தெருநாய் வாழ்க்கை

மீண்டும் கொடூரமான முறையில் ட்ரில்லிங் போட ஆரம்பித்து விட்டார்கள். அவந்திகா இந்த முறை ஃபிட்ஸ் வருவதற்கு முன்பே சட்டென்று கீழே இறங்கி இந்த வளாகத்துக்கு வெளியே போய் விட்டாள். பிறகு இன்று பகல் முழுவதும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி அங்கே போய் விட்டாள். இப்படி இந்திய வாழ்க்கை நாய்ப் பிழைப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. போலீஸில் புகார் செய்தோம். போலீஸ் வந்தது. எங்களைத் தவிர மீதி பேரிடம் கேட்டார்களாம். எங்களுக்குத் தெரியாது. மீதி பேர் யாரும் எங்களுக்கு சத்தம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஒன்று, அவர்கள் மாடியில் இருப்பவர்கள். சத்தம் கேட்காது. ரெண்டு, இந்த இடத்தின் ஓனரின் தாதாகிரிக்குப் பயந்திருக்கலாம். போலீஸ் வந்ததே எங்களுக்குத் தெரியாது. புகார் கொடுத்தவரை போலீஸ் சந்திக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கே போய் எழுத்து மூலம் புகார் கொடுக்கச் சொன்னார் நண்பர். அவர் போலீஸ் துறையில் அதிகாரி. அங்கேயெல்லாம் போய் அலைய வேண்டாம் என்று சொல்லி விட்டாள் அவந்திகா. எனக்கும் அங்கேயெல்லாம் போய் அலைய நேரம் இல்லை.