கடவுளைக் காண வாருங்கள்…

வாக்கிங் போய் விட்டு வந்து அய்யனாருக்கு பதில் எழுத அமர்ந்தேன். அசோகமித்திரனின் இருவர் குறுநாவலில் வரும் வாலாவின் ஞாபகம் வந்தது. கூடவே சி.சு. செல்லப்பாவின் சாந்தி (ஜீவனாம்சம்), ந. முத்துசாமியின் நீர்மை சிறுகதையில் வரும் பத்தாவது வயதில் வாழாவெட்டியாகி தொண்ணூறு வயதுக்கு மேல் இறந்த அந்த அவளையும் ஞாபகம் கொண்டேன். முடிந்தது கதை. எழுத முடியவில்லை. யூரிப்பிடஸின் மெடியா ஞாபகம் தொற்றியது. இந்தப் பெண்களையெல்லாம் நினைத்த போது ஜொஹான் பாக்ஹெல்பெல்லின் (1653 – 1706) சில இசைக் கோர்வைகளைக் கேட்க ஆரம்பித்தேன். முதலில் Canon in D major. இது 330 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு இன்றளவும் மேலை சமூகங்களில் திருமணங்களில் போது இசைக்கப்படும் மிகப் புகழ்பெற்ற Wedding Song. இது ஏன் சில துரதிர்ஷ்டம் பிடித்த சில பிராமண விதவைகளை (அதில் ஒருத்தி ஆண் ஸ்பர்ஸமே இல்லாமல் தொண்ணூறு வயதுக்கு மேல் வாழ்ந்தவள்) நினைவு கூரும் போது எனக்கு ஞாபகம் வர வேண்டும்? இந்த வெட்டிங் ஸாங் பாக்ஹெல்பெல் தனது வகுப்புத் தோழனாக இருந்த ஒருவனுக்காக எழுதியது. அந்தத் தோழன் ஜொஹான் செபாஸ்தியான் பாக்ஹின் மூத்த சகோதரன்.

என் மாணாக்கர்களில் முக்கியமானவர்கள் என நான் நினைப்பது காயத்ரியும் சீனிவாசனும். இருவருமே இசையில் மிகுந்த நாட்டமுடையவர்களாக எனக்குத் தெரிந்ததில்லை. இவர்கள் இருவரும் இதை வாசிக்கும் நீங்களும் எனக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க வேண்டும். அறையில் மிகக் குறைந்த ஒளி இருந்தால் போதும். வேறு சப்தம் எதுவும் இருக்கக் கூடாது. பக்கத்தில் நண்பர்களோ வேறு யாருமோ இருக்கக் கூடாது. ஏனென்றால், உங்களுக்குப் புனிதமாக இருக்கும் விஷயம் வேறொருவருக்கு நகைப்பாகத் தெரியும். தயாரா? இப்போது உங்களுக்குக் கடவுளைக் காண்பிக்கிறேன்.

ஆறேகால் நிமிடம் ஓடும் இந்த இசைக் காவியத்தை இதுவரை ஐந்தரைக் கோடி பேர் கேட்டிருக்கிறார்கள். காலையிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போது மணி என்ன மூன்று இருக்குமா என்று பார்க்கிறேன். ஆறரை. நாள் முழுதும் பாக்ஹெல்பெல்லிலேயே போய் விட்டது. பாக்ஹெல்பெல்லின் மற்றொரு அற்புதம். இந்த இசைக் காவியங்களைக் கேட்கும் போது உங்களால் கண்ணீர் விடாமல் இருக்க சாத்தியமில்லை. கடவுளைக் காணும் போது கண்ணீர் வரத்தான் வரும் என்கிறார்கள் நம்பிக்கையாளர்கள். உண்மைதான் போல…