தூங்கிக் கொண்டிருக்கிறேன் நண்பர்களே, எழுந்ததும் ஓதுவேன் என்று முனகுவார். உடனே சலீமின் நண்பர் அவர் விட்ட இடத்திலிருந்து ஓதுவார். அவர் விட்ட இடத்திலிருந்து மற்றொருவர். இப்படி எத்தனைக் காலம் ஓதியிருக்கிறார்கள் தெரியுமா? 13 ஆண்டுகள். அப்போது அந்த ஐந்து பேரும் உணர்ந்த ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர்களின் உடம்புதான் அங்கே இருந்திருக்கிறது. ஆன்மா மெக்காவில் இருந்தது. இதைப் படிக்கும் உங்களால் நான் சொல்வதை நம்ப முடியாது. ஆனால் இது நடந்த கதை. தாஹர் பென் ஜெலோன் என்ற மொராக்கோ தேசத்து எழுத்தாளர் ஃப்ரெஞ்சில் எழுதிய The Blinding Absence of Light என்ற நாவல். சிறையிலிருந்து உயிர் பிழைத்த சலீம் சொல்லக் கேட்டு எழுதியது. நிழலற்ற பெருவெளி என்ற தலைப்பில் அர்ஷியா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நான் சொல்ல வந்தது அது அல்ல. நம்பிக்கை. ஒரு இருட்டுப் பொந்தில் அடைபட்டுக் கிடந்தாலும் அந்த நரகத்தை சொர்க்கமாக மாற்றியவர் சலீம். இருட்டுச் சிறையில் கிடந்து கொண்டே எங்கோ இருக்கும் மெக்காவில் அவர் பார்த்த காட்சிகள் எதுவும் கற்பனை அல்ல. அவர் வர்ணித்த சம்பவங்கள், பார்த்த மனிதர்கள் எல்லாம் அவர் பாதாளச் சிறையில் இருந்த போது மெக்காவில் நடந்துள்ளன.
நண்பர்களே, இறை சக்தி எல்லா மதங்களையும் தாண்டியது. ஒரு துறவி இமயமலையில் ஒரு இருட்டுக் குகையில் தவம் இருந்தார். எந்த மனிதரையும் பார்க்காமல், உண்ணாமல், உறங்காமல், குளிக்காமல் 11 மாதங்கள் தியானத்திலேயே இருந்தார் அந்த ஞானி. அவரது அனுபவத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்.

குமுதத்தில் வெளிவந்த கட்டுரை