இனிதே ஆகுக…

கடந்த ஆண்டு எனக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுப்பதாக இருந்தது.  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டேன்.  அதில் கலந்து கொண்டதால்தான் லண்டன், மற்றும் இந்தியா முழுவதும் வெளிவரும் deccan chronicle, asian age பத்திரிகைகளில் column எழுத வாய்ப்புக் கிடைத்தது.  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டது அகில இந்தியாவிலும் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.   

கடந்த ஆண்டுதான் Diabolically Yours என்ற பேய்க்கதை எழுதினேன்.  Joyce Carol Oates போன்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதும் Gothic Story Collection-இல் அந்தக் கதை இடம் பெறுகிறது.  தொகுப்பை வெளியிடுவது ஒரு பிரிட்டிஷ் பதிப்பகம்.   இது எனக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.  இந்தத் தொகுப்பின் எடிட்டரிடம் (அவர் ஒரு அமெரிக்கர்) ”என்னைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்ட போது “ஸீரோ டிகிரி” என்று ஒற்றை வரியில் பதில் சொன்னார்.  Danel Olson என்பது அவர் பெயர்.  அவர் தொகுத்த Exotic Gothic 4 பற்றிய விபரம் இந்த இணைப்பில் உள்ளது:

http://en.wikipedia.org/wiki/Exotic_Gothic

என் கதை Exotic Gothic 5-ஆவது தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.  அந்தத் தொகுப்பு ஃபெப்ருவரி 13 அன்று வெளிவரும். 

ஹைதராபாதில் வசிக்கும் ஜெயேஷ் எக்ஸைல் மற்றும் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்தார்.  இந்தப் பணியை அவர் ஆறே மாதங்களில் செய்து முடித்தார்.  இந்த இரண்டு நாவல்களையும் பிரபலமான மலையாள பதிப்பகமான ஸாஹித்ய ப்ரவர்த்தக கோவாப்பரேடிவ் ஸொஸைட்டி வெளியிடுகிறது.  எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவல் கலாகௌமுதியில் வாராவாரம் தொடராக வெளிவருகிறது. 

அமேஸான் kindle இல் Morgue Keeper ஆங்கில சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது இன்னொரு பெரிய விஷயம்.  ஷிவா, ராஜேஷ், ஜெயக்குமார், டாக்டர் ராமானுஜம், ஸாம், கண்ணன், காயத்ரி என்ற மொழிபெயர்ப்பாளர்கள்/நண்பர்கள் கிடைத்தது என் பாக்கியம்.  என் மொழிபெயர்ப்பாளர்களை (ஷிவா தவிர) ஓரான் பாமுக் எழுதிய Snow என்ற நாவலை உடனடியாகப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஷிவா தவிர என்று சொன்னதன் காரணம், அவர் ஒரு கால அட்டவணை போட்டு எக்ஸைலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.  மார்ச்சில் மொழிபெயர்ப்பு முடியும்.  தேகம் மொழிபெயர்ப்பு முடிந்து விட்டது.  எடிட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.  நிறைய வேலை வாங்குகிறது.  அதற்காகத்தான் Snow படிக்கச் சொன்னேன்.  ஸ்னோ மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு போலவே தெரியவில்லை.  ஆங்கிலத்திலேயே எழுதியது போல் உள்ளது.  இதுவரை படிக்காதவர்கள் உடனடியாகப் படிக்கவும். 

சர்வதேச அளவில் பிரபலமான ஆங்கிலப் பதிப்பாளர்  எக்ஸைலையும் தேகத்தையும் வெளியிட என்னைக் கேட்டிருக்கிறார்.  இது பலருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம்.  இல்லாவிட்டால் literary agent ஐப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.  எழுத்தாளர்களுக்கு லிடரரி ஏஜெண்ட் கிடைப்பது ஒரு நல்ல மனைவி கிடைப்பது போல என்று சொல்வார்கள்.  லிடரரி ஏஜண்ட் கையில்தான் எழுத்தாளனின் எதிர்காலமே அடங்கியுள்ளது.  அருந்ததி ராய் பெரிய ஆளாக ஆனது அவரது எழுத்தால் அல்ல; அவருக்கு மிக நல்ல லிடரரி ஏஜண்ட் கிடைத்தார்.  எனக்கு அந்தப் பிரச்சினையே இல்லாமல் பதிப்பகமே நேரடியாக அணுகியது கடவுளின் அருள் மட்டுமே.  அந்த அருளுக்குத் தகுதியானவனாக என்னை ஆக்கிக் கொள்வதே ஒவ்வொரு கணமும் நான் செய்யும் வேலை. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிஸம்பர் 31 அன்று ஹைதராபாதில் இருக்கிறேன்.  அராத்து வீடு. கொண்டாட்டங்கள் முடிந்து ஜனவரி முதல் தேதி தாமதமாக எழுந்து மெயில் பெட்டியைத் திறக்கிறேன்.  மும்பை சுந்தர் எனக்கு ஒரு மெயில் எழுதியிருந்தார்.  Economic Times பத்திரிகையில் 2000-2010 என்ற பத்தாண்டின் மிகச் சிறந்த மனிதர்கள் என்ற பத்து பேர் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றிருப்பதாக எழுதியிருந்தார் சுந்தர்.  மும்பை எடிஷன் மட்டும் அல்ல; ஆல் இந்தியா எடிஷன்.  ஹைதராபாதில் இகனாமிக் டைம்ஸ் கிடைக்கவில்லை.  அவந்திகாவுக்கு போன் போட்டு வாங்கச் சொன்னேன்.  “அட போ சாரு, உனக்கு இதே வேலையாப் போச்சு; யாராவது உன்னைக் கலாய்த்து இருப்பார்கள்” என்றாள் சர்வ நிச்சயமாக.  சுந்தருக்கு போன் போட்டுக் கேட்டேன்.  “உங்கள் பெயரோடு போட்டோவும் வந்துள்ளது; அந்தப் பத்து பேர் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து இன்னொருவர் பெயரும் இடம் பெற்றுள்ளது” என்றார்.  யார்?  ரஜினிகாந்த்.

அப்புறம் அவந்திகாவிடம் சொல்லி சென்னை எடிஷன் இகனாமிக் டைம்ஸில் சுந்தர் சொன்ன விஷயம் நிச்சயமானது.  இது பட்டியலை வெளியிட்டு அதற்கு அவர்கள் எழுதியிருந்த விளக்கம்தான் பிரமாதமாக இருந்தது.  உண்மைதான்.  உலக அளவிலேயே transgressive fiction எழுதுபவர்கள் ரொம்பக் கம்மி.  அதிலும், அதை சுவாரசியமாக எழுதுவது இரண்டே ஆட்கள் தான்.  மற்றொருவர் பெயர் Cristina Peri Rossi.  உருகுவாய் நாட்டைச் சேர்ந்த மிகப் பிரபலமான எழுத்தாளர்.  இவரது ship of fools என்ற நாவலை உங்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன்.  இவருடைய சிறுகதைகள் ரவிக்குமார் மொழிபெயர்த்திருக்கிறார்.  ஆனால் தமிழ் எழுத்தாளன் இதையெல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டான்.  ”என்னது, சாரு transgressive writer ஆ, ஹெஹ்ஹே?”  என்று கிண்டல் செய்வான்.  (அவனுக்கு ட்ரான்ஸ்கிரஸிவ் ஃபிக்‌ஷன் என்றால் என்னவென்றே தெரியாது என்பது வேறு விஷயம்.) சரி, புரிகிறாற்போல் சொல்லலாம் என்று “கேரளத்தில் நான் ஒரு சினிமா நடிகன் அளவுக்குப் பிரபலம்” என்று சொன்னால் “ஐயோ, கேரளா அப்புடியா கெட்டுப் போச்சு?” என்பான்.  ஏன், நான் நோபல் அவார்டே வாங்கினாலும் “ஓ, நோபல் அவார்ட் இப்போ எல்லாருக்கும் குடுக்குறாங்களா?” என்று கிண்டல் அடிப்பான்.  நூறு பேருக்கு மட்டுமே காலம் காலமாக எழுதி தமிழ் எழுத்தாளன் ஒரு மனநோயாளியைப் போல் ஆகி விட்டான்.  அதனால் அவனைப் பற்றி நான் கவலைப்படக் கூடாது.  சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் தமிழ் எழுத்தாளர்களையெல்லாம் ஒருசேரப் பார்த்த போது ஏதோ பாரதிராஜா படத்தில் வரும் ஹீரோவை பாடல் காட்சியில் பார்ப்பது போல் இருந்தது.  ஒரு காமன்மேனை விட மட்டமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.  கொடுமை.  கொடுமை.  டிவி சீரியல் பார்க்கும் பெண்களின் மனநிலை எப்படி இருக்குமோ அதே மனநிலையைத்தான் அவர்களிடம் நான் கண்டேன்.  (ஒருசிலர் மட்டுமே விதிவிலக்காக இருந்தார்கள்; அவர்கள் அதிகம் பேசவில்லை). 

எல்லாவற்றையும் விட நல்ல விஷயம், வாசகர் வட்டம்.  அவர்கள் ஒவ்வொருவர் பெயரையும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.  என்றாலும் அது சாத்தியம் அல்ல என்பதால் என்னை க்ஷமிக்கவும்.  வாசகர் வட்டத்தில் இன்று ஒரு கடிதம் படித்தேன்.  திருப்பூர் ப்ரவீண் குமார் எழுதியது.

”2012 எனக்குமிகமுக்கியமானவருடம்..சாருவுடன்மிகநெருக்கமானஉறவுஇந்தவருடத்தில்தான்கிட்டியது .”நரகத்தில்இருந்துஒருகுரல்“,கனவுகளின்நடனம்“,shakespeareஇன்மின்னஞ்சல்முகவரிஎனஆறுஏழுபுத்தகங்கள்படிக்கும்பாக்கியம்பெற்றேன் .

. என்னைசெதுக்கியஎழுநாட்கள்(ஆனந்தவிகடன்)இல்குரூப்டான்சர்களைபற்றிஎழுதிஇருந்தாரேஅப்போதுசரண்டர்ஆனவன்தான் …..சாருயூஆர்கிரேட்

.சாருஎன்வாழ்க்கையில்மிகப்பெரியமாற்றத்தைஏற்படுத்திவிட்டார் .
… whenever i write about charu,my mind becomes excited,caught in a confused, ecstasic,schizoid
state,..i try to bring up everyhing in words but i fail..i fail ..i fail..
charu writes as bird flies,i want to be the shadow of the bird. nothing more than this

#சாருவுடன்நெருக்கம்கிடைத்ததால்இவ்வருடத்தைமறக்கவேமாட்டேன்.”

இப்படிப்பட்ட வாசகர்கள் கிடைத்தது ஒரு பாக்கியம்.  2012-இல் சில முக்கியமான பயணங்களை மேற்கொள்ள முடிந்தது இன்னொரு சந்தோஷம்.  தாய்லாந்திலும் மலேஷியாவிலும் சேர்த்து ஒரு மாதம்.  இந்த ஆண்டு பயணத்திலேயே ஆரம்பித்துள்ளது.  விபரம் பிறகு. 

 

Comments are closed.