ரஜினி – கமல் – தினகரன் – டிரம்ப் : அராத்து

முகநூலில் அராத்துவின் பின்வரும் சிறிய கட்டுரையைப் பார்த்தேன்.  இதில் உள்ள எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, சந்திப் பிழை, தேவையற்ற ஆங்கில வார்த்தைப் பிரயோகம் ஆகியவற்றைத் தவிர்த்து, இதில் உள்ள அத்தனை விஷயங்களையும் அப்படியே நானும் எழுதியதாகக் கொள்ளவும்.  இந்த ஆட்களைப் பற்றி நானும் இதே மாதிரிதான் நினைத்தேன்.  நேற்று நியூஸ் 7-இல் அழைத்த போதும் இதையேதான் சொன்னேன்.  வைரமுத்துவுக்கு ஞானபீடம் கொடுக்க இருப்பதாக ஜெ. எழுதியிருந்தார்.  கொடுத்தால் தற்கொலை செய்து கொள்ளலாம்; தைரியம் வராவிட்டால் தினகரன் கட்சியில் சேர்ந்து விடலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.  அதில் தான் நமக்கு முன்னோடியும் இருக்கிறாரே, மனுஷ்!  தற்கொலை சாத்தியம் இல்லாவிடில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்!  பின்வருவது அராத்து:

 

ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற செய்தி இன்று செய்தி சேனல்களை ஆக்கிரமித்து உள்ளது. இந்த ஆண்டு முடியப்போகிறது என்பதாலும் , நியூ இயர் பார்டிக்கு இன்னும் நேரம் இருப்பதாலும் கண் சொருகி யோசித்ததால் இந்த கட்டுரை.

உலகம் முழுக்கவே அரசியலில் சத்தமில்லாமல் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து வருவதை கவனித்துப்பார்த்தால் புரியும். அரசர் ஆட்சி , காலனிய ஆட்சிகளைத் தொடர்ந்து , கொள்கை ரீதியாக பல அரசுகள் அமைந்தன . மக்கள் புரட்சி நடந்து சில அரசுகள் அமைந்தன. சில இஸங்களை முன் வைத்து சீரியஸான தலைவர்கள் தோன்றினர். அவர்கள் ஆட்சிக்கும் வந்தனர். மக்களுக்கான இஸங்கள் மக்களை என்ன செய்தது என்பதை பார்த்தோம்.

மக்களுக்கான தலைவர்கள் என சொல்லிக்கொண்டவர்கள் எப்படி சர்வாதிகாரிகளை விடவும் கொடூரமான ஆட்களாக மாறிப்போனாகள் என்பதையும் மக்கள் கண்டனர்.

அந்தக் காலத்தில் உருவான தலைவர்கள் , தங்களுக்கென அழுத்தமான ஒரு இமேஜை கட்டமைத்துக்கொண்டனர். அது உருவாக்கப்பட்ட இமேஜே ! உண்மையில் அவர்கள் எப்படி இருப்பார்கள் ? எப்படிப்பட்டவர்கள் என்பது மக்களுக்கு கடைசி வரை தெரியாது. மக்களுக்கான தலைவர்கள் , இப்படி உருவாக்கப்பட்ட இமேஜ் மூலம் மக்களை விட்டு வெகுதூரம் சென்றனர்.

இந்த காலகட்டத்திற்குப் பிறகு , இப்படி இறுக்கமான இமேஜ் அல்லாத , அறிவு ஜீவி தன்மை கொண்ட தலைவர்கள் உருவாயினர். இவர்கள் மக்களிடத்தில் கொஞ்சம் நெருங்கி இருந்தனர். அவர்களது புத்தி கூர்மையும் , ஆழ்ந்த அனுபவமும் முன் வைக்கப்பட்டன. அவர்கள் ஆட்சிக்கு வந்தனர்.

அரசர் காலம் முதல் , வலிமையான தலைவர்கள் தொடர்ந்து , மக்கள் தலைவர்கள் வரை அடித்து வந்த கோமாளித்தனங்களை மக்கள் கவனித்து வந்தனர். அனைவருமே மக்கள் வாழ்வை எப்படி சீரழித்தனர் என்பதும் வரலாறு.

கொள்கைகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் எப்படி அந்த கொள்கைகளையே கொன்று கொள்ளைக்காரர்கள் ஆநார்கள் என்பதையும் மக்கள் பார்த்தனர்.

இதன் தொடர்ச்சியாக , இப்போதைய பின் நவீன காலகட்டத்தில் , மக்கள் ஒரு மாறுதலுக்காக , மனமகிழ்ச்சிக்காக கோமாளிகளையே தலைவர்களாக தேர்ந்தெடுக்க ஆரம்பித்து உள்ளனர். அனைத்தையும் கலைத்துப்போட்டு , அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி , அனைத்தையும் நக்கலடிக்கும் இன்றைய பின்நவீனத்துவ காலகட்ட மக்களின் மனவெளிப்பாடுதான் கோமாளிகளை தலைவர்களாக தேர்ந்தெடுத்து ரசித்து மகிழ்ந்து கை கொட்டி சிரிப்பது. தங்களுக்கு தாங்களே செய்து கொள்ளும் சுய பகடி. தொடர்ந்த அவநம்பிக்கைகளாலும் , தொடர் துன்பங்களாலும் , மன வியாதியாலும் , துன்பப்பட்டு வந்த மக்கள் , இதற்கு மேல் தொடர்ந்தால் எல்லோருமே பைத்தியங்கள் ஆகி விடுவோம் என்று உணர்ந்து , அதிலிருந்து விடுவிதுக்கொள்ளும் ஒரு உத்திதான் கோமாளிகளை தலைவர்களாக்கி சிரித்துக் கொள்வது.

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து இந்த மனநிலையை நன்கு உணர்ந்து கொள்ளலாம். இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. முழுக்க முழுக்க கோமாளியாக இருக்கக் கூடாது. அதில் ஒரு குரூரம் வேண்டும். மக்கள் இப்போது முயன்று பார்ப்பது ஒரு குரூர நகைச்சுவையை. தன்னைத்தானே குத்திக்கொண்டு , வலியில் சிரிப்பது போன்றது. இது ஒரு சைக்காலஜிக்கலான விடுதலை. அமெரிக்காவில் ஜிம் கேரி வெல்ல முடியாது. அவர் நிஜ கோமாளி , அவருக்கு தான் கோமாளி என்பது தெரியும்.

மக்களுக்கு நிஜ கோமாளி வேண்டாம். அந்த கோமாளிக்குத் தன்னை கோமாளி என்றே தெரியக்கூடாது. தன்னை சீரியஸான ஆள் , திறமையான ஆள் என்று அவன் நினைத்துக்கொண்டு இருக்க வேண்டும். அதீத தன்னம்பிக்கை வேண்டும். அவன் தன்னை உலகை உய்விக்க வந்த புருஷன் என்று நினைத்துக்கொண்டு இருக்க வேண்டும். ஆனால் அவன் செய்வது கோமாளித்தனமாக இருக்க வேண்டும். மக்களுக்கு மட்டுமே அவன் கோமாளி என்றும், அவனது கோமாளித்தனங்களும் தெரிய வேண்டும். இதற்கு மிகப் பொருத்தமான உதாரணம் டிரம்ப்.

தமிழகத்தில் விஜயகாந்த தோற்றது இதனால் தான். அவர் நிஜ கோமாளியாகவே மாறி கோமாளித்தனங்கள் செய்து கொண்டு இருந்தார். அதனால் திகட்டிப்போய் ,அலுத்துப்போன போன மக்கள் , எதிர்கட்சித் தலைவர் வரைதான் விட்டார்கள்.

இடைத்தேர்தலில் தினகரன் வென்றது இந்த மனநிலையால் தான். அவர் கோமாளிக்கு கோமாளி , அதேபோல ஆபத்தான கோமாளி.

அடுத்த தமிழக சட்டமன்ற தேர்தலில் இவ்வகையான கோமாளிகளுக்குள் கடும் போட்டி இருக்கும். மக்களுக்கு கொண்டாட்டம் தான்.

அந்த வகையில் முதல் இட்த்தைப் பிடிப்பவர் ரஜினி . இரண்டாம் இடம் கமல். இவர்கள் ஒரு கோமாளி கேட்டகிரி என்றால் தினகரன் வேறு வகை கோமாளி !

இவர்கள் இல்லாமல் , குட்டி குட்டி கோமாளிகளும் முளைக்கக்கூடும். விஷால் போன்றவர்கள் இந்த கேட்டகிரியில் வருவார்கள். விஜய் அண்ணா அவர்களும் இணைந்து கொண்டால் உற்சாகக் கொண்டாட்டத்திற்கு குறைவில்லை.

பார்ப்போம் எந்த கோமாளியை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து மகிழ்கிறார்கள் என்று. …

செயல் தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கனவு பலிக்க வேண்டுமென்றால் , அவரும் தன் பர்ஸ்னாலிட்டியை மாற்றி அமைக்க வேண்டும். குன்ஸாக ஏதேனும் அடித்து விட வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தால் தமிழக போலீஸை வைத்து இலங்கை மேல் போர் தொடுத்து தமிழர்களை காப்பாற்றுவேன் என்று அறிவிக்கலாம்.இதைப்போல இன்னும் அவர் நிறைய மெனக்கெட வேண்டும். ஏனென்றால் ரஜினி அறிவித்துள்ள “ஆன்மிக அரசியல் “ என்ன கோமாளித்தனத்திற்கு ஈடாக ஒன்றை கண்டுபிடித்து போட்டி போடுவது என்பது சவாலான ஒன்று. கமலின் ஊழலை ஒழிப்பேன் என்ற கோமாளித்தனத்தையே பின்னுக்கு தள்ளி விட்டது ரஜினியின் கோமாளித்தனம்.

சுருக்கமாக சொல்வதென்றால் , பவர் ஸ்டார் போன்ற உண்மையான கோமாளிகள் மக்களுக்குத் தேவையில்லை. தன்னை மிகப்பெரிய ஆளாக நினைத்துக்கொண்டு இருக்கிற , ஆபத்தான , மர்மமான , சீரியஸான கோமாளிகளே தேவை !

இந்த ரேஸில் இப்போதைக்கு விதம் விதமான தனித்தன்மையுடன் முந்துபவர்கள் ரஜினி , கமல் மற்றும் தினகரன்.