The Marginal Man

ஐந்தாறு ஆண்டுகள் ஆயிற்று எக்ஸைல் எழுத. அதற்கப்புறம் அதன் ஆங்கில மொழிபெயர்ப்போடு போராடி, ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களோடு மல்லுக்கு நின்று எடிட் பண்ணி திருத்தி, வெட்டி, திரும்பச் சேர்த்து, திரும்பவும் எடிட் பண்ணி, அதுவும் போதாமல் திரும்பவும் எழுதி, அதையும் எடிட் பண்ணி கடந்த ஆறு மாதங்களாக இதே சிந்தனையாக இருந்து இப்போது தெ மார்ஜினல் மேன் ஆங்கில மொழிபெயர்ப்பின் எடிட்டிங் வேலையை முடித்து விட்டேன். முதல் வேலையாக அதை மொழிபெயர்த்த காயத்ரிக்கு அனுப்பி வைத்தேன். எடிட் செய்தது நான் என்பதால் நான் என்னென்ன கைங்கரியம் பண்ணியிருக்கிறேன் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டுமே? அடுத்து என் உயிர் நண்பர் ஒருவருக்கும் அனுப்பி வைத்தேன். பெயர் சொன்னால் இப்போதைக்கு நல்லதல்ல. அடுத்து, நண்பர் ஒருவரின் மனைவி உலக இலக்கிய வாசகி. உலகப் புகழ் பெற்ற தன் கணவனை உருவாக்கி செதுக்கியதும் அந்தப் பெண்மணி தான். அவருக்கு அனுப்பியிருக்கிறேன். உடனே படித்து விடுவதாகச் சொன்னார். இந்நேரம் படிக்க ஆரம்பித்திருப்பார்.

இறைவனின் அருள் இருந்தால் ஒரு எழுத்தாளரின் முன்னுரை கிடைக்கும். சர்வ தேச அளவில் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர். எனக்கு அவர் எழுத்து மிகவும் பிடித்தமானது. (தருண் அல்ல) அவரிடம் முன்னுரை கேட்டேன். பிடித்திருந்தால் தருகிறேன் என்றார். அதுவே கடவுளின் கருணைதான். யாருக்கு இப்போதெல்லாம் நேரம் இருக்கிறது? எல்லோரும் பறந்து கொண்டிருக்கிறார்கள். நானே நாலைந்து மாதங்களாக என் ஃபோனை எடுக்காமல் இருந்தேன். அவர் உடனடியாகப் படிக்கிறேன் என்று சொன்னதே பெரிய விஷயம். சல்மான் ருஷ்டி அல்ல. அவர் நாவல்களை நான் இன்னும் முறையாகப் படித்ததில்லை.

முன்னுரை இல்லாமல் வந்திருக்கலாம்.  ஸீரோ டிகிரி ஆங்கிலத்தில் வந்த போது அதற்கு முன்னுரை இல்லை.  பொதுவாக ஆங்கில நாவல்களுக்கு வேறொருவரின் பரிந்துரை, முன்னுரை எல்லாம் இருக்காது.  ஆனால் தமிழில் பெருமாள் முருகன் என்ற ரகளை நடந்து விட்டதால் என்னுடைய பண்டத்துக்கு ஐஎஸ் ஐ முத்திரை போன்ற தேவை வந்து விட்டது.  தாகூர் தன்னுடைய கீதாஞ்சலியை டபிள்யூ.பி. யேட்ஸின் முன்னுரையோடுதான் உலகத்துக்கு அளித்தார்.

ஜனவரி 19 தெ மார்ஜினல் மேன் உங்கள் கைகளில் கிடைக்கும். அப்போது அதற்கு முன்னுரை கொடுத்தவரின் பெயரைத் தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவில் மற்றும் பிரிட்டனில் வசிக்கும் என் வாசகர்கள் என்னைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

charu.nivedita.india@gmail.com