மகாத்மாவின் ஆசீர்வாதம்…

எழுத்தாளன் என்றால் யார்?  அவன் என்ன பிஸினஸ்மேனா?  ஒரு பிஸினஸ்மேனுக்கு உரிய லாகவங்களும் நெளிவுசுளிவுகளும் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டுமா?  அவன் தன் காலத்திய பெரிய மனிதர்களைப் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போக வேண்டுமா? என் ஆசான்கள் என நான் கருதும் ஒருத்தர் கூட அப்படி வாழவில்லையே?  அம்மா வந்தாள் என்ற நாவலில் குடும்பத்தின் குத்து விளக்காகத் திகழும் அம்மா இன்னொருத்தரோடு உறவு கொண்டு அவரோடு குழந்தையும் பெற்றுக் கொண்டு வாழ்ந்தாள் என்று எழுதி – அந்த நாவலின் சில அடையாளங்கள் அவரோடு குடும்பத்தோடு ஒத்துப் போனதால் குடும்பத்திலிருந்தே விலக்கி வைக்கப்பட்டவர் தி.ஜானகிராமன்.  இது பற்றி கரிச்சான் குஞ்சு தன் பேட்டிகளில் விரிவாகப் பேசுகிறார்.  பாரதியும் தன் வாழ்நாளில் ஒருத்தரோடு கூட சமரசம் பேணினதில்லை.  காந்திக்கு முன்னாலேயே சரி சமானமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து மிஸ்டர் காந்தி என்று அழைத்தவர் பாரதி.  இத்தனைக்கும் பாரதியை விட காந்தி 13 வயது மூத்தவர்.

எழுத்தாளன் தான் ஒரு தேசத்தின் அடையாளம்.  ஒரு மொழியின் அடையாளம்.  ஒரு பண்பாட்டின் அடையாளம்.  இதை நான் சொல்லவில்லை.  மகாப்பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திரர் சொல்கிறார்.  அவர் வார்த்தைகளிலேயே தருகிறேன்:

ஒரு தேசம் என்று இருந்தால் அதில் நல்லவனும் இருப்பான், கெட்டவனும் இருப்பான். திருடன், பொய்யன், மோசக்காரன் எல்லாரும் இருப்பான்.  இருந்தாலும் ’இந்த தேசத்தில் பண்பு இருக்கிறது, இந்த தேசம் பிழைத்துக் கொள்ளும்’ என்று தெரிந்து கொள்வது எப்படி?  ஒரு நோயாளிக்குப் பல கோளாறுகள் இருந்தாலும் டாக்டர் இருதயத்தைச் சோதித்து விட்டு, இருதயம் நன்றாக இருக்கிறது; ஆகவே பயமில்லை என்கிறார் அல்லவா?  அதேபோல் ஒரு தேசத்தில் கோளாறுகள் இருந்தாலும் அதன் பண்பாட்டை உரைத்துப் பார்க்க ஒரு இருதய ஸ்தானம் இருக்கிறதா? இருக்கிறது.  ஒரு தேசத்தின் பண்பு உயர்ந்திருக்கிறது; மனோபாவங்கள் உயர்ந்திருக்கின்றன; ஆங்காங்கே அழுக்குகள் இருந்தாலும் மொத்தத்தில் அது சுத்தமாக இருக்கிறது என்பதை உரைத்துப் பார்ப்பதற்கு அந்த தேசத்து மகாகவிகளின் (இலக்கியக் கர்த்தாக்களின்) வாக்கே ஆதாரமாகும்.  ஒரு தேசத்தின் பண்புக்கு இதயமாக அல்லது உரைகல்லாக இருப்பது அந்த நாட்டு மகாகவியின் வாக்குதான்.”

பாருங்கள், மகாகவி என்று சொல்லிவிட்டு நமக்கு நன்றாகப் புரிய வேண்டும் என்பதற்காக ‘இலக்கியக் கர்த்தா’ என்று வேறு சொல்கிறார்.  அடுத்து, ஒரு இலக்கியவாதி எப்படி இருப்பான் என்று வர்ணிக்கிறார்.  ”தனது என்று எதையும் பிடித்துக் கொள்ளாமல் விஷயத்தை உள்ளபடி பார்த்து objective-ஆக, பேதமில்லாமல் நடுநிலையோடு, சர்வ சுதந்திரமாக, திறந்த மனதோடு உள்ளதை உள்ளபடி சொல்வான்.  உலகம் முழுவதையும் இப்படியே படம் பிடித்துக் காட்டுவான்.  அதை உலகம் எடுத்துக் கொண்டாலும் சரி, தள்ளி விட்டாலும் சரி, அதைப் பற்றியும் இலக்கியக் கர்த்தாவுக்குக் கவலை இல்லை.  பயனை எதிர்பார்க்காதவன் அவன்.  ஒரு விஷயம் ஒரு நாட்டின் பண்புக்கு உகந்ததுதான் என்று அறிய வேண்டுமானால் அந்தப் பிரமாண வாக்கு (authority) அந்தத் தேசத்தின் மகாகவியின் வாக்குதான்.”

பார்த்தீர்களா? மகாப் பெரியவரின் வாக்குப்படி, விஷயத்தை நான் அவதானம் கொண்டபடி, யாருக்கும் பயப்படாமல், சொல்வதனால் எனக்கு ஏற்படப் போகும் பாதகங்களைப் பற்றிக் கவலைப்படாமல் (சினிமா வசனம் எழுத அழைக்க மாட்டார்கள்! அதனால் நான் யாசகம் பெற்றே வாழ வேண்டும்!!), திறந்த மனதோடு, நடுநிலையோடு, பேதமில்லாமல், சர்வ சுதந்திரமாகப் பேசுகிறேன்.  ஏனென்றால் நான் எழுத்தாளன்.  அதனால்தான் ஒரிஸாவின் ஏதோ ஒரு பெயர் தெரியாத கிராமத்தில் என்னிடம் ஒரு கடைக்காரச் சிறுவன் வெற்றிலைப் பாக்கு கொடுத்து விட்டு காசு வாங்க மறுத்தான்.  எங்களின் மகத்தான கதைசொல்லியான வியாச மகாப் பிரபுவின் வம்சத்தில் வந்த ஒரு கதைக்காரரிடம் காசு வாங்க மாட்டேன் என்றான் அந்தச் சிறுவன்.

இன்னொன்றும் சொல்கிறேன்.  என் ஆசான் மகாத்மா.  இளம் பெண்களோடு நிர்வாணமாகப் படுத்து பிரம்மச்சரிய சோதனை செய்து, அதைப் பற்றி எழுதியவரும் ஆவார் மகாத்மா.  எப்பேர்ப்பட்ட உத்தமர்.  அவரை ஆசானாக நினைக்கும் நான், நான் அவதானித்த விஷயங்களை எழுதாமல் மறைக்கலாமா? மறைக்காமல் எழுதுவதால் எனக்குப் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்காமல் இருக்கலாம்.  பணம் காசு கிடைக்காமல் பிச்சை எடுக்கலாம்.  ஆனால் மகாத்மாவின் ஆசீர்வாதம் கிடைக்கும்.  அது ஒன்று போதும்.

இத்தனை பீடிகையும் எதற்கு?  Algebra Conversations என்று ஒரு அமைப்பு இருக்கிறது.  தில்லியில் மாதம் ஒரு முறையோ இரு முறையோ கூடி புத்திஜீவிகளுடன் உரையாடுகிறார்கள்.  நட்சத்திர ஓட்டலில் மதுபானங்களோடு உரையாடல் நடக்கும்.  ஒருமுறை என்னையும் அந்த உரையாடலுக்கு அழைத்திருந்தார்கள்.  இப்போது கடந்த சில மாதங்களாக சென்னையிலும் அந்த அமைப்பு அந்த உரையாடல்களை நடத்துகிறது.  கிராண்ட் சோளா ஓட்டலில் நடக்கிறது.  சுப்ரமணியம் சுவாமி, அனுராக் காஷ்யப் போன்றவர்கள் சென்னை வந்து அந்த அமைப்பில் உரையாடியிருக்கிறார்கள்.  தில்லியில் நவாஸுத்தின் சித்திக் பேசியிருக்கிறார்.  இதில் உறுப்பினராவதற்கு தனி ஒருவருக்கு 22000 ரூபாயும் இரட்டை உறுப்பினருக்கு 30000 உம் கட்டணம்.  இதுவரை நான் உறுப்பினராகாமல் விருந்தினனாகச் சென்று வந்தேன்.  இனியும் அப்படி இலவசமாகப் போகக் கூடாது என்று நேற்று முடிவு செய்தேன்.  உறுப்பினர் ஆகும் அளவு என்னிடம் அத்தனை பணம் இல்லை என்பதால் நேற்று மட்டும் காசு கொடுத்துப் போகலாம் என்று நினைத்தேன்.  ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் போனால் 3000 ரூபாய் கட்டணம்.  நேற்று மூன்று பேர் உரையாடினார்கள்.  ஷிவ் விஸ்வநாதன், இந்திய மேஜிக் பற்றி ஆய்வு செய்த ஒரு வெளிநாட்டுக்காரர் மற்றும் மணி ரத்னம்.  நான் 3000 கட்டிச் செல்ல முன்வந்ததுக்குக் காரணம், மணி ரத்னம்.  தமிழ் சினிமாவில் காணக் கிடைக்கும் ஒருசில புத்திஜீவிகளில் ஒருவர் என்று நான் அவரைப் பற்றி நினைத்தேன்.  மேலும் ஜெயமோகனின் நண்பர் என்பதால் ஒரு கூடுதல் மரியாதையும் இருந்தது.  அவருடைய ரோஜா, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், ராவணம் போன்ற படங்கள் பற்றி நான் எதிர்மறை விமர்சனங்கள் எழுதியிருந்தாலும் குரு, அக்னி நட்சத்திரம் போன்ற பல படங்களைப் பற்றிப் புகழ்ந்தே எழுதியிருக்கிறேன்.  அதை விட அவர் ஒரு Auteur என்று நினைக்கிறேன்.  தனித்தன்மை கொண்ட சினிமா மொழியைக் கொண்டவர்களை ஆத்தர் என்று சொல்வர்.  இதிலெல்லாம் இந்தத் தருணம் வரை எந்த மாற்றமும் இல்லை.  இனிமேலும் மாறப் போவதில்லை.

ஆனால் நேற்று அவருடைய உரையாடல் கமல் ஸ்ம்ரிதி இரானியிடம் பட்ட மொக்கை பதில்களை விட மோசமாக இருந்தது.  இத்தனைக்கும் ஷோமா சௌத்ரி மணியை மடக்கி மடக்கியெல்லாம் கேள்வி கேட்கவில்லை.  மிக மிக மிக பவ்யமாக, மிக மிக மிக எளிமையான கேள்விகளையே கேட்டார்.  நேஷனிலிஸம் பற்றி உங்கள் கருத்து என்ன?  பொதுவாக ஷோமா அப்படிக் கேட்பவர் அல்ல.  சுப்ரமணியம் சுவாமி போன்றவர்களை மடக்கி மடக்கித் தன் பௌன்ஸர்களால் காலி பண்ணப்பார்ப்பார்.  ஆனால்  சுவாமி அதையெல்லாம் அனாயாசமாக சிக்ஸராக மாற்றுவார் என்பது வேறு விஷயம்.  ஆனால் பொதுவாக ஷோமாவின் கேள்விகளை எதிர்கொள்வதே கடினம்.  ஆனால் நேற்று அந்த ஷோமாவே இல்லை.  ஷோமா யாரையும் சார் என்றே விளித்தது இல்லை.  சுவாமியையே சுவாமிதான்.  மிஸ்டர் கூட இல்லை.  ஆனால் நேற்று மணியை சார் சார் சார்.  ஒரே சார் மயம்.  இந்தக் கொடுமையைக் கூட மணி ரத்னம் உணரவில்லை என்பது நேற்றைய உரையாடலின் அவலங்களில் ஒன்று.  மணி அந்த சார் சார் சாரை கவனித்து மணி என்று அழையுங்கள் என்று அறிவுறுத்தியிருக்க வேண்டும்.  சரி, அதை விடுங்கள்.  என் வாழ்நாளில் இத்தனை மொக்கை பேட்டியை நான் பார்த்ததில்லை.  எந்தக் கேள்விக்கும் சீரான பதில் இல்லை.  காரணம், எந்தக் கேள்வியையும்  மணி புரிந்து கொள்ளவில்லை என்றே தெளிவாகத் தெரிந்தது.  அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?  நம்முடைய புத்திஜீவிகள் எதையுமே படிப்பதில்லை.  படித்திருந்தால் குறைந்த பட்சம் நேஷனலிசம் என்றால் என்ன என்று தெரிந்திருக்கும்.  மிகச் சரியாக சொன்னால், கமல் ஸ்ம்ரிதி இரானி பேட்டிதான் நேற்று மணி ரத்னம் பேட்டி.  இத்தனைக்கும் கமல் மெத்தப் படித்தவர்.   மணியும் படித்தவர்தான்.  ஜெயமோகனின் நண்பர்.  ஜெயமோகனின் பேச்சை ஒரு மணி நேரம் கேட்டிருந்தால் கூட நேற்று மணி நல்ல முறையில் பதில் சொல்லியிருக்க முடியும்.  வருந்துகிறேன்.