பூச்சி 69

அன்புள்ள சாரு அப்பாவிற்கு, 

என் கண்களில் கண்ணீருடன் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இதுதான்.

நான் உங்களை என் இலக்கியத் தந்தையாகக் கருதுகிறேன். இன்று என் கண்களில் வழிந்தோடும் வலிமிகுந்த கண்ணீர் உங்களுக்காக.

அழைத்துப் பேசி விட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் உங்களையும் சங்கடத்தில் ஆழ்த்த மனம் வரவில்லை.

விஷயத்திற்கு வருகிறேன். முரகாமியின் தீவிர வாசகன் நான். நீங்கள் தேடிப் பார்த்தாலும் அவருடைய ஒரே ஒரு நேர்காணல்தான் youtubeஇல் கிடைக்கும்.

தேடினாலும் அதிகம் தகவல் கிடைக்காத ஒரு எழுத்தாளர். அது அவருடைய வாழ்க்கை, அவருடைய உரிமை ஏற்கக்கூடியது தான். இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் இன்று நடந்ததோ முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. மே பனிரண்டாம் தேதி தி கார்டியன் வலைத்தளத்தில் முரகாமி  மே-22 அன்று வானொலியில் இசை நிகழ்ச்சி  ஒன்று தொகுக்க உள்ளார் என்று  வாசித்தேன்.

அளவுகடந்த சந்தோசம் அன்று.  பத்திற்கும் மேல் அவருடைய புத்தகத்தைப் படித்திருக்கிறேன். என் தங்கை ஜப்பான் புத்தங்கள் மற்றும் படங்கள் மீது ஈர்ப்பு கொண்டு இப்போது ஜப்பானில் வேலை செய்து கொண்டு இருக்கிறாள் .  

இன்று மாலை அந்த நிகழ்ச்சி தொடங்கியவுடன் என்னை அழைத்து ”ஆரம்பித்தது” என்று கூறி சில இணைப்புகளைப்  பகிர்ந்தாள். அவை எதுவும் வேலை செய்யவில்லை. நான் மற்ற பல வலைத்தளங்கள், ஜப்பான் ரேடியோ போன்ற மென்பொருள் மூலம் முயற்சி  செய்து தோற்றுப் போனேன். 

விட்டுக்கொடுக்க மனம் இல்லை. பல நாள் கனவாக இருந்தது. அவர் ஜப்பானிய மொழியில் பேசுவதைக் கேட்க வேண்டும் மற்றும் அவர் வீட்டில் உள்ள vinyl player மூலம் பாட்டுக் கேட்க வேண்டும் என்று. 

இறுதியாக vpn மூலம் முயன்று பார்த்தேன். ஆனால் அந்த வலைத்தளம் LOCATION சரி பார்த்தபின்பு தான் வேலை செய்யும் என்று கூறியது. முயற்சியைக் கைவிட்டேன். கோபம் எரிமலையாக வெடித்தது. 

உலகமே படிக்கும் ஒரு எழுத்தாளன்  – ஒரு புத்தகம் எழுதினால் கோடியில் புரளும் எழுத்தாளன் –  pandemic நேரத்தில் வெளியே வந்து தன் நாட்டு மக்களிடம் மட்டும் பேசுகிறான். உலகம் முழுவதும் பைத்தியம் போல் அவர் புத்தகங்களை வாசிக்கும் வாசகன் என்ன பாவம் செய்தான்? 

என் தங்கையிடம் ஜப்பானியர்கள் மற்றும் அவர்களின் closed culture system பற்றி வசை பாடினேன். நான் என்ன செய்வேன் என்று கூறினாள்.  இதேபோல் Studio Ghibli தங்களுடைய குறும்படங்களை ஜப்பானில் உள்ள அவர்களின் சொந்த அருங்காட்சியகம் தவிர உலகில் வேறெங்கும் பார்க்க இயலாததாகச்  செய்திருக்கிறார்கள். 

முராகமி விரும்பிய இசை மற்றும் அதைத் தன் இசைத்தட்டில்  பாடச் செய்வதே அந்த நிகழ்ச்சியின் நோக்கம். அதே சமயத்தில்  தான் படித்த புத்தகம், அதை எவ்வாறு அணுக வேண்டும், உலக இலக்கியத்தின் பரந்த வாசிப்பின் முக்கியத்துவம்  போன்றவற்றை இலவசமாகத் தரும் உங்களை நான் என்னவென்று சொல்வது. வெறும் இசை நிகழ்ச்சிக்கு ஏன் அதிக விளம்பரம். The Guardian பத்திரிகையில் போட்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு பின்பு அது உலக நிகழ்ச்சி கிடையாது என்று கூறுவது எவ்வாறு இருக்கிறது. என் தங்கையிடம் அவர்களைப் பற்றி வசைபாடினேன் என்று கூறினேன் அல்லவா, அதில் ஒரு வரி, “அவன் பத்து ஜென்மம் எடுத்தாலும் சம்பத்தின் இடைவெளி நாவல் போல் ஒன்று எழுத முடியாது.”  என் தங்கை, “சரி, விடு… நீ தான் கலைகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிடக் கூடாது என்று சொல்லுவாய். இன்னைக்கு என்னாச்சு உனக்கு?” என்று பதில் அளித்தாள். 

ஆனால் பாருங்கள், நம் ஊரில் உள்ள சில வாசகர்கள்  முராகாமிக்கு நோபல் தரவேண்டும் என்று இணையத்தில் சண்டை போடுகிறார்கள். 

சம்பத்தின் இடைவெளி, எம்.வி.வெங்கட்ராம் காதுகள், நகுலனின் கவிதைகளை எல்லாம் கொண்டாட மறந்த கூட்டம்தான் நாம். நீங்கள் தமிழ் எழுத்தாளரின் வாழ்வைப்  பற்றிப் பேசும்போது இருந்த வலி இன்று என் உடலில் உணர்கிறேன். இதை உலகம் முழுவதும் வெளியிடுங்கள், ஜப்பான் மொழி தெரியவில்லை என்றால் என்ன, பாடல் ஆங்கிலம்தானே என்று ஏன் அந்த எழுத்தாளன் நினைக்கவில்லை என்று கோபம். ஏன் இவ்வாறு அவர் செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டேன்  என்றால் அவர் புத்தகம் ஜப்பானில் மட்டும் விற்கவில்லை. உலகெங்கும் ரசிகர்கள் கூட்டம் தங்கள் மொழியில் உள்ள இலக்கியப் புத்தகங்களை விட அதிக விலை கொடுத்து வாங்கும் புத்தகம் அவருடையாது.  இப்படியெல்லாம் எதிர்பார்ப்பது மூடத்தனம் என்று எனக்கு நானே கூறிகொண்டேன்.

இந்தக் கோபம் பற்றி அலசி ஆராய்வதற்குள் உங்கள் கட்டுரைகளின் முடிவு என் கண் முன் வந்தது. “www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது” என்று தொடங்கும் பத்தி. 

என் கண்களில் கண்ணீர் நிரம்பியது. என் மனைவி பயந்துவிட்டாள். ஏன் அழுகிறாய் என்று பல முறை வினவினாள். என்ன நடக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை, எனக்கும்தான். 

என் இலக்கியத் தந்தை, என்னைப் புதியவனாக உயிர்த்தெழ வைத்த ஆசான் வாழ்க்கையை இலக்கியத்திற்காக அர்ப்பணித்த மனிதன் தன் கட்டுரைகளை முடிக்கும் போது “முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று முடிக்கிறான். 

முடியவில்லை அப்பா. யார்மீது கோபம் என்று தெரியவில்லை. ஆனால் முராகாமியின் நிலையில் இருக்க வேண்டிய என் அப்பா அப்படி இல்லை என்ற ஒரு எண்ணம் என்னை உலுக்கி விட்டது. இதோ என் எழுத்து, படித்துக் கொள்ளுங்கள்… இதோ நான் பேசுகிறேன், கேட்டுக் கொள்ளுங்கள்…  என்று கூறும் ஆசானைக் கண்டுகொள்ளாத சமூகத்தை என்ன செய்வது?

மேலே இருக்கும் அந்த இரண்டு வரிகளை எழுதும் போது மீண்டும் கண்ணீர் வழிந்தது. அறையைச் சாத்திவிட்டு தனிமையில் இருக்கிறேன்.   இதில் நான் எழுதியதை விட எழுதாமல் விட்டது தான் என் உண்மையான வலி. 

பின் குறிப்பு: முராகாமியின் அந்த நிகழ்ச்சி ஏதோ ஒரு வலைத்தளத்தில் ஒளிபரப்பிக் கொண்டியிருக்கலாம்.  ஆனால் அந்தத் தகவல் வெளிப்படையாக இல்லை. எப்போதும்போல் மர்மமாக அனைவரின் ஏக்கத்தைச் சம்பாதிக்கும் விஷயமாக இருக்கிறது.

என்னால் முடிந்த பணம் மற்றும் பிராத்தனை தவிர வேறொன்றும் கொடுக்க இயலாமல் இருக்கும் வாசகன். 

கண்ணீருடன் முடிக்கிறேன்.

இப்படிக்கு உங்கள் மாணவன் 

கார்த்திக்.

கார்த்திக்கின் உணர்ச்சிகரமான கடிதம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இது ஐந்தாவதாக இருக்கும்.  எல்லா கடிதங்களுமே இப்படித்தான்.  இந்தக் கடிதத்தை மட்டும் வெளியிடுவதன் காரணம், முராகாமி.  நேற்றே முராகாமி பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து பிறகு வேண்டாம் என்று விட்டு விட்டேன்.  இன்று கார்த்திக்கும் இத்தனை எழுதிய பிறகு எழுதாமல் இருக்க முடியவில்லை.  நேற்று ஏன் முராகாமி பற்றி நினைத்தேன் என்றால், நான் மிக அணுக்கமாக உணரும் ஒரு சக எழுத்தாளர் முராகாமி பற்றி எழுதியிருந்தார்.  பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் அவரது முதல் புத்தகத்திலிருந்து நேற்று வந்த புத்தகம் வரை என்னிடம் உள்ளன.  மிக இளையவர், அவரது மாணவப் பருவத்திலிருந்தே அவரை நான் அறிவேன் என்ற போதிலும் பல சமயங்களில் அவரது எழுத்தைப் படித்து வியந்திருக்கிறேன்.  எப்படி இவர் நாம் நினைப்பதையெல்லாம் எழுதி விடுகிறார் என்பதுதான் என் வியப்புக்குக் காரணம்.  ஆனால் ஏதோ காரணத்தால் அவரைப் பற்றி எழுதாமலே காலம் கடந்து விட்டது. அப்படிப் பல சமயங்களில் நடக்கும்.  தேவதேவன் எனக்கு மிகப் பிடித்த கவிஞர்.  தமிழில் எனக்கு ஆகப் பிடித்த இரண்டு கவிஞர்கள் என்று கேட்டால் தேவதேவனும், தேவதச்சனும் என்று சொல்வேன்.  இருவரைப் பற்றி – அதிலும் குறிப்பாக தேவதேவன் பற்றி நான் ஒரு வார்த்தை எழுதியதில்லை.  ஜெயமோகன் அவரது நெருங்கிய நண்பர்.  ஜெ. அவர் பற்றி அதிகம் எழுதியிருக்கிறார்.  அதையெல்லாம் ஒன்று விடாமல் படிப்பேன்.  அப்படித்தான் நான் விரும்பிப் படிக்கும் பலரைப் பற்றி எழுதாமலே போய் விடுகிறது.   இப்போது ஏன் பெயரைச் சொல்லவில்லை என்றால், முன்பே எழுதியிருக்க வேண்டும் என்பதுதான்.  இப்போது எழுதினால் அதற்கு வேறு காரணம் கற்பித்து என்னுடைய ஆத்மார்த்தமான ரசனையைக் கொச்சைப்படுத்துவர்.  ஒரே ஒருமுறை மதுரை அருணாசலம் “ஏன் சாரு இன்னார் பற்றி நீங்கள் எதுவுமே எழுதியதில்லை?” என்று கேட்டபோது ஒரு மணி நேரம் பேசினேன்.  அசந்து போய் விட்டார்.  ஐயோ, இதை அவர் கேட்டால் திக்குமுக்காடிப் போய் விடுவாரே என்று பலமுறை சொன்னார்.  ஒரே ஒரு முறை அவரோடு போனில் பேசுங்களேன் என்றார்.  அவர் அந்த எழுத்தாளரின் நண்பர். அப்படியெல்லாம் இல்லை அருணா, இப்போது நான் என்ன தேவதேவனோடு பேசிக் கொண்டிருக்கிறேனா என்ன, அவர் குரல் கூட எனக்கு எப்படி இருக்கிறது என்று தெரியாதே என்றேன். 

எந்த ஒரு சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் நாம் என்ன நினைத்தோமோ அதை எழுதியிருக்கிறாரே என்று நினைப்பேன்.  இதை காயத்ரியிடம் சொன்னபோது, ஆமாம், உங்களுக்குப் பிடித்த எல்லோரைப் பற்றியுமே அப்படித்தான் சொல்வீர்கள் என்றாள்.  அடப்பாவி, ஸேம் சைட் கோல் அடிக்கிறாளே என்று நினைத்துக் கொண்டேன்.  அப்படி நான் யாரைப் பற்றியும் நினைத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.  எனக்கு மிகவும் நெருக்கமான சீனியைப் பற்றியும் நினைத்ததில்லை.  எழுத்து அளவில் எனக்கு மிக நெருக்கமான அசோகமித்திரனைக் குறித்தும் அப்படி நினைத்ததில்லை.  அவரது கருத்துக்கள் பல இந்துத்துவம் சார்ந்ததாக இருக்கும்.  இப்படி ஒரு அரசியல் பார்வையை வைத்துக் கொண்டு எப்படி இவர் கலையில் இந்த அசத்து அசத்துகிறார் என்றே வியந்ததுண்டு.  மற்றபடி கருத்தளவில் நான் கிழக்கு என்றால், இல்லை அது மேற்கு என்பார்கள் என் வாசகர் வட்டத்தினர்.  அதில் முதல் ஆளே காயத்ரிதான்.  பல சமயங்களில் கடுப்பாகி நீங்களெல்லாம் முதலில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் போய்ச் சேருங்கள் என்று கூட சொல்லியிருக்கிறேன்.  ஆக, நாம் நினைப்பதை இவர் எழுதுகிறாரே என்று நான் நினைப்பது அரிதாகத்தான் நடக்கும்.  அப்படிப்பட்ட எனக்கு சமீபத்தில் அந்த எழுத்தாளர் முராகாமி பற்றி எழுதியதும் பெரிதும் அதிர்ச்சி.  ஏனென்றால், எனக்கு முராகாமியைப் பிடிக்காது என்று ஆரம்பிக்கும் அவர் எனக்கு ஏன் முராகாமியைப் பிடிக்காதோ அதே காரணத்தைச் சொல்லியிருந்தார். 

ஆனால் அது ரொம்பவும் எளிதுகூட.  ஒரு தமிழ் உதாரணம் சொல்கிறேன், கவனியுங்கள்.  என்னிடம் எத்தனையோ பேர் வந்து சுஜாதா மாதிரி யாரும் வராது அப்படி இப்படி என்று அளப்பார்கள்.  அவர்களிடமெல்லாம் நான் கேட்கும் ஒரே கேள்வி, உங்களுக்கு அசோகமித்திரன் தெரியுமா?  தெரியாது.  அப்போன்னா பொத்திக்கிட்டு போ.  இதுதான் என் பதில்.  அதேதான் முராகாமி விஷயத்திலும்.  முராகாமியை ஏன் பிடிக்காது என்றால், யாசுநாரி கவாபாட்டாவைப் பிடிக்கும்.  கவாபாட்டாவைப் படித்தவர்களுக்கு முராகாமி சாதாரணம்.  நான் கவாபாட்டாவோடு யூகியோ மிஷிமாவையும் சேர்த்துக் கொள்வேன்.  ஆனாலும் அந்தச் சிறிய வியாசம் எனக்கு மன உளைச்சலையே அளித்தது.  ஏன் முராகாமியைப் பிடிக்காது என்று ஒரு பதிவை எழுதுகிறோம் இல்லையா?  அங்கேதான் முராகாமி நம்மை வெல்கிறார்.  ஒரு இலக்கிய வாசகரிடையே ஒரு தவிர்க்க இயலாத்தன்மையை உருவாக்குகிறார்.  முராகாமியைப் படித்ததில்லை என்று சொல்ல முடியுமா?  யாராலும் முடியாது.  பிடிக்கவில்லை என்றாவது ஒரு கட்டுரை எழுதித்தான் ஆக வேண்டும்.  ஆனால் என்னுடைய ஆறு நாவல்களைப் பற்றி என் சக எழுத்தாளர்கள் யாருமே படித்ததாக என்னிடம் சொன்னதில்லை, லக்ஷ்மி சரவணகுமார் ஒருவரைத் தவிர.  வழக்கம் போல் ஜெயமோகன் தான் ஸீரோ டிகிரி பற்றி விரிவாக மலையாள சூழலில் பேட்டி அளித்திருக்கிறார். 

நம் மொழி சார்ந்த எழுத்தாளனாக இருந்தால் அவனது மரணத்துக்குப் பிறகுதான் பேச வேண்டும் போல் இருக்கிறது.  உயிரோடு இருந்தால் ஒரு தயக்கம் இருக்கிறது.  சாருவின் எழுத்து ஏன் எனக்குப் பிடிக்கவில்லை என்று ஏன் யாருமே எழுத முன்வரவில்லை?  இம்மாதிரி தளைகளிலிருந்து விடுபட்ட இரண்டே எழுத்தாளர்கள் என ஜெயமோகனையும் என்னையும்தான் சொல்வேன்.  சுந்தர ராமசாமியின் புனைவுகள் ஏன் எனக்குப் பிடிக்கவில்லை என்று நான் விலாவாரியாக எழுதியிருக்கிறேன்.  நான் சொல்வது சரியா இல்லையா என்பது வேறு விஷயம்.  ஆனால் பேசியிருக்கிறேன்.  ஆனால் என்னைப் பற்றி யாருமே வாய் திறக்கவில்லை. 

முராகாமிக்கு வருவோம்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கல்லூரி மாணவி, இந்த கார்த்திக் போலவேதான் ஒரு முராகாமி வெறியர்.  பார்ப்பதற்குப் பேரழகியாக இருந்த அவர் முராகாமியோடு ஒரே ஒரு முறையாவது நான் படுக்க வேண்டும் என்று சொன்னதும் அதிர்ந்தே போனேன்.  அதை விடுங்கள்.  எனக்கு இயல்பாகவே என் எழுத்தை அவர் படித்திருக்கிறாரோ என்று தெரிந்து கொள்ள ஆவல்.  ஏனென்றால், என் இசை மற்றும் சினிமா கட்டுரைகளை மட்டுமே படித்து என்னைச் சந்திக்கும் இளைஞர்கள் அதிகம்.  அம்மாதிரி சந்தித்தவர் அவர்.  நேரடியாகவும் கேட்கவும் கூச்சம்.  கடைசியில் அவர் என் எழுத்து ஒன்றைக் கூட படித்ததில்லை என்று அறிந்தேன்.  பிறகு அவரைச் சந்திக்க ஆர்வம் காண்பிக்கவில்லை.  என் எழுத்தையே வாசிக்காதவரிடம் நான் என்ன பேச முடியும்?  இப்படிப்பட்ட தீவிர முராகாமி வாசகர்களை நான் சந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.

சரி, இந்த ஆளைப் படித்து விட வேண்டியதுதான் என்று சில ஆண்டுகளுக்கு முன் நார்வேஜியன் வுட்டை எடுத்தேன்.  பிரமாதமான நாவல்.  ஆனால் பாருங்கள், என்னுடைய இன்னொரு நண்பர் ஒருவர், அவரும்நார்வேஜியன் வுட் பற்றி ஆகா ஓகோ என்று எழுதியிருந்தார்.  எல்லாம் சரி.  ஆனால் ராஸ லீலாவின் கால் தூசி வராதே ஐயா உங்கள் நார்வேஜியன் வுட்?  தேகம் என்று ஒரு நாவல்.  பதினைந்து நாளில் எழுதினேன்.  மரணத்தின் விளிம்பில் என்பார்கள் இல்லையா, அதுபோல பித்தநிலையில் விளிம்பில் நின்று எழுதியது.  இன்றும் அதை மனோதத்துவம் தெரிந்தவர்கள் அது ஒரு ஆவணம் என்பார்கள்.  அதை மொழிபெயர்க்கும்போதே ஒருவருக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடித்து விடலாம்.  காமரூப கதைகள் இன்னொரு அதிசயம்.  அப்படி ஒரு நாவலை முராகாமியால் எழுத இயலும்; ஆனால் இன்னும் தொடவில்லை.  நபக்கோவ் தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய் இருவரையுமே நிராகரித்த ஆள்.  நபக்கோவ் ஒரு லெஜண்ட்.  அவருடைய லொலிதாவைக் குறிப்பிடாத பின்நவீனத்துவவாதிகளே கிடையாது.   அப்படிப்பட்ட லொலிதாவை உன்னத சங்கீதம் என்ற ஒரு சிறுகதையால் தாண்டினேன்.   காரணம், லொலிதாவின் நாயகன் குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்பட்டிருக்கிறான்.  உன்னத சங்கீதத்தில் அந்தக் குற்ற உணர்ச்சி இல்லை.  உடனே சில மண்டுகள் என்னை பீடஃபைல் என்று எழுதி அப்படியே நம்பத் தலைப்பட்டன.  எப்பேர்ப்பட்ட மூட ஜென்மங்கள்!  ஜூலியட்டின் வயது 13 என்பதால் ஷேக்ஸ்பியர் பீடஃபைலா?  கதையில் கற்பழிப்பு வந்தால் எழுத்தாளன் ரேப்பிஸ்டா?  அட மூடப் பதர்களா! 

முராகாமியின் சில சிறுகதைகள் உண்மையிலேயே நன்றாக இருந்தன.  விநோத நூலகம் ஒரு உதாரணம்.  ஆனால் அவரது நாவல்கள் – நார்வேஜியன் வுட் தவிர மற்ற எல்லாமே கொடுந்துன்பம்.  நான் நினைக்கிறேன், ஆரம்பத்தில் நன்றாக எழுதிக் கொண்டிருந்த அவர் உலகப் பிரபலம் ஆன பிறகு பதிப்பாளர்கள் கொடுக்கும் நெருக்கடியினால் எழுதிக் குவிக்க ஆரம்பித்து விட்டார் என்று.  இல்லாவிட்டால் 1Q84 என்ற படு திராபையான நாவலை இத்தனை புகழ்பெற்ற ஒருவர் எழுத முடியுமா?  அதுவும் மூன்று பாகங்களால் ஆன ஜப்பானிய மூலம், ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரே புத்தகமாக தலையணை சைஸில் வந்து தொலைந்தது.  ஒரு தமிழ் இலக்கிய அல்டாப் என்னிடம் இதைப் பற்றி சிலாகித்துக் கொண்டிருந்தது.  அது அந்த நாவலின் பெயரை ஐக்யூ எய்ட்டி ஃபோர் என்றே குறிப்பிட்டுக் கொண்டிருந்ததால் கடுப்பான நான் அது 1984 என்றேன்.  க்யூ என்றால் ஜப்பானிய மொழியில் ஒன்பது என்று பொருள்.  ஜார்ஜ் ஆர்வெலின் 1984 நாவல் தலைப்புதான் முராகாமியின் நாவல் தலைப்பும்.  இதையெல்லாம் அல்டாப்பிடம் நான் சொல்லவில்லை.  அது பாட்டுக்கு IQ84தான் என்று அடித்துச் சொல்லியது.  ஏன் ஐயா, ஒன்றுக்கும் ஆங்கில Iக்குமா வித்தியாசம் தெரியாது?  ஒன்று என்றால், அந்த நேர்க்கோட்டின் இடது புறம் ஒரு சாய்மானக் கோடு இருக்கும்.  நாவலில் அந்தக் கோடு இருக்கிறது.  ம், என்னத்தைச் சொல்ல?  ஏற்கனவே அந்த அல்டாப் என்னிடம் மிஷல் வெல்பெக்கின் (Michelle Houllebecq) பெயரை வூலேபெக் என்று வேறு திருத்தியது ஞாபகம் வந்தது.  தவிர, அல்டாப்பின் ஜாதியே வேறு அல்டாப்புக்குப் பேர் போன ஜாதி.  சரி தொலை என்று விட்டு விட்டேன். 

இத்தனை ப்ரக்யாதி பெற்ற 1984 நாவல் பொடி எழுத்தில் 1500 பக்கம்.  மூன்று பாகமும் சேர்த்து.  முதல் அத்தியாயம் ஒரு 25 பக்கம் வரும்.  ஒரு பெண் டாக்ஸியில் போகிறாள்.  டிரைவர் ஒரு சிம்ஃபனி போடுகிறான்.  அதுசரி, ஜப்பானில் டாக்ஸியிலேயே சிம்ஃபனி போடுவார்கள் போல.  அல்லது அந்த டாக்ஸிக்காரன் அப்படியோ என்னவோ.  எனக்கு முராகாமி மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீத ரசிகர் என்பது வேறு ஞாபகம் வந்து தொலைத்தது.  அந்த சிம்ஃபனி யார் போட்டது, எப்போது போட்டார், அவருடைய வாழ்க்கை வரலாறு என்று பக்கம் பக்கமாக நினைக்கிறாள் அந்தப் பெண்.  அதெல்லாம் நாவலுக்கு எந்த விதத்திலும் தேவை இல்லை.  ட்ராஃபிக் ஜாம் ஆகிறது.  அதற்குத்தான் ஊருக்கு உள் வழியாகப் போகலாம் என்றேன் என்கிறார் டிரைவர்.  ஹைவேஸ் வழியாக வந்தால் விரைவாகப் போய் விடலாம் என்று நினைத்தேன் என்கிறாள் பெண்.  என்ன செய்வது என்று இருவரும் யோசிக்கிறார்கள்.  இப்படியே போனால் இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமே என்கிறார் டிரைவர்.  இன்னும் பத்து நிமிடத்தில் போகாவிட்டால் நான் வந்ததே வீண், என்ன செய்யலாம்?  ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஆனால்…  என்ன ஆனால்?  இல்லை, நீங்கள் மினி ஸ்கர்ட் அணிந்திருக்கிறீர்கள்.  இல்லாவிட்டால் இந்த மெரிடியனைத் தாண்டிக் குதித்து எதிர்ப்பக்கம் போனால் நீங்கள் சொன்ன இடம்.  ஐந்தே நிமிடம்தான்.  ஆனால் கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.  ஓடுகின்ற கார்கள் என்றால் கூடப் பரவாயில்லை.  நின்று கொண்டிருக்கும் கார்கள்.  மெரிடியனை ஏறிக் குதித்தால் எல்லார் கவனமும் உங்கள் மீதுதான் குவியும்.  உங்கள் ட்ரெஸ்தான் இப்போதைய பிரச்சினை.  அது பரவாயில்லை.  இந்தாருங்கள் பணம்.  நான் கிளம்புகிறேன்.  ஜட்டி தெரியத் தெரிய ஏறிக் குதிக்கிறாள்.  இதுதான் முதல் அத்தியாயம்.  25 பக்கம். ங்கொய்யால.   என்னய்யா இது நாவல்?  முழுக்க முழுக்க சிம்ஃபனி பற்றி டிரைவரும் பெண்ணும் பேசிக் கொள்வதுதான்.   இவரைத்தான் உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது.  நார்வேஜியன் வுட்டில் ஒரு பதின்மூன்று வயதுப் பெண் நடுத்தர வயது மங்கை ஒருத்தியை பாலியல் பலாத்காரம் செய்து அவளை மனநோயாளியாக ஆக்கி விடுவாள்.  அது ஒரு intenseஆன இடம்.  ஆனால் அது போன்ற நூற்றுக்கணக்கான  கொடும் தருணங்களை நான் ராஸ லீலாவிலும் தேகத்திலும் காமரூப கதைகளிலும் உருவாக்கியிருக்கிறேன்.  ஆனால் முராகாமியைத்தான் தெரியும்.  எல்லாம் பெருமாள் முருகனுக்கு அடித்தது போன்ற லக்கி ப்ரைஸ்தான்.  ஜாதகத்தில் விபரீத ராஜ யோகம் இருக்க வேண்டும்.  அவ்வளவுதான். 

அதனால் கார்த்திக் வருத்தப்படுவது போல இதிலெல்லாம் ரொம்ப ஈடுபட்டால் வருத்தம்தான் மிஞ்சும்.  போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.  அசோகமித்திரன் வாழ்ந்ததெல்லாம் ஒரு எழுத்தாளன் வாழ வேண்டிய வாழ்க்கையா? அதைப் பார்த்தால் நானெல்லாம் அம்பானி.  பணம் இல்லையென்றாலும் நண்பர்களைச் சொல்கிறேன்.  பொலிவியாவிலிருந்து என் பயணத் திட்டத்தையே மாற்றிக் கொண்டு சீலே போய் விட்டேன்.  பொலிவியாவின் உயரத்தினால் என்னால் மூச்சு விட முடியவில்லை.  பயணத் திட்டம் மாறியதால் எக்ஸ்ட்ராவாக ஆறு லட்சம் ரூபாய் தேவைப்பட்டது.  முகநூலிலும் என் வலைத்தளத்திலும் நிலைமையை எழுதினேன்.  அறையிலேயே ஒரு வாரம் முடங்கிக் கிடக்கலாம்.  பணம் தேவையில்லை.  ஆனால் என் கனவு நகரான சாந்த்தியாகோ போய் அறையிலேவா முடங்கிக் கிடப்பது? ஆறு லட்சம் ரூபாயையும் என் வாசகர்கள்தான் ஒரே வாரத்தில் அனுப்பி வைத்தார்கள்.  இதெல்லாம் எந்த எழுத்தாளனுக்குக் கிடைக்கும்?  ஆனால் பொதுவாகத் தமிழ் எழுத்தாளர்களின் நிலை ஏன் மிக மோசமாக இருக்கிறது என்றால், புத்தகம் 200 பிரதிதான் விற்கிறது.  அந்த நிலை மாறும்வரை பணத் தேவை இருந்து கொண்டேதான் இருக்கும்.   

அதனால் கார்த்திக், அசோகமித்திரன் மாதிரி நான் இல்லை.  எனக்குப் பிறகு வரும் எழுத்தாளர்களின் நிலை இன்னும் கொஞ்சம் சீராகும்.  நிலைமை நிச்சயம் மாறும்.  அதுவரை என்ன காத்திருக்கவா முடியும்?  கொண்டாடுவோம் வாருங்கள் வாழ்க்கையை.    

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai