நேசமித்திரனின் புதிய தொகுதி

வெளிவர இருக்கும் நேசமித்திரனின் கவிதைத் தொகுதிக்கு நான் எழுதியுள்ள முன்னுரையின் ஒரு பகுதி. தொகுதி ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரத்திலிருந்து வெளிவர உள்ளது.

அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளும் ஆண் பெண் உறவுச் சிக்கல்களுமே இன்றைய தமிழ்க் கவிதையின் பாடுபொருளை பெருமளவுக்கு ஆக்ரமித்திருப்பதாகத் தோன்றுகிறது. தமிழ்நாட்டைப் போன்ற ஒரு பைத்தியக்கார வாழ்வியல் வெளியில் அதற்கான முழு நியாயமும் கூட இருக்கிறது. கலாச்சாரத்தை முற்றாக இழந்து விட்டு அதை இழந்தது கூடத் தெரியாமல் பணத்தையும் போலி சந்தோஷங்களையும் தேடி ஓடிக் கொண்டிருக்கும் தமிழரின் வாழ்வைப் பற்றி எழுத ஏராளம் இருக்கிறது. அதேபோல், மனித குல வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இன்றைய காலகட்டம் ஆண் பெண் உறவுச் சிக்கலின் உச்சத்தில் நிற்கிறது. ஒரு கவிஞனால் இதைத் தாண்டி சிந்திக்கவே முடியாதபடி அவனை இறுக்கிக் கொண்டு கிடக்கின்றன இந்த இரண்டு பிரச்சினைகளும்.

தற்காலத்திலிருந்து மீண்டு சற்றே பின்னோக்கிப் பார்த்தாலும் கடந்த 2000 ஆண்டுக் கால தமிழ் இலக்கிய வரலாற்றில் தத்துவம் சார்ந்த கவிதைகள் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. வள்ளுவனையும் கணியன் பூங்குன்றனையும் கூட வாழ்வியல் நெறி சார்ந்த போதனையாளர்கள் என்றுதான் சொல்லலாமே ஒழிய தத்துவம் சார்ந்தவர்கள் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் சம்ஸ்கிருதத்தில் தத்துவத்துக்கு மிக நீண்ட மரபும் பாரம்பரியமும் இருக்கிறது. ரிக் வேதத்தில் வரும் நாஸதீய சூக்தம் அது எழுதப்பட்டு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் ஐரோப்பாவில் ‘அறிமுகமான’ எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தைப் பேசுகிறது.

அங்கே சூன்யமும் இல்லை; இருப்பும் இல்லை.

அங்கே காற்றும் இல்லை; சொர்க்கமும் இல்லை.

எல்லாவற்றையும் சூழ்ந்திருந்தது எது? எல்லாம் எங்கே இருந்தது? யார் இதையெல்லாம் கவனித்துக் கொண்டது?

அங்கே மரணமும் இல்லை; ஜனனமும் இல்லை.

இரவும் இல்லை; பகலும் இல்லை.

இப்படியாகப் போகும் அந்தப் பாடல் இவ்வாறு முடிகிறது:

ஆனால் கடைசியில் யாருக்குத் தெரியும், யாரால் சொல்ல முடியும்,

இது எல்லாம் எப்படித் தோன்றியது, எப்படி வந்தது என்று?

சிருஷ்டிக்குப் பிறகுதான் கடவுள்கள் சிருஷ்டிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே சிருஷ்டியின் ரகசியத்தைக் கடவுள் எப்படி அறிந்திருக்க முடியும்?

எல்லா சிருஷ்டிக்குமே சிருஷ்டிகர்த்தா இருக்க வேண்டும் என்றால் அந்த சிருஷ்டிகர்த்தாவுக்குத்தான் – அது ஆணா பெண்ணா தெரியவில்லை – இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்; ஒருவேளை தெரியாமலும் இருக்கலாம்.

இந்தப் பாடலின் கடைசி வாக்கியம்தான் கவி மனம். இத்தகைய தத்துவார்த்தம் ஏன் தமிழ் மரபில் இல்லாமல் போனது என்ற ஆராய்ச்சிக்குள் நான் போகவில்லை. சமகாலத் தமிழ்க் கவிதையிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். விதிவிலக்கா ஒன்றிரண்டு பேர். என் தலைமுறையில் தேவதச்சனும் எஸ். சண்முகமும். இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக் கிடைக்கிறார். அவர் நேசமித்திரன்.

நேசமித்திரனை நான் சந்திக்கும் போதெல்லாம் அவர் என்னோடு ஏழெட்டு மணி நேரம் உரையாடுவதை அனுபவம் கொண்டிருக்கிறேன். அப்போது அவரை விட நான் முப்பது ஆண்டுகள் மூத்தவன் என்ற எண்ணமே தோன்றாது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் இருந்த தத்துவார்த்த உரையாடல் மரபே இங்கு நேசமித்திரனின் மூலம் மதுரையில் தொடர்கிறது என்று நினைப்பேன்.

பொதுவாக தத்துவமும் கவிதையும் இணைவதில்லை. (அதற்கும் விதிவிலக்காக இருந்திருப்பது வேதமும் அதன் மரபில் வந்த அற்புதக் கவியான ஆதி சங்கரனும்.) காரணம், விஞ்ஞானத்தைப் போலவே தத்துவமும் உணர்வுகளைப் புறந்தள்ளி தர்க்கத்தை முன்னெடுக்கிறது. கவிதையோ இதற்கு மாறாக, தர்க்கம் – அ-தர்க்கம் என்ற நிலைகளைத் தாண்டி பித்த நிலைக்குச் சென்று விடுகிறது. ஆக, ஒரே நேரத்தில் தர்க்கம் – பித்தம் என்ற இரண்டு எதிர்நிலைகளில் இருத்தல் கொள்வது சாத்தியம்தானா? சாத்தியம்தான் என்கிறது நேசமித்திரனின் கவிதைகள்.