யாருக்காக எழுதுகிறேன்?

ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்தேன்.  கலந்துரையாடல் நடந்த போது அந்தக் கூட்டத்தில் நான் ஒரு அந்நியனாகவே உணர்ந்தேன்.  அங்கிருந்த எல்லோருமே எழுத்தாளர்கள்.  ஆனால் அவர்கள் பேசியவை எல்லாமே ஏதோ பாரதிராஜாவின் படத்தில் வரும் பாடல் காட்சியில் வரும் ஹீரோவைப் போன்ற மன உணர்ச்சியோடு தங்கள் ஊரைப் பற்றியும் உறவுகள் பற்றியும் ரொமாண்டிக்காக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.  அவர்கள் சொன்ன ஊர்களெல்லாம் வெறும் குப்பைக் காடுகள்.  அந்த ஊர்களின் பஸ் ஸ்டாண்டில் ஒரு நிமிடம் நின்றாலே போதும், மூத்திர நாற்றத்தில் குமட்டிக் கொண்டு வரும்.  அதையெல்லாம் ஏதோ சொர்க்கலோகத்தைப் போல் பேசிக் கொண்டிருந்தார்கள்.  மயிலாடுதுறை ஒரு அற்புதமான ஊர் என்று வர்ணித்தார் ஒரு எழுத்தாளர்.  திருநெல்வேலியின் அற்புதத்தைப் பற்றி அளந்தார் இன்னொருத்தர்.  எல்லோரும் எழுத்தாளர்கள்.  குண்டும் குழியுமான சாலைகள்.  எங்கு பார்த்தாலும் மூத்திர நாற்றம்.  குப்பை.  மூடாத சாக்கடையில் மிதக்கும் மலம்.  இதெல்லாம் ஏன் அற்புதங்களாகி விட்டன என்றால் இந்த எழுத்தாளர்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள்.  அட பகவானே!

இந்த ரீதியிலேயே கலந்துரையாடல் இருந்ததால் வாயையே திறக்காமல் நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே வந்தேன்.  அப்போது இனிமையான தோற்றமும் மலர்ச்சியான முகமும் கொண்ட ஒருவர் என்னை அணுகித் தன் பெயரைச் சொன்னார்.  ஏன் தோற்றத்தையும் முகத்தையும் பற்றிச் சொன்னேன் என்றால், எழுத்தாளன் என்றாலே அவன் முகம் கருவண்டு அடித்தது போல் தென்படுகிறது.  ஒருவேளை என்னைப் பார்த்ததும் அப்படி மாறி விடுகிறதா, அல்லது, இயல்பிலேயே அப்படியா என்று தெரியவில்லை.

என்னோடு அறிமுகம் செய்து கொண்ட நண்பரின் பெயர் ராஜகோபாலன்.  எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது கு.ப.ராஜகோபாலனின் பெயர்.  என் பழக்கம் அப்படி.  எந்தப் பெயரும் நினைவில் தங்காது என்பதால் இப்படிப் பழகிக் கொண்டேன்.  ஆனால் அதற்கு எந்த அவசியமும் வைக்காமல் நண்பர் “நான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்தவன்” என்றார்.  ஒருக்கணம் அதிர்ந்தே போனேன்.  ’அந்த வட்டத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் நம்மைப் பார்த்தால் முறைப்பார்கள்; பழிப்பு காட்டுவார்கள்; அல்லது, இடித்துத் தள்ளி விட்டுப் போவார்கள் என்றல்லவா நினைத்தோம்; இது என்ன, இந்த மனிதர் இவ்வளவு சிநேகமாக வந்து இவ்வளவு இனிமையாகப் பேசுகிறார்’ என்று நினைத்தேன்.   அப்படி நினைத்ததற்காக வருத்தமும் அடைந்தேன்.

ஆனால் ராஜகோபாலனும் கூட என்னைப் பற்றி அப்படியே நினைத்திருக்கிறார் என்பதை அவர் பேச்சிலிருந்து உணர்ந்து கொண்டேன்.   சாரு நிவேதிதா ஒரு முரடன்; கோபக்காரன்; ஹலோ சொன்னதுமே கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விடுவான்.  என்னைப் பற்றிய இமேஜ் இப்படித்தானே இருக்கிறது?  இந்த இமேஜ் எதனால் வந்ததென்று எனக்கு மிக நன்றாகத் தெரியும்.  ஆனால் அதற்காக நான் ஒன்றுமே செய்ய முடியாது.  என் எழுத்தில் தெரியும் உஷ்ணமே இதற்குக் காரணம்.  அந்த உஷ்ணம் எனது சமரசமற்ற தன்மையினால் உருவாவது.

எதையும் விமர்சிக்காமல் இருந்தால் நல்லவன்; இனியவன்.  எல்லாவற்றையும் பாராட்டிக் கொண்டிருந்தால் நல்லவன்; இனியவன்.  என்னால் அது ஆகாது.  ஒரு நண்பர் தான் எழுதிய நாவலை எனக்கு அனுப்பினார்.  அவர் அனுப்பினார் என்பதால் படித்தேன்.  ஒரு பக்கத்தைக் கூட படிக்க முடியவில்லை.  சொன்னேன்.  அவரோ நான் பாராட்டியே தீர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.  என்ன செய்ய முடியும்?  நான் ஒரு முரடன் என்றே அவர் எல்லோரிடமும் என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பார். அதற்கு நான் என்ன செய்யட்டும்?  அதைப் போலவேதான் சினிமா துறையிலும்.  தமிழ் சினிமாவில் எனக்கு மிகப் பிடித்தமான ஒரு இயக்குனர் என் நண்பரிடம் சொன்னாராம்.  “சாரு என் படத்தைத் திட்டித்தானே எழுதுவார்?”

அவருடைய ஒவ்வொரு படத்தைப் பற்றியும் மாய்ந்து மாய்ந்து மதிப்புரை எழுதியிருக்கிறேன். அக்கட்டுரைகளில் அவரது படங்களைக் கொண்டாடி இருக்கிறேன்.  அவருடைய ஐந்து படங்களைப் பற்றித் தொடர்ந்து பாராட்டித் தள்ளியிருக்கிறேன்.  அவரை எனக்கு நேரடியாகத் தெரியாது.  எனக்கு அவர் படம் முக்கியம்.  ஆனால் நான் எழுதியது எதுவுமே அவருக்குத் தெரியவில்லை.  அப்படியிருந்தால் கூடப் பரவாயில்லை.  நான் அவர் படங்களைத் திட்டி எழுதியிருக்கிறேன் என்பதாக அவருக்கு செவி வழிச் செய்திகள் போயிருக்கின்றன.  இப்போது கூட அவர் பெயரை இங்கே குறிப்பிடாததற்குக் காரணம், அவரை மீண்டும் திட்டியிருக்கிறேன் என்று அவரது அத்யந்த நண்பர்கள் அவரிடம் சொல்வார்கள் என்பதால்தான்.

இங்கே என்ன தேவைப்படுகிறது என்றால் ஏழெட்டு பக்கங்களுக்கு மாய்ந்து மாய்ந்து எழுதவெல்லாம் வேண்டாம்.  அவருக்கு ஒரு போனைப் போட்டு “சார், உங்க படம் உலக காவியம், ஆ ஓ” என்று ரெண்டு வார்த்தை பாராட்டி, நேரில் சந்தித்து ஹி ஹி என்று இளித்தால் போதும்.  நான் அவருடைய good books இல் இருப்பேன்.  நான் அப்படிப்பட்டவன் அல்லவே; எழுத்தாளன் ஆயிற்றே?

இதுதான் காரணம்.

என் எழுத்தில் தெரிவது ரவுடித்தனம் அல்ல; சமரசமற்ற தன்மையின் ஜ்வாலை.  அதனால்தான் நேர்வாழ்வில் என்னால் குளிர்மை ததும்ப வாழ முடிகிறது.  நேற்று காலை நடந்த சம்பவம் இது.  நான் பப்புவை வாக்கிங் அழைத்துச் சென்றேன்.  அது சாலையின் நடுவே மலம் கழித்தது.  யார் வீட்டு வாசலுக்கும் அதை அழைத்துச் செல்ல மாட்டேன்.  நடுச் சாலை அது.  அது கூட யார் வீட்டுக்கும் முன்னால் உள்ள சாலை அல்ல.  அதற்கு எதிரே ஒரு பாழடைந்த இடம்தான் இருந்தது.  ஆனால் அந்த இடத்துக்குச் சம்பந்தமே இல்லாத பக்கத்து வீட்டு மாடியிலிலிருந்து 40 வயது மதிக்கத்தக்க ஒரு பணிப்பெண் “டேய், உன் வீட்டு வாசல்ல இப்படி போனா சும்மா இருப்பியாடா?” என்று என்னை நோக்கிக் கேட்டார்.  நான் கொஞ்சமும் சலனம் இல்லாமல் நாயை அழைத்துக் கொண்டு வந்து என் வீட்டுத் தோட்டத்தில் விட்டு விட்டு ஒரு துணியை எடுத்துச் சென்று அந்த மலத்தை மண்ணோடு எடுத்து குப்பையில் போட்டு விட்டு வந்தேன்.

ஆனால் அந்தப் பெண் என்னை டேய் என்று விளித்தது சற்று மன வருத்தத்தை அளித்தது.  ஆனாலும் அது நான் செய்த தவறால்தான் என்று என்னை சமாதானம் செய்து கொண்டேன்.  என் கையிலேயே துணி இருந்திருக்க வேண்டும்.  இருந்தாலுமே கூட என்னை ஒரு பெண் டேய் என்று விளித்தது பற்றிக் கொஞ்சம் வருத்தமே ஏற்படுகிறது.  ஆனால் உங்களில் யாரேனும் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் – எந்தத் தவறும் செய்யாமல் – டேய் என்று விளிக்கப்பட்டால் இப்படி சலனமற்று வருவீர்களா?  வேறு ஒருமுறை இப்படி நடந்த போது பக்கத்தில் துணியோ பேப்பரோ எதுவும் இல்லை.  அந்தப் பெண்மணியோ பெரும் சண்டைக்கு ஆயத்தமாவது போல் தெரிந்தது.  அது எல்லாவற்றையும் விட பப்பு அந்தப் பெண்ணின் வீட்டு வாசலில் மலம் போயிருந்தது.  என் கவனக்குறைவே காரணம்.  ஒரு நொடி கூட யோசிக்காமல் என் சட்டையைக் கழற்றி அந்த மலத்தை எடுத்துக் கொண்டு வந்து குப்பையில் போட்டு விட்டு சட்டை இல்லாமலே வெற்று உடம்புடன் வீட்டுக்கு வந்தேன்.  இதை ஒரு நிகழ்ச்சியில் சொன்னபோது ”இப்படிச் செய்ய வேண்டும் என்பது உங்கள் ஆசையா? உண்மையில் நடந்ததா?” என்று கேட்டார் ஞாநி.  நம்புவதற்குக் கூட கஷ்டமாக இருக்கிறது நான் நடந்து கொள்ளும் விதம்.

இப்படிப்பட்ட எனக்கு முரடன் இமேஜ் என்றால் என் எழுத்தின் சமரசமற்ற தன்மை பற்றி நான் பெருமை அல்லவா கொள்ள வேண்டும்?

ராஜகோபாலனுடன் நீண்ட நேரம் பேச வேண்டும் என்று தோன்றியது.  ஆனால் அலுப்பூட்டும் எழுத்தாளர் கூட்டத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்ததால் வீட்டுக்குப் போக வேண்டும் என்று தோன்றியது.  பைக்கிலேயே வாருங்களேன் என்றார்.  நான் பெண்களின் ஸ்கூட்டரில்தான் ஏறுவேன் என்றேன்.  சே சே, சொல்ல நினைத்தேன்.  அதை வேறு சொன்னால் என் இமேஜ் இன்னும் என்னென்ன ஆகுமோ?  ஆனால் நான் அப்படிச் சொல்ல நினைத்ததற்குக் காரணம், பெண்கள்தான் பொறுமையாக ஓட்டுகிறார்கள்.

சரி, இந்தப் பதிவை எழுதியதற்கு முக்கியமான காரணம், ராஜகோபாலன் கேட்ட ஒரு கேள்விதான்.

“சாரு, நீங்கள் விளிம்பு நிலை வாழ்வு பற்றி எழுதுகிறீர்கள்.  சரி.  ஆனால் அது ஒரு கட்டத்தில் elevate ஆக வேண்டும் என்று நீங்கள் உணரவில்லையா?”

நான் சொன்ன பதில்: உங்கள் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.  ஏனென்றால் எனக்கு பதில் தெரியவில்லை.

ஆனால் காரில் ஏறி அமர்ந்ததுமே எனக்கு பதில் தெரிந்து விட்டது.  அது இதுதான்:

Elevate ஆகிறதா இல்லையா என்பது மிகவும் subjective ஆன விஷயம்.  என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களெல்லாம் அந்த elevation ஐ உணர்ந்திருக்கிறார்கள்.  ஆனால் அவர்களால் ஜெயமோகனின் எந்த எழுத்தையும் படிக்கவே முடியவில்லை என்கிறார்கள்.  எனக்குமே ஜெயமோகனின் எழுத்து மிகவும் பழசாகவும் எனக்கு ஒவ்வாததாகவும் இருக்கிறது.  சுந்தர ராமசாமி, புதுமைப் பித்தன் போன்றவர்களைப் போல் சராசரியாக இல்லை.  விஷ்ணுபுரத்தை ஒரு சராசரி நாவல் என்று நான் சொல்ல மாட்டேன்.  ஆனால் அரதப்பழசாக உள்ளது.  எனக்கு அது ஒவ்வாது.  ஒவ்வொரு வார்த்தைக்கும் எனக்குள் ஒரு resistance உண்டாகிறது.  இதற்கு இலக்கியம் தவிர்த்த வேறு எந்தக் காரணமும் இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

உலகமே போற்றும் காஃப்கா, ஆல்பர் கம்யு ஆகியோரையும் என்னால் வாசிக்க முடியவில்லை.  ஒவ்வாமை ஏற்படுகிறது.  ஆனால் கம்யூவின் சமகாலத்தவரான ஜார்ஜ் பத்தாயை (Georges Bataille) என்னால் விருப்பத்துடன் படிக்க முடிகிறது.  ராஜகோபாலன் போன்ற நண்பர்களுக்கு ஜார்ஜ் பத்தாயைப் படித்தால் நிச்சயம் இலக்கிய அனுபவம் கிடைக்க வாய்ப்பு இல்லை.  ஒரு வாசகனாகப் பார்த்தால் ஸீரோ டிகிரி, ராஸ லீலா, எக்ஸைல் ஆகிய மூன்று நாவல்களும் சிருஷ்டித்துவத்தின் உச்சம் என்று தோன்றுகிறது.  அது எனக்குப் போதும்.  மற்றபடி ராஜகோபாலனுக்கு அது மேன்மையான இலக்கிய அனுபவத்தைக் கொடுக்கவில்லை அல்லது என் நண்பர் அராத்துவுக்கு மகத்தான இலக்கிய அனுபவத்தைக் கொடுத்தன என்பதெல்லாம் என் இலக்கிய வாழ்வுக்குப் புறம்பான விஷயங்கள்.  ஏனென்றால், நான் வாசகனைப் பற்றி யோசித்தால் எத்தனை லட்சம் வாசகர்களைத் திருப்திப்படுத்த முடியும்? ராஜகோபாலனுக்கு இந்த நாவல்களில் elevation இல்லையா, சந்தோஷம்.  அராத்துவுக்கு இருந்ததா, அதை விட சந்தோஷம்.  ராஜகோபாலன் போன்ற நண்பர்களுக்குப் பெரும் திருப்தியையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தும் அளவுக்கு நான் எழுத வேண்டும் என்றால் நான் ஜெயமோகனாக மாற வேண்டும்.   அது சாத்தியமா என்ன?

 

 

 

 

 

 

Comments are closed.