இரந்து வாழ்தல்…

கூட்டங்களில் பேச அழைக்கிறார்கள்.   நட்பின் காரணமாக நானும் செல்கிறேன்.  பணம் எதுவும் கொடுப்பதில்லை.  நானும் கேட்பதில்லை.  தெரியாதவர்களாக இருந்தால் கேட்கிறேன்.  கொடுப்பதில்லை.  ஆனால் பணம் கேட்டவுடனேயே அழைப்பதை ரத்து செய்து விடுகிறார்கள்.    ஓசியில்தான் வர வேண்டும்.  வர முடியுமா?  இல்லைங்க, முடியாது.  அப்டீங்ளா, சரி.  கதை முடிந்தது.  அது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.  ஆனால் நட்புக்காகப் போவதில் சில சிக்கல்கள்.  கார் அனுப்புவார்கள்.  கொண்டு வந்து விடுவார்கள்.  அத்தோடு சரி.  ஆனாலும் தொடர்ந்து அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு நான் விடாமல் செல்வதன் காரணம், ஷ்ருதி டிவி கபிலன் மட்டுமே.  அவர்தான் என் பேச்சை விடியோவில் பதிவு செய்து உங்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறார்.  இதற்காக அவருக்கு ஏதேனும் பணம்?  ம்ஹும்.  ஒரு வார்த்தை பேசக் கூடாது.  பேசுபவனும் ஓசி.  அதைப் பதிவு செய்து கொடுப்பவனும் ஓசி.  நான் காசு கேட்டால் பிச்சைக்காரன் என்று எழுதுகிறார்கள்.  யார்?  ஒரு சராசரி மனிதன் எழுதினால் கண்டுகொள்ள மாட்டேன்.  நாலும் தெரிந்த, என் மதிப்புக்கு உரிய பிரபஞ்சன் எழுதினார்.  அதுவும் ஒரு பிரபலமான பத்திரிகையில்.  என் பெயரைப் போடாமல்.  “வாசகர்களிடம் காசு கேட்டு வாழும் அந்த எழுத்தாளரைப் போல் நான் யாரிடமும் பணம் கேட்க மாட்டேன்.”  இது பிரபஞ்சனின் வார்த்தை.  ஆனால் இப்படி எழுதிய பிரபஞ்சனே நண்பர்களின் உதவியில்தான் வாழ்ந்தார். 

”எழுத்தின் வழியாகஅவ்வப்போது கிடைக்கும் சிறு ஊதியத்தையும் மேடைப்பேச்சுக்களுக்காக வழங்கப்படும்சன்மானத்தையும் வைத்துக்கொண்டு ஒருவர்வாழ்க்கையை நடத்த முடியாது. அதுவும்பிரபஞ்சன் போன்ற ரசனையான ஒரு மனிதர். அவரை ஆதரிக்கும் வாசக நண்பர்களின்உதவிகள் அவருக்கு முக்கியமானவையாக இருந்தன.”

அவர்(பிரபஞ்சன்) மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது அங்குசென்று அவரைப் பார்க்க நினைத்தேன். ஆனால் அது அவருக்கு மேலும் மன அழுத்தத்தைத்தருமோ என்ற அச்சத்தினால் நான் செல்லவில்லை. மருத்துவச் செலவுகளை ஏற்று தினமும் அவரைச் சென்று பார்த்துக்கொண்டிருந்த மிஷ்கினிடம்…” 

“ஃபிரான்ஸ் நாட்டில் வாழும் எனதுமகனுக்கு அங்கே பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கு. ஒவ்வொரு மாதமும் அவனுக்கு 35000ரூபாய் அனுப்ப வேண்டியிருக்கு. நீங்கள் மிஷ்கினிடம் இதை எடுத்துச் சொல்லி எனக்குஉதவக் கேட்க முடியுமா? நேரடியாக இதை அவரிடம் கேட்க எனக்கு சங்கோஜமா இருக்கு”என்று என்னிடம் சொன்னார். அதை நான் மிஷ்கினிடம் சொன்னேன். சில மாதங்கள் மிஷ்கின்அவருக்கு அத்தொகையைக் கொடுக்கவும் செய்தார்.

இப்படி வாழ்ந்த ஒருவர் என்னைப் பற்றி வாசகர்களிடம் காசு கேட்பவன் என்று எழுத என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசித்தேன்.  என் மீது அவருக்கு ஏதோ கோபம்.  என்னைத் திட்ட வேண்டும்.  திட்டுவதற்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை.  இதேபோல் ஞாநியும் என்னைத் திட்டியிருக்கிறார்.  ஒரு பிரபலமான பத்திரிகையில் என்னைப் பற்றி “இண்டர்நெட் பிச்சைக்காரன்” என்று எழுதினார்.  மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வந்து கொண்டிருக்கும் போது அப்படி எழுதினார் ஞாநி.  பிறகு அவரும் என்னைப் போலவே எழுத்தே கதி என்று ஆன போது “மாதம் என் செலவுக்கு 50,000 ரூ.  ஆகிறது.  என்ன செய்வது என்று தெரியவில்லை” என்று எழுதினார்.  உடனே ஒரு நலம் விரும்பி மாடு மேயுங்கள் என்று எழுதினான்.  இதெல்லாம் தமிழ்நாட்டில் சகஜம்.  ஞாநியின் கட்டுரைகளைப் படித்து அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதிக்கே உறக்கம் வந்திருக்காது.  அப்படியெல்லாம் எழுதினார் ஞாநி.  வயதான காலத்தில் உங்கள் வேட்டியில் மூத்திரக் கறை இருக்கிறது.  போய் ஓய்வெடுங்கள்” என்று ஞாநி ஒரு பிரபலமான பத்திரிகையில் எழுதினார்.  அப்போது கருணாநிதி முதல்வர்.  ஞாநிக்கு எதிராக திமுக வள்ளுவர் கோட்டத்தில் எதிர்ப்புக் கூட்டம் நடத்தியது.  (ஜெயலலிதாவை எதிர்த்து எழுதினால் அவர் எதிர்ப்புக் கூட்டம் நடத்த மாட்டார்; கஞ்சா கேஸில் அஞ்சு வருடம் உள்ளே தள்ளி விடுவார் என்பது வேறு விஷயம்.  திமுகவில் குறைந்த பட்சம் விமர்சனங்களை ஜனநாயகரீதியில் எதிர்கொண்டார்கள்.)  நான் சொல்ல வந்தது என்னவென்றால்,  இப்படியெல்லாம் முதல்வரையே கதி கலங்க அடித்த ஒரு பத்திரிகையாளரின் நிலையே அப்படித்தான் இருந்தது.  காரணம் என்ன தெரியுமா?  எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் சன்மானம் 750 ரூ தான் கொடுப்பார்கள்.  முதல்வரையே தூங்க விடாமல் செய்யும் கட்டுரையை எழுதிய ஞாநிக்கு ரெண்டு மாதம் கழித்து அந்தக் கட்டுரைக்கு 750 ரூ. கிடைக்கும்.  இப்போது 1500 ரூ. கொடுக்கிறார்கள்.  சுஜாதாவுக்கு அவர் எழுதிய காலத்தில் 500 ரூ. கிடைத்தது.  அதனால்தான் அவர் மாரடைப்பால் அப்பல்லோவில் கிடந்த போது மணி ரத்னமும் கமல்ஹாசனும் பண உதவி செய்தார்கள்.  சுஜாதாவுக்கே அதுதான் நிலை. 

நேற்று ஒரு நிகழ்ச்சிக்குப் போனேன்.  இலவசம்தான்.  கார் கூட வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.  நண்பர் ராஜேஷ் தான் அழைத்துக் கொண்டு போனார்.  அழைத்துக் கொண்டு வந்தார்.  அந்த நிகழ்ச்சியில் பேசுவதற்காக முந்தாநாள் முழுக்கவும் உலகின் முக்கியமான குறும்படங்களையெல்லாம் பார்த்தேன்.  பிறகுதான் போய்ப் பேசினேன். 

என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் கூட நான் பணம் கேட்பது பற்றிக் கூசிக் குறுகிப் பேசுகிறார்கள்.  ஒரு தோழியிடம் கேட்டேன்.  ”நீ ஏன் என்னுடைய இணையதளத்தைப் படிப்பதில்லை அம்மா?”  “அதில் நீங்கள் அவ்வப்போது பணம் கேட்டு எழுதுகிறீர்கள்.  நீங்கள் எவ்வளவு பெரிய ஆளுமை!  நீங்கள் அப்படிக் கேட்டு எழுதும் போது எனக்கு வருத்தமாகவும் லஜ்ஜையாகவும் இருக்கிறது.  அதனால் நான் உங்கள் தளத்துக்கே போவதில்லை.” என் மீது கொண்ட அதீதமான அன்பினால் அறம் சார்ந்த வாழ்வின் மதிப்பீடுகளை மறந்து விட்டார் அந்தப் பெண்.

எனக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது.  சங்கீகத்தின் அவதாரமான தியாகப் பிரம்மமே பிச்சை எடுத்துத்தானே வாழ்ந்தார்?  அவர் என்ன ஏதாவது ஆஃபீஸில் குமாஸ்தா வேலை பார்த்தாரா?  ராமா ராமா என்று பாடினார்.  இசையிலேயே வாழ்ந்தார்.  இசையையே சுவாசித்தார்.  தேகத்துக்கும் ஏதாவது போட வேண்டுமே?  பிச்சை எடுத்தார்.  பிச்சை எடுப்பது இந்து தர்மம்.  யாரெல்லாம் இந்த உலகத்துக்கு ஞானத்தை வழங்குகிறானோ அவன் இரந்து உண்டு வாழ்கிறான்.  அதனால்தான் அவன் ஞானி.  குடும்பத்தை நிராகரித்து விட்டான்.  சொத்து சேர்ப்பதை விட்டு விட்டான்.  அவனுக்கென்று இந்தப் பூவுலகில் எதுவுமே இல்லை, அவனுடைய கலையைத் தவிர.  எனக்கு அது எழுத்து.  என் எழுத்தை வாசிக்கும் நீங்கள். 

திருவண்ணாமலையில் எத்தனையோ சந்நியாசிகள் காவித் துணியைக் கட்டிக் கொண்டு திரிகிறார்கள்.  இவர்களால் சமூகத்துக்கு என்ன பயன் என்று கேட்டார் என் நண்பர் ஒருவர்.  இவர்களால்தான் பூமியில் மழை பெய்கிறது என்றேன் நான்.  இதையெல்லாம் தர்க்கத்தால் விளக்க முடியாது.  பூமியில் 90 சதவிகிதம் பேர் – அல்லது கொஞ்சம் குறைவாக இருக்கலாம் – பூமிக்குப் பாரமாகவே வாழ்கிறார்கள்.  பிறக்கிறார்கள்.  படிக்கிறார்கள்.  வேலைக்குப் போகிறார்கள்.  வீடு கட்டுகிறார்கள்.  சொத்து வாங்குகிறார்கள்.  இன்னும் பணம் வருகிறது.  மேலும் வீடு வாங்குகிறார்கள்.  ஒழிந்த நேரங்களிலும் அதைப் பற்றியே பேசுகிறார்கள்.  விவாதிக்கிறார்கள்.  பிள்ளைகளுக்கும் வாங்கி வைத்து விடுகிறார்கள்.  சாகிறார்கள்.  பிறகு அவர்களின் பிள்ளைகள் தலையெடுத்து மேலும் சொத்து சேர்க்கிறார்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ள ஒரு காரியத்தை – அடுத்த உயிரின் மீது அன்பையும் கருணையையும் வர்ஷிக்கின்ற ஒரு காரியத்தை – அவர்கள் தங்கள் வாழ்நாளில் செய்திருக்க மாட்டார்கள்.  ஒரு காக்காய்க்கு ஒரு பருக்கை?  ஒரு ஏழைக்கு ஒரு வேளை சோறு?  எதுவுமே இல்லை.  ஒரு புத்தகம் படித்ததில்லை. 

எனக்குத் தெரிந்த ஒரு தம்பதி.  இருவருமே வாழ்க்கையில் ஒரு புத்தகம் படித்ததில்லை.  ஒரு நல்ல சினிமா பார்த்ததில்லை.  சினிமா என்றால் விஜய், அஜித்.  இசை என்றால் சினிமாப் பாட்டு.  கலை என்ற சமாச்சாரத்தோடு ஒட்டு உறவு இல்லை.  35 ஆண்டுகள் உத்தியோகம் முடிந்து ஓய்வு பெற்றார்கள்.  குழந்தைகள் ரெண்டும் அமெரிக்காவில்.  வங்கியில் எக்கச்சக்கமாக பணம்.  பயணம் செல்வதில் கூட ஆர்வம் இல்லை.  ஊருக்கு வெளியே ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள்.  அவருக்கு வயது 70; அம்மணிக்கு 65.  அவர்களுடைய காலம் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னேதான் கழிகிறது.  அந்த வீட்டில் திருடன் புகுந்தால் நூறு பவுனாவது கிடைக்கும்.  அதை விடுங்கள்.  அந்தத் தம்பதி மாதிரிதான் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் வாழ்கிறார்கள்.  வாழ்நாளில் ஒரு புத்தகம் கூடப் படித்ததில்லை.  இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?

இரந்து வாழ்தல் சொத்து சேகரத்துக்கு எதிரானது.  இரந்து வாழ்தலே இந்து தர்மம்.  (இந்து என்பதை மத அடிப்படையில் புரிதலாகாது; வெளிநாடுகளில் இந்து என்றால் இந்தியாவில் வாழ்வோர் என்றே பயன்படுத்துகின்றனர்.)   இரந்து வாழ்தலின் மூலம் நான் சுயநலத்தின் மீது கட்டப்பட்ட சமூக மதிப்பீடுகளைப் புறந்தள்ளுகிறேன் எனக் கொள்க.   

***

 

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai