ஊரின் மிக அழகான பெண் – kindle edition

இன்றைய எகிப்திய இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர் என உலக இலக்கிய வரைபடத்தில் குறிக்கப்படுவர் Nawal El Saadawi. இவர் ஒரு பெண்ணியவாதி, சமூகவியல் மற்றும் உளவியல் அறிஞர், மருத்துவர், தீவிரமான களப்பணியாளர். இதுவரை 30 நூல்களை எழுதியுள்ளார். 12 மொழிகளில் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

1975-இல் வெளிவந்தது இவரது கட்டுரைத் தொகுப்பான The Hidden Face of Eve. இந்நூல் அடிப்படைவாதம், பெண்களின் பாலியல், விபச்சாரம், விவகாரத்து போன்றவைகளைப் பற்றி ஆய்வு செய்தது. (பெண்களின் பாலியல் குறித்து அரபி மொழியில் முதன் முதலில் எழுதியவர் நவ்வல் அல் -ஸாதவி என்பது குறிப்பிடத்தக்கது.) மேலும், சிறுவயதில் பெண்களின் பாலுறுப்பிலுள்ள clitoris-இன் முனையை வெட்டியெறிதல் (Clitoridectomy) என்ற பழக்கத்தைப் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. (இப்பழக்கம் எகிப்தில் சில காலம் தடை செய்யப்பட்டிருந்த போதிலும் 90களில் மீண்டும் நடைமுறைக்கு வந்தது.) பெண்களின் காம வேட்கை கட்டுக்கடங்காமல் போய்விடுவதைத் தடுக்கவே பெண்களின் பாலுறுப்பு சிதைக்கப்படுவதாகக் கூறுகிறார் அல் – ஸாதவி.

1979-80-இல் ஐ.நா சபையின் மத்திய கிழக்கு நாடுகளின் பெண்கள் பிரிவு ஆலோசகராகப் பணி புரிந்த அல்-ஸாதவி, 1980-இல் அன்வர் சதாத்தினால் அரசாங்க விரோதியாக அறிவிக்கப்பட்டு ஒரு மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக் குறிப்பிட்ட மகளிர் சிறை நவ்வல் அல் -ஸாதவிக்கு ஏற்கனவே பரிச்சயமாகியிருந்தது. எழுபதுகளில் அந்தச் சிறைவாசிகளைப் பற்றித்தான் அவர் ஆய்வு செய்திருந்தார். அப்போது அல்-ஸாதவி கூறினார். “நான் சதாத்தை நம்பியதால்தான் சிறையில் அடைக்கப்பட்டேன். எகிப்தில் ஜனநாயக அரசே நடைபெறுகிறது என்றார் சதாத். அவர் கூறியதை நம்பி நான் அரசை விமர்சித்தேன். கிடைத்தது சிறைவாசம்.” சிறையில் அடைக்கப்பட்டபோதிலும் அவருடைய எழுத்தை அரசினால் தடை செய்ய முடியவில்லை. சிறையில் அவருக்கு காகிதமும், பேனாவும் மறுக்கப்பட்டது. அந்த நிலையிலும் அவர் கழிவறையில் மலம் துடைக்கப்பயன்படும் டிஷ்யூ பேப்பரில் ஐ-ப்ரோ பென்சிலை வைத்துக் கொண்டு தனது சிறைக் குறிப்புகளை எழுதினார்.

நவ்வல் அல் ஸாதவி எழுதிய ஒரு கதை மாண்புமிகு மந்திரியின் மரணம். ஒரு மந்திரிக்கு அவருக்குக் கீழ் உள்ள எல்லோரும் ஜால்ரா போட்டுக் கொண்டே இருப்பார்கள். அவரும் அவருக்கு மேல் உள்ளவர்களுக்கு ஜால்ரா. ஒருநாள் ஒரு கீழ்நிலை ஊழியராகப் பணிபுரியும் ஒரு பெண் அவரைக் கண்கொண்டு பார்த்துப் பேசுவாள். அதற்குப் பிறகு என்னென்ன நடந்தது என்பதுதான் கதை. இந்தக் கதை நம் இந்தியச் சூழலுக்கு மிகவும் நெருக்கமானது. இது போன்ற கதைகளின் தொகுப்பு தான் ஊரின் மிக அழகான பெண்.

kindle edition price Rs.99/-

https://www.amazon.in/dp/B07DD38F91/ref=cm_sw_r_wa_apa_i_zelfBb23YQB33