142. ஒரு (கடைசி) விளக்கம்

ஒருத்தர் என்னை சீப் பப்ளிசிட்டி தேடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.  எது மலினமான விளம்பரம்?  அடுத்து பாருங்கள்: நீ புழுத்துதான் சாவாய்.   இப்படி ஒரு லட்சம் பேரால் சபிக்கப்படுவதைத்தான் ஒருத்தர் விளம்பரம் என்கிறார்.  எல்லார் வாயிலும் சாபம் பெறுவதா விளம்பரம்?  ஒன்றுமில்லை.  ஒரு குப்பையான கமர்ஷியல் படம்.  அஜித் படம்.  அதை யூட்யூபில் விமர்சித்தேன்.  அஞ்சு நிமிடம்.  ஒரு வெப்சைட்டுக்காக.  பிரபலமான வெப் தளம் அது.  அதற்கு ஆயிரக்கணக்கான அஜித் ரசிகர்கள் எனக்கு எழுதியிருந்த பின்னூட்டங்களைப் படித்தேன்.  புழுத்து அழுகுவது எல்லாம் சும்மா.  என் கூடப் பிறந்த பெண்கள், என் அம்மா, என் மனைவி, என் மகள் எல்லோரையும் அந்த ரசிகர்கள் கண்டபடி செக்ஸ் டார்ச்சர் செய்து வெளிப்படையாக எழுதியிருந்தார்கள்.  தில்லி பஸ் நிர்பயா சம்பவத்தில் அந்தப் பெண்ணின் ஜனன உறுப்பில் ஒரு சிறுவன் இரும்பு உருளையை விட்டிருக்கிறான்.  அப்படியெல்லாம் என் வீட்டுப் பெண்களை சிதைப்பேன் என்று ஒருவர் அல்ல, பலர் அதே மாதிரி எழுதியிருந்தார்கள்.  இந்த சமூகச் சீரழிவைத்தானே எழுதிக் கொண்டிருக்கிறேன்?  பிறகு என்ன?  புழுத்து சாவதுதான் தலைவிதி என்றால் அதையும் அனுபவம் என்றே எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு உண்டு என்று அந்த அன்பருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ரமண மகரிஷியின் தொடை புழுத்து அழுகி அதிலிருந்து புழுக்கள் நெளிந்து கொண்டிருந்த போது அந்த மகான் அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டதாகப் படித்திருக்கிறேன்.  எனவே நமக்கு என்ன மாதிரியான மரணம் வரப் போகிறது என்பதை யார் அறிவார்?  ரமணருக்கு இருந்த மனோபலம் வேண்டும்.  அவர் மகான்.  நான் உண்மையிலேயே புழு.  பார்ப்போம், அன்பரின் சாபம் என்ன செய்யப் போகிறது என்று.  ஆனால் இப்படியெல்லாம் எல்லோரிடமும் சாபம் வாங்குவதைப் போய் விளம்பரம் தேடுவதாகச் சொல்கிறாரே, அந்த அன்பர்தான் என்னை ஆச்சரியப்படுத்துகிறார். 

ஜல்லிக்கட்டு விஷயத்திலும் என் கருத்து பொதுக் கருத்துக்கு எதிராகவே இருந்தது.  வாயை மூடிக் கொண்டு இருந்தேன்.  சரி, ஆங்கிலத்தில் எழுதலாம் என்று தில்லியிலிருந்து வரும் ஏஷியன் ஏஜ் தினசரியில் எழுதினேன்.  (அப்போது அந்தப் பத்தியின் அகில இந்தியப் பதிப்பில் வாராவாரம் பத்தி எழுதிக் கொண்டிருந்தேன்.  தொடர்ந்து நான்கு ஆண்டுகள் எழுதினேன்.) அந்தக் குறிப்பிட்ட ஜல்லிக்கட்டு கட்டுரை அகில இந்தியப் பதிப்பு எல்லாவற்றிலும் வந்தது.  சென்னை பதிப்பில் மட்டும் வரவில்லை.  சென்னையில் அந்தப் பத்திரிகை டெக்கான் கிரானிகிள்.  அந்த தினசரியில் என்னுடைய பல நலம்விரும்பிகள் இருப்பதால் அவர்கள்தான் ஏதாவது நற்காரியம் செய்திருப்பார்கள் என்று நினைத்து தில்லி அலுவலத்தில் கேட்டேன்.  இல்லை, அதை சென்னை பதிப்பில் போட்டால் எங்கள் அலுவலகத்துக்கு ஆபத்து என்பதால் போடவில்லை என்றார்கள்.  சரி என்று விட்டு விட்டேன்.  அடுத்த வாரம் வேறு ஏதோ கட்டுரை.  அதுவும் சென்னை பதிப்பில் வரவில்லை.  தில்லியில் கேட்டேன்.  அதுவும் தமிழ்நாட்டின் பொதுக்கருத்துக்கு எதிர், எங்கள் அலுவலகத்தின் பாதுகாப்பு என்றார்கள்.  ஆனால் அகில இந்தியப் பதிப்பிலும் அவர்களின் லண்டன் பதிப்பிலும் என் கட்டுரை வந்திருந்தது.  நான் நான்கு ஆண்டுகளாக எழுதி வந்த தொடரை நிறுத்தி விட்டேன்.  என்னுடைய மொழிக்காரர்கள் படிக்க முடியாவிட்டால் அப்புறம் என்ன என்று ஒரு எண்ணம்.  மேலும், அப்படி ஒரு அகில இந்தியப் பதிப்பில் நான்கு ஆண்டுகள் எழுதியும் அதனால் எந்தப் பயனும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதும் ஒரு காரணம்.

ஆனால் பல சந்தர்ப்பங்களில் நான் வாயை மூடிக் கொண்டே இருந்திருக்கிறேன்.  முக்கியமாக, மத சம்பந்தமான விஷயங்கள்.  மோடி சம்பந்தமான விஷயங்கள்.  முஸ்லீம்களும் எதிர்க்கிறார்கள்.  மோடி ஆதரவாளர்களும் தேசத் துரோகி என்று திட்டுகிறார்கள்.  அதனால் கருத்தே சொல்லவில்லை.  ஆனால் தமிழ்நாட்டில் அரசியலை விட சினிமா ஆழமானது.  உயிர் மூச்சு.  அப்படித்தான் ஒரு எழுத்தாளர் எழுதியிருக்கிறார்.  என் மூச்சு பிரிந்து விட்டது.  என் ஆன்மா போய் விட்டது.  என் கலாச்சாரத்தையே இழந்து விட்டேன்.  தமிழ்நாடு இனி கலாச்சார அனாதை.  இவர்தான் தமிழின் தலைசிறந்த கதைசொல்லி என இன்னமும் நான் நம்புகிறேன்.  இன்னொருவரை தமிழ்நாட்டின் மிகச் சிறந்த புத்திஜீவி என்று நம்பினேன்.  தத்துவவாதி என்றே குறிப்பிடுவேன்.  அவரும் கிட்டத்தட்ட அப்படித்தான் எழுதியிருந்தார்.  அதற்கு மேல்தான் என்னால் அமைதி காக்க முடியவில்லை. 

மேலும், நான் எழுதியது எழுத்தாளர்களுக்கு மட்டும்தான்.  மற்றவர்கள் ஏன் கொந்தளிக்கிறார்கள் என்று எனக்குப் புரியவே இல்லை.  உங்கள் துக்கத்தை நீங்கள் அனுஷ்டிக்கக் கூடாது என்று சொல்ல நான் யார்?  என் புகார் அவ்வளவும் எழுத்தாளர்களின் மீதுதான்.  ஏன், எனக்கும் ஜெயமோகன் மாதிரி பாடகர் படத்தைப் போட்டு விட்டு அஞ்சலி என்று ஒரே வார்த்தை எழுதத் தெரியாதா?  அல்லது, ஜல்லிக்கட்டுக்கும், காஷ்மீர் பிரச்சினைக்கும், குடியுரிமைச் சட்டத்துக்கும் எதிர்வினை எழுதாதது போல் வாயை மூடிக் கொண்டு இருக்கத் தெரியாதா?  தெரியும்.  இருந்தாலும் எழுத்தாளர்களிடம் எனக்கு சில கேள்விகள் இருந்தன.  அதை முன்வைத்தேன்.  இதற்கிடையில் ஒரு பட்டுக்கோட்டை பிரபாகர் ரசிகை அது என்ன, எதற்கெடுத்தாலும் பட்டுக்கோட்டை பிரபாகர் பெயரையே இழுக்கிறீர்கள், அவர் மனம் எவ்வளவு துன்பப்படும் என்று கேட்டிருக்கிறார்.  அடப்பாவிகளா, ஜனரஞ்சக எழுத்து என்றால் கல்கி பெயரைத்தானே ஐயா குறிப்பிட முடியும்?  எனக்கு அரு. ராமநாதன் பெயரைக் குறிப்பிடத்தான் ஆசை?  ஆனால் ஊர் அறிந்த பெயர் கல்கிதானே?  சுஜாதா தானே?  கல்கி காலத்தில் ஜெகசிற்பியன் என்று ஒருத்தர் எழுதிக் கொண்டிருந்தார்.  ஜெகசிற்பியன் பெயராவது இன்று யாருக்காவது ஞாபகம் இருக்கும்.  வே. கபிலன் என்று ஒரு சரித்திர நாவலாசிரியர் இருந்தார்.  எத்தனையோ சரித்திர நாவல்கள் எழுதியவர்.  சரித்திர நாவல் என்றால் வே. கபிலன் பெயரையா குறிப்பிட முடியும்?  கல்கி ஒரு குறியீடு.  அதுபோலவே ஜனரஞ்சக எழுத்துக்கு பட்டுக்கோட்டை பிரபாகர், ரமணி சந்திரன் பெயர்களெல்லாம் குறியீடுகள்.  ஆனாலும் பட்டுக்கோட்டையாரின் மனம் புண்படும் என்றால், வெறுமனே ஜனரஞ்சக எழுத்து என்று மட்டுமே சொல்லி விடுகிறேன்.

இப்படிப்பட்ட சினிமா என்ற மதவெறிச் சூழலில் ஒரு கருத்துக்கு இப்படித்தான் ஆபாச எதிர்வினைகள் வரும் என்று தெரியும்.  இருப்பினும் என் மதிப்புக்குரிய அந்த இரண்டு எழுத்தாளர்களின் வெளிப்பாடு காரணமாகவே என் சந்தேகங்களை முன்வைத்தேன்.  மூடர்கள்தான் மூடர்களின் தலைவனை அறிஞர் என்று சொல்லுவார் என்று ஜெயகாந்தன் சொன்னார்.  அப்போது ஜெயகாந்தனை ஆதரிக்க நாலு மேட்டுக்குடியினர் இருந்தனர்.  இப்போது அந்த மேட்டுக்குடியினரும் பாமர ரசனையின் பால் விழுந்து விட்டனர் என்பதால் ஜெயகாந்தனுக்கு இருந்த நாலு பேர் ஆதரவு கூட எனக்கு இல்லை.  அது பற்றி எனக்குக் கவலையும் இல்லை. 

மற்றபடி அபிலாஷின் சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல விரும்புகிறேன்.  தீவிர இலக்கிய மரபைச் சேர்ந்த அபிலாஷ் ஒரே மாதிரி எப்போதுமே தீவிர முகத்தை அணிந்து கொண்டிருக்க விரும்பவில்லை என்கிறார்.  நல்லது.  நானும் அப்படியே.  ஆனால் பழைய எழுத்தாளர்கள் மூடி மறைத்தார்கள் என்கிறார்.  அதாவது ஜனரஞ்சக ரசனை இருந்தும் அதை மூடி மறைத்தார்களாம்.  இல்லை என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.  அவர்கள் வெகுஜன மரபை, வெகுஜன ரசனையை அசிங்கம் என்றும் தரமற்றது என்றும் ஒதுக்கினார்கள். நான் அப்படி ஒதுக்கச் சொல்லவில்லை.  நானும் அப்படி இல்லை.  தனுஷின் கொலவெறி பாடலைப் பற்றியே ஒரு கட்டுரை எழுதினேன்.  சாட்டர்டே நைட் பீச்சுக்குப் போலாம் வறியா, மலமல போன்ற பல பாடல்களைப் பற்றி கட்டுரையே எழுதியிருக்கிறேன்.  நான் வெகுஜன ரசனைக்கு எதிர் அல்ல.  ரொலான் பார்த்தைப் படித்த ஒருவன் – பின்நவீனத்துவம் கற்ற ஒருவன் வெகுஜன ரசனையை ஒதுக்க முடியுமா?  ஆனால் எழுத்தில் உன்னதம் விழையும் எழுத்தாளனின் அடையாளமே வெகுஜன ரசனைதானா?  அதுவும் திரை இசையில் மட்டும்?  அது என்னய்யா, பாட்டு என்றாலே சினிமா பாட்டுதானா?  நாளை ஒரு திரை இசைக்காரர் – பொதுவெளியில் எஸ்.பி.பி. போல் அத்தனை நல்ல பெயர் எடுத்தவர் இல்லை – விடை பெற்றால் தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் பத்து தற்கொலைகள் நிகழும்.  அதில் ஆச்சரியமே இல்லை.  தமிழர்கள் வாழ்வு தமிழர்களின் உயிர் மூச்சு அவர்.  ஆனால் அந்தத் தற்கொலைப்பட்டியலில் எழுத்தாளனும் இருந்தால் அது எனக்கு ஆச்சரியம்.  அதுதான் என் கட்டுரையின் சாரமே.  

ராஜேஷ் குமாரை ஒரு இலக்கியப் பதிப்பிப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார் அபிலாஷ்.  அப்படியான பதிப்பகத்தில் என் புத்தகங்களைத் தர விரும்ப மாட்டேன்.  ஏனென்றால், மக்களின் வாசிப்பு ரசனையை சீரழித்ததில் தமிழின் வணிக எழுத்தாளர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.  சுஜாதா பாலகுமாரன் பற்றிய கட்டுரைகளில் இது பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறேன்.  ஆங்கிலத்தில் ஹெரால்ட் ராபின்ஸ் போன்ற நூற்றுக்கணக்கான பேர் உண்டு.  ஆனால் அவர்களால் ஆங்கில இலக்கிய வாசிப்பு சீரழியவில்லை.  இங்கே அகிலனுக்குத்தானே ஞானபீடம் கிடைக்கிறது? நாளை வைரமுத்துவுக்குத்தானே நோபல் கிடைக்கப் போகிறது?  ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் வாசிப்புப் பழக்கத்தையே தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு இலக்கியம் என்றால் இருநூறு பேர் என்று இருக்கும் சூழலில் வணிக எழுத்தை நான் எப்படி எதிர்கொள்வேன் சொல்லுங்கள் அபிலாஷ்? 

மற்றபடி ஒரு நாளிதழில் வரும் மணமகன் தேவை விளம்பரம் கூட ஒரு இலக்கியப் பிரதியின் கச்சாப் பொருள்தான்.  நான் பல நூறு முறை என் புனைவுகளில் அவற்றைப் பயன்படுத்தியிருக்கிறேன்.  Literature of Trash என்ற கருத்தாக்கம் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறேன். 

கலையில் உன்னதம் தேடும் எழுத்தாளன் இசை என்றால் வெறும் சினிமா இசையில் மட்டுமே கடந்த ஐம்பது ஆண்டுகளாக உழன்று கொண்டிருப்பது ஏன் என்பதுதான் என் கேள்வி.

மற்றபடி மைக்கேல் ஜாக்சனும் இவரும் ஒன்று என்றால் அது பலரது நம்பிக்கை.  வெகுஜன நம்பிக்கையில் குறுக்கே போவது என் பணி அல்ல.  என் கட்டுரைகளும் கூட எழுத்தாளர்களை நோக்கியதே தவிர வெகுஜனத்தை நோக்கியது அல்ல.  எனவே அவர்கள் கோபப்படுவது நிழலோடு சண்டையிடுவதற்கு ஒப்பானது.  நான் அவர்களின் பேச்சுக்கே போகவில்லை.   மற்றபடி பாப் மார்லி என்று ஒரு கலைஞன் இருந்தான் என்று சொல்வதற்கெல்லாம் இங்கே இடமும் இல்லை, அதற்கான சூழலும் இல்லை. 

மீண்டும் சொல்கிறேன்.  இதுவே கடைசியாக என் விளக்கம்.  என் அடையாளமே சினிமா பாடல்தான் என்று ஒரு பொதுமனிதன் சொல்லலாம்.  எழுத்தாளன் சொல்லலாமா?  எனக்கு சினிமா பாடலும் பிடிக்கும்.  நிறையவே கேட்பேன்.  ஆனால் அது எனக்குப் பொழுதுபோக்கு.  என் அடையாளம் அதுவல்ல.  பாலா சார், உங்களுக்கும் பதில் சொல்லி விட்டேன்.  மேலும், பாலா சார், நீங்கள் என்ன எழுத்தாளரா?  என் கேள்வி எழுத்தாளர்களை நோக்கியது.