ஊருக்கே சொந்தமானவன்…

எந்த ஆணுமே தன் மனைவிக்கு ஹீரோ அல்ல என்று ஒரு நண்பர் பார்க்கில் வைத்து சொன்னார். அதை ஒரு நண்பர் ஆமோதித்தார். எனக்கு அது பொருந்தாது என்றேன். அவந்திகா எனக்கு பல நிபந்தனைகளை விதித்திருந்தாலும் (குடிக்காதே, அராத்துவடன் சேராதே, இன்ன பிற) அவளுக்கு நான் ஹீரோ தான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

நேற்று மாலை மீண்டும் கொடூரமாக ட்ரில்லிங் போட்டார்கள். ஐயோ, அவந்திகாவை பாதிக்குமே என்று நினைத்தே பதற்றத்தில் எனக்கு நெஞ்சு வலி வந்து விட்டது.  டெபுடி கமிஷனரை அழைத்துப் பேசினேன்.  நேராக காவல்நிலையம் போய் எழுத்து மூலம் புகார் கொடுக்கச் சொன்னார்.  ஆனால் எனக்கோ ராம்ஜியுடன் ஒரு நிகழ்ச்சிக்குப் போயாக வேண்டும்.  ஒன்றும் புரியவில்லை.  அதெல்லாம் நீ எனக்காக எங்கேயும் போய் அலைய வேண்டாம்; நான் என் தோழியின் காரில் போய் உட்கார்ந்து கொள்கிறேன்; இனிமேல் ட்ரில்லிங் போட்டால் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு வெளியே போய் விடுகிறேன், கவலைப்படாதே  என்று சொல்லி வீட்டிலிருந்து கீழே இறங்கி விட்டாள்.  நேற்று ஆன்மீக வகுப்பு இருந்தது.  அதற்காக அந்தத் தோழி வந்திருந்தார்.  கொட்டும் மழை வேறு.  கொட்டு கொட்டென்று வானத்தைப் பிய்த்துக் கொண்டு கொட்டியது மழை. 

நெஞ்சு வலி வந்ததை அவளிடம் சொல்லக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  இருந்தாலும் இன்று காலையில் உளறி விட்டேன்.  உடனே அவள் கீழே உள்ள மனிதரை அழைத்து – அவர்தான் இந்த ட்ரில்லிங் வேலைக்கு மேனேஜர், அவர்தான் என்னை வா போ என்று திட்டி அடிக்க வந்தவர் – ”யோவ், இனி ஒருமுறை ட்ரில்லிங் போட்டால் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது; என் கணவர் எனக்கு மட்டும் சொந்தம் அல்ல; இந்த உலகத்துக்கே சொந்தமானவர்.   ட்ரில்லிங் போட்டு அவருக்கு நெஞ்சு வலி வர வைத்தால் உங்கள் யாரையும் சும்மா விட மாட்டேன்” என்று கத்தினாள்.