பேட்டை: தமிழ்ப் பிரபா

புத்தக விழா பதிவுகள் பல எழுத வேண்டும். நிறைய இருக்கிறது. ஆனால் ஒரு வரி கூட எழுத முடியாது. தமிழ்ப் பிரபாவின் பேட்டை படித்துக் கொண்டிருக்கிறேன். ரொம்ப காலத்துக்குப் பிறகு ரொம்ப ரொம்ப காலத்துக்குப் பிறகு இப்படி ஒரு intense நாவலைப் படிக்கிறேன். வேலூரில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது சென்னையிலிருந்து வேலூருக்கு தினமும் ரயிலில் போய் வந்து கொண்டிருந்தேன். பிருந்தாவன் எக்ஸ்பிரஸ். அப்போது ஜென்ரல் கோச்சில் கக்கூஸுக்கு வெளியே தரையில் அமர்ந்து மரியோ பர்கஸ் யோஸாவின் தடித் தடி நாவல்களை பரீட்சைக்குப் படிப்பது போல் படிப்பேன். அதே போன்ற ஒரு அனுபவத்தை தமிழ்ப் பிரபாவின் பேட்டையில் அடைகிறேன். இதை நீங்கள் படித்திருக்காவிட்டால் வாழ்வில் ஒரு அற்புதமான அனுபவத்தை இழக்கிறீர்கள் என்றே அர்த்தம். தமிழின் மிகச் சிறந்த இருபது நாவல்கள் என்று பட்டியலிட்டால் இதை அதில் எந்தத் தயக்குமும் இன்றி சேர்த்து விடலாம். தலைசிறந்த பத்து நாவல்களில் ஒன்று என்றே சொல்லி விடுவேன். ஆனால் தி.ஜாவும், வெங்கட்ராமும், சம்பத்தும், ஆதவனும், அசோகமித்திரனும் இருந்து தொலைக்கிறார்களே!

பேட்டை போன்ற ஒரு நாவலை தமிழில் படிப்பது இதுவே முதல் முறை. நான் இருபது வயதில் ஜி.நாகராஜனை fake என்று சொன்னேன். இப்போது அறுபது வயதில் படிக்கும் போதும் ஜி நாகராஜன் fakeஆகவே தெரிகிறார். உண்மையான சேரி வாழ்வை எழுதியிருக்கிறார் தமிழ்ப் பிரபா. இப்படிப்பட்ட நாவல்கள் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் மட்டுமே உண்டு. தமிழில் அது முதல்முறையாக நிகழ்ந்திருக்கிறது.

படித்து முடித்த பிறகு நாவல் பற்றி நீண்டதொரு கட்டுரை எழுத இருக்கிறேன். தமிழ் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நாவல் தமிழ்ப் பிரபா எழுதிய பேட்டை. (காலச் சுவடு வெளியீடு)

இந்த நாவல் ஆங்கிலத்தில் வந்தால் புக்கர் பரிசு நிச்சயம். ஆனால் யாராவது புதைகுழிப் பேராசிரியர் மொழிபெயர்த்து குழிதோண்டிப் புதைத்து விடுவார்கள். அதனால் நான் சொல்வது நடக்காது. ஜேஜே சில குறிப்புகளை அப்படித்தான் ஒரு பேராசிரியர் குழி நோண்டிப் புதைத்தார். ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் மட்டும்தான் அப்படிப்பட்ட புதைகுழிப் பேராசிரியர்களை உள்ளே விடுவதில்லை. பேட்டைக்கு என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.