சென்னை புத்தக விழா – 1

ராஸ லீலா கலெக்டிபிள் தயாராகி விட்டது. அதை புத்தக விழாவில் என்னிடம் வாங்கிக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்யலாம். மற்றவர்களுக்கு என் கையெழுத்துடன் கொரியரில் அனுப்பி வைக்கப்படும். charu.nivedita.india@gmail.com

2. புத்தக விழாவுக்கு தினமும் வருவேன். சென்ற ஆண்டைப் போல் மதியம் மூன்று மணிக்கே வந்து வெட்டியாக மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருக்க விருப்பம் இல்லாததால் தினமும் மாலை ஐந்து மணிக்கே வரலாம் என்று இருக்கிறேன். எனவே என்னைச் சந்திக்க நினைப்பவர்கள் மாலை ஐந்து மணிக்கு மேல் வந்தால் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வந்து விடுங்கள். அங்கேதான் இருப்பேன்.

3. நூற்றுக்குத் தொண்ணூறு பேர் அறுத்துக் குவிக்கிறார்கள். தங்களைப் பற்றியே பேசிக் கொல்லுகிறார்கள். எதாவது கொலை கிலை செய்திருந்தாலாவது சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருக்கலாம். அவர்கள் சொல்லும் கதையோ படு மொக்கையாக உள்ளது. ஒட்டு மொத்த சமூகமே மெண்டலாகி விட்டதோ என்ற அளவுக்கு ஐயம் எழுகிறது. அந்த அளவுக்கு மொக்கை போட்டு வெளுத்து வாங்குகிறார்கள். அரசியல்வாதிகளுக்கு Z category security இருப்பது போல் இம்மாதிரி மொக்கைகளிடமிருந்து தப்பிக்க நானும் ஒரு பாதுகாப்பு வளையம் வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

4. டயரி, காலண்டர், டிக்‌ஷனரி, வெத்துப் பேப்பர், மற்றவர்கள் எழுதிய புத்தகங்கள் போன்றவற்றில் நிச்சயம் கையெழுத்துப் போட மாட்டேன். அதிலும் பொன்னியின் செல்வனிலும் சுஜாதா புத்தகங்களிலும் நிச்சயம் போட மாட்டேன். எல்லாரும் பொன்னியின் செல்வனை அள்ளிக் கொண்டு போகிறார்கள்.

5. உயரமாக இருப்பவர்கள் நான் கையெழுத்துப் போடும் நேரத்தில் பணிவாகக் குனிய வேண்டாம். நிமிர்ந்தே நிற்கலாம். எந்தப் பிரச்சினையும் இல்லை. அவ்வளவு நேரம் ஒருவரைக் குனிய வைப்பது எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது. நிமிர்ந்தே நில்லுங்கள்.

6. முடிந்தால் எலந்தை வடை வாங்கி வாருங்கள். எனக்கு ரொம்பப் பிடிக்கும்.