பூச்சி 70

நேற்றைய அத்தியாயத்திலேயே வந்திருக்க வேண்டியது.  விடுபட்டு விட்டது.  மக்களுக்கு – அதாவது பொதுஜனத்துக்கு எப்போதுமே வழிபாட்டுக்குரிய ஒரு பிம்பம் – icon – தேவைப்படுகிறது.  அந்தந்த காலகட்டத்துக்கேற்ப அந்த பிம்பம் வழிபாட்டுக்குத் தகுதி உடையதாகவோ அல்லது வெறும் அட்டைக் கத்தியாகவோ இருக்கிறது.  முன்னதுக்கு காந்தியையும் பின்னதுக்கு அப்துல் கலாமையும் நீங்கள் உதாரணமாகக் கொள்ளலாம்.  கலாம் சமீபத்திய உதாரணம்.  இந்தியாவில் உள்ள மாணவர்கள் கலாமைத் தங்கள் வழிபாட்டு பிம்பமாகக் கொண்டாடினார்கள்.  புரிகிறது.  ஆனால் லட்சோபலட்சம் ஆட்டோக்காரர்கள் ஏன் இயேசு கிறிஸ்து, பரமசிவன், இவர்கள் பக்கத்தில் அப்துல் கலாம் படம் என்று ஏன் வைத்திருந்தார்கள்?  கலாம் இறந்ததும் ஒவ்வொரு தெரு முனையிலும் கலாம் படத்தை வைத்து ஊதுபத்தி ஏற்றி அவருக்கு விடை கொடுத்தார்கள்.  ஒரு வாரம் அந்தப் படம் தெருமுனையில் இருந்தது.  இதே மாதிரியான ஒரு பிம்பம்தான் சர்வதேச இலக்கிய வாசகர்களுக்குத் தேவைப்படுகிறது.  தஸ்தயேவ்ஸ்கி அப்படி ஒரு வார்க்கப்பட்ட ஒரு தெய்வ பிம்பம். 

இப்படிப்பட்ட பிம்ப உருவாக்கத்தில் என்ன ரசாயனக் கலவையெல்லாம் நடக்கிறது என்று பார்த்தால் பெரும் ஆச்சரியக் கதைகளைக் காணலாம்.  இந்த பிம்ப உருவாக்கத்தின் அடிப்படை மூலக்கூறு நெக்ரோஃபீலியாதான்.  பிணத்தைத் தின்னும் மனநிலை.  இதை நாம் பிணத்தை வழிபடும் மனநிலை என்று மாற்றிக் கொள்வோம்.  யார் யாரெல்லாம் கஷ்டப்பட்டார்களோ, ரத்தம் கண்ணீரெல்லாம் சிந்தினார்களோ, பட்டினி கிடந்தார்களோ சுருக்கமாகச் சொன்னால் நிராதரவாக நடுத்தெருவில் நின்றார்களோ – பாரதி மாதிரி, தஸ்தயேவ்ஸ்கி மாதிரி – அவர்களுக்கெல்லாம் வழிபாட்டு பிம்பம் ஆவதற்கான முழுத் தகுதியும் இருக்கிறது.  இன்னும் சரியான உதாரணம், காந்தி.  அவர் நினைத்திருந்தால் பிரதம மந்திரி ஆகியிருக்கலாம்.  நினைத்திருந்தால் எப்படியெப்படியோ வாழ்ந்திருக்கலாம்.  ஆனால் அவர் பதவியை நிராகரித்தார்.  நல்ல ஆடைகளைக் கூட புறக்கணித்து விட்டு ஒரு பிச்சைக்காரனைப் போல் உடை உடுத்திக் கொண்டார்.  கலாமை ஏன் கொண்டாடுகிறார்கள்?  அதே காந்தி ஃபார்முலா.  எப்படியெப்படியோ வாழ்ந்திருக்கலாம்; அவரோ ஒரு எளிய மனிதனாக வாழ்ந்தார்.  பிம்ப வழிபாட்டுக்காரர்களுக்கு டால்ஸ்டாயைப் பிடிக்காது.  டால்ஸ்டாயின் எழுத்து பிடித்தாலும் கூட அவர் ஒரு ஐகான் கிடையாது.  ஏனென்றால், அவர் ஒரு நிலச்சுவான்தார். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரர்.  அதையெல்லாம் அவர் தன்னுடைய பண்ணைக் கூலிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார்.  அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை.  தஸ்தயேவ்ஸ்கியைப் போல் firing squad முன்னால் நின்றாரா?  தஸ்தயேவ்ஸ்கியைப் போல் சைபீரியப் பனிப் பாலைகளில் கைதியாக அலைந்தாரா? பதிப்பாளரிடம் வாங்கிய பணத்துக்கு மாத இறுதிக்குள் நாவலை முடித்துக் கொடுக்க வேண்டும்.  ஆனால் எழுதவோ தட்டச்சு செய்யவோ முடியாமல் நரம்புத் தளர்ச்சி நோயால் கை நடுங்குகிறது.   கெடுவுக்குள் கொடுக்காவிட்டால் அந்தக் கொடூரமான சைபீரியப் பனிப் பிரதேசத்தில் மீண்டும் கைதியாகச் செல்ல நேரிடும்.  இப்படியாகப்பட்ட ஆள்தான் மாபெரும் மக்கள் திரளின் வழிபாட்டு பிம்பமாக ஆக முடியும்.   இப்படிப்பட்ட ஒரு வழிபாட்டு பிம்பம்தான் அப்துல் கலாம்.  சிகரெட் குடிக்க மாட்டார்.  மது அருந்த மாட்டார்.  முஸ்லீமாக இருந்தாலும் வீணை வாசிப்பார்.  முஸ்லீமாக இருந்தாலும் அசைவம் சாப்பிட மாட்டார்.  கிட்டத்தட்ட இந்து.  கிட்டத்தட்ட பிராமணர்.  காட்சிக்கும் எளியவர்.  லஞ்சம் ஊழல் வேண்டியவர்களுக்கு நல்லது செய்து கொடுப்பது – இந்த மாதிரி ஒரு வேலை கிடையாது.  அப்பழுக்கற்ற ஆசாமி.  தூக்கிப் போடுய்யா வழிபாட்டு பிம்பத்துக்கு ஏற்றவர் இவர்தான்.  பாமரனின் ஹீரோ.

இதே பாமர மனப்பான்மைதான் உலகம் பூராவிலும் உள்ள புத்திஜீவிகளிடமும் இலக்கிய வாசகர்களிடமும் கூட உள்ளது.  இவர்களுடைய வழிபாட்டுக்கு அவ்வப்போது பிம்பங்கள் தேவை.  சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை.  கிட்டத்தட்ட நடமாடும் பிரேதம்.  பிம்ப வழிபாடு செய்பவர்கள் யார்?  Necrophiles.  அவர்களுக்கு ருஷ்டியை விட வேறு நல்ல கேஸ் யார்?  ஆள் உயிரோடும் இருக்கிறார்.  பிணத்துக்கும் பிணம்.  மரண தண்டனை விதிக்கப்பட்டு பாதுகாவலர்களின் துப்பாக்கிகளுக்கு இடையே வாழ்பவர்.  நெக்ரோஃபைல்ஸுக்கு அல்வா மாதிரி.  தூக்கி வைத்தார்கள் ஐவரி டவரில்.  இந்த பிம்ப வழிபாட்டில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், பிம்பங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.  கொஞ்ச நாள் ருஷ்டி.  அடுத்தாற்போல் தஸ்லீமா நஸரீன்.  அப்புறம் ஆளே இல்லை.  வழிபாட்டு மேடை காலியாகவே இருந்தது.  அப்போதுதான் வந்தார் பெருமாள் முருகன்.  கொலை மிரட்டல் விடப்பட்டவர்.  உயிருக்கே அச்சுறுத்தல்.  ஊரே திரண்டு வந்து மிரட்டுகிறது.  இலக்கியத் தகுதி இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை.  காலி மேடையில் தூக்கி வைத்து விட்டார்கள்.  எல்லாவிதமான சமூக ஆராய்ச்சிகளையும் செவ்வனே செய்து முடிக்கும் ஒரு சமூகவியல் ஆய்வாளர்,  பெருமாள் முருகனிடம் அவர் நூலில் கையெழுத்து வாங்குவதற்காக வரிசையில் நின்ற போது என் கைகால் நடுங்கியது என்று எழுதுகிறார்.  இதை விட ’எனக்கு சமூகவியலும் தெரியாது, ஒரு புண்ணாக்கும் தெரியாது’ என்று சொல்லும் ஒரு சாதாரண இலக்கிய வாசகனுக்கு பெருமாள் முருகன் எழுதுவது இலக்கியமே அல்ல என்று தெரியுமே?  இந்த சமூகவியல் ஆய்வாளர் புடுங்கிக்கு ஏன் தெரியவில்லை?  இலக்கிய சொரணையுணர்வு கிடையாது, அவ்வளவுதான். 

இம்மாதிரியான வாசகர்களை ஆங்கிலத்தில் lumpen-literati என்று சொல்வார்கள்.  ஒரு மாதிரி படித்த முட்டாள் என்று சொல்லலாம்.  ஆனாலும் லும்பன் லிட்ரேட்டி என்பதற்கு மிகச் சரியாக மொழிபெயர்ப்பு அல்ல.  இலக்கியம் பற்றிய சுரணையுணர்வே இல்லாமல் இலக்கிய வாசகர்களாக அறியப்படும் முழு மூடர்கள் என்று சொல்லலாம்.  இப்படிப்பட்ட லும்பன் லிட்ரேட்டிகள்தான் இன்று பெருமாள் முருகனையும் அவரை ஒத்தவர்களையும் வழிபாட்டு பிம்பங்களாக்கிக் கொண்டிருக்கின்றனர்.   இப்படிச் சொல்வதால் பெருமாள் முருகனும் ஹாருகி முராகாமியும் ஒன்று என்று நான் சொல்லவில்லை.  அகிலனையும் சுஜாதாவையும் ஒப்பிட முடியாது அல்லவா?  பெருமாள் முருகன் அகிலன்.  முராகாமி சுஜாதா.  என்ன, எலீட் சுஜாதா. 

எப்படி இம்மாதிரி முராகாமி போன்ற இலக்கிய நடுவாந்திரங்கள் அகில உலக இலக்கிய பிம்பங்களாக மாறுகிறார்கள் என்பதற்கான தரவுகளையே நான் மேலே எடுத்துக் கூறியிருக்கிறேன்.  ஒரு மொழியில் எத்தனையோ இலக்கிய மேதைகள் இருப்பார்கள்.  ஆனால் அவர்கள் எல்லோரையும் புறந்தள்ளி விட்டு ஒரே ஒரு ஆள் இலக்கிய உலகம் வழிபட்டுக் கொண்டிருக்கும்.  நூறு உதாரணங்கள் இப்போதே கொடுக்கலாம்.  இன்னும் ஒரு கேஸ் ஞாபகம் வருகிறது.  அ. மாதவன்.  இவர் எழுதிய விளிம்புநிலை மனிதர்கள் உலக எழுத்திலேயே கம்மி.  இவர் அடைந்த உயரம் மிகப் பெரியது.  ஆனால் இவரை யாருக்கும் தெரியாது.  ஆனால் குஞ்சு குளுவான்களெல்லாம் ஜி. நாகராஜன் ஜி. நாகராஜன் என்று கரைந்து கொண்டிருக்கும்.  காரணம், அ. மாதவன் சாதாரணமாக ஒரு மளிகைக்கடை வைத்துக் கொண்டு திருவனந்தபுரத்தில் ஒரு சம்சாரியாக வாழ்ந்தார்.  பிம்ப வழிபாட்டுக்கான எந்த அம்சமும் அவரிடம் இல்லை.  ஆனால் ஜி.நாகராஜன் ஒரு பிராமணன்.  என்னடா இது எடுத்த எடுப்பில் ஜாதியைச் சொல்கிறானே என்று முகத்தைச் சுளிக்காதீர்கள்.  விஷயம் இருக்கிறது.  ஒரு ஆஜானுபாகுவான அய்யர்.  டுட்டோரியல் காலேஜில் பேராசிரியர்.  அதுவும் ஆங்கிலம்.  அதுவும் அவர் ஆங்கிலம் நடத்தினால் “இன்று ஜி.என். வகுப்பு எடுக்கிறார்” என்று மதுரை தியேட்டர்களில் ஸ்லைடு போடுவார்கள்.  அப்பேர்ப்பட்டவர் குடி அடிமையாகி, கஞ்சா அடிமையாகி சாக்கடையில் புரண்டார்.  பார்ப்பவர்களிடமெல்லாம் கஞ்சா அடிப்பதற்காக அஞ்சு ரூபாய் கடன் கேட்டார்.  விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி எழுதினார்.  அது ஒரு பாடாவதி எழுத்து.  அதிகமாக ரொமாண்டிஸைஸ் செய்யப்பட்ட ரா. பார்த்திபன் பாணி கதைகள். அதெல்லாம் நமக்கு எதற்கு?  கஞ்சா அடித்தாரா?  இருமி இருமி செத்தாரா?  நாம் யார்?  நெக்ரோஃபைல்.  பிணந்தின்னி.  எடுத்துப் போடு ஜி. நாகராஜனை.  விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுதிய மகோன்னதமான எழுத்தாளர்.  முடிந்தது கதை.  அ. மாதவன்?  போய்யா போ.  அவரைத் தூக்கி அந்தாண்டை போடு.  மளிகைக் கடை வைத்திருந்தவரெல்லாம் ஐகான் ஆக முடியுமா?  இதற்கிடையில் ஒரு விமர்சகர் எழுதினார், ஜி.என்.னின் மனைவி நோயால் சாகவில்லை.  ஜி.என்.தான் கொன்றார்.  ஓ ஜீஸ்.  இலக்கியவாதி ஐகான் ஆவதற்கு இன்னொரு தகுதி.  விளிம்புநிலை அல்லவா? 

ஆக, இந்த வரைமுறை எதற்குள்ளும் அடங்காத, மகா சொகுசுப் பேர்வழியான, பொண்டாட்டிக்குப் பாத்திரம் தேய்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிற சாரு நிவேதிதா ஒரு காலத்திலும் வழிபாட்டு பிம்பம் ஆக முடியாது.  மேலே குறிப்பிட்ட வழிபாட்டு பிம்பங்களிடம் இருக்கும் ஒரு பொதுக் குணத்தை கவனித்தீர்களா?  எல்லோரும் தியாகிகள்.  பலரும் உயிரைக் கொடுத்தார்கள்.  பெருமாள் முருகன் உயிரை விட முக்கியமான எழுத்தையே துறக்கிறேன் என்றார்.  ஆனால் நானோ வாசகர்களிடம் பணம் வாங்குகிறேன்.  அடப்பாவி.  நீயெல்லாம் ஒரு எழுத்தாளனா?  ஆக, தஸ்லீமா நஸரீனுக்கு அடுத்தபடியாக வழிபாட்டு பிம்பம் இல்லாமல் அனாதையாக அலைந்து கொண்டிருந்த ஆங்கில இலக்கிய லும்பன் லிட்ரேட்டிக்குக் கிடைத்ததுதான் ஹாருகி முராகாமி.  அவர் ஒன்றும் தியாகமெல்லாம் செய்யவில்லை.  Sheer luck.  Sheer விபரீத ராஜயோகம்.  தேவ கௌடா பிரதமர் ஆகவில்லையா, அந்த மாதிரி.  சுஜாதா மாதிரி திறமையும் இருந்தது, இல்லையென்று சொல்லவில்லை.  ஜி. குப்புசாமி கேட்பார், என்ன சாரு, அதற்கென்று சுஜாதாவோடு ஒப்பிடுகிறீர்கள்?  தவறில்லை.  சுஜாதா ஜப்பானிய சூழலில் இருந்திருந்தால் முராகாமி மாதிரி எழுதியிருக்கலாம்.  கனவுத் தொழிற்சாலை எழுதியவர்தானே? 

இன்னொரு விஷயம் விடுபட்டது, என் அத்யந்த நண்பர்கள் பற்றி.  நார்வேஜியன் வுட் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள்.  இப்படி ஒரு நாவலைப் படித்ததே இல்லை.  ஆஹா ஓஹோ.  அப்படியென்றால் ராஸ லீலா என்ன?  அப்படியென்றால் நீங்கள் எந்த அடிப்படையில் சாருவோடு பழகுகிறீர்கள்?  எந்த அடிப்படையில் இரவு முழுவதும் அவரோடு பேசிக் களிக்கிறீர்கள்?  ராஸ லீலாவின் நிழலைக் கூட நார்வேஜியன் வுட்டினால் தொட முடியாதே ஐயா?  சரி, என் அத்யந்த நண்பர்கள் என்னைப் பற்றி எழுதும்போது என்ன எழுதுகிறார்கள் என்று பார்த்தால், சாரு பிரமாதமாக சமைப்பார்.  சாரு அருமையாகப் பழகுவார்.  சாரு ஒரு குழந்தை மாதிரி.  நான் என்ன சமையல் கலைஞர் பட்டப்பாவா ஐயா?  சமைப்பதும் நன்றாகப் பழகுவதும்தான் என் அடையாளமா?  என்னுடைய நாவலை நீங்கள் படித்தீர்களா?  அதை உலக இலக்கியத்தில் எந்த இடத்தில் வைப்பீர்கள்?  ஒரு மாதம் என் எழுத்தைப் படித்தார் வாணி கபில்தேவ்.  இவர் பற்றி எழுதியிருக்கிறேன்.  டுபாகோ அண்ட் ட்ரினிடாட் தீவுகளைச் சேர்ந்தவர்.  ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியை.  வி.எஸ். நாய்ப்பாலின் நெருங்கிய சொந்தம்.  என் எழுத்தைப் படித்து விட்டு ஒரு கரீபியன் இலக்கிய இதழில் சாருவின் எழுத்து நபக்கோவுடன் ஒப்பிடக் கூடியது என்று எழுதினார்.  இன்னொரு ஸ்லோவேனிய எழுத்தாளர் Tomaz Salamun ”உங்கள் எழுத்து ஆங்கிலேயர்களுக்குப் புரியாது.  ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்க முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.  அங்கேதான் உங்களைக் கொண்டாடுவார்கள்” என்றார்.  விவேக் நாராயணனும் ஆலன் ஸீலியும் (Allan Sealy) என் எழுத்து பற்றி மதிப்பீடு செய்ததை நான் இணையத்தில் பகிர்ந்திருக்கிறேன்.  மார்ஜினல் மேன் முன்னுரையில் ஆலன் ஸீலி எழுதியிருக்கிறார்.  மலையாள எழுத்தாளர் ஸக்கரியா ஸீரோ டிகிரி நாவலுக்குக் கொடுத்த முன்னுரை என் வாழ்வில் கிடைத்த முதல் விருது.  இத்தனை தம்பட்டமும் எதற்கு என்றால், என் அத்யந்த எழுத்தாள நண்பர்கள் நார்வேஜியன் வுட் பற்றிப் புகழாராம் சூட்டி விட்டு, சாரு நன்றாக சமைப்பார், ரொம்ப நன்றாகப் பழகுவார் என்கிறார்கள்.  நான் யாரையும் மனதில் வைத்துக் கொண்டு இதை எழுதவில்லை.  என்னைப் பற்றி எழுதுகின்ற எல்லா தமிழ் எழுத்தாளர்களையும்தான் சொல்கிறேன்.  இங்கேயும் ஜெயமோகனும் எஸ்.ரா.வும் மட்டுமே விதிவிலக்கு.  எஸ்.ரா. என் எழுத்து பற்றி எக்கச்சக்கமாகப் பேசியிருக்கிறார்.  ஜெ. எழுதியிருக்கிறார்.  அது மலையாளத்தில் இருப்பதால் ஒருவேளை நீங்கள் படிக்காதிருக்கலாம்.  என்னைப் பற்றிய புகழ்ச்சிக் கட்டுரை அல்ல அது.  ஸீரோ டிகிரி நாவலைப் பற்றி அவர் அணுகும் விதம், அவருக்கு அதன் சாதக பாதக அம்சங்கள் ஆகியவை அந்தப் பேட்டியில் உண்டு. 

நான் என்ன சொல்கிறேன் என்றால், எனக்கு ஏன் சாரு நிவேதிதாவைப் பிடிக்காது என்று எழுதுங்கள் என்கிறேன்.  உடனே அவன் வைன் குடிப்பான் என்று ஆரம்பிக்கக் கூடாது.  என்னைப் பாராட்டுபவர்களும் சரி, திட்டுபவர்களும் சரி, என் பழக்கவழக்கங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள்.  நான் என்றால் என் எழுத்து.   சாருவின் எழுத்து எனக்கு ஏன் பிடிக்கவில்லை?  எழுதுங்கள்.  அதுதான் நான் வேண்டுவது.  நண்பர்களிடமும் சொல்கிறேன்.  சாரு நன்றாக சமைப்பார்.  அடேய் பாவிகளா!  என் எழுத்தைப் பற்றி எழுதுங்கள்.  எவனோ ஒரு முராகாமி பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதுகிறீர்கள்.   ஆனால் சாருவோடு தண்ணி அடித்தோம், பாருக்குப் போனோம்.  இதுதான் சாரு நிவேதிதாவின் அடையாளமா?  அப்படியானால் நானும் முராகாமியைப் போல் உங்களால் எட்ட முடியாத இடத்தில் இருந்தால்தான் எழுதுவீர்களா?  அது மரணம்தான்.  ஆகக் கடைசியில் ஆபிச்சுவரியில்தான் ”பார்க்க” முடியும் போல் இருக்கிறது!   

இன்னொரு உதாரணம், நேற்று ஜெகா என்னைப் பற்றி எழுதியது.  சாரு ஒரு ஆள்தான் விகடனை தகிரியமாக விமர்சித்தது.  உடனே ஒருத்தர் வந்து ரெண்டு பேர் டவுசரையும் கழற்றி விட்டார்.  யோவ், எத்தனையோ பேர் விகடனை விமர்சித்து விட்டார்கள், என்னய்யா பேசுகிறாய்?  டேய் ஜெகா.  நீ எங்கே வேண்டுமானாலும் போய் மொக்கை வாங்கு.  என்னையும் ஏண்டா இழுத்துக் கொண்டு போய் மானக்கேடு செய்கிறாய்?  விகடனே ஒரு செத்த பாம்பு.  அதுக்கு ஒரு விமர்சனம்.  அதுக்கு ஒரு தகிரியம்.  ஹெ, இதுவா என் அடையாளம்?  இதைத்தான் சொன்னேன் நண்பர்களே.  என் நண்பர்களுக்கே என்னை அடையாளம் தெரியவில்லை.  ஆனால் நார்வேஜியன் வுட் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதுவார்கள்.

யார் சி.சு. செல்லப்பாவைப் படிக்கவில்லையோ (ஜீவனாம்சம்), யார் க.நா.சு.வைப் படிக்கவில்லையோ (அசுரகணம்), யார் எம்.வி. வெங்கட்ராமைப் படிக்கவில்லையோ (காதுகள்), யார் கு.ப.ரா.வைப் படிக்கவில்லையோ, யார் தி.ஜானகிராமனைப் படிக்கவில்லையோ, யார் நகுலனைப் (நவீனன் டயரி, நினைவுப் பாதை) படிக்கவில்லையோ, யார் ந. பிச்சமூர்த்தியைப் படிக்கவில்லையோ, யார் தி.ஜ.ரங்கநாதனையும், சார்வாகனையும், சா. கந்தசாமியையும் (சாயாவனம்),  ந.முத்துசாமியையும் (நீர்மை), ந. சிதம்பர சுப்ரமணியனையும், அசோகமித்திரனையும் (தண்ணீர்) படிக்கவில்லையோ அவர்கள் தாய் தந்தையற்ற அனாதைகள்.  அவர்கள் சொல்லும் வெளிநாட்டுப் பெயர்களுக்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை.  என் ஊரில் ஆறுமுகம் என்ற ஒருத்தர் அப்துல் காதராக மாறினான்.  அது பற்றிப் பிரச்சினையே இல்லை.  ஆனால் அவன் தந்தையைப் பிச்சை எடுக்க விட்டு விட்டான்.  தெருத்தெருவாகப் பிச்சை எடுத்தார் அறுமுகம் அப்பா.  மனைவி இறந்து போய் ஒற்றை ஆளாக, மறுமணம் செய்து கொள்ளாமல் கொத்தனாராக இருந்து ஆறுமுகத்தை வளர்த்தார்.  இஸ்லாத்தில் இப்படி அப்பனைப் பிச்சை எடுக்கச் சொல்லவில்லை என்பதும் அவனுக்கு ஒருபோதும் அல்லாஹ்வின் அருள் கிட்டாது என்பதும் அவனுக்குத் தெரியாது.  அந்த ஆறுமுகத்தைப் போன்றவர்களே நம் மூதாதையர்களின் பெயர் தெரியாதவர்களும்.  உடனே நீங்கள் குற்றவுணர்ச்சி கொள்ளாதீர்கள்.  உங்களைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குவது என் நோக்கம் அல்ல.  ஆனால் ஜீவனாம்சம் படித்ததில்லை, பல்ஸாக்கின் மதாம் பொவாரி வாசித்திருக்கிறேன் என்று சொல்வீர்களானால் உங்களுக்கு இம்மை மறுமை இரண்டிலுமே மன்னிப்புக் கிடையாது.   இந்தக் கட்டுரைக்கும் கடைசிப் பத்திக்குமான தொடர்பு புரிகிறதா?

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai