பூச்சி 45

இன்றைக்கு சீக்கிரமே தூங்கப் போய் விடலாம் என்று நினைத்தேன்.  அந்த நினைப்பில் மண்ணைப் போட்டு விட்டார் பக்கத்துத் தெரு அய்யங்கார்.  இந்த உலகத்திலேயே துரதிர்ஷ்டமான விஷயம் எது என்று நினைக்கிறீர்கள்?  இர்ஃபான் கான், ரிஷி கபூர் மரணங்களைப் பார்த்த போது இந்தக் கொரோனா காலத்தில் இறப்பதுதான் என்று நினைத்தேன்.  கெட்டதிலும் கொஞ்சம் நல்லது என்னவென்றால், நல்ல காலம் அவர்கள் கொரோனாவினால் போகவில்லை.  அப்படியிருந்திருந்தால் முகத்தைக் கூடக் காண்பித்திருக்க மாட்டார்கள்.  என்ன இருந்தாலும் இளவயது மரணம் கொடுமையானதுதான்.  அதை விடக் கொடுமை, இப்படி கொரோனா காலத்தில் மரணம் தழுவுவது.  ஆனால் இதையெல்லாம் விடக் கொடுமையானது ஒன்று உள்ளது என்று கொஞ்சம் ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் தெரிய வந்தது எனக்கு.  இந்த உலகத்திலேயே கொடுமையான விஷயம் அதுதான்.  மரணம் அல்ல.  மரணத்தை விட பல்லாயிரம் மடங்கு கொடுமையானது.  நம் இன்னுயிர் நம்மிடம்தான் இருக்கும்.  ஒழுங்காக சாப்பிடுவோம்.  ஒழுங்காகத் தூங்குவோம்.  பணத்துக்கும் உறவுகளுக்கும் ஒன்றும் கேடு வராது.  ஆனால் உலகமே பார்த்து நம்மைக் கேலி பண்ணிக் கொண்டிருக்கும்.  உலகமே பார்த்து நம்மை நையாண்டி செய்து கொண்டிருக்கும்.  அப்படி ஒன்று நடப்பது கூட நமக்குத் தெரியாது.  ஆங்கிலத்தில் Laughing stock என்பார்களே, அப்படி நாம் ஆவதுதான் மரணத்தை விட, கொரோனா கால மரணத்தை விடக் கொடூரமானது.  நேற்றுதான் எழுதினேன் மக்கு அய்யங்கார்களும் இருக்கிறார்கள் என்று.  அதை இப்படியா இன்றே நிரூபித்துக் காட்டுவது?  எனக்கு இதில் சந்தோஷமே இல்லை.  தலையைச் சுவரில் கொண்டு போய் நங் நங் என்று முட்டிக் கொள்ளலாம் போல் இருக்கிறது.  இப்படியா ஒருத்தர் – உலகமே அறிந்த ஒருத்தர் மற்றவர்களின் கேலிக்கு ஆளாவது?  ஒருத்தர் கூட நீங்கள் எழுதியிருப்பது சுத்தப் பேத்தல் என்று அவரிடம் சொல்லக் கூடாது?  இத்தனைக்கும் இவர் சுஜாதாவுக்கு நண்பராக இருந்திருக்கிறார்.  இப்போது ஜெயமோகனுக்கும் நண்பராக இருக்கிறார்.  சகிக்க முடியவில்லை ஐயா.  உங்கள் பக்கத்தில் நிற்பதற்குக் கூட தகுதியில்லாத தற்குறிகள் எல்லாம் உங்கள் கவிதையைப் போட்டு நக்கல் அடிப்பதைப் பார்க்கும் போது எனக்குக் கூசுகிறது.  மனிதன் காட்டுமிராண்டியாய் இருந்த போது ஆடையில்லாமல் நடமாடினான்.  சரி.  இப்போதும் அப்படியே நடமாட முடியுமா?  செய்தால் பைத்தியம் என்றுதானே சொல்வார்கள்?  அதேபோல் வெண்பாவும் மரபுக் கவிதையும் பழக்கத்தில் இருந்தது ஒரு காலம்.  அதைப் போய் இப்போது எழுதினால் சிரிக்கத்தானே செய்வார்கள்? 

இதோ பாருங்கள் அந்தக் கவிதை.  கவிதையின் மேலே அடையாளப் புகைப்படத்தில் பாரதியார் வேஷம் வேறு.  சகிக்கவில்லை. 

ஊரடங்கும் உயிருக்கு பயந்து  – பிணி

உமக்கடங்காது புரிந்து கொள்வீர்.

தண்ணீர்க்கடங்கா நெருப்பு இது.

நீர், போதாதிதற்கு யாமும் வேண்டும்.

மக்களைக் காக்க மக்களே மருந்து.

மனம் மாறு, அரசே

மதம் மாறவல்ல

எம் கட்டளை

மனிதனை நேசிக்க வேண்டுகோள்

மக்கள் நீதி மய்யம்

உண்மையிலேயே மனிதனை நேசிக்கும் ஒருத்தரால் இப்படி ஒரு கவிதை எழுத முடியுமா?  இன்று இரவு என் தூக்கத்தைக் கெடுத்து விட்டீரே, இதுதான் நீர் சொல்லும் மனித நேசமா?  நாம் ஊரின் laughing stock ஆக இருக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் இருப்பது எத்தனை பெரிய துரதிர்ஷ்டம் தெரியுமா? 

பெருமாளே, என்னதான் இவர் நாஸ்திகராக இருந்தாலும் இவரைக் கொஞ்சம் காப்பாற்றும்!  ஒரு சக மனிதன் இப்படி நையாண்டி செய்யப்படுவதை, நக்கல் அடிக்கப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை; சகிக்க முடியவில்லை!