கொரோனா சிந்தனைகள் – 2

அஞ்சு மணிக்கு நாமெல்லாம் கை தட்டணும் என்று மோடி சொன்னாரோ?  அதனால் கை பலரும் கை தட்டியிருப்பார்கள்.  நான் தட்டவில்லை.  ஏனென்றால், இந்தியா பைத்தியக்காரர்களின் கூடாரமாக விளங்குகிறது.  வெளியே வராதீர்கள் என்று சொல்லியும் ஒரு நிமிடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் வீதம் போகின்றன.  செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரம் பயணிகள் ரயில்கள் ரத்தானதால் தங்க இடமின்றி தங்கியிருக்கிறார்கள்.  அவர்களுக்கு ஒரு சேவை நிறுவனம் உணவு வழங்குகிறது.  இதெல்லாம் மூளை இருப்பவர்கள் செய்கின்ற காரியம்தானா?  ஒருத்தருக்கு ஒருத்தர் நாலஞ்சு அடி தள்ளி இருக்க வேண்டும்; கூட்டம் கூடக் கூடாது என்று சொல்லி சினிமா தியெட்டர், மால் எல்லாவற்றையும் மூடி வைத்திருந்தாலும் ஊருக்குப் போகிறேன் பேர்வழி என்று செண்ட்ரலில் கூடி விட்டார்கள்.  1918 – இப்போது நூறு ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஃப்ளூ ஜுரத்தில் இந்தியாவில் 2 கோடி பேர் இறந்தார்கள்.  அப்போதைய இந்தியாவின் ஜனத்தொகை என்ன தெரியுமா?  25 கோடி.  இன்றைய நிலையில் கரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் ஆடிக் கொண்டிருந்தால் இந்த மரண எண்ணிக்கை எத்தனை ஆகும் தெரியுமா? அப்படியே நான்கால் பெருக்குங்கள்.  தமிழகத்தின் மொத்த ஜனத்தொகையும் வரும்.  நினைக்கவே அலுப்பாக இருக்கிறது.

நேற்று கூட திருவனந்தபுரத்தில் ஒரு கோவில் திருவிழாவில் ஆயிரக் கணக்கான பேர் கூடியிருக்கிறார்கள்.  இந்த நிலையில் நான் எப்படிக் கை தட்டுவது?

உலகம் முழுவதும் செல்ஃப் குவாரண்டைன் பற்றி ஒரே பேச்சாகக் கிடக்கிறது.  எல்லோரும் – உழைக்கும் வர்க்கத்தினரைத் தவிர்த்து – வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள்.  அவர்கள் வாழ்க்கையில் அது புதிது.  ஆனால் என் தொழிலே அதுதானே?  காலையில் ஒரு மணி நேரம் வாக்கிங் சென்று வருவதைத் தவிர்த்து நான் வெளியில் செல்வதே இல்லை.  எப்போதும் எழுத்தும் படிப்பும்தான்.  வாரம் ஒருமுறை வெளியே செல்வேன்.  இப்போது அது தடை பட்டிருக்கிறது.  அவ்வளவுதான்.  என் வேலை அப்படிப்பட்டது.  என் மனைவி அவந்திகா வெளியில் செல்வதே இல்லை.  26 வருட திருமண வாழ்வில் நாங்கள் எங்குமே சேர்ந்து வெளியூர் சென்றது இல்லை.  இரண்டு மூன்று முறை சேர்ந்து சினிமாவுக்குச் சென்றிருக்கிறோம்.  கடைசியாகப் பார்த்த படம் ரஜினியின் பாபா.  அவளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லப் பிடிக்காது. அவளுடைய அம்மா வீட்டுக்குக் கூட போனால் ரெண்டு மணி நேரத்தில் திரும்பி விடுவாள்.  அவந்திகா இல்லாமல் என் வாழ்வில் நான் ஒருநாள் கூட இருந்தது இல்லை.  ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ஆன்மீக செமினாருக்காக ஒன்றரை நாள் பெங்களூர் செல்வாள்.  சனிக்கிழமை காலை போய் விட்டு, ஞாயிறு இரவு பதினோரு மணிக்குத் திரும்பி விடுவாள்.  அப்போதும் ஒரு பதினெட்டு வேலை வைத்து விட்டுப் போவாள் என்பதால் அவள் வெளியில் போயிருப்பதே தெரியாது.  (”பணிப்பெண்ணை எட்டு மணிக்கே வரச் சொல்லியிருக்கிறேன்.  நீ ஒரு ரெண்டு நாள் வாக்கிங் போக வேண்டாம்.” ”ஏம்மா?” என்று கேட்டால் ஏதாவது ரொம்ப ரொம்ப முக்கியமான காரணம் சொல்வாள்.  சரி, மதியமாவது எங்காவது வெளியே போகலாம் என்றால், பாலாஜி எனக்காக புக்ஸ் கொண்டு வருவார், வாங்கி வை. 

இதெல்லாம் அராஜகமாத் தெரிலையா உனக்கு?”

ஏம்ப்பா, வருஷத்துல முக்காவாசி நாளு துபாய், சிங்கப்பூர், அமெரிக்கானு போய்ட்றே.  நான் தனியாவேதான் கெடக்கிறேன்.  ஒரு ஒன்றரை நாள் எனக்காக வீட்டைப் பார்த்துக்க மாட்டியா?

ஐயோ, நான் அமெரிக்கா போனதில்லையே?

அதாம்ப்பா, என்னமோ சிலியோ எலியோ, அது அமெரிக்கா இல்லியா?

அதுசரி, இந்த ஜென்ரல் நாலெட்ஜ்ல எல்லாம் குறைச்சலே இல்லை…

அவள் வேலையை விட்டு பத்து ஆண்டுகள் ஆகின்றன என்று நினைக்கிறேன்.  அப்போது வேலைக்குப் போவாள்.  வேலையை விட்ட பிறகு இந்தப் பத்து ஆண்டுகளாக அவள் எங்கேயும் போனதில்லை.  வெளியே போனால் பிடிக்காத ஜென்மம்.  வீடுதான் சொர்க்கம்.  ஐந்து நிமிடம் நடந்தால் மெரினா.  சீச்சி.  எங்க எவம் போவான்?  ஒரே கூட்டம்.  ஒரே குப்பை. 

கை தட்றதாவது, கால் தட்றதாவது…