பூச்சி – 49

இந்த அய்யங்கார்களைப் பற்றின என் பதிவுகளுக்குக் காரணமே சீனியின் தவப்புதல்வன் ஆழிமழைக் கண்ணன்தான்.  ஆழியின் பேச்சுக்களை வைத்து சீனி புத்தகமே போட்டு விட்டார்.  சகலகலா வல்லவன்.  நன்றாகப் பாடுகிறான்.  எனக்கு இப்படி “என் பையன்/பெண் நல்லா பாடுவான்/ள்” என்று சொல்லும் ஆட்களைக் கண்டாலே பிடிக்காது.  ஏனென்றால், உடனே இளையராஜா பாட்டை எடுத்து விடுவார்கள் பிள்ளைகள்.  அது ஏதாவது முதலிரவு சல்லாபப் பாடலாக இருக்கும்.  இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஜனனி மனனி என்று.  ஆனால் ஆழி பாடினான் பாருங்கள் பாட்டு.  மகாபலிபுரத்தில் நடந்த அராத்துவின் பொண்டாட்டி நாவல் வெளியீட்டு விழாவில் பாடினான்.  Nothing else matters.  எனது தேசிய கீதங்களுள் ஒன்று அது.  அசந்து விட்டேன்.  குழந்தைகள் என்றால் அப்படி இருக்க வேண்டும்.   

எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்று ஒரு நூல் எழுதியிருக்கிறேன்.  அந்தத் தலைப்பை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.  இங்கே இந்தியாவில் குழந்தைகள் குழந்தைகளாக இல்லை என்பதால் எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது.  அமெரிக்கக் குழந்தைகளையோ ஐரோப்பியக் குழந்தைகளையோ பிடிக்கும்.  சீனியின் இரண்டு குழந்தைகளிடமும் நான் இந்தியக் குழந்தைகளிடம் இருக்கும் ஆகாத சமாச்சாரங்கள் எதையுமே பார்த்ததில்லை.  இந்தியக் குழந்தைகள் இப்படி மிருகக்காட்சி சாலையின் கூண்டில் அடைக்கப்பட்ட மிருகங்களைப் போல் இருப்பதற்கும் பழகுவதற்கும் அவைகளின் பெற்றோரே காரணம்.  சினிமாவின் நீட்சிதான் தொலைக்காட்சி சேனல்கள் என்று எழுதியிருக்கிறேன்.  அதேபோல் பெரியவர்களின் நீட்சியைத்தான் குழந்தைகளிலும் பார்க்கிறேன்.   குழந்தைகளை இந்தப் பெரியவர்கள் படுத்துகின்ற பாடு இருக்கிறதே அது எழுத்தில் அடங்காது.  ஒருநாள் என் நண்பர் என் வீட்டுக்கு வந்தார்.  உங்களுக்கே தெரியும், என் நண்பர்கள் யாரையும் நான் என் வீட்டிலோ அவர்கள் வீட்டிலோ சந்திப்பதில்லை.  என் வீட்டில் ஏன் சந்திப்பதில்லை என்ற காரணத்தை உங்களால் யூகித்துக் கொள்ள முடியும்.  இது ஒரு ஃபாக்டரி.  இந்த ஃபாக்டரியில் எப்படி ஒரு தொழிலாளி வந்தவரிடம் பேச முடியும்?  அப்படியே நான் வேலையில்லாமல் இருந்தாலும் நாங்கள் பேசுவதை வைத்து ஒரு பூகம்பம் கிளம்பினால் என் கதி என்ன ஆவது?  வருகின்ற ஆட்களும் வாயில் வெடிகுண்டோடு அல்லவா வருகிறார்கள்?  (”ஏன் சாரு, நீங்கள் பைசெக்‌ஷுவலா?” நான் பயந்து நடுங்கிக் கொண்டு “அப்படியெல்லாம் இல்லியே?”  “மறந்துட்டீங்களா சாரு, போன மாதம்தானே உயிர்மை கட்டுரைல சொல்லி இருந்தீங்க?”)

சரி, நண்பர்களின் வீட்டுக்கும் போவதில்லை.  ஏனென்றால், ஒரு நண்பரை ஒரு நட்சத்திர விடுதியின் லவுஞ்சில் சந்தித்தேன்.  நண்பர் அவர் மனைவியோடு வந்திருந்தார்.  அந்தப் பெண்ணை அப்போதுதான் முதல்முதலாகச் சந்திக்கிறேன்.  (இது ரொம்ப முக்கியம்.)   அப்போது இடையில் நண்பர் ரெஸ்ட் ரூம் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார்.  அப்போது அந்தப் பெண் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்.  அவர் ஹவுஸ்வைஃப் என்பது எனக்குத் தெரியும்.  எனவே நானும் ஏதோ பேச வேண்டுமே என்று வீட்டில் பொழுது எப்படிப் போகிறது என்று கேட்டு வைத்தேன்.  ”அதை ஏன் கேக்குறீங்க? இவருக்கு நண்பர்கள் அதிகம்.  அதனால் தினமும் மாலை நேரத்தில் வீடே ஒரு ரெக்ரியேஷன் கிளப் மாதிரிதான் இருக்கும்.  எல்லோருக்கும் பணிவிடை செய்வதை ரொம்ப விருப்பமாகச் செய்வேன்.  ஆனால் இவரோடு ஒரு நிமிஷம் கூடப் பேசக் கிடைக்க மாட்டேங்குது என்பதுதான் பெரிய குறையாக இருக்கிறது.  சனி ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம்.  இரண்டு நாட்களும் வீட்டில்தான் இருப்பார் என்று பேர்.  ஆனால் அவர் முகத்தைக் கூடப் பார்க்க முடியாது.  அவ்வளவு ஃப்ரெண்ட்ஸ் கூட்டம்.  உங்களுக்கு நான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்ல வேண்டும்.  இன்று உங்களை வீட்டுக்குத்தான் அழைக்கப் போவதாகச் சொல்லியிருந்தார்.  நீங்கள்தான் யாரையும் அவர்கள் வீட்டில் சந்திப்பதில்லையாமே?  அப்படியே செய்யுங்கள் சார்.  இந்தக் கணவன்மார்கள் செய்யும் அட்டகாசத்துக்கு அளவே இல்லை.  சனி ஞாயிறுகளிலும் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து எங்கள் கழுத்தை அறுக்கிறார்கள்.  சொல்லவும் முடியாது.  மெல்லவும் முடியாது.  நல்லவேளை, நீங்கள் வெளியில்தான் சந்திப்பேன் என்று சொன்னதால் என்னையும் அழைத்துக் கொண்டு வந்தார்.”  அவர் நீண்ட நேரம் பேசியதன் சுருக்கம் இது.  ஏற்கனவே யார் வீட்டுக்கும் போகாத நான் அந்தப் பேச்சைக் கேட்டதிலிருந்து அந்தப் பழக்கத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.  இத்தனைக்கும் அந்தப் பெண்ணும் நண்பரும் முப்பது வயதைத் தாண்டி இருக்க மாட்டார்கள்.  

இந்த என் கொள்கையையும் மீறி சில சமயங்களில் நண்பர்களை என் வீட்டில் சந்திக்க நேர்ந்து விடுகிறது.  ஒரு நண்பர் ஐரோப்பா போய் வந்தார்.  எனக்குப் பிடித்த லிண்ட் சாக்லெட்டுகள் வாங்கி வந்தார்.   (அதிலும் எனக்கு ஆரஞ்ச் தின்ஸ்தான் பிடிக்கும்!) அதைக் கொடுப்பதற்காக வீட்டுக்குத்தானே வர வேண்டும்?  வேறு இடத்தில் கொடுத்தால் உருகி விடுமே?  பேத்தியோடு வந்தார்.  நான் அந்தச் சிறுமிக்கு ஏதோ ஒரு சாக்லெட் கொடுத்தேன்.  அவள் மிகுந்த லஜ்ஜையுடன் அதை வாங்கிக் கொண்டாள்.  இந்த லஜ்ஜையே எனக்குக் கொஞ்சம் அந்நியமான விஷயம்.  உடனே என் நண்பர் பேத்தியிடம் அங்கிளுக்குத் தேங்க்ஸ் சொல்லூ, தேங்க்ஸ் சொல்லூ என்று இரண்டு முறை சொல்ல, பேத்தி திருதிருவென்று விழித்தாள்.  லஜ்ஜையோடு இருப்பவளை இன்னும் சங்கடப்படுத்தும் செயல்.  நண்பரோ மூன்றாவது முறையும் வலியுறுத்தினார்.  எனக்குக் கோபம் வந்து விட்டது.  அட சும்மா விடுங்க, குழந்தையை டார்ச்சர் பண்ணாதீங்க என்றேன்.  அது மட்டும் அல்ல; அந்தச் சம்பவம் எனக்குள் மாறாத வடுவாகவும் பதிந்து விட்டது.   தன் மனைவியை ஒரு ஆள் ஒரு ஜவுளிக் கடையில் பளார் என்று கன்னத்தில் அறைந்ததை நான் பார்த்திருக்கிறேன்.  கிட்டத்தட்ட அது போன்ற ஒரு வன்முறைதான் அந்தக் குழந்தையிடம் தேங்க்ஸ் சொல்லூ தேங்க்ஸ் சொல்லூ என்று என் எதிரே சொன்னதும்.  என் எதிரே என்பதுதான் முக்கியம்.  அவளும் அவரும் தனியே இருக்கும்போது சொல்லியிருக்கலாம்.  என்னம்மா, அங்கிள் சாக்லெட் குடுத்தார். நீ தேங்க்ஸே சொல்லலியே என்று கேட்கலாம்.  தப்பில்லை.  இப்படி அந்நியன் எதிரிலேயேவா? 

குழந்தைகளை குழந்தைகளாக விடாமல் அவர்களைப் பெரியவர்களின் நீட்சியாக ஆக்கி வைப்பதால்தான் எனக்குக் குழந்தைகளைப் பிடிக்கவில்லை.  இன்னொரு சம்பவம், இன்னும் நேரடியானது.  வன்முறை இன்னும் தூக்கலானது.  இது குழந்தையின் வன்முறை.  ஒருநாள் ஷூ வாங்குவதற்காக என் வீட்டுக்குக் கீழே இருக்கும் ஸ்கெச்சர்ஸ் கடைக்குப் போனேன்.  அங்கே ஒரு தாத்தாவும் பேத்தியும்.  தாத்தா துலக்கமாக ஸ்ரீசூர்ணம் இட்டிருந்தார்.  பேத்தி படு சூட்டிகையாகத் தெரிந்தாள்.  அவள் அப்போது தாத்தாவிடம் நல்ல சத்தமாக, “ஏன் தாத்தா, நீதான் ஆஃபீஸுக்குப் போறதில்லே.  வெறும் வாக்கிங் போறதுக்கு எதுக்கு இவ்ளோ காஸ்ட்லீ ஷூ?” என்று கேட்டாள்.  அதற்குத் தாத்தா,  ”உங்க அப்பாவும்தானேடி ஸ்கெச்சர்ஸ் ஷூ போட்டுண்ட்ருக்கா?  நான் போடப் படாதா?” என்றார்.  உடனே அந்தக் குழந்தை ரொம்ப ஸ்பஷ்டமாக, “அப்பா ஆபீஸ் போறார்.  நீ வெறும்னே வாக்கிங் தானே போறே?  உனக்கு இதுக்கு இவ்ளோ காஸ்ட்லி ஷூ?” என்றாள்.  சிறுமிக்கு ஐந்து வயது இருக்கலாம்.  நான் அப்போது அடைந்த அதிர்ச்சியில் தாத்தா அதற்கு என்ன பதில் சொன்னார் என்பதைக் கேட்காமல் விட்டு விட்டேன்.  ஐந்து வயதுக் குழந்தை பணத்தைப் பற்றி யோசிக்க விட்ட சமூகம் நம்முடையது.  இங்கே எப்படி எனக்குக் குழந்தைகளைப் பிடிக்கும்? 

ஆனால் சீனி குழந்தைகளிடம் எனக்கு அந்தப் பிரச்சினையே கிடையாது.  பக்காவான அமெரிக்க, ஐரோப்பியக் குழந்தைகள் போலவே நடந்து கொள்ளும். 

Nothing else matters பாடியதால் மட்டும் இல்லை.  இதை அப்படிப் புரிந்து கொள்ளக் கூடாது.  இசை ரசனை என்பது இளையராஜாவோடு முடிந்து விடக் கூடாது.  அதிலும் குழந்தைகளுக்கு.  நிச்சயமாக இளையராஜாவைப் பாடுவது குழந்தைகளின் தேர்வாக இருக்காது.  பெரியவர்களின் தேர்வு அது.  ”நதிங் எல்ஸ் மேட்டர்ஸ் மட்டும்?” என்று உங்களுக்குத் தோன்றலாம்.   அது சீனியின் தேர்வு அல்ல என்பது அவர் சொல்லாமலே எனக்குத் தெரியும்.  அது ஆழியின் தேர்வாக இருக்கும்.  அல்லது, அவன் அக்காவின் தேர்வாக இருக்கும்.  ஆக, நதிங் எல்ஸ் மேட்டர்ஸுக்குப் பதிலாக ஒரு தியாகய்யர் கீர்த்தனையாகவும் இருக்கலாம்.  ஆனால் அது கூட என்னைக் கவர்ந்து விடாது.  அவர்கள் பிராமணர்களாக இருந்தால் கர்னாடக இசை கற்பிக்கப்பட்டிருக்கலாம்.  எது என்னைக் கவரும் என்றால், அந்தக் குழந்தை பாபநாசம் சிவன் பாடலைப் பாட வேண்டும்.  இன்றைய கர்னாடக இசையின் கீர்த்தனைப் பாடல் என்ற வடிவத்தைச் செதுக்கிய சிற்பியாகிய முத்துத் தாண்டவர் (1525 – 1600) பாடலைப் பாட வேண்டும்.  அந்தக் குழந்தையை எனக்குப் பிடிக்கும்.   

சில காலத்துக்கு முன்பு வரை கர்னாடக இசைக்குத் தமிழ் ஒத்து வராதோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  அதற்குக் காரணம், பாரதியாரின் பாடல்களை நம் தற்குறிகள் சில தமிழுக்கான இட ஒதுக்கீடு போல் பாடிக் கொண்டிருந்ததுதான்.  சேரியில் போய் கர்னாடக சங்கீதப் புரட்சி செய்து மக்ஸேஸே விருதெல்லாம் வாங்கின தற்குறியின் சுட்டும் விழிச் சுடர்தான் என்ற ஒரே பாடலைக் கேட்டால் நான் சொல்வது உங்களுக்குப் புரியும்.  கொடுமை.  கொடுமை.  ஆனால் வேறு சில மதிப்புக்குரிய கலைஞர்களும் திருக்குறள் அது இது என்றெல்லாம் கர்னாடக இசையில் கொண்டு வந்து பாடும்போது கேட்க சகிக்காது.  ஆகக் கொடுமை, பாரதியார்தான்.  அது பாரதியின் தவறு அல்ல; ஏனென்றால், பாரதியின் அடிப்படை கவிதை.  இசை அல்ல. ஆனால் முத்துத் தாண்டவரும், பாபநாசம் சிவனும் அப்படி அல்ல.  அவர்களின் அடிநாதம் இலக்கியம் அல்ல; இசை.  இந்த வித்தியாசம் தெரியாமல் தமிழுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் புரட்சிக் கலைஞர்கள் கண்டதையெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  விமர்சனமில்லாமல் எல்லாவற்றையும் முழுங்கும் சங்கீத ரசிக சிகாமணிகளும் தொடை தட்டுகிறார்கள்.  ஆனால் உண்மையிலேயே தமிழிசையை ஒழுங்காக சேவித்தால் அற்புதமான கலானுபவம் கிட்டும்.  இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.   கண்ணனைக் காண்பதெப்போ? இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.  ஜி.என். பாலசுப்ரமணியத்தினால் பிரபலமான பாடல் இது.

கண்ணனைக் காண்ப தெப்போ – கார்மேக

வண்ணனுக் கென்மேல் என்ன வெறுப்போ (கண்ணனை)

விண்ணவரும் பணியும் வேணுவி லோலன்

மண்ணளைந்த வாயன் மாயன் கோபாலன் (கண்ணனை)

புண்ணியன் வந்துபோய் பொழுது மிகவாகுது

கண்ணிரெண்டும் பூத்துக் கவலை உண்டாகுது

எண்ணியெண்ணி என்மனம் ஏங்கியே நோகுது

பண்ணின பண்டமெல்லாம் பயனின்றிப் போகுது (கண்ணனை)

ஜாதிமுல்லை ரோஜா சம்பங்கிப் பூவெடுத்து

ஆதியந்தரகித்தன் அணிய மாலை தொடுத்து

சேதியெல்லாம் வரைந்து சேடியிடம் கொடுத்து

சோதிக்க வேண்டாமென்று சொல்லித்தூது விடுத்து (கண்ணனை)

தாமதம் இல்லாமல் தாதிஉடனே சென்றாள்

நீ மலைக்காமல் நிமிடம் வரேனென்றாள்

ஜாம நேரம்பின் சாவதானமாய் வந்தாள்

சியாமளனைக் காணச் சமயமிதில்லை என்றாள்.

சிருங்காரம் போதும்.  பக்தி ரசம் சொட்டும் இந்த நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். 

ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை

பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி

காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்

ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாடலை சாகேதராமன் தன் குரலில் உருகு உருகு என்று உருகியிருக்கிறார்.

இந்தப் பாசுரத்துக்கான தலைப்பில் சொதப்பியிருக்கிறார்கள்.  குழம்ப வேண்டாம்.  தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரம்.  சாகேதராமன். 

எதற்கு இப்போது ஆழி பற்றிய பேச்சு வந்ததென்றால் பூச்சி 48 பற்றிய அராத்துவின் முகநூல் பதிவுதான் காரணம்.  அது கீழே:

தியாகய்யரும் தொடையில் சிற்றெறும்புக்  கடி வாங்கிய இளம் பெண்ணும்

சாருவும் நானும் போனில் பேசிக்கொண்டிருந்தோம். சாரு சமீபத்தில் எழுதிய தியாகய்யர் கட்டுரை தொடர்பாக பேச்சு போய்க்கொண்டு இருந்தது. ஸ்பீக்கர் போன் போட்டு பேசிக்கொண்டிருந்தேன். அதனால் ஆழியும் கேட்டுக்கொண்டிருந்தான் போல. இந்தப் பேச்சு முடிந்ததும்,

அப்புறம் எப்படி போய்ட்டு இருக்கு சீனி என்று சாரு கேட்க,

இந்த கரோனா லாக் டவுன்ல இளம் பெண்கள்தான் ஓவர் மெண்டல் ஆயிட்டாங்க சாரு என்று சொல்லிய நான், ஒரு பெண்ணின் தொடையில் சிற்றெறும்பு கடித்த கதையையும், அதற்கு அவள் தொடர்ந்து எனக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டு இருந்ததையும், நான் சும்மா “ம்ம்” மட்டும் போட்டுக்கொண்டு இருக்க, அவள் வண்டி வண்டியாக டைப் செய்ததையும் சொன்னேன் ஜாலியாக. பொதுவாவே மர மொக்கை போடுவாங்க, இப்ப ஜேசிபி மிஷின்ல பெரிய ரம்பத்தை வச்சி அறுப்பது மாதிரி அறுக்கறாங்க சாரு, செம போர் என்று சொல்லி பேச்சு முடிவுக்கு வந்தது.

உடனே ஆழி சொன்னான்,

“அப்பா, அந்தப் பொண்ணுங்க பேசறது அறுவையா இருந்துச்சுன்னு சொன்னீங்க இல்ல? இப்ப நீங்களும் சாருவும் பேசிகிட்டது கூட எனக்கு அறுவையா இருந்துச்சிப்பா.”

கொஞ்சம் ஜெர்க்கான நான்,

“இல்லடா ஆழி, பேசிகிட்டு இருந்த எங்க ரெண்டு பேருக்கு அறுவையா இல்லையே? மூணாவதா கேட்ட உனக்குத்தான் அறுவையா இருந்து இருக்கு. ஏன்னா உனக்கு தியாகய்யர் பத்தித் தெரியாது. நான் சொல்றேன் கேக்கறியா?” என்றேன்.

ஆழி, ”மொதல்ல அந்த பொண்ணு என்னா அறுத்துச்சி? அதைச் சொல்லுங்க!” என்றான். 

அந்த சாட்டை ஓப்பன் செய்து போனை அவனிடம் கொடுத்தேன்.

“night thoonkumboth thodaila erumbu kadichidthu”

“mm”

“seeppaa irukku”

“mm”

“arikkithu
evlo naal irku terila
atiye paathuttu iruka”

mm

“ennaala oru velaium seyya mudila
me paavam
enna vacha
sari aagala”

mm

கடுப்பான ஆழி மேலே படிக்க முடியாமல் போனை என்னிடம் கொடுத்து விட்டு, ”இதுக்கெல்லாம் நீ ஏம்பா ’ம்’ போட்டுட்டு இருக்க?” என்றான்.

கும்மாங்குத்து வாங்கிய நான், பேச்சை மாற்ற விரும்பி சாரு எழுதிய தியாகய்யர் கதையை சொல்ல ஆரம்பித்தேன். சொல்லி முடித்து, எப்டி இருந்துருக்காரு பாரு அப்பவே என்றேன்.

முழுவதும் கேட்டு முடித்த ஆழி, இந்த மாதிரி பல கதையை நான் கேள்விப்பட்டிருக்கேன், பல பேரு இத மாதிரி பணம் வேணாம்னு திமிரா சொல்லிட்டுப் போய்டுவாங்க,  இதெல்லாம் சப்பை மேட்டர் என்றான்.

நிஜமாகவே ஒருக்கணம் சிலிர்த்து விட்டது எனக்கு.

ஆழி, படிக்கக் கூடியவன் அல்ல. செவிவழிச் செய்திகள் மட்டுமே. இதைப்போல பணம் வேண்டாம் எனத் திமிராக மறுத்த கதைகள் (பாரதியார் போல) சொல்வதற்கு அவன் வட்டாரத்தில் (உறவுகள்) ஆட்களும் இல்லை.

ஆனால் அது அவனுக்கு ஒரு சர்வ சாதாரண செயலாகவும், பல கதைகள் இப்படி இருப்பதாகவும், நிறைய அவனுக்குத் தெரிவதாகவும் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது.

ஓரிரு கதைகள் கேட்டிருக்கலாம்.  ஆனால் அது எப்படி ஒரு வாழ்க்கை முறை போல அவனுக்குள் இறங்கி இருக்கும்?  எதுவுமே அவனுக்குப் புதிதாக இல்லை.  அவன் சொன்ன தொனி, அதைப்போல மறுத்த பலருடன் பழகியதைப் போல இருந்தது.

இப்படிப்பட்ட மதிப்பீடுகளுடன் வாழ்ந்தவர் தியாகய்யர் என்ற ஒரு ஆள் மட்டும் அல்ல; பல ஆட்கள் அப்படி வாழ்ந்திருக்கிறார்கள். தியாகய்யர் அந்தத் தொடர்ச்சியில் வந்த ஒருவர்.

நாம் தனி ஆள் அல்ல, தொடர்ச்சி என்று படித்திருக்கிறேன். நீண்ட கால மரபு அணுக்களின் செய்தித் தொடர்ச்சி அவனுக்குள் இருக்கிறது. அதுதான் இந்தக் கதையைக் கேட்டதும், அவனுக்கு அது புதிதாக அல்லாமல்,  கலகமாக அல்லாமல் அவ்வளவு அணுக்கமாக இருக்கிறது என்று எறும்பு கடிக்கும் நேரத்தில் யோசித்து முடித்தேன்.

இந்தக் கதையை ஒரு வெளிநாட்டுக் குழந்தைக்குச் சொன்னால், அதற்கு இது படு வித்தியாசமாக இருக்கும். அதற்கு இது கலகமாக இருக்கும்.

இந்த அபாரமான மரபணுச் செய்திகள் எல்லோருக்கும் தொடர்ந்து வந்தாலும், அதைக் காலால் போட்டு நசுக்கி விட்டு, சுரணையற்ற தன்மையுடனேயே வறட்டுப் பதராகவே வாழப் பழகிக்கொண்டதுதான் தற்போதைய சாதனை என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்.

என்ன திங்கிங்க் என்று ஆழி கேட்டதும்,

“சரிடா, நீ இப்ப ஒரு ஃபேமஸ் ராக் சிங்கர்.  உன்னை மோடி கூப்டு, என்னைப் பத்தி பாடு, 100 கோடி தரேன்னு சொன்னா என்னா செய்வ?” என்று கேட்டேன்.

“அவரை தனியா ஒரு ரூமுக்குக் கூப்டு போவேன். நான் இங்க உங்களைப்பத்தி பாடறேன். யார் கிட்டயும் சொல்லக்கூடாது, ஓக்கேவான்னு கேட்டுகிட்டு, பாடிட்டு பணம் வாங்கிகிட்டு, வெளில வந்து…

யேய், நீல்லாம் ஒரு ஆளா? நான் யார் தெரியுமா? என்னைப்போய் உன்னப்பத்தில்லாம் பாடச் சொல்ற? அப்படின்னு சத்தமா கன்னா பின்னான்னு திட்டிட்டு வந்துடுவேன்.”

மேற்கண்ட உரையாடலில் என்னை ஆகக் கவர்ந்த விஷயம் மொக்கை போடும் இளம் பெண்கள்.  இதைத்தானே காமரூப கதைகளிலும் ராஸ லீலாவிலும் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறேன்?  இப்போது எண்ணிக்கை கொஞ்சம் ஜாஸ்தியாகி விட்டது போலிருக்கிறது.  பையன்கள் மது, கஞ்சா என்று பிற பொழுதுபோக்குகளைக் கொண்டிருப்பதால் அவன்கள் கொஞ்சம் தேவலாம் போல் தெரிகிறது.  ஏதோ நூற்றுக்கு ரெண்டு பேர் – எனக்குத் தெரிந்து முத்துக்குமார், வினித், அர்ஜுன் என்று தேறுகிறார்கள்.  படிப்பு இவர்களை வேறு மாதிரி மாற்றி விட்டது.  இவர்களால் என்னோடு உரையாட முடிகிறது. இவர்களின் வயது இருபத்தைந்துக்குள் இருக்கும்.  ஆனால் இந்த வயது வரம்பில் பெண்கள் யாருமே இல்லை.  பார்ப்பதற்கு மாடலிங் பெண் போல் இருக்கிறார்கள்.  ஆனால் வாயைத் திறந்தால் அபத்தக் களஞ்சியம்.  எழுதினால் கமல்ஹாசன் கவிதை போல் இருக்கிறது.  இன்னொன்று, எனக்கு இவர்களோடு பேசவும் நேரமில்லை.  எதுவுமே படித்திராத ஒரு தலைமுறையிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது?  என் எழுத்தோடு பரிச்சயமுள்ள ஒருசில வட இந்தியப் பெண்களோடு நன்றாக உரையாட முடிகிறது.  ஆங்கிலத்தில் சென்றதால் சாத்தியமானது.  ஆனால் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் இலக்கிய வாசிப்பு ஒரு ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துவதை நன்கு உணர முடிகிறது.  அவ்விதமாகப் பலரையும் பார்த்து வருகிறேன். 

***

நானும் வாழ்நாளில் எத்தனையோ கதைகளையும் கட்டுரைகளையும் தொடராக எழுதி வந்திருக்கிறேன்.  பூச்சி போல் தினமுமே எழுதியிருக்கிறேன்.  ஆனால் பூச்சி தொடரைப் போல் வாசகர் எதிர்வினை இதுவரை வந்ததில்லை.  இப்போது சற்று நேரத்துக்கு முன்பு இந்தக் கடிதம்:

அன்புள்ள சாருவுக்கு,

நாம் இருக்கும் இந்தப் பேரண்டம் அதிசயமான பல இழைகளால் நம் அனைவரையும் பிணைத்துள்ளது என்பது சில வருடங்களுக்கு முன் நான் உணர்ந்தது. எதுவொன்றும் அபத்தமான தற்செயலாக நிகழ்வதில்லை. இந்தப் பிரபஞ்ச இழைகளின் முடிச்சை இயல்பாகத் தொட்டு நமக்குக் காட்டுபவர்கள் இருவர். ஒருவர் கலைஞர்.  இன்னொருவர் எழுத்தாளர். எழுத்தாளர்களையும் நான் கலைஞர்கள் வரிசையில்தான் வைக்கிறேன்.  தர்க்கங்களை எழுதி எழுதி ஒரு கணத்தில் அனைத்துத் தர்க்கங்களையும் இல்லாமல் அடித்து நொறுக்கும் அற்புதத்தை ஒவ்வொரு கதையிலும் நிகழ்த்தும் அதிசய மாந்தர்கள். அந்த வகையில் கலை-இலக்கியம் ஒரே கோட்டில் பயணிக்கும் தருணங்கள் ஒரே ஒத்திசைவில் நடக்கும் போது எனக்கு ஏற்படும் மயிர்க்கூச்செறிதல் ஒரு பேரனுபவம். அது ஒரே வாரத்தில் நடக்கும் என்று நான் நினைத்துப்பார்த்ததில்லை. சென்ற வாரம் சனிக்கிழமை நான் என் மகளுக்காக https://www.youtube.com/watch?v=u5gEDrHH0Vc தியாகைய்யா படத்தை யூடியூபில் பார்த்தேன். அதில் நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட ‘நன்னு பாலிம்ப’ காட்சி இடம்பெற்றது. சோமையாஜுலுவின் அதிசாதாரண நடிப்பைத்தாண்டி அந்தச்சூழலும் அந்தப்பாடலும் என் கண்ணில் நீர் கசிவை உண்டாக்கியது. அனைத்திற்கும் இசையால் கசியும் அந்த இசையாலே இறைவனைக்காணும் உள்ளம் கொண்ட கலைஞர்கள் எவ்வளவு நல்லூழ் கொண்டவர்கள்? அந்த அனுபவம் என் சிறுவாழ்வுக்குக்கிட்டாதது என் சென்ற பிறவிப்பாவக்கணக்கு தான். நிற்க, ஓரிரு நாட்களில் உங்கள் நண்பர் ஜெயமோகன் எழுதிய ‘பிடி’  https://www.jeyamohan.in/130500/#.XrLCSC-z3RYசிறுகதையை வாசித்தேன். அதிலும் ‘நன்னு பாலிம்ப’ என்னைப்பார்த்து புன்னகை புரிந்தது. இன்று உங்கள் தளத்திலும் ‘நன்னு பாலிம்ப’ என்னை நோக்கி எதையோ சொல்லி அழைக்கிறது. நீங்கள் (கலைஞர்கள் எழுத்தாளர்கள்) பேறு பெற்றவர்க்கள். என்னைப்போன்ற சிற்றுயிர்களைக் கவலைகளைக் கடந்து இந்தப் பேரண்டத்தின் முடிச்சுகளை அந்தப் பெரும் யாழின் தந்திகளைக் காட்டாமல் காட்டி இசை மீட்டுகிறீர்கள். தொடர்ந்து எமக்கு அருள் புரியுங்கள்.

அன்புடன்,

வா.ப.ஜெய்கணேஷ்

(பி.கு – மெஸியா நான் இமைக்க மறந்து பார்த்த தொடர். அதிலும் அந்தச்சிறுவன் இஸ்ரேலுக்குள் செல்லும் காட்சி என்னை உலுக்கிய மானுட தரிசனம். இந்தத்தொடர் இனிமேல் வராது என்று தயாரிப்பாளர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர் – வருத்தம் தான்.)

உண்மையில் ஜெயமோகன் எழுதிய ’பிடி’ கதையைப் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.  நம்பவே ஆச்சரியமாக இருக்கிறது.  இது அவர் எப்போது எழுதிய கதை?  ஒரே விஷயத்தை இரண்டு பேருமே ஒரே சமயத்தில் எழுதியிருக்கிறோமா என்ன?  ஆச்சரியம்.  நீங்கள் குறிப்பிடும் படத்தைப் பார்க்கிறேன்.  மற்றபடி உங்கள் கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்தேன்.  அநேகமாக இதுதான் நீங்கள் எனக்கு எழுதும் முதல் கடிதம் என்று நினைக்கிறேன். 

***

ஏழையைத் தேடி வந்த அரசன்

அன்புள்ள சாரு,

அயோத்தியின் அரசன் ராமன். நானோ ஏழை…  என்னைத் தேடி நடந்து வந்தீரோ என மனமுருகி தியாகய்யர் பாடுவதைப் பற்றியும் அவரது சுருக்கமான வரலாற்றையும் எழுதியிருந்தீர்கள்.

இது குறித்து ஒரு நாவல் உங்களிடமிருந்து வந்தால் அது வாசகர்கள் அடையும் பெரும்பேறாக இருக்கும்.  தியாகய்யர் பற்றி நீங்கள் எழுதியதைப் படிக்கும்போது அந்தப் பாடல் உங்களுக்கும் பொருந்தும் எனத் தோன்றியது.

இணைய எழுத்து பிரபலமாக ஆரம்பித்தபோது தனி நபர் தாக்குதல், டீக்கடை அரசியல், சாதி மதக் காழ்ப்புகள் என்று செயல்பட்டது.  சிலரோ இணையத்தை சுயமைதுனத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினர்.  அப்போதுதான் நீங்கள் இணையத்தில் நுழைந்தீர்கள்.  இணைய எழுத்துக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியது உங்கள் வருகைதான் என ஆரம்ப காலத்தில் இருந்தே இணையத்தை கவனிப்பவன் என்ற முறையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

உங்கள் வருகை மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது. ஆனாலும்

ஸீரோ டிகிரி,  பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும், கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொன்ன கதை, முள் போன்றவற்றை படைத்த ஒரு மேதை, அரைவேக்காடுகள் புழங்கும் இணையவெளிக்கு ஏன் வந்தார் என்ற குழப்பமும் இருந்தது.

ஏழையை உய்விக்க நடந்தே வந்தாயா ராமா என்ற தியாகய்யரின் உணர்வுதான் எனக்கு ஏற்பட்ட அந்த உணர்வு என்பது எனக்குப் பிறகுதான் புரிந்தது.

காலை பத்து மணிக்கு எழுவதுதான் ஹீரோயிசம்,  சமையலில் உதவுவது கேவலம், கர்நாடக இசை என்பது நமக்கெல்லாம் புரியாது என்பது போன்ற தமிழனின் பல கற்பிதங்களை உடைத்திருக்கிறீர்கள்.  

உன் பிழையை சுட்டிக்காட்டினால் என்னைவிட்டு விலகுவாய் என்றால் நீ என்னவன் இல்லை, போய்விடு என யாராக இருந்தாலும் தூக்கி எறியும் நேர்மையை உணர்த்தி இருக்கிறீர்கள்.

சுரணையுணர்வு, பிறரை மதித்தல் என்பது மனிதனுக்குத் தேவையான அடிப்படை குணம் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள்.

இவையெல்லாம் பொதுவெளியில் நீங்கள் ஏற்படுத்திய மாற்றம். விரிவாகப் பேச வேண்டிய ஒன்று.

உங்களால் உருவாக்கப்பட்ட பலர் இன்று பல இடங்களில் இருந்தாலும், உங்கள் மீது அதே மரியாதையுடன்தான் இன்றும் இருக்கிறார்கள்.

நண்பர் அருணின் பதிவைப் பகிர்ந்திருந்தீர்கள்.  ஒருவரைப் படித்து அடுத்த கட்டத்துக்கு நகர்வதுதான் வளர்ச்சி. ஆசான் என யாரையும் நினைக்ககூடாது என்பது அவர் பார்வை.

என்னதான் அடுத்தடுத்துப் படித்தாலும் உங்களை மட்டுமே குரு என பலர் நினைப்பதற்குக் காரணம் எழுத்துக்கும் எண்ணத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளியற்ற உங்கள் வாழ்க்கைதான்.

உங்கள் எழுத்தும் வாழ்வும் வேறுவேறல்ல.  எழுத்து எனும் வேள்வித்தீயில் உங்களையே ஆகுதியாகப் படைப்பவர் நீங்கள்.

இதனால்தான் உயர்ந்த எழுத்துகள் எதைப்படித்தாலும் உங்களை அதில் காண முடிகிறது.

ஜோர்பா என்ற கிரேக்கனின் கொண்டாட்டம், சித்தார்த்தா நாவலின் தேடல், மிர்தாதின் புத்தகம் தரும் தரிசனம் எல்லாவற்றையும் உங்கள் எழுத்துக்களில் பார்க்கிறோம்.

ஜெயமோகனின் சிறுகதை ஒன்றில், ஏழ்மை காரணமாக குற்றவாளி ஆகி, போலிசில் பிடிபட்ட இளைஞன் இப்படி கூறுகிறான்:  சுந்தர ராமசாமியை அடிக்கடி எங்கள் கல்லூரியில் பார்ப்பேன்.  அவரிடம் போய்ப் பேசிய்ருந்தால் என் வாழ்க்கை வேறு திசையில் நகர்ந்திருக்கும்.

அந்த வரி மிகவும் ஆழமானது.  கடுமையான சர்ச்சைகளுக்கு,  கறாரான அணுகுமுறைக்குப் பேர்போன எழுத்தாளர்களிடம் குடியிருக்கும் கனிவு வியப்புக்குரியது.

’உங்களை சண்டைக்காரன் என நினைத்தேன், இவ்வளவு இனிமையாக பேசுகிறீர்களே’ என ஒரு டீனேஜ் மாணவன் ஒரு சந்திப்பில் உங்களிடம் கேட்டான்.

நீங்கள் சிரித்தபடி, இலக்கியவாதிகள் சமதளத்தில் இருப்பவர்கள். எனவே கருத்தியல் ரீதியாகக் கடுமையாக மோதுகிறோம்.  மற்றபடி தனிப்பட்ட விரோதம் கிடையாது.  என் இயல்பான சுபாவம் இதுதான் என ஒரு நண்பனைப்போல் அவனிடம் பேசினீர்கள்.

கனிந்து விட்டீர்கள் என சிலர் புதிதாகக் கண்டுபிடித்திருப்பது மகிழ்ச்சி.

இலக்கிய மதிப்பீடுகளில் கறார்த்தனம், பழகுவதில் கனிவு என்பது என்றும் உங்களிடம் இருப்பதுதான்.

என்றென்றும் உங்கள் மாணவன்,

பிச்சைக்காரன்.

”பிச்சைக்காரனின் மேற்கண்ட கடிதத்துக்கு ’உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி’ என்று ஒரு வரி எழுதி விட்டு விட்டு விட வேண்டியதுதானே, இதைப் போய் பொதுவெளியில் வெளியிட்டு… இதெல்லாம் உனக்கு லஜ்ஜையாக இல்லையா?  ஒரு முதிர்ந்த எழுத்தாளன் இப்படியெல்லாம் செய்யலாமா?” என நான் நூறு முறை கேட்டுக் கொண்டேன்.  எனக்கு ஈகோ கிடையாது.  அதனால் இந்தக் கடிதம் என் ஈகோவை சந்தோஷப்படுத்தவும் வாய்ப்பில்லை.  இருந்தும் இதை ஏன் லஜ்ஜையே இல்லாமல் வெளியிடுகிறேன் எனில் அதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது.  தியாகய்யரின் நிதி சால சுகமாவுக்கே திரும்பவும் செல்வோம்.

பர்த்ருஹரி வைராக்ய சதகத்தில் சொல்கிறார்:

அவஸ்யம் யாதராஸ் சிரதரம் உஸித்வாபி விஷயா
வியோகே கோ பேதஸ்த்யாஜதி ந ஜானோ யத் ஸ்வயம் அமுன:
வ்ரஜந்த: ஸ்வாதந்த்ரயாத அதுலபரிதாபாய மனஸா:
ஸ்வயம் த்யாக்தா ஹ்யதே ஷம்சுகம் அனந்தம் வித(த)தி:

இதன் அர்த்தம்:

எத்தனை காலம் வாழ்ந்தாலும் இந்த உலகப் பொருட்கள் நம்மோடு வரப் போவதில்லை.  அவ்வாறெனில் அவற்றை நான் விடுவதற்கும் அவை நம்மை விட்டுப் போவதற்கும் என்ன வேறுபாடு?  பொருள்களிலிருந்தும் ஆசைகளிலிருந்தும் ஒருவன் விலகினால் அந்த சுதந்திரம் அவனுக்கு அளவற்ற ஆனந்தத்தையும் நிம்மதியையும் தராதா?   பொருளாசையை விட்டொழிக்க இந்தக் காரணம் ஒன்றே போதாதா? 

அதனால்தான் தியாகய்யர் கேட்கிறார். எந்தச் சூழ்நிலையில்?  வீட்டில் வறுமை.  உஞ்ச விருத்தி செய்தால்தான் அடுப்பில் உலை.  உலகமோ அவரது இசை ஞானத்தைப் போற்றிக் கொண்டாடுகிறது.  மன்னரின் தூதனே வீடு தேடி வந்து மன்னரின் பரிசுப் பொருட்களை குவித்திருக்கிறான்.  தமையனோ “நீ என்ன பைத்தியமா?  கிரகக் கோளாறா?  ஏன் உன் ஞானத்தைப் பொருளாக மாற்றக் கூடாது?  ஏன் இப்படிப் பிச்சை எடுத்து அலைகிறாய் என்று தினந்தோறும் கேட்கிறார்.  அப்போது கேட்கிறார் தியாகய்யர், தன் மனதைப் பார்த்து.

மநஸா, நிதி சால சுகமா… ராமுனி சந்நிதி சேவ சுகமா?
நிஜமுக பல்கு – உண்மையை சொல்லு!

தயிரும் பாலும் வெண்ணையும் ருசியா? ராமநாமம் ருசியா? பாவத்தைப் போக்கும் கங்கையில் குளிப்பது புனிதமா?  இந்த்ரிய சுகங்களைத் தேடும் துர்க்கந்த வாழ்வான கிணற்றுக் குளியல் சுகமா? 

மமத பந்தன யுத நரஸ்துதி சுகமா?
மமதை கொண்ட மனிதர்களைத் துதிப்பது சுகமா?

ஸுமதி த்யாகராஜநுதுநி கீர்த்தந
நல்ல புத்தியுள்ள தியாகராஜனால் புகழப்பட்ட ராம கீர்த்தனம் சுகமா?

சுமதி.  சுமங்கலி.  அமங்கலி. ஸுமதி த்யாகராஜ.  நற்சிந்தனையுள்ள தியாகராஜன்.  அவ்வாறாகத்தான் நான் என்னையே நினைத்துக் கொள்கிறேன்.  ஒரு குஜராத்தி நாட்டுப்புறக் கதை உண்டு.  ஒருவனுக்கு எக்கச்சக்கமான கடன்.  எப்படிக் கடனை அடைப்பது என்று தெரியவில்லை.  தற்கொலை செய்து கொள்வது ஒன்றே வழி.  யோசித்தான்.  பைத்தியத்தைப் போல் நடித்தான்.  விட்டு விட்டார்கள்.  அவனும் வாழ்நாள் முழுவதும் பைத்தியமாகவே வாழ்ந்தான்.  ஆனால் நிஜத்தில் பைத்தியம் இல்லை.  இந்தக் கதை கேத்தன் மேத்தா இயக்கிய பவானி பவாய் என்ற படத்தில் வருகிறது.  1980-இல் வெளிவந்த படம்.  நஸ்ருத்தீன் ஷா, ஓம் புரி, ஸ்மிதா பாட்டில் நடித்த அற்புதமான படம்.  இந்தக் கதை மூலம் நான் பெற்றுக் கொண்ட ஞானம் என்னவென்றால், நாம் நல்லவனாக நடிக்கவாவது செய்வோம்; நாளடைவில் அப்படியே ஆகி விடுவோம் என்பதுதான்.  எனவே, பிச்சைக்காரனின் கடிதத்தில் உள்ள புகழ்ச்சி மொழிகளை புகழ்ச்சி மொழிகளாகக் கொள்ளாமல் தினந்தோறும் அவை உண்மை என்றே நம்பி தியானிக்கிறேன்.  நாளடைவில் நான் அவ்வாறே ஆவேன்.  இன்ஷா அல்லாஹ்!

முடியுமானால் நண்பர்கள்/வாசகர்கள் நன்கொடை/சந்தா அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai