பூச்சி – 41

கம்யு ஒரு அல்ஜீரியனாகவே இருந்தாலும், தன் வாழ்நாள் முழுதும் மக்ரிப் அரபிகளையே ஆதரித்தாலும் அல்ஜீரியர்கள் கம்யூவைத் தங்கள் நினைவிலிருந்து துடைத்து அழித்து விட்டதற்குக் காரணத்தை உங்களில் யாராவது என்னுடைய சார்த்தர் பற்றிய கட்டுரைகளை ஞாபகத்தில் வைத்திருந்தால் இப்போது சொல்லி விடலாம்.  சார்த்தருக்கு அல்ஜீரியர்களை நேரடியாகத் தெரியாது.  அவர் ஒரு தத்துவவாதி.  அதிலும் அவரது தத்துவத்தின் மூலக்கூறுகளை அவர் ஜெர்மன் தத்துவவாதிகளிடமிருந்து பெற்றிருந்தார்.  ஜெர்மன் தத்துவவாதிகளோ – நீட்ஷேவையும் மார்க்ஸையும் தவிர்த்து – நேரடி வாழ்விலிருந்து பெரிதும் அந்நியமானவர்கள்.   இப்படிப்பட்ட சூழலில் ஃப்ரான்ஸ் ஃபானனின் Wretched of the Earth என்ற நூல்தான் மூன்றாம் உலக நாடுகளையும் அவைகளின் பிரச்சினைகளையும் நோக்கி என்னைத் திருப்பியது என்று கூறியிருக்கிறார் சார்த்தர்.   

இப்படி அல்ஜீரியா பற்றிய நேரடி அனுபவம் இல்லாத, ஒரு பூர்ஷ்வா புத்திஜீவியான சார்த்தர் அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின்போது அல்ஜீரியாவை ஆதரித்தார்.  இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை நடக்கும்போது ஒரு இந்திய எழுத்தாளன் பாகிஸ்தானை ஆதரிப்பதைப் போன்றது.  உலகப் பாட்டாளி வர்க்கமே ஒன்று கூடுங்கள் என்று அறைகூவல் விடுக்கும், தேசங்களைக் கடந்த கம்யூனிஸ்ட் கட்சியே ஃப்ரான்ஸில் அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை.  மிகுந்த தேசப்பற்றுடன் ஃப்ரான்ஸையே ஆதரித்தது.  அப்போது ஒரு அல்ஜீரியனான கம்யு அல்ஜீரியா ஃப்ரான்ஸின் பகுதியாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினார்.  இதுதான் அல்ஜீரியர்கள் ஆல்பெர் கம்யூவை விரும்பாததற்குக் காரணம்.  அவர்கள் அவரை ஒரு காலனியாதிக்க ஆதரவாளர் என்றே கருதினர்.  கம்யூவும் தன் மரணம் வரை அல்ஜீரியா பற்றிய தன் கருத்தை மாற்றிக் கொள்ளவும் இல்லை.  ஆனாலும், கம்யூவின் எழுத்தில் அல்ஜீரியா ஒரு தீராத ஏக்கமாக இருந்து கொண்டே இருந்தது.

இந்தக் கொரோனா மட்டும் இருந்திராவிட்டால் என் பயண அட்டவணையில் இருந்த இடங்களில் முக்கியமானது அல்ஜீரியா.  ஆல்பெர் கம்யு த்ரேயான் (Drean) என்ற ஊரில் பிறந்தார்.  அல்ஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கடற்கரை நகரம் அது.  கம்யு காலத்தில் இதன் பெயர் மோந்தோவி.  இங்கிருந்து துனீஷியா 30 மைல் தூரம்.  ஃப்ரான்ஸின் பொர்தியூ (Bordeaux) பகுதியிலிருந்து அல்ஜீரியாவுக்குக் குடி பெயர்ந்த, திராட்சைத் தோட்டக் கூலித் தொழிலாளி ஒருவரின் மூன்றாவது தலைமுறை வாரிசுதான் கம்யு.  கம்யு த்ரேயானில் பிறந்தார் என்றாலும் அல்ஜியர்ஸில்தான் படித்தது வளர்ந்தது எல்லாம்.  அவருடைய அந்நியனில் வரும் மெஹ்ர்சோவும் (Meursault) அல்ஜியர்ஸைச் சேர்ந்தவன்தான்.  அந்நியனை இத்தாலிய இயக்குனர் லூச்சினோ விஸ்கோந்த்தி அதே பெயரில் (The Stranger – 1967) திரைப்படமாக எடுத்திருக்கிறார்.  இந்தப் படத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், அல்ஜியர்ஸ் நகரில் கம்யு வாழ்ந்த இடங்களிலேயே படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கம்யு அவர் காலத்திய ஐரோப்பிய எழுத்தாளர்களைப் போல் அல்லாமல் மிகக் கொடிய வறுமையில் வளர்ந்தார்.  அவர் தாய்க்கு எழுதப் படிக்கத் தெரியாது.  பல வகையிலும் கம்யு துரதிர்ஷ்டத்தோடேயே வாழ்ந்திருக்கிறார்.  அவர் தந்தை முதல் உலகப் போரில் தலையில் வெடிகுண்டுச் சிதறல் பட்டு இறந்து போனார்.  தாய் எழுதப் படிக்கத் தெரியாதவர் மட்டும் அல்ல.  காதும் முழுமையாகவே கேட்காது.  அம்மாவுக்குத் தெரிந்ததே மொத்தம் 400 வார்த்தைதான் இருக்கும் என்கிறார் கம்யு.  (கம்யு பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம், Albert Camus: A Life, By  Olivier Todd.)   கம்யூவின் தாய் வீட்டு வேலை செய்துதான் கம்யூவைப் படிக்க வைத்திருக்கிறார்.  பின்னாளில் கம்யு ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியே அதிகம் கவனம் கொண்டதற்கு இதுதான் காரணம். 

(என் வாசகர்களுக்கு இன்னொரு பரீட்சை:  கலகம் காதல் இசை நூலில் ராய் (Rai) இசை பற்றி எழுதும் போது கபீல் (Kabyle) என்ற பகுதி பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.  அல்ஜீரியாவின் வடகிழக்குப் பகுதி கபீல்.  அந்தப் பகுதியின் மொழி தமாஸீத்.  ஞாபகம் இருக்கிறதா?)

ஆல்பெர் கம்யூவுக்கும் ஜான் ஜெனேவுக்குமான வித்தியாசத்தை நீங்கள் உணர்கிறீர்களா?  கம்யூவின் மூதாதையர் ஃப்ரான்ஸிலிருந்து அல்ஜீரியாவுக்கு வந்து குடியேறிய கூலித் தொழிலாளர்கள்.  கம்யூவினால் தன் ஐரோப்பிய அடையாளத்தை விட முடியவில்லை.  அதே சமயம் தான் பிறந்து வளர்ந்த மக்ரீப் அரபிகளிடமிருந்தும் உறவை அறுத்துக் கொள்ள முடியவில்லை.  தன் வாழ்நாள் முழுதும் ஒரு அந்நியனாகவே வாழ்ந்தவர் கம்யு. 

சுதந்திரத்துக்குப் பிறகான அல்ஜீரிய அரசு – அல்ஜீரிய சுதந்திரப் போராட்ட வீரர்களால் நிரம்பியிருந்த அரசு அது – கம்யூவை மன்னிக்கவே தயாராக இல்லை.  அவர் பற்றிய எந்தக் குறிப்பும் எந்தப் பாடப்புத்தகத்திலும் இல்லை.  முழுக்க முழுக்க அவரை ஒரு ஐரோப்பியனாகவே ஒதுக்கி வைத்தார்கள்.  ஆனால் ஜெனே, ஃப்ரான்ஸில் பிறந்து வளர்ந்த ‘சுத்தமான’ ஃப்ரெஞ்சுக்காரராக இருந்தாலும், ஐரோப்பியக் கலாச்சாரத்தைத் தன் எலும்பின் மஜ்ஜையிலிருந்து வெறுத்தார்.  தன்னை ஒரு கிரிமினலாக நடத்திய ஐரோப்பாவை அவர் ஒருபோதும் மன்னிக்கத் தயாராக இல்லை.  இத்தனைக்கும் அவர் செய்த குற்றம் சிறு திருட்டுகள் மற்றும் ஓரினச் சேர்க்கை.  அப்போது ஃப்ரான்ஸில் அது மிகப் பெரிய குற்றம்.  அந்தக் காரணத்துக்காகவே ஆஸ்கர் ஒயில்டைக் கொன்றே போட்டது ஐரோப்பிய சமூகம்.  கிட்டத்தட்ட ஜெனேவுக்குக் கிடைத்ததும் அந்த மாதிரி தண்டனைதான்.  ஒயில்டுக்கும் ஒன்றும் மரண தண்டனை கொடுக்கவில்லை.  காற்றாலைகளை இயக்கும்படியான தண்டனை.  நம்மூரில் செக்கு இழுப்பது மாதிரி.  ஏழெட்டு மணி நேரம் இழுக்க வேண்டும்.  ஒரே ஆண்டில் செத்துப் போனார் ஒயில்ட்.  ஜெனேவை அவரது குற்றங்களுக்காக ஏதோ நூறு ஆண்டுகளோ என்னவோ தண்டனை அளித்தது ஃப்ரெஞ்ச் நீதிமன்றம்.  அப்புறம் பிக்காஸோ, சார்த்தர் போன்ற புத்திஜீவிகள்தான் அதிபருக்கு எழுதி ஜெனேவை விடுவித்தார்கள்.  அதற்காகவெல்லாம் அவர் நன்றி பாராட்டவில்லை.  இந்த நாட்டில் மனிதன் இருப்பானா என்று மொராக்கோ போய் விட்டார்.  போனது மட்டும் அல்ல; என் உடம்பு கூட ஃப்ரெஞ்ச் மண்ணில் புதையக் கூடாது.  என்னை மொராக்கோவில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார்.  ஜெனேயின் கல்லறை மொராக்கோவின் லராச்சே என்ற ஊரில் உள்ளது.  அதுவும் என் பயணப் பட்டியலில் உள்ள இடம்.

Grave of Jean Genet in Larache, Morocco. Photo: Stephen Barber ...

லராச்சே, மொராக்கோ.  ஜெனேயின் கல்லறை.

இப்படி என் பிரேதம் கூட ஃப்ரான்ஸில் இருக்கக் கூடாது என்று சொன்ன ஜெனேவுக்கும், அல்ஜீரியா ஃப்ரான்ஸுடனேயே இருக்க வேண்டும் என்று வாழ்நாள் பூராவும் சொல்லிக் கொண்டிருந்த கம்யூவுக்கும் வித்தியாசம் புரிகிறதா?  ஃப்ரான்ஸ் கிறித்தவம்.  ஃப்ரான்ஸ் ஐரோப்பா.  ஃப்ரான்ஸ் வெள்ளை.  ஃப்ரான்ஸ் ஃப்ரெஞ்ச். அல்ஜீரியா இஸ்லாம்.  அல்ஜீரியா ஆஃப்ரிக்கா. அல்ஜீரியா கறுப்பு.  அல்ஜீரியா அரபி.  ஏதாவது ஒரு இம்மியாவது சம்பந்தம் இருக்கிறதா?  மேலும், ஃப்ரான்ஸ் அல்ஜீரியாவில் செய்தது பச்சையான ஏகாதிபத்தியம்.  காலனி ஆதிக்கம்.  எப்படி அல்ஜீரியா ஃப்ரான்ஸின் பகுதியாக வாழ முடியும்?  ஒரு  அடிமை எஜமானனுடன் எப்படி கைகோர்த்து வாழ முடியும்?  கம்யூவுக்கு ஒரு இஸ்லாமியனின் உணர்வு புரியவில்லை.  இங்கே இன்னொன்றும் ஞாபகம் வருகிறது.  ஜெனே மொராக்கோவில் மட்டும் இல்லை.  பாலஸ்தீனம் சென்று பாலஸ்தீனிய கெரில்லா போராளிகளின் பதுங்கு குழிகளிலும் வாழ்ந்தார்.  யாஸர் அராஃபத்தின் நண்பராக விளங்கினார்.  “நீங்கள் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் ஆயிற்றே?   இஸ்லாம் அதைக் கடுமையாக விமர்சனம் செய்யும் மதம் ஆயிற்றே?” என்று அவரிடம் கேட்கப்பட்ட போது – இதே கேள்வி வில்லியம் பர்ரோஸிடமும் கேட்கப்பட்டது, பர்ரோஸ் மொராக்கோவில் வாழ்ந்தார் – இருவரும் சொன்ன பதில் ஒன்றுதான்.  ஐரோப்பா (பர்ரோஸின் விஷயத்தில் அமெரிக்கா) ஓரினச் சேர்க்கையை வன்கலவிக்குச் சமமாகப் பார்த்தது.  ஆயுள் தண்டனையெல்லாம் கொடுத்தது.  ஆனால் மொராக்கோவில் அதற்கு மதரீதியான தடையெல்லாம் இருந்ததே தவிர அது வெறும் ஏட்டளவில்தான்; யாரும் அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை.  ஒரு ஓரினச் சேர்க்கையாளனுக்கு மொராக்கோவின் வாழ்க்கை லகுவாக இருந்தது.  யாரும் அங்கே அவனைக் கிரிமினலாகப் பார்க்கவில்லை.    

சரி, ஒவ்வொரு இடத்தையும் நான் எப்படி என்னோடு இணைத்துக் கொள்கிறேன் என்றால் இப்படியாகத்தான்.  உதாரணமாக, அல்ஜியர்ஸ் நகரில் லா கஸீனோ தெ கோர்னீச் என்று ஒரு பார் இருக்கிறது.  பார் என்றதும் இங்கே இந்திய அர்த்தத்தில் நினைக்கக் கூடாது. 

https://live.staticflickr.com/3145/2807865499_18dd60ba31_b.jpg

La Casino de Corniche

அங்கெல்லாம் – அப்படியென்றால், அல்ஜீரியா, துனீஷியா போன்ற நாடுகளில் பார் என்றால் அங்கே குடும்பம் குடும்பமாக வந்து களியாட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள்.  இளைஞர்களும் இருப்பர்.  லா கஸீனோ போக வேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று.  எதிரே மத்திய தரைக் கடல்.  முழுக்க முழுக்க இசை.  முழுக்க முழுக்க இசை.  ராய் இசை.  ராய் இசை என்றால் என்ன என்று என்னுடைய கலகம் காதல் இசையில் பாருங்கள்.  அல்லது, ஷாப் காலீதின் சில பாடல்களையும் கேட்கலாம்.  கீழே வருவது ஷாபா வார்தாவின் ராய் பாடல்.  இந்தப் பாடலுக்கு யாருமே நடனமாடாமல் கேட்கவே முடியாது.  (ஷாப் என்றால் ராய் பாடகன், ஷாபா என்றால் ராய் பாடகி).  நண்பர்களே,  இப்போது இந்தப் பாடலைக் கேளுங்கள்.  அநேகமாக இதுவரை நீங்கள் கேட்டிராததாக இருக்கலாம். 

தமிழர்களுக்கெல்லாம் இளைய ராஜா எப்படியோ அப்படித்தான் எனக்கு ராய் பாடகர்கள் அத்தனை பேரும்.  அதனால்தான் நான் ஒரு கலாச்சார இஸ்லாமியன் என்கிறேன்.  அடுத்த ஜென்மம் எனக்கு இருந்தால் நான் அல்ஜீரியாவிலோ துனீஷியாவிலோதான் பிறக்க விரும்புகிறேன்.  காரணம், அந்த நிலம்.  அந்தக் கடல்.  அந்த மண்.  அந்தப் பெண்கள்.  அந்த உணவு.  அந்த மணம்.  எல்லாவற்றையும் விட அந்த இசை.  அந்த லா கஸீனோ தெ கொர்னோச்சேவில் கொஞ்சம் வைன் அருந்தி விட்டு ஷாபா வார்தாவின் ராய் பாடல்களுக்கு நடனம் ஆடாமல் சாகக் கூடாது.  இந்தக் கொரோனா முடிந்ததும் முதல் வேலை அதுதான்.  இன்ஷா அல்லாஹ்.  வருகிறீர்களா மனோ, வருகிறீர்களா சீனி? 

இந்த இணைப்பில் ஷாபா வார்தா வந்து கொண்டே இருக்கிறார். கேளுங்கள்.

ஷாப் ஹமீதின் ராய் பாடல்.

ஷாப் பிலாலும் எனக்குப் பிடித்த மற்றொரு ராய் பாடகர்.  ஆனால் ராய் இசைக்கே பிதாமகர் ஷாப் ஹாஸ்னிதான்.  இந்தியாவில் பிரபலமான ஷாப் காலித். 

பின்வருவது ஷாப் பிலால். 

இஸ்லாமிய நாடுகளிலேயே எனக்கு அதிகம் பிடித்தது அல்ஜீரியாதான்.  கடந்த ஒரு ஆண்டாக அங்கே மக்கள் வீதிகளில் வந்து போராடி 20 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருந்த ஊழல் மன்னன் அப்துல் அஸீஸ் பூத்தேஃப்ளிகாவைத் தூக்கி எறிந்து விட்டார்கள்.  (இதே போன்ற போராட்டம்தான் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும், மற்றொரு ஃப்ரெஞ்ச் காலனியாக இருந்த லெபனானிலும் நடந்து வருகிறது.

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai