ஆன் எபர் : காயத்ரியின் நேரடி மொழிபெயர்ப்பில்…

 

 

unnamed

 

இந்த மாத தடம் இதழில் காயத்ரி ஆர். மொழிபெயர்த்துள்ள ஆன் எபரின் சிறுகதை ஒன்று வெளியாகியுள்ளது.  விளிம்பு நிலை மக்களின் உளவியலைப் புரிந்து கொள்ள இந்தக் கதை உதவும்.  இந்த எழுத்தாளரைப் படித்த போதுதான் கனடாவில் ஃப்ரெஞ்ச் இரண்டாம் மொழியாக இருப்பதே எனக்குத் தெரிய வந்தது.  காயத்ரி இந்தக் கதையை ஃப்ரெஞ்சிலிருந்து தமிழாக்கியிருக்கிறார்.  இடையில் ஒரு கை இல்லாமல் நேரடியாக வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.  பொதுவாகவே நான் ஐரோப்பிய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதை வரவேற்பவன் அல்லன்.  ஜி. குப்புசாமியைக் கூட அடிக்கடி நான் நீர் ஒரு துரோகி என்று அன்புடன் திட்டுவது வழக்கம்.  ஏனென்றால், தமிழ் எழுத்தாளர்களை அவர்கள் படிப்பதில்லை.  நாம் மட்டும் எத்தனைக் காலத்துக்கு அவர்கள் எழுதுவதை மொழிபெயர்த்துப் படிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்பேன். ஆனால் ஜி. குப்புசாமி மொழிபெயர்ப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.  இஸ்தாம்பூல் பற்றிய பாமுக்கின் நூலை குப்புசாமியின் மொழிபெயர்ப்பில்தான் படித்தேன்.  படித்தவுடன் இஸ்தாம்பூல் கிளம்பி விட்டேன்.

பொதுவாக தமிழில் வெளிவரும் மொழிபெயர்ப்புகள் அவலட்சணமானவை.  அருவருப்பானவை.  ஆங்கிலமே தெரியாதவர்கள்தான் பெரும்பாலும் மொழிபெயர்ப்பில் ஈடுபடுகிறார்கள்.  புரியாத பகுதிகளை அப்படியே விட்டு விடுகிறார்கள்.  என் மதிப்புக்குரிய பலர் இப்படிப்பட்ட ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதைக் கண்டு விக்கித்துப் போயிருக்கிறேன்.

ஃப்ரெஞ்சிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்ப்பதில் பல படித்த அசடுகள் ஈடுபட்டிருக்கின்றன.  அந்த ஜந்துக்கள் பல பட்டம் பெற்றவை.  இங்கே பெரிய பெரிய புடுங்கிகளாகத் திரிந்து கொண்டிருக்கின்றன.  அவைகளுக்குத் தமிழில் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியவில்லை.  ஒன்றுமே தெரியவில்லை.  கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் ஒண்ணாம் கிளாஸ் பசங்கள் எழுதும் தமிழ் மாதிரி இருக்கின்றன.  இவைகள் எல்லாம் தான் ஃப்ரெஞ்சிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்து வருகின்றன.  இந்த அருவருப்பான கும்பலில் வெ. ஸ்ரீராம் மட்டுமே தனித்து நிற்கிறார்.  அவரது மொழிபெயர்ப்புகள் அப்பழுக்கற்றவை.  கவித்துவம் மிகுந்தவை.  அதே பாதையில் அடி எடுத்து வைத்திருக்கிறார் காயத்ரி ஆர்.  அவருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.  மேலும், எல்லோருக்கும் தெரிந்த கம்யூ, ஜெனே என்றே போகாமல் யாருக்கும் தெரியாத ஆன் எபர் போன்ற ஒருத்தரைக் கண்டு பிடித்து மொழிபெயர்த்தது மிகுந்த பாராட்டுக்குரியது.  மேலும், Colette (1873 – 1954) மாதிரி ஆட்களையும் காயத்ரி மொழிபெயர்க்க வேண்டும் என்பது என் ஆசை.  காலத் பற்றி நான் அதிகம் எழுதியிருக்கிறேன்.  ’காலத்’ – இன் வாழ்க்கையே மிகவும் ருசிகரமானது; நம்ப முடியாதது.

விகடன் தடத்தில் இந்தக் கதைக்கு வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பிரமாதமாக இருந்தன.  ஓவியர் செந்தில் என் புத்தகங்களுக்கும் வரைந்து தர வேண்டும் என்று விரும்புகிறேன்.