தர்க்கத்தை மீறும் தருணங்கள்…

ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் உரிமையாளர்களும் என் நண்பர்களுமான காயத்ரி மற்றும் ராம்ஜி பற்றி நான் அவ்வப்போது எழுதியிருக்கிறேன்.  அவர்கள் இருவரும் என் நண்பர்கள் என்பதைத் தவிர அந்தப் பதிப்பகத்துக்கும் எனக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் அவ்வப்போது தெளிவுபடுத்தி வருகிறேன்.  இருந்தும் அந்தப் பதிப்பகம் என்னுடையது என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.  இதனால் எங்கள் மூவருக்குமே பிரச்சினைதான்.  என்னுடைய பிரச்சினை முதலில்: ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு வரும் பெரும் இலக்கியப் பரிசுகளுக்கு என்னுடைய மார்ஜினல் மேன் பரீசிலிக்கப்படவே இல்லை.  Long list என்பது போட்டியின் வரிசையில் வந்து நிற்பதற்குச் சமம்.  அதற்கே அது தகுதியை இழந்து விட்டது.  காரணம், self publishing புத்தகங்கள் போட்டியிலிருந்து விலக்கப்படும்.  மார்ஜினல் மேன் செல்ஃப் பப்ளிஷிங் என்று யார் சொன்னது?  கடவுளுக்கே வெளிச்சம்.  அதனால் இனிமேல் என் ஆங்கிலப் புத்தகங்களை வேறு பதிப்பகங்களுக்குத்தான் கொடுக்க இருக்கிறேன்.

காயத்ரி ஒரு பிரபலமான பெண்கள் கல்லூரியில் ஃப்ரெஞ்ச் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர்.  ஃப்ரெஞ்ச் என்பதால் கூடுதல் மரியாதை உண்டு என்பதை அனைவரும் அறிவோம்.  கல்வித் துறையில் நெட் தேர்வு என்று சொல்லப்படும் UGC National Eligibility Test தேர்வு பெற்றவர்களின் மாத ஊதியம் எண்பதாயிரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.  ஒன்றரை லட்சம் வரை போகும்.  காயத்ரி அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். பதிப்பகம் துவங்குவதற்காக அவ்வளவு ஊதியம் வரும் வேலையை ராஜினாமா செய்தார்.  எதற்காக?  இலக்கியத்தின் மீது கொண்ட தீராக் காதலால்.  மேலும் ஒரு காரணம், சமகாலத் தமிழ் இலக்கியம் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற ஆர்வம்.  இதை நாம் மதிக்க வேண்டாமா?

ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மற்றொரு உரிமையாளர் ராம்ஜி நரசிம்மன் சினிமா தயாரிப்பாளர் மற்றும் சினிமா ஃபைனான்ஷியர்.  அதெல்லாம் கோடிகளில் நடக்கும் வணிகம்.  ஆனால் பதிப்பகத்தின் நிலை உங்கள் அனைவருக்கும் தெரியும்.   ஒருநாள் சொன்னார், அவருடைய கைபேசியில் வரும் டிங் என்ற சப்தம்தான் உலகின் மிக இனிமையான இசை என்று.  அமேஸானில் அவர் புத்தகம் விற்றால் டிங் சப்தம் வருமாம்.  ஒரு புத்தகத்துக்கு எவ்ளோ ரூபா லாபம் வரும் என்று கேட்டேன்.  அஞ்சு ரூபா என்றார்.  அஞ்சு கோடி எங்கே?  பிச்சைக்காரனுக்குக் கூட போடத் தயங்கும் அஞ்சு ரூபா எங்கே?  ஆனால் இந்த அஞ்சு ரூபாதான் ராம்ஜிக்கு முக்கியம்.  ஆனால் ஸீரோ டிகிரி பதிப்பகம் சாருவினுடையது என்று சொல்பவர்கள் இந்த இருவரின் நல்ல எண்ணத்தையும் அர்ப்பணிப்பு உணர்வையும் அவமதிக்கிறார்களே!  அதில் என்னையும் கொண்டு வந்து போடுவதால் எனக்கு மன உளைச்சல் ஆகிறது.

தன் காதலை நிரூபிக்கும் பொருட்டுத் தன் காதை அறுத்துக் கொடுத்த வான்கோவின் மனநிலையோடேதான் ஒரு கலைஞன் தன் வாழ்நாள் பூராவும் வாழ்கிறான்.  அந்தப் பெண் அவன் காதைக் கேட்டாளா?  இந்தச் செயலில் ஏதாவது தர்க்கம் தென்படுகிறதா?  இதெல்லாம் அசட்டு மனிதர்களின் அசட்டு தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை.  என் வாழ்வு முழுக்கவும் அப்படிப்பட்ட தருணங்களாலேதான் நிரம்பியிருக்கிறது.  அப்படிப்பட்ட உணர்வெழுச்சியின் உச்சத்தில் நேற்று இரவு ஒருக்கணம் கழுத்தை அறுத்துக் கொள்ளலாமா எனத் தோன்றியது.   தர்க்கம்தான் ஓடி வந்து காப்பாற்றியது.

ஊரார் பேசுவது பற்றிக் கவலையில்லை.  விஷயம் தெரிந்த நண்பர்களே இப்படிப் பேசாதீர்கள்.  இந்தப் பேச்சைக் கேட்டால் தங்கள் பொருளையும் உழைப்பையும் நேரத்தையும் ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்காக அர்ப்பணித்து வரும் காயத்ரி, ராம்ஜி என்ற இருவருக்கும் அது எப்படிப்பட்ட வருத்தத்தை உண்டு பண்ணும் என்று நினைக்கவே எனக்குக் கஷ்டமாக இருக்கிறது.

காயத்ரி, ராம்ஜி என்ற இருவரின் அர்ப்பணிப்பு உணர்வினாலும் உழைப்பினாலுமே ஸீரோ டிகிரி பப்ளிஷிங் இந்த அளவு வளர்ந்திருக்கிறது.  அவ்வப்போது நான் சில யோசனைகள் சொல்வேன்.  அவ்வளவுதான்.  அதில் 50 சதவிகித யோசனைகள் ஏற்கப்படுவதில்லை.  ஏற்கப்பட்டிருந்தால் பட்டுக்கொட்டை பிரபாகரின் நாவல் – அதிலும் இரண்டு நாவல்கள் – ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மூலம் வந்திருக்குமா?  ஏன் ஐயா, பட்டுக்கொட்டையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அளவுக்கா நான் ஆகி விட்டேன்?  புறம் பேசும் போது இந்தப் பொது அறிவு கூடவா இல்லாமல் போய் விடும்?

ஒரு நாளில் முன்னூறு புத்தகங்களில் கையெழுத்திடுகிறேன்.  நம்பிக்கை இல்லாதவர்கள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் வந்து பாருங்கள்.  அரங்கு எண் 696.

நேற்று ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் நேற்று 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் வந்தனர்.  அதில் ஒருவர் திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்.   கடைநிலை ஊழியர் என்பது போன்ற தோற்றம்.  இரண்டு பைகள் நிறைய புத்தகங்கள்.  எல்லாமே நான் சிபாரிசு செய்த நூல்கள்.  பிறகு நான் எழுதிய அத்தனை நூல்களையும் வாங்கினார்.  அத்தனை நூல்களிலும் கையெழுத்து இடும் போது ஓரக்கண்ணால் கவனித்தேன்.  அவர் காலில் செருப்பு இல்லை.  தலையைத் தூக்கி கழுத்தைப் பார்த்தேன்.  மாலை இல்லை.  மலைக்குப் போகிறவர் இல்லை.  அப்புறம் ஏன் செருப்பு இல்லை?  கையெழுத்துப் போட்டு முடித்து விட்டு கேட்டே விட்டேன்.  அரங்குக்கு வெளியே செருப்பை விட்டு விட்டு வெறும் காலுடன் உள்ளே வந்திருக்கிறார்.  மூன்று ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொள்ள இருந்தேன்.  ஸீரோ டிகிரியைப் படித்துத்தான் அந்த உணர்விலிருந்து மீண்டேன் என்றார்.  இவ்ளோ புத்தகங்களும் வாங்கக் காசு ஏது என்றேன்.  படிப்பது தவிர வேறு எந்தப் பழக்கமும் இல்லையாம்.

நோபல் பரிசு கூட இப்படிப்பட்ட சந்தோஷத்தைத் தராது.  இதை சாத்தியப்படுத்திய காயத்ரிக்கும் ராம்ஜிக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றி.