marginal man – first copy

மார்ஜினல் மேன் நாளை இரவு வந்து விடும். நாளை மறுநாள் காலையில் முதல் பிரதி வேண்டுவோருக்குக் கொடுத்து விடலாம். முதல் பத்து பிரதிகளை அப்படிக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.

பலருக்கும் முதல் பிரதி, முதல் பத்து பிரதி என்பதற்கெல்லாம் அர்த்தம் புரியவில்லை. முதல் பிரதியில், மார்ஜினல் மேன் நாவலின் முதல் பிரதியாகிய இதை இன்னாருக்கு இன்ன தேதியில் கொடுக்கிறேன் என்று எழுதி நான் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறேன். ஐந்து ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு என்ன? 25 ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு என்ன? எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவல் பாக்கெட் நாவல் சைஸில் அச்சிடப்பட்டது. அதன் ஒரு பிரதி கூட என்னிடம் இல்லை. அப்படியிருக்கும் போது அதன் முதல் பிரதிக்கு இப்போது எத்தனை மதிப்பு இருக்கும்?

காலத்தால் மதிப்பு கூடும் பண்டம் அது. வைன் மாதிரி. எக்ஸைல் முதல் பிரதியை ஒரு நண்பர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினார். இன்னொரு நண்பர் 50000 ரூ. கொடுத்து வாங்கினார். ஒன்றிரண்டு பேர் 25000. பத்து நண்பர்கள் தலா பத்தாயிரம் கொடுத்து வாங்கினார்கள். எல்லாவற்றையும் சேர்த்துத்தான் ராஜா அண்ணாமலை மன்றத்தில் புத்தக வெளியீட்டு விழா நடத்தினோம்.

இப்போது மார்ஜினல் மேன் முதல் பிரதியை ஒரு நண்பர் 20000 ரூபாய்க்குப் பெற்றுக் கொள்வதாக எழுதியிருக்கிறார். நாளை மாலை வரை இன்னும் நேரம் இருக்கிறது.

இப்படி வரும் பணத்தைச் சேர்த்துக் கொண்டு சீலே போகலாம் என்று இருந்தேன். இப்போது திட்டம் மாறி விட்டது. ஒரு மணி நேரம் வரக் கூடிய ஒரு ஆர்ட் ஃபில்மை இயக்கலாம் என்று இருக்கிறேன். ஸ்கிரிப்ட் எழுதி விட்டேன். படத்தில் வசனம் இல்லை. இது பொதுமக்களுக்கான படம் இல்லை. தீவிரமான உலக சினிமா ரசிகர்களுக்கான படம். 20 லட்சம் செலவாகும் என்று உத்தேசம். ஆர்.டி. ராஜசேகர் கேமராவுக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். இசை இளையராஜாவைத் தவிர வேறு யாராலும் அமைக்க முடியாது. ஜெயமோகன் அல்லது மிஷ்கின் மூலமாக ராஜாவை அணுக வேண்டும்.

சில நண்பர்கள் முதல் பிரதியைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளனர். பண விஷயத்தை என்னால் ரொம்பவும் விண்டு எழுத முடியவில்லை. இந்த விளக்கத்தில் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உண்மையில் முதல் பிரதியை நான் காயத்ரிக்கும், ஸ்ரீராமுக்கும், ராம்ஜிக்கும்தான் கொடுக்க வேண்டும். அவர்கள் இல்லையேல் இந்த நாவல் இல்லை. இருந்தாலும் பணம் தேவைப்படுகிறது.

முதல் பத்து பிரதிகளுக்கு முந்துங்கள்.

எனக்கு எழுத: charu.nivedita.india@gmail.com