ஒரு கேள்வியும் பதிலும்…

இன்று புத்தாண்டு என்பதே மறந்து போய் கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் ராம்ஜி இன்று ப்ரிண்ட் போட முடியாது, அந்த ஆஃபீஸ் விடுமுறை என்று சொன்னதால், இன்று என்ன விடுமுறையாயிருக்கும் என்று யோசித்து டக்கென்று புத்தாண்டு என்று புரிந்தது. காரணம், நேற்றிலிருந்து ராப்பகலாக ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். என்னுடைய மிக முக்கியமான புத்தகங்களில் ஒன்று ஊரின் மிக அழகான பெண் என்ற மொழிபெயர்ப்புத் தொகுதி. தமிழில் இப்போது ஏகப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்பாக மொழிபெயர்க்கப்பட்டவை இதில் உள்ள கதைகள். பெரும்பாலான கதைகள் கோணங்கியின் கல்குதிரை இதழில் வந்தவை. லத்தீன் அமெரிக்க சிறுகதைகளை தமிழில் முதன்முதலில் மொழிபெயர்த்தது அடியேனாகத்தான் இருக்க வேண்டும். அதற்கும் முன்னால் தர்மு சிவராமு போர்ஹேஸ் பற்றி அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அசோகமித்திரன் மார்க்கேஸ் பற்றி எழுதியிருக்கிறார். முழுமையாக லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளில் கவனம் செலுத்தி மொழிபெயர்த்தது அடியேன் தான். பின்னர் கொஞ்ச காலத்திலேயே நாகார்ச்சுனனும், சிவகுமாரும், பிரம்மராஜனும் இணைந்தார்கள்.

ஊரின் மிக அழகான பெண் என்ற தொகுப்பில் உள்ள கதைகள் நீங்கள் உலகின் பிரபலமான சிறுகதைத் தொகுதிகளில் பார்க்க முடியாத அரிதினும் அரிதான கதைகள். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குக் கூட பனாமாவைச் சேர்ந்த ரொஹேலியோ சினான் (Rogelio Sinan) என்பவரைப் பற்றித் தெரிந்திருக்காது. ஏனென்றால், லத்தீன் அமெரிக்கச் சூழலிலேயே அதிகம் விவாதிக்கப்படாதவர் அவர். தமிழ்ச் சூழலில் தி.ஜ.ரங்கநாதன், ப. சிங்காரம், நகுலன் போல் வைத்துக் கொள்ளுங்களேன். ரொஹேலியோ சினான் பற்றி இணையத்தில் தேடினால் கூட மூணு வரிதான் போட்டிருக்கும். இவர்களைப் பற்றியெல்லாம் நான் கூபாவிலிருந்து வந்து கொண்டிருந்த Granma என்ற வாரப் பத்திரிகையிலிருந்து தெரிந்து கொண்டேன். டேப்ளாய்ட் அளவில் வரும் அந்தப் பத்திரிகை. இதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத தென்னமெரிக்கக் கதைகளை முதன்முதலாக மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார்கள் அப்பத்திரிகையில். அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை பிரபலமான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பிலேயே கூட பார்க்க இயலாது.

மற்றொரு உதாரணம், அர்ஹெந்த்தினாவைச் சேர்ந்த அலெஹாந்த்ரா பிஸார்னிக். (Alejandra Pizarnik) (1936 – 1972) மே 1959-இல் அலெஹாந்த்ரா தன் பெற்றோருடன் புவனோஸ் அய்ரஸில் வசித்து வந்தார். அப்போது அவர் வயது 23. ஒருசில மாதங்களுக்கு முன்புதான் அவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அப்போது அவர் தன் நாட்குறிப்பில் பின்வருமாறு எழுதினார்:

எழுதுவதற்காக மட்டுமே வாழ விரும்புகிறேன். எழுதுவதைத் தவிர வேறு எதைப் பற்றியுமே நான் யோசிக்க விரும்பவில்லை. எனக்குக் காதல் தேவையில்லை; பணம் தேவையில்லை. வெற்றிகரமான முறையில் என் வாழ்க்கையை நான் அமைத்துக் கொள்ள விரும்பவில்லை. எனக்குத் தேவை அமைதி. படிக்கவும், கொஞ்ச அளவு பணம் சம்பாதிக்கவும் எனக்கு அமைதி தேவை. கொஞ்சம் பணம் இருந்தால்தான் குடும்பத் தளையிலிருந்து விலகி நான் பாட்டுக்கு எழுதிக் கொண்டிருக்க முடியும்.

பிஸார்னிக்கின் ரத்த வேட்கை என்ற தலைப்பிலான ஒரு கதை இத்தொகுப்பில் உள்ளது. அப்படி ஒரு கதையை ஆயிரம் புத்தகம் படித்தாலும் உங்களால் படிக்க இயலாது.

மற்றும், ரொனால்ட் சுகேனிக் என்று ஒரு அமெரிக்கர். வில்லியம் பர்ரோஸ், ஜாக் கெரோவாக், ஆலன் கின்ஸ்பெர்க், கேத்தி ஆக்கர் போன்ற விளிம்புநிலை எழுத்தாளர்கள் கூட உலக அளவில் விவாதிக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் ரொனால்ட் சுகேனிக் பற்றி யாரும் ஒரு வார்த்தை சொன்னதில்லை. நான் – லீனியர் எழுத்தின் உச்சம் ரொனால்ட் சுகேனிக். இவருடைய 98.6 என்ற நாவல் முற்றுப்புள்ளியோ வேறு எந்த நிறுத்தற்குறிகளோ இல்லாமல் எழுதப்பட்ட நாவல். மொழி என்றும், எழுத்து என்றும் நாம் எதை நினைத்துக் கொண்டிருக்குமோ அதையெல்லாம் உடைத்து நொறுக்கிக் கொண்டு மொழியின் சாத்தியங்கள் அனைத்தையும் தாண்டிச் சென்றவர் ரொனால்ட் சுகேனிக். இவருடைய வாக்கியம் என்ற சிறுகதை ஒரே வாக்கியத்தால் அமைந்தது. இவருடைய முடிவற்ற சிறுகதை என்ற சிறுகதையும் இத்தொகுப்பில் உள்ளது.

பலமுறை நான் சொல்லியிருக்கிறேன். இன்றைய உலக இலக்கியத்தில் ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளையெல்லாம் விட அரபி மொழி இலக்கியம்தான் உச்சத்தில் இருக்கிறது. மொராக்கோ என்ற ஒரு தேசத்திலேயே இன்றைய தினம் நோபல் பரிசு பெறத்தக்க ஒரு டஜன் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். லெபனானை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டின் மூன்றே மூன்று மாவட்டங்கள் மட்டுமே வரக் கூடிய பரப்பளவைக் கூட அந்த நாட்டில்தான் உலகில் உள்ள எல்லா நாடுகளையும் விட அதிக அளவில் இலக்கியம் உருவாகிக் கொண்டிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ருஷ்யாவில் எப்படி ஒரு மாபெரும் எழுத்தாளர் கூட்டம் இருந்ததோ அதே போன்ற ஒரு இலக்கியவாதிகளின் கூட்டம் லெபனானிலிருந்து கிளம்பி சர்வதேச அளவில் சுற்றிக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர்கள் வாழ்வதற்கான சூழல் லெபனானில் இல்லை என்பதால் பலரும் வெளிநாடுகளில் – குறிப்பாக ஐரோப்பாவில் – வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமகால அரபி இலக்கியத்தில் முன்னணியில் இருக்கும் எகிப்தைச் சேர்ந்த ராத்வா அஷூர் (1946 – 2014), சிரியாவில் பிறந்து லெபனானில் வாழ்ந்து வரும் காதா ஸம்மான் (பிறப்பு: 1942), பெய்ரூத்திலும் பாரிஸிலும் மாறி மாறி வாழ்ந்து வரும் நஜ்வா பரக்கத் (பிறப்பு: 1966), எகிப்தைச் சேர்ந்த நவ்வல் அல் சாதவி (பிறப்பு: 1931), லெபனானைச் சேர்ந்த எமிலி நஸ்ரல்லா (1931 – 2018) ஆகிய அரபி எழுத்தாளர்களின் மிகச் சிறந்த கதைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. என்னுடைய முப்பது ஆண்டுக் கால அரபி இலக்கிய வாசிப்பிலிருந்து தேர்ந்தெடுத்தவை இந்தக் கதைகள்.

இது தவிர மற்றொரு கதை ஜான் பால் சார்த்தர் எழுதிய உலகப் புகழ்பெற்ற சுவர். (Jean என்ற ஃப்ரெஞ்ச் வார்த்தைக்கு சரியான தமிழ் உச்சரிப்பு எதுவும் இல்லை. கிட்டத்தட்ட ‘ஷ’வுக்கு அருகில் வருமே தவிர நிச்சயம் ழ கிடையாது. Jean-ஐ ழான் என்று எழுதுவது மிகப் பெரிய பிழை. அதனால், ஜான் என்று எழுதுவதே தேவலாம்.) இந்தக் கதையை எண்பதுகளில் பெங்களூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த படிகள் என்ற இதழில் மொழிபெயர்த்தேன். வெளிவந்த ஆண்டு 1982. அப்போது என் வயது 28. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் மொழிபெயர்த்த அந்தச் சிறுகதை இப்போதுதான் முதல்முதலாக புத்தகமாக வெளிவருகிறது. அதுவும் விமலாதித்த மாமல்லனின் புண்ணியத்தில். ஒருநாள் அவர் எனக்கு ஃபோன் செய்து “படிகளில் வெளிவந்த சுவர் என்ற கதையை நீதானே மொழிபெயர்த்தாய்?” என்று கேட்டார். இல்லவே இல்லை என்று சொல்லி விட்டேன். ஏனென்றால், எனக்கு நினைவில் இருந்ததெல்லாம் சார்த்தரின் குறுநாவலான Intimacyதான். அந்த நாவலைத்தான் மொழிபெயர்த்து படிகள் குழுவினரே படிகளுக்குப் பிறகு நடத்திய இங்கே இன்று என்ற மாதப் பத்திரிகையில் தொடராக எழுதினேன். படிகள் மிகவும் ஆழ்ந்து படிக்க வேண்டிய ஆய்வுப் பத்திரிகை. ஆனால் இங்கே இன்று ஒரு middle magazine. அதே காலகட்டத்தில் க்ரியா ராமகிருஷ்ணனும் இனி என்ற மிடில் மேகஸினைக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அது எஸ்.வி. ராஜதுரையின் ஆசிரியத்துவத்தில் வந்தது. இனி கொஞ்சம் ஆசாரமான பத்திரிகை. சுந்தர ராமசாமி பள்ளி. இங்கே இன்று பின்நவீனத்துவவாதிகள் நடத்தியது. இங்கே இன்று வந்த போது நான் பாண்டிச்சேரியில் இருந்தேன். அப்போது நண்பர் ரவிக்குமாரின் சைக்கிளில் இங்கே இன்று பிரதிகளின் மூட்டைகளை வைத்துக் கொண்டு தெருத்தெருவாகப் போய் பேப்பர் கடைகளில் இங்கே இன்றுவைத் தொங்க விடுவோம். ஒரு கடைக்கு ஐந்து பிரதி. ஒரு மாதம் முடிந்து அடுத்த பிரதி சூடாக பெங்களூரிலிருந்து எங்களுக்குக் கிடைத்ததும் அந்த மூட்டையைத் தூக்கிக் கொண்டு போய் ஒவ்வொரு கடையாகப் போய் ஏற்கனவே தொங்கிக் கொண்டிருக்கும் மண்ணும் தூசியும் படிந்த இங்கே இன்றுவை எடுத்துக் கொண்டு புதிய இதழ்களை மாட்டிவிட்டு வருவோம். கடைக்காரர் எங்களை ஒருமாதிரியாகப் பார்ப்பார். ஆமாம், ஒரு பிரதி கூட விற்காத பத்திரிகைக்கு இத்தனை தீவிரத் தொண்டர்கள் என்றால் அவருக்கு ஆச்சரியமாக இராதா? மாமல்லன் பேசியபோது எனக்கு அந்த இங்கே இன்றுதான் ஞாபகம் இருந்தது. ஆனால் மாமல்லன் விடவில்லை. யோவ் போய்யா, நான் சுகுமாரனிடம் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு, 1982-ஆம் ஆண்டு படிகள் 13-ஆவது இதழில் நான் மொழிபெயர்த்த சுவர் கதையின் புகைப்பட நகலை எனக்கு அனுப்பி வைத்தார். அப்புறம்தான் நான் மொழிபெயர்த்த கதையே எனக்கு ஞாபகம் வந்தது.

அந்தக் கதையும் இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொகுதி பற்றி ஒரு விஷயம். இந்த நூலை நீங்கள் வாசிக்கும் போது இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்றே தோன்றாது. தமிழில் எழுதப்பட்டது போலவே இருக்கும். மொழிபெயர்ப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு முன்மாதிரி நூல் என்று சொல்லலாம்.

எனவே, உங்களிடம் ஏற்கனவே ஊரின் மிக அழகான பெண் தொகுதி இருந்தாலும் இதை ஜான் பால் சார்த்தரின் சுவர் கதைக்காக மீண்டும் ஒருமுறை வாங்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். வெளியீடு: வழக்கம் போல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங். அவர்களின் முகவரி:

இது போக, இன்று புத்தாண்டு என்றே தெரியாமல் செய்து கொண்டிருந்த வேலை என்னவென்றால், சுவர் கதையை நேற்றிலிருந்து எடிட் செய்து கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட மறு மொழிபெயர்ப்பு மாதிரிதான். மேலும் இன்று காலை கடும் மழை என்பதால் நடைப் பயிற்சிக்கும் செல்லாததால் இன்று நாள் கிழமை தெரியாமல் வேலை செய்து கொண்டிருந்தேன்.

இப்போது மெயில் பார்த்த போது இப்படி ஒரு மெயில்:

சார் எனக்கு Monthly 10k salary so two monthsku onehundrednu சந்தா Anupalanu iruken k va sir, continuousa anupa mudyathu tidirnu edirpara selavu vantha anupa mudyadhu so ungaluku ok va sir

முத்துக்குமார்

டியர் முத்துக்குமார்,

எழுத்தாளனின் தனிமை மிகவும் அலாதியானது. நேற்று இரவு ஒன்பதரை மணிக்கே உறங்கப் போய் விட்டேன். காலை நான்கு மணிக்கு எழுந்து தியானம் செய்து விட்டு அந்த க்ஷணத்திலிருந்து இதோ இந்த ஐந்து மணி வரை சுவர் கதையில் திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன். புத்தாண்டு என்பதே மதியம் போல்தான் தெரிந்தது. புத்தாண்டு என்று தெரிந்த பிறகு தனிமை கூடி விட்டது.

ஆனாலும் உங்கள் கடிதம் படித்து இன்னும் நூறு ஆண்டுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் பீறிடுகிறது. நீங்கள் பணம் அனுப்ப வேண்டாம் முத்துக்குமார். நீங்கள் எந்த ஊர், என்ன வேலை என்று எதுவுமே தெரியாது. ஆனால் ஒரு விஷயம் எனக்கு சந்தோஷம் தருகிறது. பத்தாயிரம் ரூபாய் ஊதியம் வாங்கும் உங்களால் இணையத்தில் என் எழுத்தைப் படிக்க முடிவதே எனக்குப் போதும். அதுவே நீங்கள் எனக்குக் கொடுக்கும் தட்சிணை. தொடர்ந்து படியுங்கள். உங்களுக்கு எல்லா வளமும் உண்டாக இன்றைய தினம் இறையருளைப் பிரார்த்திக்கிறேன்.

சாரு