141. இன்னும் கொஞ்சம் கனத்த இதயம்…

மன்னிக்கவும் சாரு , நீங்கள் என்ன காரணம் சொன்னாலும் ஒரு கலைஞநின் இறப்பை மக்கள் தங்கள் துக்கமாக நினைப்பது தவறெனில் நாளை உங்களுக்கும் உங்கள் பதிவே பதில்.மீண்டும் மன்னிக்கவும்.

இப்படியாக என் பதிவுக்கு ஒரு பதில் வந்துள்ளது.  நீங்கள் சொல்வதில் உறுதி இருந்தால் பிறகு எதற்கு இரண்டு முறை மன்னிப்புக் கேட்க வேண்டும்?  நீங்கள் என் கட்டுரையை சரியாகவே படிக்கவில்லை.  அடுத்த வீட்டில் துக்கம் என்றால், என் வீட்டில் அன்று தீபாவளி என்றால் கூட பட்டாசு கொளுத்த மாட்டேன்.  அடுத்த வீட்டில் துக்கம் என்றால் என் வீட்டிலும் துக்கம்தான்.  ஆனால் நான் சொல்ல வருவது ஒரு கலாச்சார சீரழிவைப் பற்றியது.  என் கட்டுரையை மீண்டும் படியுங்கள்.  என் புகார் மக்கள் மீது அல்ல.  அவர்களின் “கலைஞன்” இறந்து விட்டான்.  அவர்கள் துக்கம் கொண்டாடுகிறார்கள்.  அதில் எனக்கு என்ன பிரச்சினை?  இன்னும் எப்படி நான் விளக்கி எழுதுவது?  நான் புகார் சொல்லியிருப்பது எழுத்தாளர்களை.  ஒரு சினிமா பாடகர் இறந்து போனால் அதற்கு இலக்கியவாதி கவிதை எழுதுகிறார்.  சிற்பி சிற்பம் உருவாக்குகிறார்.  ஓவியர் ஓவியம் திட்டுகிறார்.  அப்படியானால் நீங்கள் ஏன் ஐயா பாப்லோ நெரூதா, பாரதி என்றெல்லாம் சொல்கிறீர்கள்?  பட்டுக்கோட்டை பிரபாகர் வழியில் எழுத வேண்டியதுதானே?  `கலையில் மேன்மையானது என்று இல்லையா?  எப்போதும் சினிமா பாட்டுதானா?  நான் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான எழுத்தாளர் இரவுகளிலும் மாறி மாறி சினிமா பாடல்களையேதானே பாடுகிறார்கள்?  எழுத்தில் உச்சம்.  இசையில் டம்குடப்பா என்றால் அது என்ன வினோதமான கலவை என்பது மட்டுமே என் பிராது.  எனக்கு கலை சம்பந்தமாக எதுவுமே தெரியாது.  சினிமா என்றால் டி. ராஜேந்தர்.  இசை என்றால் சினிமா பாட்டு.  எழுத்து என்றால் ரமணி சந்திரன்.  ஓவியம் என்றால் ஜெயராஜ்.  இப்படி இருப்பவர்களைப் பற்றி எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை; புகாரும் இல்லை.  என் புகார் அத்தனையும் எழுத்தில் உன்னதத்தைத் தேடி இசையில் டம்குடப்பாவோடு உட்கார்ந்து கொண்டிருக்கும் பரிதாபமான எழுத்தாளர்கள் மீதுதான்.

ஒரு உதாரணம் தருகிறேன்.  ஜெயகாந்தன் இளைஞனாக இருக்கும்போது பெரியாரின் ஒரு கூட்டத்தில் பெரியாரை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.  பெரியாரின் சீடர்கள் மூர்க்கமானவர்கள்.  பெரியார்தான் ஜேகேவை அன்று காப்பாற்றினார்.  உண்மையில் ஜேகேவின் பேச்சை பெரியார் பெரிதும் ரசித்தார்.  ஜெயகாந்தன் பெரிய ஆளாக வந்த பிறகு சிவாஜி கணேசனின் கூட்டத்தில் – பெரும் ரசிகர் படை – சிவாஜியின் நடிப்பு பற்றி மிக மோசமாகப் பேசி ஜேகேயின் உயிருக்கே ஆபத்தாகப் போயிற்று.  சில நண்பர்களே அவரை அன்று காப்பாற்றினார்கள்.  நான் அம்மாதிரி பரம்பரையில் வந்தவன்.  உயிருக்கோ வசைகளுக்கோ அஞ்ச மாட்டேன். 

அடுத்த அந்த அன்பர் என் மரணத்தைப் பற்றி சூசகமாகக் கோடி காட்டியிருக்கிறார்.  மரணம் வந்து உயிரே பிரிந்த பிறகு எவர் வந்தால் என்ன, எவர் வராவிட்டால் எனக்கென்ன?  என் மரண ஊர்வலத்தை நானே பார்க்க நேர்ந்து, எனக்கு எழுதப்படும் அஞ்சலிச் செய்திகளை நானே படிக்கும் வாய்ப்பு இருந்தால் அது பற்றிக் கவலைப்படலாம்.  நானே போன பிறகு என் உடம்பு என்பது முனிசிபாலிட்டியின் சொத்து.  அதை dispose செய்ய வேண்டியதும் முனிசிபாலிட்டியின் கடமைதான்.  அதற்காகத்தான் நான் வாழ்நாள் பூராவும் வரி கட்டியிருக்கிறேன். 

என் உடம்பு அல்ல நான்.  என் எழுத்தே நான்.  எழுத்தை யாராலும் அழிக்க முடியாது.  தமிழ் உள்ளளவும் என் எழுத்து வாழும்.

மேலும், பாரதியின் உடலுக்கு எட்டு பேர், அசோகமித்திரனின் உடலுக்கு இருபது பேர் என்று வந்து மரியாதை செலுத்திய பூமியில் என் பூத உடலுக்கு ஒருத்தர் ரெண்டு பேர் வருவதே பெரிய விஷயங்க, அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.