விபரீத ராஜ யோகம்

என் கதைகள் சுயசரிதைத்தன்மை கொண்டவை என்று உங்களுக்குத் தெரியும். ஆங்கிலத்தில் அதை autofiction என்கிறார்கள். அவந்திகாவை சந்திப்பதற்கு முன் சில ஆண்டுகள் நான் பிக் பாக்கெட்டாக இருந்திருக்கிறேன். அதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. கமலின் குருதிப் புனலுக்கு ஜால்ரா அடித்திருந்தால் அப்படி நான் பிக் பாக்கெட்டாக இருந்திருக்க வேண்டியதில்லை. மகாநதியில் கிடைத்த நட்பை வசனம் கதை என்று பலப்படுத்தி சினிமா உலகில் ரொம்ப சீனியராக இருந்திருக்கலாம். அது எனக்குப் பிடிக்கவில்லை. அவமானம் என்று தோன்றியது. பிக் பாக்கெட் அப்படித் தோன்றவில்லை. இதில் சரி தப்பு என்ற மதிப்பீட்டுக்குள் எல்லாம் போகவில்லை. எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்.

பிக் பாக்கெட்டுக்கு முன் கேட்டமைட். சரி. உலகில் எத்தனை லட்சம் பிக் பாக்கெட்டுகள் இருப்பார்கள். அத்தனை பிக் பாக்கெட்டுகளுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. நான் பிக் பாக்கெட்டாக இருந்த போது இரண்டு கோடீஸ்வரர்கள் என் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அதில் ஒருவரை வாரம் ஒருமுறை பார்க் ஷெரட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாரில் சந்தித்து தண்ணி அடிப்பது வழக்கமாக இருந்தது. மதியம் பனிரண்டுக்குப் போனால் மாலை நான்கு வரை போகும். மூன்று நாள் கொலைப்பட்டினியில் போவேன். ஆட்டோவுக்குக் காசு இல்லாமல் ஆட்டோக்காரர் பார்க் ஷெரட்டனுக்கு வெளியே எனக்காகக் காத்துக் கொண்டிருப்பார். நான் உள்ளே நுழைந்ததும் நண்பர் இருந்தால் 50 ரூபாயை வாங்கி பேரரிடம் கொடுத்து அனுப்புவேன். நண்பர் இல்லாவிட்டால் அப்படியே மறந்து போவேன். மாலை வரை ஆட்டோக்காரர் காத்திருப்பார். இருநூறு முன்னூறு என்று கிடைக்கும்.

திரும்பிப் போவதற்கு ஆட்டோ? போதை ஆவதற்குள் நூறு ரூபாயை கோடீஸ்வர நண்பரிடமிருந்து வாங்கிப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்வேன். மறந்து போனால்? பார்க் ஷெரட்டனில் ஸ்காட்ச் விஸ்கி குடித்து விட்டு வீட்டுக்கு நடந்து போவேன்.

இதையெல்லாம் நம்பவே முடியவில்லை என்று நண்பர்கள் சொல்வது வழக்கம். நேற்றிலிருந்து மீண்டும் – 15 ஆண்டுகளுக்குப் பிறகு – அதே நிலைக்கு வந்து சேர்ந்து விட்டேன். பரமபதப் பாம்பின் விளையாட்டு. பெருமாள் முருகனுக்கு விபரீத ராஜ யோகம். அடியேனுக்கு விபரீத பெக்கர் யோகம்.

இன்று பல மாதங்களுக்குப் பிறகு அதே நண்பர். இடம்தான் பார்க் ஷெரட்டனுக்குப் பதிலாக டென் டௌனிங். ரெட் வைன் இல்லாததால் எனக்கு இளநீர். அவருக்கு அவசர ஃபோன். கிளம்பி விட்டார். பார்க் ஷெரட்டனிலாவது குடித்து சாப்பிட்டு விட்டு பில்லில் கையெழுத்துப் போட்டு விட்டுப் போகலாம். இங்கே கையெழுத்து கூட போட வேண்டாம். அவர்களே கணக்கு வைத்துக் கொள்வார்கள். தனியாக நான். எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். சாப்பிடலாம். சீனியை அழைத்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் குழந்தைகளுக்கு பேபி சிட்டிங் செய்து கொண்டிருக்கிறேன் என்றார். வேறு ரெஸ்டாரெண்ட் என்றால் குழந்தைகளோடு வந்து விடலாம். டென் டௌனிங் என்பதால் தவிர்த்து விட்டோம்.

தாய் சிக்கன் கோம்போ சாப்பிட்டு விட்டுத் திரும்பினேன். இப்போதெல்லாம் மூன்று கி.மீட்டருக்குக் குறைவாக இருந்தால் ஆட்டோவில் போகாமல் நடந்தே போகிறேன். பரமபதப் பாம்பு. டென் டௌனிங்கிலிருந்து வீடு ஆறு கி.மீ. இருந்ததால் ஆட்டோவில் வந்து விட்டேன்.

இந்தப் பிச்சைக்கார நிலை மாறலாம். என் புத்தகங்கள் அதிகம் விற்று, எனக்கு வருடாந்திர ராயல்டி 5 லட்சம் கிடைத்தால். எனக்கு மாதம் 40000 ரூ. போதும். எப்போது சாத்தியமாகிறது என்று பார்ப்போம். அதனால்தான் புதிய புத்தகங்களில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு மாடு மாதிரி பழைய புத்தகங்களைப் பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.