பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு

உலகிலேயே எனக்கு மிக நெருக்கமான, மிகவும் பிடித்த பதிப்பகம் Readers International.  கடந்த 35 ஆண்டுகளாக நான் அவர்களின் வாசகன்.  சி.சு. செல்லப்பாவின் எழுத்து மாதிரி அது ஒரு சிறு பதிப்பகம்.  எழுத்தாளர்களுக்கு ராயல்டி எல்லாம் கிடைக்கும் என்று தோன்றவில்லை.  அந்த அளவுக்குச் சிறிய பதிப்பகம்.  லாபம் இருந்தால்தானே ராயல்டி கொடுக்க முடியும்?  ஒரு சேவை மாதிரி செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அந்தப் பதிப்பகத்தில் நம் புத்தகம் வருவது ஒரு நோபல் கிடைத்தது போல.  ஏனென்றால், உலகின் மிக முக்கியமான எழுத்தாளர்கள் அனைவரும் ரீடர்ஸ் இண்ட்டர்நேஷனலின் தீவிர வாசகர்கள்.  அதுவும் தவிர, இந்தப் பதிப்பகத்தில் நூல் வெளியான உடனேயே உலகில் உள்ள முக்கியமான பத்திரிகைகளில் எல்லாம் (நியூயார்க் டைம்ஸ், டைம்ஸ் லிட்ரரி சப்ளிமெண்ட்)  மதிப்புரை வந்து விடும்.

ரீடர்ஸ் இண்ட்டர்நேஷனல் தம் நூல்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறது?  அந்த நூல் அதுவரை ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கக் கூடாது.  முதல் வெளியீடாகவும் முதல் மொழிபெயர்ப்பாகவும் இருக்க வேண்டும்.  மொழிபெயர்ப்பு உலகத் தரத்தில் – அதாவது, மொழிபெயர்ப்பு என்றே தெரியாத மாதிரி இருக்க வேண்டும்.  அடுத்ததுதான் ரொம்ப முக்கியம்.  அந்த நூல் வெளிவந்த மொழியில் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்.  அது கலாச்சாரத் தடையாகவும் இருக்கலாம்.  அவர்கள் வெளியிட்ட முதல் நூல் To Bury Our Fathers.  Sergio Ramirez என்ற நிகாரகுவா பாதிரி எழுதிய நாவல்.  இவர் ஒரு சாண்டினிஸ்டா போராளியும் ஆவார்.  தென்னமெரிக்கத் திருச்சபையினர் மத மாற்றம் செய்வதை விட சமூக மாற்றமே முக்கியம் என நினைப்பவர்கள்.  போராளிகள்.

30 ஆண்டுகளில் சுமார் 30 புத்தகங்களை வெளியிட்டது ரீடர்ஸ் இண்ட்டர்நேஷனல்.  (விபரம் தவறாகவும் இருக்கலாம்.  தேடிப் பார்க்கவும்.)  என்னிடம் அந்த முப்பது நூல்களும் இருந்தன.  1990-இலிருந்து 1992 வரை நான் மைலாப்பூரில் இருந்தபோது என் வீட்டுக்குப் பூட்டு கிடையாது.  வெறுமனேதான் மூடித் தாள் போட்டிருக்கும்.  அப்போது 15 ரீடர்ஸ் இண்டர்நேஷனல் புத்தகங்களை எடுத்துச் சென்ற நண்பர்கள் திருப்பிக் கொடுக்கவில்லை.  இப்போது நான் என் உயிர் நண்பர் ஒருவருக்கு அந்த 30 புத்தகங்களையும் தருவித்துக் கொடுக்கலாம் என்று பார்த்தால் எந்தப் புத்தகமும் கிடைக்கவில்லை.  மிகப் பழைய, பலர் படித்த புத்தகங்கள்தான் அதீத விலையில் கிடைக்கின்றன.  அவை அவ்வப்போது வீட்டுக்கு வரும் போது அந்தப் பார்சலின் கவரைப் பார்த்தால் வித்தியாசமாக இருந்தது.  புத்தகம் துளிக்கூட கசங்கவோ மடங்கவோ இல்லை.  அதே கவரைத்தான் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கிலும் பயன்படுத்துவதைப் பார்த்து ஒரு கவரின் விலை கேட்டேன். அதற்குப் பெயர் bubble paper-ஆம்!  விலை 15 ரூ. என்றார்கள்.  அட பகவானே!  ஒரு கவருக்கே 15 ரூ. செலவழித்தால் அதற்கு மேல் குரியர் செலவு வேறு இருக்கிறதே?  ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால் பதிப்பகத்துக்குக் கிடைக்கும் லாபம் ஒரு புத்தகத்துக்கு அஞ்சு ரூபாய்.  தாளின் தரத்தைக் குறைத்து, இன்னும் பலவற்றின் தரத்தைக் குறைத்து வெளியிட்டால் லாபம் இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.  ஆனால் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ராம்ஜியும் காயத்ரியும் தரத்தில் சமரசம் செய்து கொள்வதாக இல்லை.  மார்ஜினல் மேன் நாவலைப் பார்க்கும் என் வட இந்தியப் பதிப்பக நண்பர்களும் எழுத்தாளர்களும் அதன் making-ஐப் பார்த்து வியந்து போகிறார்கள்.  எப்படி இது சாத்தியம் என்று வாய் விட்டே சொல்கிறார்கள்.

பதிப்பகத்துக்கு லாபம் என்றால் புத்தக விற்பனை எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே தான்.  ஆனால் சங்கத் தமிழ்ப் பாரம்பரியம் கொண்ட நாம் அதிக பட்சம் 1000 பிரதிகளுக்கு மேல் வாங்குவதில்லை என்று சாமியிடம் சத்தியம் பண்ணி இருப்பதால் எந்தப் பதிப்பகமும் லாபம் பார்க்க வழியே இல்லை.  இப்போதெல்லாம் books on demand என்ற அவல நிலை வேறு வந்துள்ளது.  புத்தகத்தைக் கேட்டால் அச்சடித்துத் தருவோம்.  தமிழ்நாட்டில் எவன் புத்தகம் கேட்பான்.  ஆயிரம் பிரதிகளை அச்சடித்துக் கடைகளுக்குக் கொடுத்தால் கடைகளிலிருந்து பைசா வருவதில்லை.

இந்த லட்சணத்தில் ஒவ்வொரு புத்தகத்திலும் எக்கச்சக்கமான அச்சுப் பிழைகள்.  அவை நேர்வதன் காரணம், யாருக்குமே தமிழ் எழுதத் தெரியவில்லை.  நான் இங்கே சொல்வது எழுத்தாளர்களைப் பற்றி அல்ல.  அவர்களுக்கும் எழுதத் தெரியவில்லை என்பது வேறு விஷயம்.  இலக்கணம் தெரியாமல், கடும் இலக்கணப் பிழைகளோடு ஒற்றுப் பிழைகளும் சேர்ந்து மகா கொடுமையாக எழுதுகிறார்கள்.  என் அத்யந்த நண்பர் எப்போதுமே வாழ்கை என்றே எழுதுகிறார்.  எவ்வளவோ புலம்பிப் பார்த்து விட்டேன்.  அந்த வாழ்கையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ரத்தக் கண்ணீர் வருகிறது.  இப்போது விட்டு விட்டேன்.  தமிழைக் காப்பாற்றுவதா என் வேலை?  நான் இங்கே பிழை என்று சொல்ல வருவது தட்டச்சு செய்வதிலும் type setting செய்வதிலும் நேரும் கோரப் பிழைகளை.  புத்தகங்களில் ஏகப்பட்ட junk.  மற்றும் … இப்படி மூன்று புள்ளி வரும் இடங்களில் ஞ் என்ற எழுத்து வருவது.  அச்சுப் பிழை என்றால் நாம் புரிந்து கொள்ளலாம்.  ஒரு ஊரில் என்பதை ஒரு உரில் என்றால் எழுத்தாளர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியும்.  ஆனால் &^p((x##@&%% என்று வந்தால் என்ன கருமத்தைப் புரிந்து கொள்வது?  இது தமிழ் தெரியாததால் அல்ல.  Font மாறுவதால் ஏற்படும் விபத்து.

இம்மாதிரி பிழைகள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் இல்லை என்பது நான் மகிழ்ச்சி அடையும் விஷயம்.  இது போன்ற காரணங்களால் நான் என் புத்தகங்களுக்கு மட்டும் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்ப்பது வழக்கமாகி இருக்கிறது.  புத்தக அட்டையில் பொதுவாக நான் தலையிடுவதில்லை.  அது பப்ளிஷர் விஷயம் என்று விட்டு விடுகிறேன்.  படத்தைக் காண்பித்தால் இது பிடிக்கிறது, இது வேண்டாம் என்று கருத்துச் சொல்வதோடு சரி.  ஆனால் பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதிக்கு ஒரு ஃப்ரெஞ்சுப் புத்தகத்தில் வந்திருக்கும் அட்டை மாதிரி வேண்டும் என்று கேட்டேன்.  அந்த அட்டை விலை அதிகம்.  கட்டுப்படி ஆகாது.

பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதிக்கு இதுவரை 260 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.  அவர்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி.  அதிலும் மாதக் கடைசியில் அனுப்பியிருக்கிறார்கள்.  இந்த 260 என்ற எண்ணிக்கை 500 என்று உயர்ந்தால் நான் விரும்பிய அந்த அட்டையைக் கொண்டு வரலாம் என்று நம்புகிறேன். அந்த அட்டை கொஞ்சம் புராதனத் தன்மையைக் கொடுக்கும்.  ஆனால் அதிகத் தரம் கொண்டது.  முன்பதிவு செய்ய 5-ஆம் தேதி வரை நாள் இருக்கிறது.  முன் பதிவு செய்ய முயற்சி செய்யுங்கள்.  ஒரு பிரதி வாங்குபவர்கள் ரெண்டு மூணு பிரதி வாங்கி நண்பர்களுக்கோ உறவுகளுக்கோ கொடுத்தால் நலம்.  முன்பதிவு செய்ய பின் வரும் இணைப்பில் விபரம் காணலாம்.

https://tinyurl.com/pazhuppu2