நேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்

ஜீனியஸ் என்று நான் மதிக்கக் கூடியவர்களை வெகு அரிதாகவே சந்தித்திருக்கிறேன்.  எழுத்து உலகில் தேவதச்சனை சந்தேகமில்லாமல் ஒரு ஜீனியஸ் என்று சொல்லலாம்.  அந்தக் காலத்து சாக்ரடீஸைப் போல அவரைச் சுற்றி எப்போதும் பத்து இளைஞர்கள் குழுமியிருப்பார்கள்.  ஜீனியஸ்களின் ஒரு முக்கிய அடையாளம், நல்ல உரையாடல்.  தேவதச்சன் குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் பேசுவார்.  பேச்சு என்றால் மேடைப் பேச்சு அல்ல; உரையாடல்.  அதிக பட்சம், நாள் கணக்கில்.  தேவதச்சனுக்கு அடுத்தபடியாக நான் பார்த்த ஜீனியஸ் நேசமித்ரன்.  தேவதச்சனுக்கும் நேசமித்ரனுக்கும் உள்ள ஒரு வித்தியாசம், நேசமித்ரன் தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்.  அவருடைய நண்பர்களுக்கே அவரைப் பற்றித் தெரியுமா என்று தெரியவில்லை.  வயதில் இளையவர் வேறு.  தேவதச்சனைப் போலவே பல மணி நேரங்கள் இடைவெளியே இல்லாமல் உரையாடக் கூடியவர்.  அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.  கோவையில் நடந்த கண்ணதாசன் கழகப் பரிசளிப்பு விழாவிலேயே அவரைத்தான் முதலில் என்னைப் பற்றிப் பேசுவதற்காக அழைத்தேன்.  அவர் வெளிநாட்டில் இருந்ததால் அது முடியாமல் போயிற்று.  ஆனால் நேற்று தற்செயலாக அவரை புத்தக விழாவில் பார்த்ததும் எழுத்தாளர் முற்றத்தில் பேசச் சொல்லி விட்டேன்.  வழக்கம்போல் மறுத்தார்.  அவ்வளவு பெரிய காரியத்தையெல்லாம் என்னால் செய்ய இயலுமா?  பிறகு கண்ணாடியைக் காண்பித்ததும் ஒப்புக் கொண்டார்.  அது என்ன கண்ணாடி?  WWF நிகழ்ச்சிகளில் காண்பிப்பார்களே அந்தக் கண்ணாடி. 

இன்று மாலை ஏழு அளவில் சென்னை புத்தக விழா வளாகத்தில் உள்ள எழுத்தாளர் முற்றம் அரங்கில் நேசமித்ரன் என் எழுத்துலகம் பற்றிப் பேச இருக்கிறார்.  நானும் பேசுவேன்.  உங்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறேன்.