டிஸம்பர் 18

டிஸம்பர் 18 அன்று என்னுடைய பிறந்த நாளை வாசக நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக மஹாபலிபுரத்தில் கூடினோம்.

பிரியமுடன் துரோகி (என் தளபதி; வீட்டிலிருந்து கோழி வறுவல் கொண்டு வந்திருந்தார்)

செல்வகுமார் & கருப்பசாமி (ஏகப்பட்ட பண்டங்களைக் கொண்டு வந்திருந்தனர்.  வெங்காய வடாம் பிரமாதமாக இருந்தது.  தம்பி உடையான்; படைக்கஞ்சான் என்ற பழமொழிக்கேற்ப என் பக்கத்தில் நிற்பவர்கள்)

அராத்து (இவர் பற்றி எழுதினால் பெண்களிடமிருந்து ‘மாத்து’ விழும் என்பதால் வேண்டாம்)

முகிலன் (திருச்சி) பிறகு சொல்கிறேன்.  செம மேட்டர் உள்ளது.

சி. சுப்ரமணியன் (இவர்தான் morgue keeper நூலுக்கு அட்டைப் படம் வரைந்தவர்.  அது மட்டுமல்லாமல் என் உருவத்தைக் கோட்டு ஓவியம் வரைந்து கொண்டு வந்திருந்தார்.  அப்படியே அச்சு அசலாக இருந்தது.  ஒரு நாள் முழுவதும் செலவாகி இருக்கும்)

ஈரோட்டிலிருந்து நவீன்குமார் (எல்லா சந்திப்புகளிலும் கலந்து கொள்பவர்.  வாசகர் வட்டத்தில் இவரது பங்களிப்பு அதிகம்)

குரோம்பேட்டையிலிருந்து லோகேஷ் (இவர் கப்பலில் பணி புரிந்தவர் என்பதால் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்; இவரோடு விரிவாகப் பேச முடியவில்லை; போன் நம்பர் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டேன்)

திருச்சியிலிருந்து பாலா

(நண்பர்களிடம் நான் சொன்னேன்.  நேற்றுதான் யாரோ ஒரு வாசகர் என் கைத்தொலைபேசிக்கு 500 ரூபாய்க்கு டாப் அப் செய்திருக்கிறார்.  அந்த வாசகரின் அன்பு என்னை நெகிழச் செய்கிறது.  அப்போது குறுக்கிட்ட பாலா ஏதோ தவறு செய்து விட்டதான குரலுடன் ”அவ்வளவுதான் முடிந்தது சாரு; ஸாரி” என்றார்.  நான் பதறிப் போய் விட்டேன்.  எனக்கு அவர்தான் அது என்று தெரியாது.  அவரிடம் பிறகு ஒரு சமயத்தில் “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்” என்று கேட்டேன்.  ஒரு வேலையைச் சொன்னார்.  ”அந்த வேலைக்கு சம்பளம் அதிகமாக இருக்காதே?” என்றேன். ”8000 ரூ.” என்றார்.  அதிர்ந்தே போனேன்.  வேண்டாம் பாலா.  இப்படிச் செய்யாதீர்கள்; உங்கள் அன்பே போதும்.  ஏனென்றால், மற்ற சிலரைப் போல் எல்லா வாசகர் வட்ட சந்திப்புகளிலும் தவறாமல் கலந்து கொள்கிறார் பாலா.  அதோடு, வாய் திறந்து பேசவும் மாட்டார்.  மௌனமான பார்வையாளர்.

ராஜ ராஜேந்திரன் (என் உடன்பிறவா சகோதரர்)

கார்த்திக் (புது வரவு.  இவர் என் பக்கத்தில் இருந்தால் யானை பலம் பிறக்கிறது.  அராத்துவுக்கு நேர் எதிரான innocence உள்ளவர்.  மகாபலிபுரத்தில் இவரிடம் நான் “உங்கள் வாழ்வில் எப்போதாவது கோபம் வந்துள்ளதா?” என்று கேட்டேன்.  ஓ அடிக்கடி வரும் என்றார்.  ”எப்படி?  கோபம் வந்தால் என்ன செய்வீர்கள்?”  மனதுக்குள் ”donkey என்று திட்டுவேன்” என்றார்.  ஓ, அஞ்சலியின் ஆண் வடிவம்!!!

அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்.

கல்லூரி மாணவனைப் போல் இருந்தாலும் திருமணம் ஆனவர்.  காதல் திருமணம்.

ஓ…  உங்கள் மனைவி படு shrewd ஆக இருக்கணுமே?

ஆமாம்… ஆமாம்… செம ஷ்ரூட்.  உங்களுக்கு எப்படித் தெரியும்?

உங்களைத் தேர்ந்தெடுத்து இருப்பதிலிருந்தே தெரியலியா?

பிச்சைக்காரன், நாதன் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மதுரையிலிருந்து இரவு 12.30க்கு காரில் கிளம்பி காலை ஆறு மணிக்கு மகாபலிபுரம் வந்து சேர்ந்த நண்பர்கள் பூர்ணசந்திரன், மனோ மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த ஸாம். (ஸாம் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறார்.  எழுதினால் கோணங்கிதான்.  வாசகர் வட்டத்தில் எல்லோராலும் கோணங்கி என்று செல்லமாக அழைக்கப்படுபவர்)

காரில் இரவுப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது என்று நீண்ட காலமாக எழுதி வருகிறேன்.  ஏதேனும் சந்தேகம் இருந்தால் நாதனைக் கேளுங்கள்.  கொடூர கதைகள் பல சொல்வார்.

சென்ற வாரம் நாதனுடன் நடந்த தொலைபேசி உரையாடல்:

அண்ணே, ஒரு sad newsணே…

சொல்லுங்க நாதன்…

நம்ம ஆளு ஒருத்தன் ஃபேமிலியோட போய்ட்டான்னே…

கார்லயா?

ஆமாண்ணே, நாதாரிப் பய… முந்தாநேத்துதான்னே ஸ்டேட்ஸ்லேர்ந்து வந்தான்… பெங்களூருக்குக் குடும்பத்தோட…

நைட்ல போனாரா?

ஆமாண்ணே…

ம்ஹ்ம்… ஓகே நாதன்… அப்புறம் கூப்பிடறேன்.

பல விஷயங்கள் பேசினேன்.  குறிப்பாக ஸீரோ டிகிரி பற்றி.  கோணல் பக்கங்கள் பற்றி.  அதையெல்லாம் அந்தப் புத்தகங்கள் இன்னும் சில நாட்களில் வெளிவரும் போது விரிவாக எழுத இருப்பதால் இங்கே வேண்டாம்.

சில நண்பர்கள் ஸலாத்-க்காக காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தார்கள்.  நான் பெரும்பாலான நாட்களில் காலையில் ஸலாத் தான் சாப்பிடுகிறேன்.  நானே தான் நறுக்கிக் கொள்வேன்.  இதற்காக உங்கள் மனைவியை எதிர்பார்த்தால் அவர் வேறு எதையாவது நறுக்கி விடுவார், ஜாக்கிரதை.  ஏனென்றால், அது அவ்வளவு ‘நை நை’ வேலை.  ஆனால் விரும்பிச் செய்தால் அது ஒரு கொண்டாட்டம்தான்.  இதோ நான் சாப்பிடும் ஸலாத்.  எல்லோரும் நான் குடிப்பதை மட்டும்தானே கவனிக்கிறார்கள்.  ஸலாதையும் கவனியுங்கள்.

ஸலாதில் நான் சேர்க்கும் காய் வகைகள்:

தக்காளி

கேரட் (தோலை நன்றாக சீவி, நன்கு கழுவி விட வேண்டும்.  ஏன் என்று கேட்காதீர்கள்.  சொன்னால் அப்புறம் ஸலாத் ஆசையே போய் விடலாம்.  ஆனால் பயம் வேண்டாம்.  தோலை நன்றாக சீவி, கழுவி விட்டால் போதும்).

அரை முள்ளங்கி  (காரத்துக்காக)

Capsicum (பச்சையில் கொஞ்சம், மஞ்சளில் கொஞ்சம், சிவப்பில் கொஞ்சம்.  கொஞ்சம் என்பதன் அர்த்தம் என்ன என்றால், ஒரே கேப்ஸிகம்மிலிருந்து கொஞ்சம் நறுக்கிக் கொள்ள வேண்டும்.  மீதியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து மறுநாள் பயன்படுத்திக் கொள்ளலாம்).

Herbal cucumber

Broccoli (நன்றாகக் கழுவியது)

கோவைக் காய்

ஆலிவ் காய் ஏழெட்டு.  இதை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம்.

நான் இஞ்சியும் நறுக்கிப் போட்டுக் கொள்வேன். முடிந்தவரை  இஞ்சியில்லாமல் எதுவுமே சாப்பிடுவதில்லை.

இந்த அய்ட்டங்களோடு உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ப இன்னும் சிலதையும் சேர்த்துக் கொள்ளலாம்.  அதற்காக முருங்கைக்காய், கத்தரிக்காய், சுரை, பூசணி, பரங்கி, பாகற்காய் போன்ற நாட்டுக் காய்களை சேர்க்கக் கூடாது.  ஸலாத் என்பதே சீமைச் சரக்கு என்பதை கவனம் வைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு பீங்கான் பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் புதினா, கொஞ்சம் கொத்துமல்லி (எல்லாம் படு சுத்தமாகக் கழுவப்பட்டிருக்க வேண்டும்) நறுக்கிப் போட்டு, இதன் தலையில் ஒரு வண்டி உப்பைப் போடாமல் லேசாக – மிக லேசாக – உப்பு போட்டு, அதன் மேல் கொஞ்சமாக எலுமிச்சை போட வேண்டும். கவனியுங்கள்.  எலுமிச்சையைப் பிழிய வேண்டும் என்று சொல்லவில்லை.  எலுமிச்சையை தோலோடு மிக மிகக் குட்டியாக நறுக்கி ஸலாதில் போட வேண்டும்.  எலுமிச்சைத் தோலையும் சேர்த்து உண்ண வேண்டும் என்பதை நான் தாய்லாந்தில் கற்றுக் கொண்டேன். இங்கேயும் கூட சில தாய் உணவகங்களில் சாப்பிடுவதற்கு முன் ஒரு அய்ட்டம் கொடுப்பார்கள்.  வெற்றிலை, தோலோடு எலுமிச்சை, ஒன்றிரண்டு வேர்க்கடலை, இஞ்சி, துளியூண்டு பச்சை மிளகாய், கொஞ்சம் தேன் இது எல்லாவற்றையும் சேர்த்து வாயில் போட்டுக் கொண்டு பிறகுதான் சாப்பிட ஆரம்பிப்பது.

இதைத்தான் இருபது பேருக்குத் தயார் செய்தார்கள் மகாபலிபுரத்தில்.  இந்த வேலையில் யார் யார் ஈடுபட்டது?

நம்முடைய வாசகர் சந்திப்புகளில் இது போன்ற ஸலாத் அய்ட்டங்கள் வெகு விசேஷம்.  இன்னொரு ஸலாதையும் நண்பர்களோடு சேர்ந்து தயாரித்தார் அராத்து.  அதில் வெறும் கீரை வகைகள் இருந்தன.  முளைக்கீரை இல்லை சாமி.  Lettuce போன்ற சீமைக் கீரை வகைகள்.  வெங்காயத் தாள்.  அதன் கீழே உள்ள வெங்காயம் உட்பட.  Celery sticks என்று ஒரு அற்புதமான கீரை வகை உள்ளது.  அதையும் சேர்க்க வேண்டும்.  மற்றும் பல.

அடா அடா.

நாகேஸ்வர ராவ் பார்க்கிலிருந்து திரும்பியதும் ஏதோ தியானம் பண்ணுவது போல் இத்தனை காய்கறிகளையும் நான் வெட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் அவந்திகாவும் எனக்கும் கொஞ்சம் குடேன் என்பாள்.  சரி என்று அவளுக்கென்று தனியாக ஒரு பீங்கான் கிண்ணத்தில் தயார் செய்வேன்.  அவளுக்கு வெங்காயம் கூடாது.  எலுமிச்சை கூடாது. கேரட் கூடாது. இதுபோல் இன்னும் சில கூடாதுகள்.

பழ ஸலாத் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.  இப்போதே சொன்னால் திருஷ்டி போட்டு விடுவீர்கள்.

மாலையில் வந்த கார்த்திக், நம்முடைய வாசகர் வட்டத்தில் வரும் என் படங்களைக் கொண்ட அதே படத்தை கேக்கில் வரையச் செய்து எடுத்து வந்தார்.  பேசிக் களைத்து மாலையில் நான் உறங்கச் சென்றேன்.  அதற்கு முந்தின தினங்களில் நான் தொடர்ந்து உறங்காமல் இருந்தேன்.

அன்றைய தினம் நான் அருந்திய கோனியாக்கின் பெயர் Baron Oatard.  பெயரின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு கோலாலம்பூரில் வாங்கினேன்.  ஆனால் குடித்த போது ரெமி மார்ட்டின் அளவுக்கு வரவில்லை.  இனிமேல் எப்போதும் ரெமி மார்ட்டின் தான்.  இந்த எப்போதும் என்பதற்கு சரியான அர்த்தம் வாங்கிக் கொள்ளவும்.  18-ஆம் தேதி நடந்த சந்திப்பு பற்றி 11 தினங்கள் கழித்து எழுதுகிறேன்.  அந்த அளவுக்கு வேலை.

நாளை காலை win tv இல் கிம் கி டுக் படத்தைப் பற்றிப் பேசுகிறேன். அரை மணி நேரம் பேசுவதற்கு ஒரு நாள் முழுவதும் தயார் செய்ய வேண்டியிருக்கிறது.  இது கொஞ்சம் விசேஷமான நிகழ்ச்சி.  ஒரே இடத்தில் அமரச் செய்து பேசுங்கள் என்றால் கூட கடகடவென்று பேசி விடலாம்.  இது அப்படி அல்ல.  ஒரு வேகத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதே “கட்” சொல்லி விடுவார் இயக்குநர்.  பிறகு இன்னொரு இடத்தில் அமர்ந்தோ நடந்து கொண்டோ பழைய வேகத்திலேயே பேச வேண்டும்.  இது போல் இரண்டு நிமிடத்துக்கு ஒரு கட்.  இதெல்லாம் ஒரு சமூக சேவை.  காசு ஒரு சல்லி கிடைக்காது.  ஏனென்றால், வின் டிவி லாபத்தில் நடக்கும் நிறுவனம் அல்ல.

எதற்குச் சொல்கிறேன் என்றால், நான் குடிப்பதை மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்பதற்காகத்தான்.  ஒரு மாதத்திலேயே ஒன்றிரண்டு முறைதான் குடிக்கிறேன்.  அதிலும் கோனியாக், ஒயின் இப்படி. அதிலும் இந்திய ஒயினைத் தொடுவதில்லை.  இந்தியாவில் ஆன்மீகத்தைத் தவிர வேறு எதுவும் தரமாக இல்லை.  கடல் கூட இந்தியாவில் குமுறுகிறது.  தாய்லாந்துக் கடல் தாய் பெண்களைப் போலவே நம்மோடு கொஞ்சிக் குலவுகிறது.  அலையையே பார்க்க முடியவில்லை.  கடல் நீரில் உப்பு அதிகம் இருப்பதால் நாம் அந்தக் கடலில் நம் முயற்சி இல்லாமலேயே தக்கையைப் போல் மிதக்கிறோம்.  இதெல்லாம் இந்தியக் கடலில் சாத்தியமா?  இந்தியா என்றாலே மூர்க்கம்தான்.

உறங்கி எழுந்து வந்த போது கார்த்திக் கேக்கோடு வந்தார். நான் கடலில் இறங்கவில்லை.  இவ்வளவு மூர்க்கமான கடலில் இறங்குவதில் எனக்குப் பிரியமில்லை.  அதன் பிறகு மீன் உணவு, ஸலாத், கோனியாக்.  பேச்சு.  பேச்சு.  திடீரென்று சோமன் போனில் அழைத்தார்.  “எங்கே இருக்கிறீர்கள்?” என்றேன்.  அவருடைய இரண்டாவது வீடான நாகேஸ்வர ராவ் பார்க் என்றார்.  மாலை அப்போது ஏழு.  “சடாரென்று கிளம்பி மஹாபலிபுரம் வாருங்களேன்… இன்று என் பிறந்த நாள்” என்றேன்.  சடாரென்று கிளம்பி வந்து விட்டார்.  வந்த போது இரவு மணி பத்து.

சற்று நேரத்தில் கடற்கரையில் வட்டமாக அமர்ந்து கொண்டோம்.  சோமன் தன் சங்கீதத்தை ஆரம்பித்தார்.  அவர் ஒரு அற்புதமான கர்னாடக இசைக் கலைஞர்.  பார்க்கில் பழக்கம்.  நாலு வருடம்.  நாலு வருடமாக அவரை எனக்காகப் பாடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  பாடவில்லை.  லேசாகச் சிரித்துக் கொண்டு போய் விடுவார்.  எனக்கு எரிச்சலாக இருக்கும்.  ஒரு ரசிகன் கேட்கிறேன்.  பாட மாட்டேன் என்கிறாரே?  ஆனால் ஒன்றிரண்டு நாவல்கள் எழுதும் அளவுக்கு இசை பற்றிய, இசைக் கலைஞர்கள் பற்றிய கதைகளைச் சொல்லி இருக்கிறார்.

அந்தக் கடல் அலைக்கும் அவருடைய பரந்து விரிந்த குரலுக்கும் பிரமாதமாக இருந்தது.  ஒரு மணி வரை கச்சேரி நடந்தது.  இடையிடையே விளக்கங்கள் வேறு.  நானும் என் சந்தேகங்களையெல்லாம் கேட்டேன்.  (இப்போது எதுவும் ஞாபகம் இல்லை; மன்னிக்கவும்).  தவில் கலைஞர்களின் விரல்களில் வெள்ளையாக மாட்டி இருப்பார்களே, அதன் பெயர் தொப்பி.  அந்தத் தொப்பி பற்றி அவர் சொல்லியவற்றை மட்டுமே நூறு பக்கம் எழுதலாம்.

முடியும் தறுவாயில் அங்கே வந்த போலீஸ்காரர் ஒருவர் எங்களையெல்லாம் பொறுக்கிகள் என்று நினைத்துக் கொண்டு ஒருமையில் பேசி விரட்டினார்.  அராத்து எங்கள் வெளிச்சத்துக்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த சிறிய டார்ச் லைட்டின் வெளிச்சத்தை வைத்துத்தான் அந்தப் போலீஸ்காரர் அங்கே வந்திருக்க வேண்டும்.  பிறகு அங்கிருந்து கிளம்பி ஓட்டல் வாசலுக்கு வந்து – அங்கேயும் கடல் தான் – அராத்துவின் காரை மணலில் போட்டு விட்டு, காரிலிருந்து செம பாடல்களைப் போட்டு நடனத்தை ஆரம்பித்தோம்.

உறக்கம் வரும் வரை ஆடி விட்டு நான் அறைக்குக் கிளம்பினேன்.  மறுநாள் காலையில்தான் தெரிந்தது.  கார் மணலில் இருந்த பள்ளத்தில் சிக்கி விட்டதாம்.  பத்து பேராலும் எடுக்க முடியாமல் அந்தப் பக்கமாக வந்த லோக்கல் ஆட்கள் நாலு பேரின் உதவியால் காரை அப்படியே மேலே தூக்கி வைத்திருக்கிறார்கள்.

காலையில் எழுந்த பின் முகிலன் உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என்றார்.  என்ன விஷயம் என்றால், அவர் தான் ஒரே மாதத்தில் தேகம் நாவலை மொழிபெயர்த்த, எனக்கு முகம் தெரிந்திராத ஸாம்.  ஒரு சஸ்பென்ஸாகச் சொல்ல இருந்தாராம்.

வந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.

 

 

 

 

Comments are closed.