ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி : கதை வாசிப்பு: வித்யா சுபாஷ்

மேற்கண்ட கதையை தில்லியில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நேரத்தில் அதன் விளைவாக தில்லியில் 3000 சீக்கியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வைத்து எழுதினேன்.  அந்த சீக்கியப் படுகொலைகளில் திர்லோக்புரி என்ற பகுதியில் மட்டும் 2000 சீக்கிய ஆண்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  அந்தக் கொலைகள் நடந்த ப்ளாக்குக்கு எதிர்சாரியில்தான் நான் வசித்தேன்.  அதனால் அதை நான் பார்க்க நேர்ந்தது.  இது ஒரு நேரடி சாட்சியக் கதை.  இதை கோமல் சுவாமிநாதன் நடத்திய சுபமங்களாவில் எழுதிய போது குற்றாலம் பட்டறை நடந்தது.  அங்கே போயிருந்தேன்.  எனக்கு 45 வயது இருக்கலாம்.  அப்போது 75 வயதான முதியவர் ஒருவர் சாஷ்டாங்கமாக என் காலில் விழுந்து விட்டார்.  திர்லோக்புரி கதையை எழுதிய உங்களை வணங்குகிறேன் என்று அவர் சொன்ன வாக்கியம்.  கதையை நானா எழுதினேன்?  3000 சீக்கியர்களைக் கொன்ற ரத்த வெறியர்கள் அல்லவா எழுதினார்கள்?  கலை அப்படித்தான் உருவாகிறது. 

அந்தக் கதையை என் ஆங்கில மொழிபெயர்ப்பாளரும் தேர்ந்த வாசகியுமான வித்யா சுபாஷ் வாசித்திருக்கிறார்.  ஏற்கனவே ராம்ஜியின் அல்லிக்கேணி நாவலைப் படித்து அந்த வாசிப்பு மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.  வித்யாவின் தமிழ் உச்சரிப்பு, குரலின் ஏற்ற இறக்கம் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது.  அவருக்கு என் பிரத்யேக நன்றி.  எப்போதும் போல் ராம்ஜிக்கும் காயத்ரிக்கும்.  இந்த மூவரும் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  நன்றி என்ற வார்த்தை தமிழில் ஒரு ஆழமான உணர்வு வெளிப்பாட்டுக்கானதாக இல்லை.