முன்னோடிகள் : 26

இது ஒரு முக்கியமான கடிதம்.  பாலம் புத்தகச் சந்திப்பை ஏழு ஆண்டுகளாக நடத்தி வரும் சஹஸ்ரநாமம் எவ்வளவு பெரிய உன்னதமான பணியை மேற்கொண்டிருக்கிறார் என்பது அவர் தன்னைப் பற்றி எதுவும் சொல்லாமலேயே எனக்குத் தெரிந்து விட்டது.  அவர் தன்னைப் பற்றி எதுவுமே சொன்னதில்லை.  ஏழு ஆண்டுகளாக வாரம் தவறாமல் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றார்.  நடத்திக் கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.  படித்த பண்பு அவரது ‘ஓம்’இல் தெரிந்தது.  முன்பெல்லாம் நான் மாதம் ஒருமுறை சேலத்துக்குப் போவேன்.  அங்கே ஒரு நண்பரின் கெஸ்ட் ஹவுஸில் நண்பரும் நானும் தங்கி இரண்டு தினங்கள் ஓய்வெடுத்து விட்டு சென்னை திரும்புவோம்.  அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் தன் வீடு என்றும் என்னை அடிக்கடி பார்த்திருப்பதாகவும் சொன்னார்.  பின் வரும் கடிதத்தைப் படியுங்கள்.  இலக்கியம் உய்யும் என்ற என் கனவு பலிக்கும் வெளிச்சம் தெரிகிறது.  அவர் கேட்டுக் கொண்டபடி இதுவரையிலான ஐந்து சந்திப்புகளின் காணொளி இணைப்பையும் அனுப்பி விட்டேன்.

அன்பு சாரு,

நலமா? நேற்று தங்களின் கோபிகிருஷ்ணன் அவர்களின் படைப்புலகம் பற்றிய உரையை கேட்டேன். அதில் ஆரம்பத்தில் பாலம் தி புக் மீட் ஒருங்கிணைப்பாளர் சகஸ்ரநாமம் பற்றி பேசியிருந்தீர்கள்.  நான் சேலம்வாசிதான். கல்லூரிகாலத்தில் எனக்கு, பல நல்ல தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து என்னை வாசகனாக உருவாக்கியதில் முழு பங்கும் பாலம் தி புக் மீட்டுக்கே சேரும். அந்த சந்திப்பே மிக புதிய முறையில் நடக்கும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வாசகர் அந்த வார எழுத்தாளரை அறிமுகம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார்கள். அடுத்த வாரம் வரும் எழுத்தாளர் யார் என முந்தைய வார நிகழ்ச்சி இறுதியில் சொல்லி, அவர்கள் எழுதிய முக்கிய புத்தகங்கள், அடுத்த வாரம் அவர் பேசபோகும் புத்தகம் பற்றி விரிவாக பேசி அந்த புத்தகத்தை முடிந்தவரை வாசித்துவந்து கலந்துக்கொள்ளுமாறு கூறுவார். எழுத்தாளர் பேசியதும், வாசகர்களுடனான கலந்துரையாடல் நிகழும். மிக சுதந்திரமாக எந்த இடையீடும் இன்றி நம் சந்தேகங்களை கேட்டு தெளிவுபெறலாம். அந்தக்கூட்டம் ரம்மியமான இயற்கை சூழலில் பறவைகளில் இன்னிசை பின்னனியில், புங்கைமரத்தின் அடியில் நிகழும். அந்த இயற்கை சூழலுக்காகவே ஒரு வாரம் விடாமல் நான் கலந்துக்கொள்வேன். தி.ஜா, கோபிகிருஷ்ணன், ஜெயமோகன், எஸ்.ரா, நீங்கள், கோணங்கி, தஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய், ஓரான்பாமுக் என பல முக்கிய எழுத்தாளர்களை பாலம் வழியே தான் அறிந்தேன். 

வாரம் வாரம் தொடர்ந்து ஞாயிற்றுகிழமைகளில் சரியாக காலை 11மணிக்கு தொடங்கிவிடும். பல எழுத்தாளர்களின் அறிமுகம், புத்தகங்களின் அறிமுகம் என அந்த ஒரு நாள் களைக்கட்டும். அவ்வளவு மகிழ்ச்சியான நாள் எனக்கு. சகஸ்ரநாமம், அவரின் மனைவி சசிகலா ஆகியோர் தேர்ந்த வாசகர்கள்.  அவரின் மனைவி சசிகலா  என்னுடைய ஆங்கில ஆசிரியை. எங்களுக்கு ஆங்கிலம் தி இந்து நாளிதழ் வாசிப்பது குறித்து முதன் முதலில் சொல்லிக்கொடுத்ததே சசிகலா ஆசிரியை தான். தினமும் ஒரு ரூபாய்வீதம் நாங்கள் தெலுத்தினால் போதும் எங்கள் பள்ளியை தேடி ஆங்கில நாளிதழ் வந்துவிடும்.  அதை வாசிக்கும் முறையும் கிடைத்துவிடும். இத்தனைக்கும் நான் படித்த பள்ளி அரசுஉதவிப்பெறும் பள்ளிதான். அப்பள்ளியின் மூலமே வாசிப்பு எனும் வாசலை அடைந்தேன். அதற்கு முதலில் உதவியது எங்கள் தமிழ் ஆசிரியர் செல்வராஜ் ஐயா, அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றது பாலம் தி புக் மீட் 

அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை வீட்டில் வாசிப்புக்கு எதிர்ப்புதான். அதுவும் புத்தக அறிமுக கூட்டமென்றால் சொல்லவே வேண்டாம். புத்தக அறிமுக கூட்டத்திற்கு செல்கிறேன் என்றால் வீட்டில் திட்டுவாங்கிக்கொண்டுதான் செல்ல வேண்டும். பேருந்து செலவிற்கு தனி திட்டு. வாரம் வாரம் கூட்டத்திற்கு சென்றுவர நாற்பது ரூபாய் ஆகும். மாதத்திற்கு தோராயமாக 150 ரூபாய். இதை அறிந்த எங்கள் ஆசிரியை என் பேருந்தின் செலவை அவர்களே ஏற்றார். மாதம் மாதம் 150ல் இருந்து 200 ரூபாய் இதற்கென எனக்கு கொடுத்துவிடுவார்கள். ஒரு வாரத்திற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்யும் செலவு, இடையில் தேனீர் செலவு பிறகு என் பேருந்து செலவு நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. அந்த நல்ல உள்ளத்தை நான் தினமும் தினமும் நன்றியுடன் எண்ணிக்கொள்வேன். அவர்கள் அவ்வாறு எனக்கு உதவவில்லை என்றால், மூன்று கூட்டங்களுக்கு மேல் என்னால் சென்றிருக்க முடியாது. அவரின் உதவியால் தான் ஒரு வருடம் விடாமல் சென்றேன். அதற்கடுத்த வருடம் நான் சென்னைக்கு வந்துவிட்டேன். என் வாழ்நாள் முழுவதும் நான் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதை என்னால் எவ்வகையிலும் கழிக்க இயலாது.

உரையில் கூட்டத்திற்கான ஏற்பாடு செலவு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அது உண்மைதான். சில மாதங்களில் கூட்டத்தை தொடர்ந்து ஏற்பாடு செய்ய நிதிபோதமை ஏற்பட்டப்பொழுது, மிகுந்த கனத்த இதயத்துடன் சகஸ் அவர்கள் கூட்டத்தின் இறுதியில் ஒரு வேண்டுகோளை வைத்தார். ஒவ்வொரு கூட்டத்திற்கும் எழுத்தாளரை அழைத்துவந்து, தங்கும் ஏற்பாடு, சாப்பாடு, மீண்டும் செல்வதற்கான செலவுகள் என அனைத்தும் உள்ளது. வாசகர்கள் வாரம் வாரம் சுழற்சிமுறையில் இந்த செலவுகளை ஏற்றுக்கொண்டால் கூட்டத்தை தொடர்ந்து நடத்த சுலபமாக இருக்கும் என்று தெரிவித்தார். அப்பொழுதிலிருந்து வாசகர் யாரெனும் ஒரு கூட்டத்திற்கான செலவை அல்லது தேநீருக்கான செலவை ஏற்றுக்கொண்டு கூட்டம் நடக்கும். இது கட்டாயம் அல்ல. முழுமையான வாசகர் விருப்பத்தை சார்ந்தத தான். எவ்வளவு நிதிபோதாமை ஏற்பட்டும் கூட்டம் நடுவில் தடைப்பட்டதாக இல்லவே இல்லை. ஆறு வருடங்கள் தொடர்ந்து கூட்டம் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. 

ஒவ்வொரு கூட்டத்திற்கும் பத்திலிருந்து பதினைந்து நபர்கள் கட்டாயம் வருவோம். சில முக்கிய எழுத்தாளரின் கூட்டமென்றால் அது முப்பது முதல் நாற்பது வரை தாண்டும். ஐம்பதெல்லாம் அத்தி மலர்ந்தது போன்று. எஸ்.ரா. வின் தஸ்தாய்வேஸ்கி கூட்டத்திற்கு ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வந்தனர். அந்தக்கூட்டத்திலிருந்து தான் தமிழகம் முழுவதும் ஓரளவிற்கு பாலம் தி புத் மீட்டும் அறியபடலாயிற்று.

நேற்று கோபிகிருஷ்ணன் உரையை என்னால் முழுவதுமாக கேட்க முடியவில்லை. நெட்பேக் தீர்ந்துவிட்டது. இத்தனைக்கும் இந்த உரைக்காக காலையில் இருந்து நெட்டை பயன்படுத்தாமல் வைத்திருந்தேன். 1 ஜி.பி.தான் எப்பொழுதும் ரீசார்ஜ் செய்வது. அது போதவில்லை போல் தெரிகிறது. உங்கள் கூட்டத்திற்கன்று மட்டும் கூடுதலாக டேட்டா சேவர் சேவையை பயன்படுத்த வேண்டும். அடுத்தக்கூட்டத்தில் இருந்து அவ்வாறு செய்துவிடுவேன். மன்னிக்கவும். 

உங்களின் மாதாந்திர கூட்டத்தின் உரைகள் கிடைத்தால் மிக்க பயனுள்ளதாக இருக்கும். முடிந்தால் அவ்வுரைகளுக்கான லிங்க் அல்லது வீடியோ இருந்தால் அனுப்பினால் மிக்க பயனுள்ளதாக கருதுவேன். 

அடுத்து சந்தா விஷயம், இன்னும் சரியான வேலைக்கு செல்லவில்லை. இந்த கொரானா காலம் மிகவும் கொடியதாக உள்ளது. தட்டச்சு தெரிந்தும் எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறேன். இந்த மாதத்தில் ஒரு வேலையில் சேர்ந்துவிடுவேன். அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன். சம்பளம் கிடைத்ததும் முதல் வேலையாக உங்கள் உரைகளுக்கு கட்டணம் அனுப்புவதுதான் தாமதத்திற்கு மன்னியுங்கள்.

உங்களின் அசோகா நாவல் பணிகளுக்கிடையில் என்னுடைய நீண்ட இந்த கடிதம் நேரவிரயமாக இருக்குமோ என்று வருந்துகிறேன். நேரமிருப்பின் உங்கள் வீடியோக்களை அனுப்பினால் போதும். அவசரமில்லை. தொந்தரவுக்கு மன்னியுங்கள்

நன்றி

அன்புடன்

ரா. பாலசுந்தர்.