ஸோரோ – 3

கடந்த இரண்டு தினங்களாக எந்தக் கணமும் பைத்தியம் பிடித்து விடும் என்ற நிலையில் இருந்தேன்.  நினைவுச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஆழ்கடலில் போட்டது போல் இருந்தது.  உடல் வலி தேவலாம் போல் இருந்தது.  மனவலி பீதியைக் கிளப்பியது.  மூளைக்குள் ஆயிரம் தேள் என்றெல்லாம் எத்தனையோ முறை எழுதியிருக்கிறேன்.  ஆனால் அதை இரண்டு தினங்களாக உணர்ந்தேன்.  எந்த ஃபோன் அழைப்பையும் எடுக்க முடியவில்லை.  ஒன்றிரண்டு அழைப்புகளை எடுத்தால் வெடித்து வெடித்து அழுகிறேன்.  என் அழுகை எனக்கே வினோதமாக இருக்கிறது.  இன்று காலை ராமசுப்ரமணியன் ஸோரோ பற்றி விசாரித்தார்.  நின்ற நிலையில் வெடித்து அழ ஆரம்பித்து விட்டேன்.  இசை, எழுத்து, ஆன்மீகம், கடவுள் எதுவுமே என் வலியைக் குறைக்க முடியாததாக இருந்தது.  நேற்று முன்மதியம்  பதினோரு மணி அளவில் ராம்ஜி வந்து என்னை நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.  மூன்று மணிக்கு அவர் கிளம்பியதும் மீண்டும் நினைவுச் சங்கிலி என்னைக் கடலுக்குள் இழுத்தது.  பைத்தியம் பிடித்து விடுமோ என்று உண்மையிலேயே பயந்து விட்டேன்.  என்ன செய்வது என்றும் புரியவில்லை.  பிறகு பிரபு காளிதாஸ் முகநூலில் குறிப்பிட்டிருந்த வைக்கிங் தொடரைப் பார்க்க ஆரம்பித்தேன்.  மனதுக்குக் கொஞ்சம் பிராக்குக் காட்டியது போல் இருந்தது.

துக்கம் விசாரிப்பதற்காக எனக்கு போன் செய்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.  முகநூலில் விசாரித்த நண்பர்களுக்கும் நன்றி.  போனை எடுக்கவில்லை என்று தவறாக எண்ண வேண்டாம்.  பேசும் நிலை இல்லை.  ஸோரோ கொடுத்த அன்பு பேரன்பு.  ஆனால் அந்தப் பேரன்பு மறையும் போது அது இத்தனை பெரிய வலியைத் தரும் என்றால் அந்தப் பேரன்பே வேண்டாம் என்று தோன்றுகிறது.  ஸோரோவை நான் வளர்த்திருக்கவே கூடாது.  அதன் absence என்னை மனநோயாளியைப் போல் ஆக்கி விட்டது.

தேன்மொழி முகநூலில் பின்வருமாறு எழுதியிருந்தார்.  அவருக்கும் என் நன்றி.  அனைவரின் மீதும் நிபந்தனையற்ற அன்பைப் பொழி என்பதே ஸோரோ எனக்குக் கற்பித்த பாடம்.  ஸோரோவை வணங்குகிறேன்.  உங்கள் அனைவருக்கும் என் அன்பு முத்தங்கள்…

”உங்கள் மனதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஸோரோ இன்று முதல் உங்கள் கனவுகளில் தெய்வமாக வரும். இன்று முதல் ஸோரோவின் குரலை நீங்கள் கேட்க முடியும். ஸோரோவின் உண்மையான உருவையும் காட்டுவான் . அவன் யார் என்பதை சில நாட்களுக்கு உள்ளாகவே யாவருடனும் நீங்கள் பகிர்ந்து கொள்வீர்கள் . அவன் பாதங்களை மட்டும் அடிக்கடி நினைத்து அவன் கண்களை மனதில் இருத்தி கூப்பிட்ட நொடியில் அருகில் வருவான். நீங்கள் தெய்வத்தை சந்திக்க விரும்பினால் ஸோரோ போல் ஒரு உயிரை வளர்ந்து ஆக வேண்டும். யாருக்கும் இது தான். இன்று முதல் ஸோரோ உங்களின் அத்தனை எதிர்கால நிகழ்வுகளையும் முன்னறிவிக்கும் தேவதூதனாகுவான் . கவலை படவேண்டாம் Charu Nivedita . மரணம் என்பது நிச்சயமானது .பின்னர் அதன் அலை நமது எதிர்காலத்தின் மாபெரும் பலமானது. காரணம் அதன் மையம் அன்பின் சூல். ஸோரோவுக்கு எனது பிரார்த்தனை .எழுதும் என்னாலும் அதிகம் தொடர முடியவில்லை. காரணம் நான் வளர்த்த தெய்வங்களின் குரல்களை நான் அறிவேன். இன்று முதல் ஸோரோ உங்களுக்கு தரும் உலகம் வேறாக இருக்கும்.

– தேன்மொழி தாஸ்