லெபனான் – 2

லெபனிய இசை பற்றி சுமார் 15 ஆண்டுகளாக நான் அறிமுகப்படுத்தி எழுதி வருகிறேன். Nancy Ajramஐ நீங்கள் மறக்க முடியுமா? அவருடைய பாடல்களை நம் திருப்பூரில் ஓடும் காரில் கூட நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். நான்ஸியின் Ente eih என்ற பாடலை சுமார் ஆயிரம் முறை கேட்டிருக்கிறேன்.

இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலக நகரங்களில் முதன்மையாக வரும் சில தென்னமெரிக்க நகரங்களோடு பெய்ரூட்டும் சேரும். இசையும் உணவும்தான் இந்தப் பயணத்தின் என்னுடைய திட்டம். இப்போது பாருங்கள். இட்லி பற்றிப் பேசவே மாட்டேன். உணவைப் பொறுத்தவரை லெபனான் சீனா, ஜப்பான், இந்தியா, தாய்லாந்தைப் போலவே உச்சத்தில் இருக்கும் நாடு. எல்லாவற்றையும் விட நான் ஒரு கலாச்சார முஸ்லீம் என்பதால் லெபனிய உணவு மிக மிகப் பிடித்தமானது. பெங்களூரிலும் சென்னையில் சில உணவு விழாக்களிலும் லெபனிய உணவை உண்டு திளைத்திருக்கிறேன்.

பெய்ரூட்டின் பப்புகள் நம்மூர் பப்புகள் போல் குடிப்பதற்கு மட்டுமானவை அல்ல. லெபனானின் மிகச் சிறந்த ராக் பேண்டுகள் அங்கே நேரடியாக வந்து இசைப்பார்கள். அவர்களில் எனக்குப் பிடித்த குழு மஷ்ரூ லைலா. இந்தக் குழுவைத் தேடி பப்புகளில் அலைய இருக்கிறேன்.