அரசு பயங்கரவாதம்

தன்னை நிர்வாணமாகப் படம் வரைந்த கேலிச் சித்திரக்காரரை போலீஸை விட்டுக் கைது செய்திருக்கிறார் நெல்லை கலெக்டர். அவரே செய்யவில்லை. அவர் புகார் மட்டுமே கொடுத்தார். போலீஸ் நடவடிக்கை எடுத்தது. என்ன வேகம் பாருங்கள்! இந்த வேகத்தை இசக்கிமுத்துவின் புகார் மீது காட்ட வேண்டியதுதானே ஐயா? ஆக, ஆள்பவனுக்கு ஒரு சட்டம். ஆண்டிக்கு ஒரு சட்டம். அப்படித்தானே? அதை ஒத்துக் கொள்ளுங்கள். ஏன் இப்படி அரசியல் நிர்ணயச் சட்டத்தையெல்லாம் மேற்கோள் காட்டி நாடகம் ஆடுகிறீர்கள்?

சரி, அம்மணமாகப் படம் வரைந்தவரைக் கைது செய்தாயிற்று. அம்மணமாகப் படம் வரைந்ததற்கே கைது என்றால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொள்வதற்குத் தன்னுடைய செயலின்மை மூலமாகக் காரணமாக இருந்த கலெக்டருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம், சொல்லுங்கள்?

அரசு பயங்கரவாதம் என்பதை எமெர்ஜென்ஸிக்குப் பிறகு நான் நேரடியாகப் பார்த்ததில்லை. இப்போது அரசை எதிர்த்தால் என்னையும் கைது செய்து விடுவார்களே என்று அச்சம் கொள்கிறேன். இந்த அச்சத்தை ஒவ்வொரு மனிதனின் மனதிலும் உருவாக்குவதுதான் அரசு பயங்கரவாதம்.