பூச்சி 47

புத்திசாலி அய்யங்கார்களைப் பற்றிச் சொல்லும் போதே வேறொருவர் பற்றியும் குறிப்பிட்டேன்.  வேண்டாம்.  கனிந்த பிறகு யாரையும் மக்கு என்று சொல்ல மனசு வர மாட்டேன் என்கிறது.  இன்று காயத்ரியும் நீங்கள் கனிந்து விட்டீர்கள் என்றாள்.  அப்படியானால் அது உண்மைதான் போல.  இனிமேலும் ஸர்ப்பகந்தா மூலிகையின் மாயம்தான் அது என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.  ஆனால் ஸர்ப்பகந்தாவினாலும் இருக்கலாம்.  ஸ்கீஸோஃப்ரீனியாவுக்கே மருந்தாயிற்றே?  இருந்தாலும் இன்னொரு காரணத்தையும் மனம் உசாவுகிறது.  ராம்ஜிதான் அது.  Zelig என்ற வூடி ஆலனின் படம் பார்த்திருக்கிறீர்களா?  அதில் வூடி ஆலன் யாரோடு பழகுகிறாரோ அவரது ஒரு தன்மையைத் தனக்குள் ஏற்றுக் கொண்டு விடுவார்.  நானும் அப்படித்தான்.  நான் நெருங்கிப் பழகும் நண்பர்களின் பழக்கங்களை நானும் ஏற்றுக் கொண்டு விடுவேன்.  தில்லியில் ஒரு நண்பரோடு நெருக்கமான பழக்கம்.  அவர் சார்ம்ஸ் சிகரெட் குடிப்பார்.  நானும் அவரை மாதிரியே சார்ம்ஸ் சிகரெட் குடிப்பேன்.  அப்போது என் வயது 35.  அதுவரை நான் ஒரு சிகரெட் கூட குடித்ததில்லை என்பது முக்கியம்.  அப்புறம் அங்கிருந்து சென்னை வந்ததும் அந்த நண்பரின் தொடர்பு விட்டுப் போயிற்று.  சிகரெட்டும் என்னை விட்டுப் போயிற்று.  என்னுடைய 42-ஆவது வயதில் ஒரு நண்பரோடு நெருங்கிப் பழகினேன்.  ஒவ்வொரு சனி ஞாயிறும் அவரோடுதான் இருப்பேன்.  அவர் கஞ்சா புகைப்பார்.  (ஆனால் கஞ்சா அடிக்ட் அல்ல) அவரோடு நானும் கஞ்சா புகைப்பேன்.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரோடு தொடர்பு விட்டுப் போயிற்று.  கஞ்சாவும் என்னை விட்டுப் போயிற்று. 

பொதுஜனம் நினைப்பது போல் கஞ்சா ஒன்றும் அவ்வளவு பெரிய கெடுதி அல்ல என்றே தோன்றுகிறது.  கஞ்சா புகைத்த ஜெயகாந்தன் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லையே?  பலரும் சிகரெட் புகைப்பது போல் அவர் கஞ்சா புகைத்தார்.  அவர் ஒன்றும் கஞ்சா அடிக்டும் அல்ல.  கடைசி வரை படு ஆரோக்கியமாக சிங்கம் போல்தான் இருந்தார்.  பல இளைஞர்களை, கல்லூரி மாணவர்களைப் பார்க்கிறேன்.  அவர்களில் 90 சதவிகிதம் பேர் கஞ்சா புகைக்கிறார்கள்.  யாரும் அடிக்ட் ஆவதில்லை.  வீட் என்கிறார்கள்.  கஞ்சா என்று சொல்வதில்லை.  ஒரு பையன் சொன்னான்.  அவன் தமிழ் அல்ல.  மராட்டி பையன்.  கல்லூரி மாணவன்.  என் நண்பன்.  ஆங்கிலத்தில் என் எழுத்துக்களைப் படித்தவன்.  அவன் ஒருமுறை சொன்னான், ”கஞ்சாவும் உங்கள் எழுத்துக்களும் இல்லையென்றால், நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்; அல்லது, பைத்தியமாகி இருப்பேன், அல்லது ஒரு கிரிமினல் ஆகியிருப்பேன்.  இப்போது அதெல்லாம் இல்லாமல் உருப்படியான இளைஞனாக இருக்கிறேன்.”  இந்தக் கல்விமுறையும், பெற்றோரும், குடும்பமும், சமூகமும் இளைஞர்களை அந்த அளவுக்கு அழுத்துகின்றன என்றான். 

Zelig-க்கு வருவோம்.  அப்படியாக நான் பலரோடு பழகினாலும் ஒரு சிலரது பழக்கவழக்கங்கள் என்னையும் தொற்றிக் கொள்ளும்.  அப்படித் தொற்றியதுதான் ராம்ஜியின் பொறுமை.  எதிராளி அவரை நாம் அடித்துத் துவைக்க வேண்டிய நிலையில் ஒரு விஷயத்தைச் சொல்லியிருப்பார்.  அதையும் ராம்ஜி ரொம்பப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்பார்.  இந்த உபாயத்தை ராம்ஜியிடமிருந்து நான் பெற்றுக் கொண்டேன்.  அதனால் யாரையும் மக்கு என்று சொல்ல மனசு வர மாட்டேன் என்கிறது.  சரி, நேராக விஷயத்துக்கு வருகிறேன்.  நம் இதய நாயகர் கொஞ்சம் முன்னால் தியாகப் பிரம்மம் பற்றி ஒரு கருத்து சொல்லியிருக்கிறார்.  இதய நாயகர் சொல்வதற்கெல்லாம் நாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் பூச்சி மாதிரி இன்னொரு தொடர் ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.  அந்த அளவுக்கு அவர் பெரிய ஆளும் இல்லை; எனக்கும் அத்தனை நேரமும் இல்லை.  அவர் சொல்லியிருப்பது:  ”நான் செய்வது டிக்கட் போட்டு விய்க்கிற வியாபாரம்தானே? தர்மத்துக்கு நான் பாடுற பாட்டு இல்லையே? தியாகைய்யர் எப்படி ராமரைப் போற்றி தஞ்சாவூர் வீதில பிச்சை எடுத்துப் பாடிட்டிருந்தாரோ அப்படிப்பட்ட கலெ இல்லியே?”

மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கருத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே தோன்றும்.  ஆனால் மகான்களைப் பற்றிப் பேசும் போது ஒரு மரியாதை வேண்டாமா?  தன் குருநாதர் பாலச்சந்தர் பற்றி இவர் இப்படித்தான் பேசுவாரா?  அவரைப் பற்றிப் பேசும் போது மட்டும் ஏதோ குரஸவா ரேஞ்சுக்குப் பேசுகிறார் இல்லையா?  தியாகப் பிரம்மம் என்ன பிச்சையா எடுத்தார்?  மகாத்மா கூடத்தான் இடுப்பில் ஒரு லங்கோடு மாதிரி ஏதோ ஒரு துணியைச் சுற்றிக் கட்டிக் கொண்டிருந்தார்?  அதற்காக “காந்தி கட்டிட்டு இருந்தாரே கோமணம்…” என்றா பேசுவார்கள்?  ஒரு மரியாதை வேண்டாம்?  மாண்பு வேண்டாம்? 

தியாகப் பிரம்மம் எப்படி வாழ்ந்தார்?  தெருக்களில் பாடிய அதே கீர்த்தனையை சரஃபோஜி ராஜாவின் அரண்மனையில் பாடியிருந்தால் அவர் ராஜபோகமாக வாழ்ந்திருக்கலாமே?  ஏன் பாடவில்லை?  அப்படி ராஜாவின் அரண்மனையில் பாடாமல் தெருக்களில் ராமநாமத்தைப் பாடி பிச்சையாகக் கிடைக்கும் தான்யத்தில் உண்டு வாழ்ந்தது பிச்சையா?  தெற்கே திராவிட எல்லையிலிருந்து இன்றைய ஆஃப்கன் வரை பரவியிருந்த மௌரியப் பேரரசு முழுவதையும் துறந்து விட்டு, ஆடை அணிகலன்களைக் கூட உதறி எறிந்து விட்டு நிர்வாணத் துறவியாக சிரவணபெலகொலா வந்து தவம் இருந்தாரே, சந்திர குப்தர், அவர் என்ன பிச்சைக்காரரா?  தியாகப் பிரம்மம் தன் மனைவியோடு வாழ்ந்த போதிலும் அவர் ஒரு துறவி.  இந்த லௌகீக இன்பங்களையெல்லாம் துறந்த மகா ஞானி.  அவதார புருஷர். 

எனக்கு தியாகப் பிரம்மத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஓர் ஆசை உண்டு.  எழுத வேண்டிய சில நாவல்களை முடித்து விட்டு அதில்தான் மூழ்க வேண்டும்.  1767-இல் பிறந்து 1847-இல் மறைந்த தியாகைய்யர் 80 ஆண்டுகள் இந்த பூமியில் இருந்தார்.  பல நூற்றாண்டுகள் முன்பு அல்ல.  சுதந்திரம் அடைந்ததற்கு நூறு ஆண்டுகள் முன்புதான் அவர் இந்த உலக வாழ்வை நீத்தது.  அவ்வளவு அண்மையில்தான் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்.  அவர் அவதரித்த தேதி என்ன தெரியுமா?  மே நான்காம் தேதி.  இதே நாள்.  அவர் பாடியது ஒரு லட்சம் கீர்த்தனைகள்.  கிடைத்தது 24000.  எதையும் அவர் எழுதவில்லை.  அவர் சொல்லச் சொல்ல அவரது சிஷ்யர் வேங்கடரமண பாகவதர் எழுதியது. 

இந்த வேங்கடரமணருக்கு பாகவதர் பட்டம் கிடைத்தது ஒரு ரசமான கதை.  பதினேழாம் நூற்றாண்டில் மொகலாயர் படையெடுப்பின் காரணமாக சௌராஷ்ட்ரா பகுதியிலிருந்து சிலர் தெற்கு நோக்கி வந்து குடியேறினர்.  பட்டுநூல்காரர்கள் என்று அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.  காரணம், பட்டுநூல் நெய்வதுதான் அவர்களின் தொழில்.  அப்படி சௌராஷ்ட்ராவிலிருந்து வந்த ஒரு குடும்பம் அரியலூரில் நின்றது.  பின்னர் அக்குடும்பம் தஞ்சாவூர் அருகில் உள்ள அய்யம்பேட்டைக்குக் குடிபெயர்ந்தது.  அந்தக் குடும்பத்தின் தலைவர் குப்பய்யருக்கு ஒரு ஆண்மகன் பிறந்தான்.  அவனுக்கு நன்னுசாமி என்று பெயரிட்டார்கள்.  நன்னுசாமி வளர்ந்து பெரியவன் ஆனான்.  திருமணமும் நடந்தது.  ஆனால் குழந்தை இல்லை.  பேரன் பிறக்க வேண்டும் என்று குப்பய்யர் தல யாத்திரை சென்றார்.   யாத்திரையில் திருப்பதியில் நின்ற போது தனக்குப் பேரன் பிறந்தால் வேங்கட ரமணன் என்று பெயர் வைப்பதாக வேண்டிக் கொண்டார்.   18.2.1781 அன்று நன்னுசாமிக்கு வேங்கட ரமணன் பிறந்தான்.   அந்தக் கால வழக்கப்படி பனிரண்டு வயதிலேயே தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தான். 

இதற்கிடையில் குப்பய்யருக்கு இன்னொரு ஆசையும் இருந்தது.  தன் குடும்பத்தில் ஒருவன் சங்கீதத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே அது.  அவரது தல யாத்திரையின் இறுதிக் கட்டத்தில் காசி சென்றடைந்து விஸ்வநாதரையும் வியாஸரையும் தரிசித்து அவர்களிடமும் தன் பிரார்த்தனையை சமர்ப்பித்தார்.  அப்போது அவர் கனவில் தோன்றிய வியாசர் அவரது பேரன் வேங்கட ரமணன் சங்கீதத்தில் சிறந்து விளங்குவான் என ஆசீர்வதித்தார். 

வேங்கட ரமணன் வசித்த அய்யம்பேட்டையிலிருந்து தியாகப் பிரம்மம் வசித்த திருவையாறு 11 கி.மீ. தூரத்தில் உள்ளது.  அதனால் தியாகப் பிரம்மம் பற்றி அறிந்த வேங்கட ரமணன்  பகல் முழுதும் பட்டுநூல் பணி முடிந்து மாலையில் திருவையாறு செல்வார்.  அங்கே தியாகய்யர் தன் சிஷ்யர்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுப்பதை ஓரமாக நின்று கேட்பார்.  இப்படி இரண்டு ஆண்டுகள் கழிந்தன. 

ஒருநாள் வீட்டு முற்றத்தில் தென்னை ஓலையால் வேய்ந்த ஒரு பந்தல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தியாகய்யர் தன் சிஷ்யர்களிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட வேங்கட ரமணர் தியாகய்யர் திருவாரூர் சென்றிருந்த இரண்டு தினங்களில் வீட்டு முற்றத்தில் தென்னை ஓலை வேய்ந்த ஒரு பந்தலை அமைத்தார். பந்தலுக்காக தியாகய்யரின் மனைவி கொடுத்த பணத்தையும் வாங்க மறுத்து விட்டார்.

வேங்கட ரமணர் தினமும் தியாகய்யர் வீட்டுத் திண்ணையில் குருவின் அருகே அவருக்குத் தெரியாமல் துளசி இலைகளை வைத்து விட்டுச் செல்வது வழக்கம்.  பிறகு நாளடைவில் வேங்கட ரமணரை சிஷ்யராக ஏற்றார் தியாகய்யர்.   ஒருநாள் வேங்கட ரமணர் வருவதற்குத் தாமதமாகி விட்டது.  அதற்குள் பூஜையும் முடிந்து விட்டது.  அர்ச்சனை செய்ய வேங்கட ரமணர் கொண்டு வரும் மலர்கள் இல்லை.  தியாகய்யர் வெறும் கைகளாலேயே பாவனை செய்து ”துளசிதள மூலசே ஸந்தோஷமுகா பூஜிந்து” என்ற கீர்த்தனையைப் பாடியவாறு அர்ச்சனை செய்ய, அவர் கீர்த்தனையில் எந்தெந்த மலர்களைக் குறிப்பிட்டாரோ அந்தந்த மலர்கள் அவர் கையில் தோன்றின.  அதன் மூலம் வேங்கட ரமணரின் தெய்வீகத் தன்மையை உணர்ந்து கொண்ட அன்றிலிருந்து அவருக்கு சங்கீதம் கற்பிக்க ஆரம்பித்தார்.  இப்படி 26 ஆண்டுகள் குருவிடம் சங்கீதம் கற்றார் வேங்கட ரமணர். 

வேங்கட ரமணர் நல்ல உயரம்.  அதற்கேற்ற பருமன்.  ஹட யோகி வேறு.  அதனால் அவரை தியாகய்யர் வீட்டில் கணபதி என்றே அழைப்பது வழக்கம். 

வேங்கட ரமணருக்கு 41-ஆவது வயதில்தான் திருமணம் ஆயிற்று.  மனைவியின் பெயர் முத்துலக்ஷ்மி.   அப்போது குடும்ப சூழ்நிலையின் காரணமாக வேங்கட ரமணரின் குடும்பம் வாலாஜாபேட்டைக்குக் குடி பெயர்ந்தது.  வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டே ஒரு பஜனை மடத்தையும் துவக்கினார் வேங்கட ரமணர்.   இரண்டு மகன்கள் பிறந்தனர்.  ஒருவனுக்குத் தன் இஷ்ட தெய்வமான கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினார்.  அடுத்த மகனுக்குத் தன் குருவின் இஷ்ட தெய்வமான ராமனின் பெயர் சூட்டினார்.  இருவரும் கிருஷ்ண ஸ்வாமி, ராமஸ்வாமி என்று அழைக்கப்பட்டார்கள். 

வேங்கட ரமணரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் பணி இன்றளவும் வாலாஜாபேட்டையில் தொடர்கிறது.  மூத்தவன் கிருஷ்ண ஸ்வாமிக்கு அவனது 16 வயதில் தியாகய்யர் முன்னிலையில் திருமணம் நடந்தது.  பெண்ணின் பெயர் ருக்மணி. 

கிருஷ்ணஸ்வாமி பாகவதருக்குச் சாரீரம் சற்றுக் குறைவாக இருந்த காரணத்தால், பிடில் வாத்தியத்தில் வேறு வகையான ‘கின்னரி’ என்ற வாத்தியம் இசைக்கப் பயின்றதுடன், மூன்று வருட காலம் திருவையாற்றில் தங்கியிருந்து, தியாகய்யரிடம் சங்கீதமும் கற்றார். இவருக்கு ராமச்சந்திர பாகவதர், ராமகிருஷ்ண பாகவதர், ராமஸ்வாமி பாகவதர் என்ற பெயரில் மூன்று மகன்கள் இருந்தார்கள். அவர்களும் சங்கீதத்தில் சிறந்து விளங்கினார்கள்.

அந்தச் சமயத்தில் தியாகய்யரின் பெண் சீதாலக்ஷ்மிக்குத் திருமணம் நடந்தது.  திருவையாற்றில் நடந்த திருமணத்துக்கு வாலாஜாபேட்டையிலிருந்து நடந்தே சென்றார் வேங்கட ரமணர்.  திருமணப் பரிசாகக் கொடுப்பதற்கு வாலாஜாபேட்டையில் வசித்த அவரது சீடரான வேலூர் பல்லவி எல்லய்யரிடம் இரண்டு ராமர்  படங்களை வரையச் செய்து வாங்கினார்.  சீதா லட்சுமண, ஹனுமனுடன் கூடிய கோதண்ட ராமன் படங்கள்.  அதில் ஒன்றைத் தன்  மடத்தில் வைத்துக்கொண்டு, மற்றொன்றை கல்யாணப் பரிசாகக் கொண்டு சென்றார் வேங்கட ரமணர். 

அவ்வளவு தூரம் நடந்து சென்றதால் திருமணத்துக்குத் தாமதம்.  குரு என்ன காரணம் என்று கேட்க, காரணத்தைச் சொன்னார் சிஷ்யர்.  உடனே தியாகய்யருக்கு என்ன தோன்றியதாம், ஸ்ரீராம பிரானே வாலாஜாபேட்டையிலிருந்து நடந்து வந்திருக்கிறார் என்று.  உடனே தியாகப் பிரம்மம் பாடின கீர்த்தனைதான் இது:

பல்லவி

நனு பாலிம்ப நடசி வச்சிதிவோ நா ப்ராணநாத

அனுபல்லவி

வனஜ நயன மோமுனு ஜூசுட ஜீவனமனி

நெனருன மனசு மர்மமு தெலிசி

சரணம்

சுரபதி  நீல  மணினிப  தனுவுதோ                                                    உரமுன  முத்யபு  சருல  சயமுதோ 
கரமுன  சர  கோதண்ட  காந்திதோ                                                  தரணி  தனயதோ  த்யாகராஜார்ச்சித

இந்தக் கீர்த்தனையை அநேகமாக எல்லா சங்கீத மேதைகளும் பாடியிருக்கிறார்கள்.  அதன் இணைப்பை இங்கே தருகிறேன்.  இந்த விபரங்களுக்கு ஆதாரமாக இருந்தவை Periscope என்ற இணையதளம் மற்றும் மகேந்திரவாடி உமாசங்கரன் எழுதியுள்ள கட்டுரை.

 Listen to AriyakkuDi Ramanuja iyengar 

Listen to Chembai Vaidyanatha Bhagavathar 

Listen to Maharajapuram Santhanam 

Listen to M S Subbulakshmi 

                                                           Listen to MLV 

Listen to Balamuralikrishna 

https://gaana.com/song/nanu-palimpa-dr-m-balamuralikrishna

                                                    Listen to Malladi Brothers 

கீர்த்தனையின் பொருளை யாரேனும் எனக்கு எழுதி அனுப்பலாம்.  கிடைக்காவிட்டால் நாளை நான் மொழிபெயர்க்கிறேன்.  இரவு நீண்டு விட்டது.  உறங்கச் செல்கிறேன்.