அன்றாட வாழ்க்கை

ஸோரோ பற்றி நினைத்தாலே பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது.  வார்த்தைகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் என்னால் கூட அந்த உணர்வை வார்த்தைகளால் விளக்க முடியவில்லை.  அந்த உணர்வை ‘மண்டைக்குள் ஏதோ ஒரு பிரளயம் ஏற்படுவது போல’ என்று வேண்டுமானால் சொல்லலாம்.   வாழ்க்கையில் முதல்முதலாக depression என்ற உணர்வைப் புரிந்து கொள்கிறேன்.  என் வாழ்வில் ஒரு நிமிடம் கூட இதுவரை depressed-ஆக இருந்ததில்லை.  சில காதல் தோல்வி தருணங்களில் பதற்றமாக இருந்திருக்கிறது.  ஆனால் அது அடுத்த நாளே காணாமல் போய் விடும்.

நினைவுதான் துக்கம்.  கடந்த காலம்தான் துக்கம்.  நினைவைக் கொல்.  நினைவைக் கொல்ல ஒரே ஒரு மாமருந்துதான் உள்ளது.  காதலும் காமமும்.  இந்தியாவில் பிறந்து விட்டேன்.  இங்கே 65 வயது ஆசாமி அதைப் பற்றிப் பேசினால் அவன் சைக்கோ.  ஒருவன் எல்லாவற்றையுமேவா எழுத்திலேயே பழக முடியும்?  எதுவாயிருந்தாலும் எழுத்தில் சரணடை.

கடவுளை நம்புகிறேன்.  சாரு இப்போதெல்லாம் ஆன்மீகமத்தின் பக்கம் போய் விட்டார் என்கிறார்கள்.  இல்லை.  அது எப்போதுமே உள்ளது.  நான் என்றுமே நாஸ்திகனாக இருந்ததில்லை.  கடவுளைத் தேடிக் கொண்டிருந்தேன்.  அவ்வளவுதான்.  குருநாதர்கள் பலவிதமான ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.  ஆறு வயது மகள் சடாரென்று செத்து விட்டாள்.  எப்பேர்ப்பட்ட துக்கம்.  எப்பேர்ப்பட்ட இழப்பு.  பாபாவுக்கு நெருக்கமான சீடர்.  பாபாவிடம் போய் அழுகிறார்.  அழாதே, உன் மகள் உன்னிடம் இருப்பதை விட வேறொரு பிரமாதமான இடத்தில் பிறந்து விட்டாள், இதோ பார் என்று சொல்லி குழந்தை இருக்கும் இடத்தைக் காண்பிக்கிறார்.  எல்லாம் தெரிகிறது.  ஆனாலும் இழப்பைத் தாங்க முடியவில்லை.  இதைத் தட்டச்சு செய்யும் போது கூட கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  நேற்று ஸோரோவின் உணவுக்காகக் கொடுக்க வேண்டிய பதினோராயிரம் ரூபாயைக் கொடுத்தேன்.  இப்படி மாதாமாதம் கொடுக்கும் போது மிகவும் வருத்தப்படுவேன்.  எப்போதுதான் இதிலிருந்து விடுதலை?  எப்போதுதான் தென்னமெரிக்க நாடுகளுக்குப் போவது?  ஒருநாள் படு அவசரமாக எழுதிக் கொண்டிருந்தேன்.  மீன் இல்லை.  ஸோரோ மீன் இல்லாமல் சாப்பிடாது.  ஏற்கனவே முந்தின நாள் சாப்பிடவில்லை.  எனக்கோ பத்திரிகை வேலை.  பிரபு காளிதாஸ் சைவ உணவுக்காரர்.  அவர் போய் எனக்காக மீன் கடைக்குப் போய் மீன் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.

எத்தனை நாள் இப்படியே போவது என்று அப்போதெல்லாம் வருத்தப்பட்டிருக்கிறேன்.  ஆனால் இப்போது இன்னும் கொஞ்ச நாள் என்னோடு இருந்து விட்டுப் போயிருக்கக் கூடாதா ஸோரோ கண்ணே என்று தேம்பிக் கொண்டிருக்கிறேன்.

இந்த நிலையில் இந்த வீட்டில் இனிமேல் இருக்க வேண்டாம் என்கிறாள் அவந்திகா.  தனி வீடு.  நீ அடிக்கடி ஊருக்குப் போய் விட்டால் இங்கே என்னால் தனியாக இருக்க முடியாது.  எந்தப் பாதுகாப்பும் இல்லை.  அடிக்கடி திருடர்கள் நடமாட்டம் இருக்கும் பகுதி இது.  ஸோரோ இருக்கும் போது வீட்டுக்குள் ஒரு பல்லி கூட வர முடியாது.  செடி அசைந்தாலே குலைக்கும்.  அதன் சத்தத்தில் தெருவே அதிரும்.

அதனால் வீடு பார்த்தோம்.  வீடு பார்க்கும் அத்தனை பேருக்குமே பிரச்சினைதான்.  இஸ்லாமியருக்கு வீடு கிடைக்காது.  அசைவம் சாப்பிடுவோருக்கு வீடு கிடைக்காது.  நாய் வைத்திருப்போருக்கு வீடு கிடைக்காது.  என்னிடம் அசைவம், நாய் ரெண்டுமே பிரச்சினை.  ஆனால் எல்லாமே ஒரு சதுரங்க ஆட்டக்காரனின் தீர்மானத்தோடுதான் நடப்பது போல் உள்ளது.  ஸோரோ விடை பெற்ற ரெண்டே நாளில் வீடு கிடைத்து விட்டது.  என் வீட்டிலிருந்து வலது பக்கம் நடந்தால் ரெண்டு நிமிடத்தில் சாந்தோம் நெடுஞ்சாலை வரும்.  அந்த சாலையின் மறுபக்கம் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் கிடைத்தது.  இப்போது இருக்கும் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடை.  அபார்ட்மெண்ட் என்பதால் செக்யூரிட்டி ஆட்கள் உண்டு.

ஆனாலும் அவந்திகாவிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன், இப்போது ஏன் வீடு மாற்ற வேண்டும் என்று.  என் வீட்டுக்காரரும் இன்னும் ஐந்தாறு ஆண்டுகள் இங்கேயே இருங்கள் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.  ஏற்கனவே இங்கே வந்து பத்து ஆண்டுகள் ஆகிறது.  அவந்திகா தீர்மானமாக இருந்தாள்.  புது வீடுதான்.   ஏன் இப்படிப் பிடிவாதமாக இருக்கிறாள் என்று புரியவில்லை.  திருட்டு பயம் எல்லா இடத்திலும் உள்ளதுதானே?

ஆனால் அவந்திகா சொன்னது எத்தனை உண்மை என்பது ரெண்டே நாளில் விளங்கி விட்டது.  நேற்று என் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்த ஒரு பெண் ரவுடி என் வீட்டுக்குள் நுழைந்து அந்தப் பெண்மணியோடு கட்டிப் புரண்டு சண்டை.  இதற்கெல்லாம் போலீஸுக்குப் போக முடியாது நண்பர்களே?  எதார்த்தம் மிகச் சிக்கலானது.  என் வீட்டுப் பணிப்பெண் எங்கள் தெருவில் துப்புரவுப் பணியாளராக இருக்கும் ராஜேந்திரனின் மனைவி.  (வேலையில் சேர்ந்து மூன்று நாள் தான் ஆகிறது!) ஏய், குப்பக்காரன் பொண்டாட்டி, உனக்கு இவ்ளோ திமிராடி.  இதுதான் இங்கே பிரசுரிக்கக் கூடியது.

ஏன் போலீஸுக்குப் போக முடியாது என்றால், ‘குப்பைக்காரனான’ ராஜேந்திரனை ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு போய் அடிப்பார்கள்.  ஏற்கனவே இந்தத் தெருவில் ஒரு வீட்டில் 50 பவுன் நகை திருடு போய் விட்டது.  சிசிடிவி கேமராவில் தெருவில் நடமாடிய நபர்களில் ராஜேந்திரனும் ஒருவர்.  பிடி அந்தக் குப்பக்காரனை.  போலீஸின் லாஜிக்.  பிறகு நான் இது பற்றி குமுதத்தில் எழுதி ராஜேந்திரனை விடுவித்தேன்.  ராஜேந்திரன் ஒரு அப்பாவி.  அவர் பிழைப்பே தெருவில்தானே?  அப்படியிருக்கும் போது சிசிடிவியில் அவர் உருவம் தெரியும்தானே?

இந்த நிலையில் நான் எப்படி போலீஸுக்கு போன் செய்வது?  ஒரு பெண் ரவுடி என் வீட்டுக்குள் புகுந்து என் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணை இழுக்கிறாள்.  கத்தி ரகளை செய்கிறாள்.  நான் போலீஸுக்கு போன் போட முடியாது.  முதல் வேலையாக ராஜேந்திரனைத்தான் விசாரணைக்கு அழைத்து முட்டியைப் பெயர்ப்பார்கள்.  ஏற்கனவே இருக்கும் காண்டு வேறு சேர்ந்து விடும்.

ஸோரோ இருந்தால் அந்தப் பெண் ரவுடி வீட்டு கேட்டைத் திறந்து கொண்டு தோட்டத்துக்குள் நுழைய முடியுமா?

இன்று காலை என் அறைக்கு வெளியே இருக்கும் வராந்தாவின் கேட் கம்பிக் கதவைத் திறக்கும் சப்தம்.  வராந்தாவின் கதவைத் திறக்கக் கூடிய ஒரே நபர் அவந்திகா தான்.  அவந்திகாவோ வீட்டின் பின்பக்கம் இருந்தாள்.  எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டுப் போய்ப் பார்த்தால் ஒரு 60 வயதான பிராமணர்.  சட்டை இல்லை.  வாட்டசாட்டமான உருவம்.  முகத்திலோ பார்வையிலோ கொஞ்சம் கூட சாந்தமோ அன்போ இல்லை.  பப்பு ஒரு சத்தம் எழுப்பாமல் படுத்துக் கிடக்கிறது.  அசையக் கூட இல்லை.  ஸோரோவாக இருந்திருந்தால் அந்த ஆளைக் கொன்றிருக்கும்.

அந்த மனிதரை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை.  கயவாளித்தனத்தின் உச்சக்கட்டம்.  தோட்டத்தின் வெளி கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்ததும் அல்லாமல் உள் கதவையும் திறந்து கொண்டு வீட்டுக்குள் வரப் பார்க்கிறான் என்று ரத்தம் கொதித்தது.  அவந்திகாவை அழைத்தேன்.  முதலில் வெளியே போங்கோ என்றாள்.  உங்களுக்கு வார்த்தை வேணுமா வேணாமா என்று அதிகாரமாக அவரிடமிருந்து பதில் வந்தது.

எதுவாக இருந்தாலும் கேட்டுக்கு வெளியே நின்று சொல்லுங்கோ என்றாள் அவந்திகா.

அதிகம் பேசவில்லை.  வெளியே அனுப்பி கேட்டைப் பூட்டினாள்.  தினமும் ஒரு ஐந்து பேராவது வந்து சாமி பேர் சொல்லிப் பிச்சை எடுப்பது இங்கே வழக்கம்.  பிச்சை போடும் வரை கேட்டை அடித்துக் கொண்டே இருப்பார்கள்.  செவிச் சவ்வு கிழிவது போல் அடிப்பார்கள்.  உள்ளே வர முடியாது.  ஸோரோ நிறுத்தாமல் குரைத்துக் கொண்டே இருக்கும்.

இப்போதெல்லாம் மிரட்டிப் பிச்சை கேட்கிறார்கள்.  கொடுக்காவிட்டால் சாமி பேரைச் சொல்லி சாபம் விடுகிறார்கள்.  வேறு விதமான பிச்சையே இப்போதெல்லாம் பார்க்க முடியவில்லை.  பாபா பேரைச் சொல்லி பிச்சை.  இல்லாவிட்டால் பூணுலும் குடுமியாகப் பிச்சை.  சில சமயங்களில் நாலைந்து பிராமணர்களாக வந்து மிரட்டுகிறார்கள்.  பார்ப்பதற்கு ஒவ்வொருவரும் அடியாள் ரேஞ்சுக்கு இருக்கிறார்கள். கொடுக்க முடியாது என்றால் ஏதேதோ சம்ஸ்கிருதத்தில் சாபம் விடுகிறார்கள்.

அவந்திகா சொன்னது சரிதான்.  ஸோரோ இல்லாமல் இந்தத் தனி வீட்டில் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது.

பின்குறிப்பு:  சமூகத்தில் பிராமண துவேஷம் படுபயங்கரமாக மீண்டும் தலைதூக்கியிருக்கிறது.  சமூகத்தில் நிலவும் சாதிப் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் பிராமணர்களையே திட்டுகிற போக்கும் அதிகரித்திருக்கிறது.  இன்றைய சாதிப் பிரச்சினைகளுக்கு இடைநிலைச் சாதிகள்தான் பிரதான காரணம் என்பதை எல்லோரும் வசதியாக மறந்து விட்டு பிராமணர்களைத் திட்டுகிறார்கள்.   எந்த சாதியையும் திட்ட முடியாது.  ஆனால் பிராமண சாதியை என்ன வேண்டுமானாலும் திட்டலாம் என்பது இப்போதைய எதார்த்தம்.

எனவே பிராமண சாதியைத் திட்டி யாரேனும் பின்னூட்டம் போட்டால் அவர்களை நட்பு வட்டத்திலிருந்து நீக்கி விடுவேன்.  ஒரு தலித்தை சாதி சொல்லக் கூடாது என்பதைப் போலவேதான் பிராமணரையும் பார்ப்பான் என்று சொல்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே ஆவர்.  நான் இந்தப் பதிவில் எழுதியிருப்பது ஒரு சமூக அவலத்தை.  அடுத்த வேளை உணவை சேமித்து வைத்துக் கொள்ளாமல் உஞ்சவிருத்தி (பிச்சை) செய்து பிழைத்து வேதம் கற்பிக்க வேண்டியர் பிராமணர் என்று இருந்தது.  அப்படியெல்லாம் இருக்க வேண்டாம்.  ஆனால் இப்படி மிரட்டிப் பணம் பறிக்கும் அளவுக்கு இறங்கியிருப்பது எப்பேர்ப்பட்ட அவலம்?  ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரின் வாயிலிலிருந்து வந்த வார்த்தைகளை விடவா இது அவலம்?  அதுவும் சரிதான்.