“சாரு புலம்புகிறார்” – 1

தமிழர்கள் யாரும் இலக்கியம் படிப்பதில்லை.  அதனால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை.  ஆனால் இலக்கியம் அறியாததன் காரணமாக இவர்களில் முக்காலே மூணு வீசம் பேர் விலங்குகளைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  விலங்கு என்ன செய்கிறது?  இரை தேடுகிறது.  மலஜலம் கழிக்கிறது.  புணர்கிறது.  குட்டி போடுகிறது. நீண்ட நேரம் உறங்குகிறது.  மீண்டும் இரை தேடுகிறது.  இதையே தான் தமிழர்களில் பெரும்பாலோர் செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் மிருகங்கள் சந்தோஷமாக இருக்கின்றன.  ஏனென்றால், அவைகளுக்கு வேறு ஆசைகள் இல்லை.  வீடு கட்ட வேண்டியதில்லை.  குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டியதில்லை.  மற்றவர்களோடு போட்டி போட வேண்டியதில்லை. ஆனால் மனிதர்கள் இது எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருக்கிறது.  நோய் நொடி வேறு ஆளைக் கொல்லுகிறது.  மிருகங்களிடம் இத்தனை நோக்காடுகள் இல்லை.  ஆக, இலக்கியம் அறியா மனிதர்களின் வாழ்க்கை மிருகங்களின் வாழ்க்கையை விடக் கேடு கெட்டதாக இருக்கிறது.  இவர்களின் அறியாமையினாலும் மூடத் தனத்தினாலும் இவர்களின் அரசியல் தலைவர்கள் தினகரன்களாகவும், ரஜினிகாந்துகளாகவும் இருக்கிறார்கள்.  வைரமுத்து என்ற பாடலாசிரியர் இலக்கியவாதிகளுக்கு உரிய ஞானபீடப் பரிசுக்குப் போட்டி போடுகிறார்.

இப்படிப்பட்ட கேவலமான வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நான் எழுதுவது எப்படி இனிக்கும்?  என்னுடைய 40 ஆண்டுக் கால எழுத்து வாழ்க்கையில் ஆறு மாதங்கள் விகடனில் எழுதியிருக்கிறேன்.  இப்போது குமுதத்தில் வரும் கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங் என்ற தொடருக்கு முன்னால் குமுதத்திலும் தொடர் கட்டுரை எழுதியதில்லை.  இலக்கியப் பத்திரிகைகளைத் தவிர வேறு ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதுவது என் வாழ்வில் இதுவே இரண்டாவது முறை.  என் எழுத்து வெகுஜன ரசனைக்கு ஒத்து வராது என்று எனக்கு மிக நன்றாகத் தெரியும்.  வைரமுத்துவையும் கமல்ஹாசனையும் எழுத்தாளர்களாகக் கொண்டாடும் சமூகத்தில் என் எழுத்து எப்படி ஒத்து வரும்?

கடந்த நான்கு வாரங்களாக குமுதத்தில் நான் எழுதி வரும் கட்டுரைகள் வெறும் புலம்பலாக இருக்கிறது என்று இதுவரை ஒரு டஜன் பேர் சொல்லி விட்டார்கள்.  இப்படிச் சொல்பவர்கள் பேசாமல் பட்டுக்கோட்டை பிரபாகரையும் சுஜாதாவின் பழைய தொடர்களையும் படித்துக் கொண்டிருக்கலாமே?  நான் புலம்புகிறேன் என்று சொல்லும் இவர்கள் நான் எழுதியுள்ள அறம் பொருள் இன்பம், பழுப்பு நிறப் பக்கங்கள், வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் போன்ற நூல்களைப் பற்றிய கேள்வி ஞானம் கூட இருக்காது என்பது திண்ணம்.

குமுதத்தில் புலம்புகிறேன் என்று சொல்லும் இந்த மூடர்களுக்காக நான் குமுதத்தில் டிசம்பர் மாதத்தில் எழுதிய சில கட்டுரைகளை இங்கே மறு பிரசுரம் செய்கிறேன்.  25 வயது பையன் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஏழு வயதுக் குழந்தையை வன்கலவி செய்து அவளைப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்று விட்டான் என்பது போன்ற விஷயங்களைப் பற்றி எழுதினால் அதற்குப் புலம்பல் என்று பெயரா?  இப்படிச் சொல்லும் உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா?  இப்படி ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே என்று உங்களுக்கு அச்சமாக இல்லையா?  நம் குழந்தைகளுக்கு இப்படி நடக்காது என்று என்ன நிச்சயம்?  உங்களையெல்லாம் நினைத்து நான் பரிதாபப்படுகிறேன்.

இனி டிசம்பர் இரண்டாம் வாரம் எழுதிய கட்டுரை:

குக்கரின் மேல் வெய்ட் போட்டு அடுப்பையும் முழுவீச்சில் வைத்து விட்டால் என்ன ஆகும்?  சிறிது நேரத்தில் குக்கர் வெடித்து விடும் இல்லையா?  இந்தியச் சமூகம் அந்த நிலையில்தான் இருக்கிறது.  சமீபத்திய தினசரியில் ஒரு செய்தி.  கடன் தொல்லை தாங்காமல் ஒருவர் தன் இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் கொன்று விட்டுத் தன்னையும் அழித்துக் கொள்ள முயன்றார்.  சில தினங்களுக்கு முன்னால்தான் ஒரு ஆள் தன் குழந்தை, மனைவி எல்லோர் மீதும் பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திக் கொண்டு செத்தார்.  நம் சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.

11 ஆண்டுகளுக்கு முன்னால் தில்லிக்கு அருகில் உள்ள நோய்டா என்ற ஊரில் மொனீந்தர் சிங் என்பவர் அந்தப் பகுதியில் உள்ள சிறுமிகளைப் பிடித்துக் கொண்டு வந்து வன்கலவி செய்து பின்பு அவர்களைக் கொன்று, உடல் உறுப்புகளைத் தனித்தனியாக வெட்டிக் கூறு போட்டு அங்கே உள்ள கால்வாயில் வீசி விடுவார்.  இதற்கு அவருடைய வேலைக்காரர் சுரீந்தர் கோலி உடந்தை.  பல காலமாக இருவரும் இந்தக் காரியத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  பல சிறுமிகள் காணாமல் போய்க் கொண்டிருந்த நிலையிலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அதுதான் போலீஸின் இயல்பு.  அது பற்றி நாம் ஆட்சேபிக்க எதுவும் இல்லை.  ஆனாலும் அஞ்சலி என்ற பெண் காணாமல் போனபோது இருவரும் மாட்டிக் கொண்டார்கள்.   வழக்கம் போல் எதற்கும் சாட்சி இல்லை என்றுதான் கேஸ் முடிந்திருக்கும்.  ஆனால் மொனீந்தர் சிங்கின் வீட்டுத் தோட்டத்தைத் தோண்டிப் பார்த்த போது எக்கச்சக்கமாக எலும்புக் கூடுகள்.  அதில் ஒரு மண்டை ஓடு அஞ்சலிக்குரியது என்று டி.என்.ஏ. ஆய்வில் ருசுவாகி விட்டது.  அதனால் சிபிஐ நீதிமன்றத்தில் அந்த இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக எழுத்தாளர்கள் மரண தண்டனைக்கு எதிரானவர்கள்.  அதற்காக அவர்கள் வைக்கும் வாதங்கள் எல்லாவற்றையும் நான் அறிவேன்.  அநேகமாக எனக்குத் தெரிந்து மரண தண்டனையை ஆதரிக்கும் ஒரே எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன்.  வளர்ச்சி அடைந்த நாடுகளில் மரண தண்டனை தேவையில்லை.  ஆனால் இந்தியா அந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறதா என்பதுதான் கேள்வி.  மேலே குறிப்பிட்ட மொனீந்தர் சிங்குக்கு ஏன் மரண தண்டனை கொடுக்கக் கூடாது?  சுமாராக நூறு சிறுமிகள் அந்தப் பகுதியில் காணாமல் போயிருக்கிறார்கள்.  பத்துப் பதினைந்து ஆண்டுகளாக அவர் இந்த வேலையைச் செய்து கொண்டு வந்திருக்கிறார்.  ஒருவேளை மேலை நாடுகளைப் போல் செக்ஸ் தொழிலுக்கு லைசென்ஸ் கொடுத்து விட்டால் இப்படிப்பட்ட பாதகங்கள் குறையுமா?  குறைவதற்குப் பெரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மேலை நாடுகளில் நடக்கும் மிகக் குறைந்த அளவு பாலியல் குற்றங்களோடு ஒப்பிட்டால் தெரிந்து கொள்ள முடியும்.  ஆனால் இங்கே நான் கவனப்படுத்த விரும்புவது அது அல்ல என்பதால் மரண தண்டனை பற்றியே விவாதிப்போம்.

நம்முடைய தண்டனை முறையிலேயே பல சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.  உதாரணமாக, தஷ்வந்த் வழக்கை எடுத்துக் கொள்வோம்.  24 வயது நிரம்பிய அவனுடைய முகத்தைப் பாருங்கள்.  சாந்தமும் அன்பும் சொட்டுகிறது.  இவனா 7 வயதுச் சிறுமியை வன்கலவி செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றான் என்று தோன்றுகிறது. ஆனால் அதுதான் இன்றைய இந்தியாவின் எதார்த்தம்.  நம் சட்டம் எத்தனை பலகீனமாக இருக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.  சிறுமியை வன்கலவி செய்து எரித்தது பெப்ருவரியில்.  குண்டர் சட்டத்தில் கைது ஆனான்.  ஆனால் கைது ஆன கையோடு ஜாமீனில் வெளியே வந்து விட்டான். அவன் என்ன பிக்பாக்கெட்டா அடித்தான்? 7 வயதுச் சிறுமியை வன்கலவி செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றிருக்கிறான்.   ஒரு ஆண்டு கூட சிறையில் இல்லை.  ஜாமீனில் வெளியே வந்து தன் தாயையும் கொன்று விட்டான்.  ஏன் கொன்றான்?  சூதாடவும் குடிக்கவும் பணம் கேட்டான்.  கொடுக்கவில்லை.  கொன்று விட்டான்.

நாம் எல்லோருமே நம் குழந்தைகளை அப்படித்தான் வளர்க்கிறோம்.  சிறு பிராயத்திலிருந்தே குழந்தைகளுக்கு நாம் ஒழுக்கத்தையும் அன்பையும் போதிப்பதில்லை.  ஏனென்றால், நம்மிடமே அதெல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை.  படி படி படி… இதுவே தாரக மந்திரம்.  அடுத்தவனை முந்து.  முந்திக் கொண்டே இரு.  எப்படி வரும் ஒழுக்கம்?  இதில் எங்கே இருக்கிறது அன்பு?  ஏதோ போருக்குச் செல்லும் வீரர்களைப் போல் குழந்தைகளைத் தயார் செய்கிறோம்.  அந்தக் குழந்தைகள் தஷ்வந்த்தைப் போல் வளர்ந்து நிற்கின்றன.

ஸ்வேதா, விவேக் தம்பதி இருவரும் என் வாசகர்கள்.  ஸ்வேதா என்னிடம் சொன்னார்.  அவருடைய தங்கையின் மகளை அவளது கல்லூரி விடுமுறையில் அவர்கள் வீட்டுக்கு அனுப்பினாராம் தங்கை.  அந்தப் பெண் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி.  ஸ்வேதா, விவேக் தம்பதிக்கு கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் ஒரு மகன் இருக்கிறான்.  தங்கை மகள் இவர்கள் வீட்டுக்கு வந்ததும் தங்கள் மகனை வேறு ஒரு உறவினர் வீட்டுக்குக் கட்டாயப்படுத்தி அனுப்பி விடுகிறார் ஸ்வேதா.  ஏன் என்று விவேக் கேட்டதற்கு, என்னதான் ஒன்று விட்ட அண்ணன் தம்பி என்றாலும் அதிகம் பழகியிருக்காத இளசுகள் ஒரே வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல, நீ என்ன பர்வர்ட்டா, அப்படி இப்படி என்று ஸ்வேதாவுக்கு செம டோஸ். நீங்கள் என்ன வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளுங்கள்;  இளசு ரெண்டும் வீட்டில் ஒன்றாக இருக்கக் கூடாது என்று சொல்லி விட்டார் ஸ்வேதா.  ஏனென்றால், ஸ்வேதா விவேக் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள்.

இவ்வளவு பிரச்னை ஏன், உங்கள் தங்கையிடம் இப்போது அவளைத் தனியாக அனுப்ப வேண்டாம் என்று சொல்வதற்கு என்ன என்று ஸ்வேதாவிடம் கேட்டேன்.  ”அனுப்பவா என்று என் தங்கை கேட்டால் சொல்லியிருப்பேன்; அனுப்புகிறேன் என்று சொல்பவளிடம் அனுப்பாதே என்று எப்படிச் சொல்வது?” – ஸ்வேதா.  12 நாள் தங்கியிருந்தாளாம் அந்தப் பெண்.  கதை கதையாகச் சொன்னார் ஸ்வேதா.  நாள் முழுவதும் இருந்த இடத்தை விட்டு நகர்வதில்லை.  வீட்டில் அலமாரி அலமாரியாகப் புத்தகங்களும் டிவிடிக்களும் குவிந்து கிடக்கின்றன.  எதையுமே தொடுவதில்லை.  நாள் முழுவதும் என்னதான் செய்தாய் என்று கேட்டால் சும்மா இருந்தேன், அல்லது, தூங்கினேன் என்று பதில்.  பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி அதுவரை சமையல் அறைக்கே போனதில்லையாம்.  ஒருநாள் ஸ்வேதா ஏதோ கைவேலையாக இருந்ததால் ரெண்டு பேருக்கும் க்ரீன் டீ போடு என்று சொல்லியிருக்கிறார்.  ரெண்டு டீ என்பதால் ரெண்டு கிளாஸ் தண்ணீரைச் சுட வைத்து அதில் டீ பொட்டலத்தைப் போட வேண்டும்.  அதுதான் க்ரீன் டீ என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.  உடனே அந்தப் பெண் ரெண்டு கிளாஸை எடுத்து வரிசையாக நிற்க வைத்து, மூன்றாவது கிளாஸ் ஒன்றை எடுத்து அதில் தண்ணீரைப் பிடித்து அந்த ரெண்டு கிளாஸிலும் ஊற்றி இருக்கிறாள்.  நல்லவேளை, நாலு க்ரீன் டீ போடச் சொல்லியிருந்தால் நாலு கிளாஸை அடுக்கி வைத்து அதில் தண்ணீரை ஊற்றி ஒவ்வொன்றாக எடுத்துக் கெட்டிலில் ஊற்றியிருப்பாள் என்றார் ஸ்வேதா.

சொல்லி முடித்து விட்டு, என் கணவர் நல்லவர்; அதனால் ஒன்றும் பிரச்னை இல்லை. இல்லாவிட்டால்… என்றார் ஸ்வேதா.  காரணம் இருக்கிறது.  சமீபத்தில் நடந்த ஒரு விஷயம்.  அந்தப் பெண் குழந்தைக்கு 10 வயது.  பக்கத்து வீட்டுத் தாத்தா அந்தக் குழந்தையை வன்கலவி செய்து விட்டார்.  தாத்தாவின் வயது 85.  கோல் ஊன்றித்தான் நடக்கிறார்.  விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது.  அப்புறம்?  அடுத்த வாரம் சொல்கிறேன்.