சர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…

சில ஆண்டுகளாகவே நான் சக எழுத்தாளர்கள் யாரையும் விமர்சித்து எழுதுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதைப்போலவே சினிமா விமர்சனங்களும் எழுதுவதில்லை. காரணம், அப்படிப்பட்ட மனநிலை இப்போது எனக்கு இல்லை. செய்வதற்கு எத்தனையோ காரியங்கள் காத்துக் கிடக்கின்றன. இரண்டு நாவல்களை முடித்தாக வேண்டும். ஒரு நாடகத்தை எழுதி முடித்திருக்கிறேன். இன்னொரு நாடகம் எழுதுவதற்கான தயாரிப்பில் இருக்கிறேன். இப்படி ஏராளமான வேலைகள் இருக்கும் போது சக எழுத்தாளர்களை விமர்சனம் செய்வது போன்ற எதிர்மறையான செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளலாம் என்பது என் எண்ணம். அப்படிப்பட்ட நிலையில் இந்தப் பதிவை எழுதுவதற்கு உண்மையிலேயே நான் வருத்தம் அடைகிறேன். விஷயம் இதுதான். சர்க்கார் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார். அப்படி வசனம் எழுதியது பற்றியும் அதன் பின்னணி பற்றியும் நிறையவே எழுதியிருக்கிறார். சுமார் 45 நாட்கள் தன் வாழ்விலேயே இல்லாதபடி கடும் உழைப்பைக் கோரியது அந்த படம். அவ்வளவு நேரத்தில் நான் ஏழெட்டு வெண்முரசு நாவல்களை எழுதி இருப்பேன் என்றெல்லாம் எழுதி இருக்கிறார் ஜெ.
ஒரு முறை அல்ல, பல முறை ஜெயமோகன் தன் கூட்டங்களிலும் மற்ற இடங்களிலும் சொன்னதுதான்- பணம் கிடைக்கிறது என்பதற்காகத்தான் சினிமாவில் வசனம் எழுதுகிற எழுதுவதாக. அந்தப் பணம் அவரது பயணத்துக்கும் பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது.

இலக்கிய உலகில் ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலையை ஜெயமோகன் தனிநபராக செய்து கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து உத்வேகம் பெற்று அவரது வாசகர்களும் அவருக்குத் தோள் கொடுக்கிறார்கள். நல்ல காரியம்.

பொதுவாக சினிமாவுக்கு எழுதும்போது அதற்கு நாம் எக்கச்சக்கமான விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. ஒரு உதாரணமாக எனக்கு மிக வருத்தத்தை அளித்த ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஜெயமோகனின் நெல்லை கட்டண உரை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அந்தக் கூட்டம் பற்றி எழுதும் ஜெயமோகன் சர்க்கார் படத்தின் ‘வெற்றி’ பற்றிப் பேசுகிறார். அதற்கான அவசியம் என்ன? அது என்ன அவர் இயக்கிய படமா?

சினிமாவில் எழுத்தாளர்களை மதிப்பதில்லை என்பது எல்லோரும் அறிந்த விஷயம். “அப்படி எல்லாம் இல்லை. எனக்கு நல்ல மரியாதை தருகிறார்கள” என்று ஜெயமோகன் சொல்லலாம், கருதலாம். அதில் தவறு இல்லை. ஆனால் நான் மரியாதை என்று சொன்னது ஜெ. வந்தால் இயக்குனர் எழுந்து நிற்பதை அல்ல. சர்க்கார் படத்தின் டைட்டில் கார்டில் வசனம் என்று போட்டு முதலில் அந்தப் பட இயக்குனரின் பெயர்தான் வருகிறது. அதற்குப் பிறகுதான் ஜெயமோகனின் பெயர். இதுதான் சினிமாக்காரன் எழுத்தாளருக்குக் கொடுக்கும் மர்யாதை.

சினிமாவில் நான் வசனம் எழுதுவதில்லையே தவிர சினிமா உலகில் எனக்கு எக்கச்சக்கமான நண்பர்கள் உண்டு. அவர்கள் மூலம் நான் அறிந்தது – சர்க்கார் 20 கோடி நஷ்டம். ஆனால் ஜெ. எழுதியிருப்பதைப் பாருங்கள்.

“நிகழ்வரங்குக்கும் விடுதிகளுக்கும் அருகே சர்க்கார் படத்தின் பெரிய சுவரொட்டிகள், ராம் முத்துராம் அரங்கில் பெருங்கூட்டத்தின் பரபரப்பு. நாளிதழ்களில், ஊடகங்களில் சரவெடிச் சர்ச்சைகள். இன்னும் பத்துநாட்களில் ஒருவேளை தமிழில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே அதிகமான பணமீட்டிய படமாக சர்க்கார் அமையக்கூடும் என்றது சினிமா வினியோக வட்டாரத்திலிருந்து வந்த செல்பேசிச் செய்தி. நான் அறியாத வேறேதோ உலகில் அதெல்லாம் நடந்துகொண்டிருந்தன. நான் அந்தப்படத்தை இன்னமும் பார்க்கவில்லை.

சர்க்காரின் வெற்றி எதிர்பார்த்ததுதான். அதன் மாபெரும் வெற்றி சினிமாவில் எப்போதுமுள்ள ஆச்சரியங்களில் ஒன்று.”

இது ஜெயமோகன். அதிமுகவினர் விஜய் போஸ்டரைக் கிழித்து அதைப் பிரபலம் ஆக்கி விட்டார்கள். பெருமாள் முருகனுக்கு நடந்த கதையே தான். அதனால் பெ.மு. தமிழின் சிறந்த எழுத்தாளர் ஆகி விடுவாரா என்ன? விட்டால் ஜெ. விஜய் ரசிகர் மன்றத்தில் சேர்ந்து விடுவார் போலிருக்கிறதே? எதற்கு ஜெயமோகன் உங்களுக்கு இந்த வேலை? உங்கள் பெயரை உச்சரிப்பதற்குக் கூட தகுதி இல்லாதவர்கள் சினிமாக்காரர்கள் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். உங்களை வெகுவாக மதிக்கும் ஒரு சக எழுத்தாளனாக இதைச் சொல்கிறேன்.