இந்திய வாழ்க்கை

ஒரு முக்கியமான என்னுடைய தனிப்பட்ட சொந்த விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. பக்கத்து வீட்டில் இருப்பவர்தான் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் முன்னாள் ஓனர். இப்போது அவர் ஒரு குடியிருப்பிலும் கீழ்த்தளத்தின் ஓனராகவும் இருக்கிறார். இது நொச்சிக்குப்பம், டுமீங் குப்பம், பட்டினப்பாக்கம் ஆகிய குப்பங்களுக்கு நடுவே இருப்பதால் இங்கே எந்தக் கடை வைத்தாலும் நஷ்டமாகி ஒரே ஆண்டில் அதைத் தூக்கி விடுகிறார்கள். முன்பு வெய்ட் ரோஸ் என்ற டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருந்தது. அது நட்டத்தில் நடந்து படுத்து விட்டது. அந்தக் கடையை எடுப்பதற்காக 15 நாள் கீழ்த்தளத்தில் லேத்துப் பட்டறை மாதிரி சத்தம் கேட்டது. ஒரு நாளில் 20 மணி நேரம். இப்போது இங்கே ஜாக்கி ஷோரூம் வரப் போகிறது. அதற்காக கடந்த ஒரு மாதமாக லேத்துப் பட்டறை மாதிரி ட்ரில்லிங் வேலை நடக்கிறது. நான் பெரும் சிபாரிசுகளை வைத்து பெருமளவு போராடியதால் இப்போது இரவில் வேலை நடப்பதில்லை. ஆனால் பகல் 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஆறு ஏழு பிஹாரி தொழிலாளர்கள் லேத்துப் பட்டறை மாதிரி ட்ரில்லிங் வேலை செய்கிறார்கள்.

ஓனரின் அம்மா இந்த சத்தத்தினாலேயே பைத்தியம் பிடித்து மூன்று வாரங்களுக்கு முன்னால் இறந்து போனார்கள். யாரோ என் வீட்டுக்குள் புகுந்து தாக்குகிறார்கள், நான் மாடியிலிருந்து கீழே குதிக்கப் போகிறேன் என்று நாள் பூராவும் கத்துவார்கள். ஓனர் என்னை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் மைலாப்பூர் இன்ஸ்பெக்டரை வீட்டுக்கு வரவழைத்து அந்த மூதாட்டிக்குக் கவுன்ஸலிங் கொடுத்தேன். என்ன கவுன்ஸலிங்? “ஒன்றும் பயப்படாதீர்கள் அம்மா. நாங்கள் (போலீஸ்) இருக்கிறோம்.” ஆனாலும் மூன்று நாட்கள் கழித்து இறந்து விட்டார். ஹார்ட் அட்டாக் என்று ஓனர் சொன்னார். இந்த ட்ரில்லிங் சத்தத்திலேயே வந்திருக்கும்.

இப்போதும் ஓனர் அந்த ட்ரில்லிங் போடுவதை நிறுத்தவில்லை. அம்மா போனால் என்ன, ஆயா போனால் என்ன, பணம் முக்கியம். அவந்திகாவுக்கு சின்ன வயதில் கபாலத்தில் அடி பட்டதால் பெரும் சத்தம் கேட்டால் வலிப்பு வரும். 25 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. இடையில் என்னுடைய சிசுருக்ஷையினால், கவனிப்பினால் ஃபிட்ஸ் வராமலேயே இருந்தது. இப்போது இந்த ட்ரில்லிங் சத்தத்தினால் மீண்டும் ஃபிட்ஸ் வந்து விட்ட்டது. செத்து விடுவேன் என்கிறாள். அவள் நிலை மோசமாவதை பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அம்மா வீட்டுக்குப் போ என்றேன். அம்மா வீட்டில் யாரும் இல்லை. கார்த்திக் வீட்டுக்கு (பாம்பே) போ என்றேன். கார்த்திக் அமெரிக்கா போயிருக்கிறான். எங்கள் மருமகளும் ஊருக்குப் போயிருக்கிறாள். ஆக, அங்கேயும் யாரும் இல்லை.

போலீஸிடம் புகார் கொடுத்தேன். வந்தார்கள். ட்ரில்லிங் நிறுத்தப்பட்டது. ஆனால் போலீஸ் போனதும் மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள்.

அவந்திகாவின் நிலை என்னை மிகவும் பாதிக்கிறது. ஆனால் எதுவுமே என்னால் செய்ய இயலவில்லை. போலீஸிடம்தான் புகார் சொல்ல முடியும். வேறு என்ன செய்வது என்றும் எனக்குத் தெரியவில்லை. இப்படியே நீடித்தால் – இன்னும் பதினைந்து நாட்களுக்கு நீடிக்கும் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் ஓனர் – அவந்திகா இருக்க மாட்டாள். அப்போதும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது.