நண்பர்கள் (2)

எனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறது.  ஒரு முறை அல்ல; பல முறை.  சி மேட்டர் என்ற தலைப்பில் ராஸ லீலாவில் இருக்கும்.  அதுவும் தவிர பல நண்பர்கள்.  ”நீங்கள் ஏன் வறுமையில் உழல வேண்டும்?  மாதம் ஒரு கல்லூரியில் உரையாற்றுங்கள்.  25000 ரூ.  கை மேல் வரும்.  நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றார் ஒரு நண்பர்.  அது பற்றி தினமும் போன் செய்தார்.  மணிக் கணக்கில் பேசினார்.  என் வாழ்வில் மூன்று மாதம் வீண் ஆயிற்று.  இடுப்புக்குக் கீழே உள்ள ரோமம் தான் மிஞ்சியது.

இன்னொரு நண்பர் வந்தார்.  நான் சினிமா எடுக்கப் போகிறேன்.  நான் தான் இயக்குனர்.  ———– தான் தயாரிப்பாளர்.  நீங்கள்தான் கதை, வசனம்.  தயாரிப்பாளரும் என்னுடன் பேசினார்.  ஒரு மாதம் அலைந்தேன்.  ஆட்டோ செலவு பத்தாயிரம் ரூபாய் ஆன போது “ஆட்டோ செலவு அள்ளிக் கொண்டு போகிறது; முன் பணம் கொடுங்கள்” என்று கேட்டேன்.  ”என்ன சாரு, சின்னப் புள்ள மாதிரி பேசுறீங்க…  வீடு கார் எல்லாம் வாங்கப் போகிறீர்கள்… ஆட்டோ செலவு அது இதுன்னுக்கிட்டு…”

சொன்னவர் பிரபலமான பத்திரிகையின் ஆசிரியர்.  வாயை மூடிக் கொண்டேன்.  ஆனால் என்னதான் பெரிய பட்ஜெட் படம் என்றாலும் ரைட்டருக்கு பத்து லகரம்தானே?  பத்து லகரத்தில் எப்படி வீடு கார் எல்லாம் வாங்குவது?  மேலும், எனக்கு இனாமாகக் கொடுத்தாலும் வீடு கார் எல்லாம் வேண்டாமே?  என்னுடைய அதிகப் பட்ச தேவையே சிலேவுக்கு ஒரு ஏர் டிக்கட் தானே?  இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு மேலும் அலைந்தேன்.  படம் ட்ராப் ஆயிற்று.  எனக்குப் பதினைந்தாயிரமும் ஒரு மாத நேரமும் நஷ்டம்.

இன்னொரு நண்பர் வந்தார்.  அண்ணே, இனிமேல் உங்களுக்கு எந்தப் பணக் கஷ்டமும் இல்லை.  நான் உயிரோடு இருக்கும் வரை உங்களுக்கு மாதம் 30,000 ரூபாய் வரும்.  வெறும் பேச்சு இல்லண்ணே… இந்தாருங்கள் முதல் முப்பதாயிரம்.

பத்து நண்பர்களுக்கு எதிரில் அந்தப் பணக் கட்டைக் கொடுத்தார் நண்பர்.  முன்பின் பழக்கம் இல்லை.  திடீரென்று நண்பர் ஆனவர்.  பென்ஸ் காரில் தான் வருவார், போவார்.  என்ன வேலை என்று யாருக்கும் தெரியாது.  செவன் ஸ்டார் ஹோட்டலில்தான் தங்குவார்.

அவந்திகாவிடம் சொன்னேன்.  நம்பவில்லை.  சே சும்மா இருப்பா லூஸு.  இப்படித்தான் வாழ்நாள் பூராவும் உன்னை லூஸாக்கிக்கிட்டு இருக்காங்க… என்றாள்.  பணக்கட்டைக் காட்டினேன்.  ஏற இறங்க ஒருமாதிரியாகப் பார்த்தாள்.

அந்த நண்பரை எப்போது நான் சந்தித்தாலும் பல நண்பர்களுக்கு இடையில் இதையே சொன்னார்.  “அண்ணே, என் உயிர் இருக்கும் வரை உங்களுக்கு மாதம் 30,000 ரூ.”  பத்து பேர் சாட்சி.  குடிக்காமல் தான் பேசுவார் இதை.  ஒருமுறை அல்ல; திரும்பத் திரும்பச் சொல்வார்.

மறுமாதமும் அதேபோல் பல பேர் எதிரில் பேசி பணக்கட்டைக் கொடுத்தார்.   30,000 ரூ.

அதேபோல் அதேபோல் அதே வசனம் அதே வசனம்.  “அண்ணே, என் உயிர் இருக்கும் வரை உங்களுக்கு மாதம் 30,000 ரூ.”  பலபேர் எதிரில். பல முறை. பல முறை.  குடிக்காமல்.

மறுமாதமும் அதேபோல் பலபேர் எதிரில் பேசி பணக்கட்டைக் கொடுத்தார். 30,000 ரூ.

அதேபோல் அதேபோல் அதே வசனம் அதே வசனம்.  “அண்ணே, என் உயிர் இருக்கும் வரை உங்களுக்கு மாதம் 30,000 ரூ.”  பலபேர் எதிரில். பல முறை. பல முறை.  குடிக்காமல்.

மேலும், தன்னிடம் பல கோடி ரூபாய் கையிருப்பில் இருப்பதால் அதிலிருந்து வரும் வட்டியிலிருந்துதான் எனக்குக் கொடுப்பதாகவும் அதனால் நான் எந்தப் பதற்றமும் அடைய வேண்டாம் என்றும் பலமுறை சொன்னார்.

ஆனால் அதற்கடுத்த மாதம் பணம் வரவில்லை.  ஆள் வந்தார்.  பணம் பற்றிய பேச்சு இல்லை.  மீண்டும் மீண்டும் வந்தார்.  வாசகர் வட்டத்தில் கலந்து கொண்டார்.  செவென் ஸ்டார் ஹோட்டல்.  பென்ஸ் கார்.  பணம் பற்றிய பேச்சே இல்லை.

மூன்று மாதங்கள் கடந்தன.  இதற்கிடையில் அவர் கொடுத்திருந்த பணத்தில் தாய்லாந்து, மலேஷியா எல்லாம் போய் வந்தேன்.  ஒருநாள் நான் பொறுமை இழந்து எல்லோர் எதிரிலும் கேட்க நினைத்த போது, அவரே முந்திக் கொண்டு “எனக்கு வேலை போய் விட்டது… இனிமேல் நான் பழைய ஆள் இல்லை” என்றார் பூடகமாக.  இப்போது என்ன வேலை என்றார் அராத்து.  கவர்மெண்ட் ஜாப்.  என்னது கவர்மெண்ட் ஜாபா?  இந்த வயதிலா?

ஆமாம்; கவர்மெண்ட் ஜாப்; ஆண்டுச் சம்பளம் பத்தாயிரம் ரூபாய்.

அராத்து திரும்பக் கேட்டார். அதே பதில் வந்தது.  துரோகி சாட்சி.

என் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.  ஏய்யா இப்படிப் பண்ணுகிறீர்கள்?  நான் உங்களிடம் பணம் கேட்டேனா?  நீங்களாக வந்து வாக்குக் கொடுத்து விட்டு பிறகு நழுவுவது என்றால் நான் என்ன கேணையனா?  இது நம்பிக்கைத் துரோகம் இல்லையா?

மேலும் சில மாதங்கள் பொறுத்துப் பார்த்து விட்டு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி தட்டினேன்.  “அண்ணே, நான் தான் சொன்னேனே அண்ணே…  இப்போ பணக் கஷ்டம்…”

ஒரு நாலு மாதம் கூட வாக்கைக் காப்பாற்ற முடியாத ஒரு ஆள் எப்படி தன் உயிர் இருக்கும் வரை என்று வாக்குக் கொடுக்கிறார்?  மாதம் 5000 ரூ. கூட கொடுக்க முடியாத ஒருவர் எப்படி 30,000க்கு வாக்குக் கொடுக்கிறார்? ஏன் எனக்கென்று ஒவ்வொருத்தராக இப்படியே வருகிறார்கள்?

கிராமத்துப் பெண்களை கரெக்ட் பண்ணி, திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி நன்றாகப் புணர்ந்து விட்டு, பிறகு கூலாக டாட்டா சொல்லி விட்டுப் போகும் மைனர் குஞ்சுகள் தான் எனக்கு ஞாபகம் வருகிறார்கள்.  ஆனால் நான் கிராமத்துப் பெண் அல்ல.  எழுத்தாளன் ஞானிக்கு சமானம்.  கடவுளிடம் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.

 

 

Comments are closed.