“சாரு புலம்புகிறார்” – 2

சாரு புலம்புகிறார் என்று எதற்கு சொல்லியிருப்பார்கள் என்று இப்போது புரிகிறது.  ஊட்டி திரைப்பட விழாவுக்குச் சென்ற போது அங்கே என்ன நடந்தது என்று எழுதியிருந்தேன்.  அதுதான் அவர்களுக்குப் புலம்பலாகத் தெரிந்திருக்கும்.  இம்மாதிரி புலம்பலை நான் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்பேன்.  ஏனென்றால், அங்கே என்னை அழைத்தவர்கள் நான் பேசும் போது மைக்கே தரவில்லை.  மேடைக்குப் பின் புறம் – கொல்லைப்புறத்தில் – பத்து பேருக்கு முன்னால் பேசச் சொன்னார்கள்.  மைக் இல்லாமல்.  ஆனால் மிஷ்கினுக்கு வேறு விதமான மரியாதை கொடுக்கப்பட்டது.  அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் நேர் வாசல் ஒன்றும் பீ அள்ளும் தோட்டிப் பெண்களுக்கு கொல்லை வாசலும் இருக்கும் அல்லவா, அப்படி எழுத்தாளர்களைத் தீண்டத்தகாதவர்களாக மதிக்கிறார்கள் என்று எழுதியிருந்தேன்.  இதுதான் புலம்பலாம்.  கீழே வருவதைப் படியுங்கள்.  குமுதத்தில் சென்ற வாரம் வந்த கட்டுரையின் ஒரு பகுதி:

”தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு மரியாதையே இல்லை என்று நான் அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.  சமீபத்தில் ஊட்டியில் நடந்த ஒரு திரைப்பட விழாவுக்கு அழைத்திருந்தார்கள்.  அதை நடத்துபவர் நான் பெறாத மகன்.  அவரது திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுக்கும் சடங்கில் அவரது பெற்றோரைக் கூட விட்டு விட்டு என்னைத்தான் தாலி எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.  மிஷ்கினும் வந்திருந்தார்.  அவரும் நானும் ஒன்றாகத்தான் போனோம்.  கோவை வரை விமானம்.  அங்கிருந்து கார் பயணம்.  ஆனால் திரைப்பட விழாவைத் துவக்கி வைத்தவர்களில் நான் இல்லை.  அந்த ஊர் கலெக்டர், மிஷ்கின், இலங்கையிலிருந்து வந்திருந்த பிரசன்னா விதானகே என்ற இயக்குனர் எல்லோரும் இருந்தார்கள்.  பின்னே என்னை எதற்கு அழைத்தார்கள்?  விழா துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னால் திரைப்பட அரங்கத்திற்குப் பின்புறம் ஒரு சிறிய அறையில் இருபது பேருக்கு முன்னே என்னைப் பேசச் சொன்னார்கள்.  பேசுவதற்கு மைக் இல்லை.  மைக் எங்கே என்று கேட்டதற்கு, விழா அமைப்பாளர்களில் ஒருவர் ஊட்டியில் மைக்கே கிடைக்க மாட்டேன் என்கிறது என்றார்…”