144. ஓர் எதிர்வினை : வளன் அரசு

SPB விஷயத்தில் சாரு சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளாமல் பதிலடி தருகிறேன் பேர்வழிகள் அனைவரும் ஒருவிதமான பதற்றத்துடன் இருப்பதைக் காண முடிகிறது. ஒட்டு மொத்த சமூகமும் சிந்திக்காமல் ஒரு எழுத்தாளனை இப்படிப் பந்தாடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பயத்தினால் ஒரு எழுத்தாளன் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளாமல் தாக்கலாமா? உண்மையில் தமிழ் சமூகம் வெட்கப்பட வேண்டும். சாருவை வசை பாடுவதன் வழி மீண்டும் மீண்டும் சாருவின் குற்றச்சாட்டை நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது இந்த சமூகம். ஒரு சமூகம் எப்படியிருக்கிறது என்பதன் அடையாளம் எழுத்தாளன். எழுத்தாளர்கள் கலாச்சாரத்தின், மொழியின் முகவரியாய் இருக்கிறார்கள். தமிழ் சமூகத்தைப் பொறுத்த வரை சாரு ஒருவராது இப்படி இருக்கிறார் என்பது ஆறுதலாக இருக்கிறது. SPB மீது சாருவுக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது. சாருவுக்கும் SPB யின் பாடல்கள் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சாரு சொல்ல வருவது வேறொரு செய்தி. அதைக் கவனிக்கக் கூட மறுக்கிறோம் என்பதுதான் இங்கிருக்கும் பெரும் அவலம். SPBக்கு அஞ்சலிக் கட்டுரை எழுதும் பலரும் அற்புதமான மனிதர் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படித்தானே அனைவரும் இருக்க வேண்டும்? இதைப் படித்துக்கொண்டிருப்பவர்கள் அற்புதமான நல்ல மனிதர்கள் இல்லையா? அப்படி இல்லையெனில் அதிலிருந்தே தெரிகிறது அறம் வீழ்ந்துகொண்டிருக்கிறது என்று. சமூகத்தின் அடையாளமாக எழுத்தாளன் இருக்கிறான் என்று சொன்னேன் அல்லவா? ஆனால் நம் சமூகத்தில் அப்படியே தலைகீழாக இருக்கிறது. சமூகம் வேண்டுவதை எழுத்தாளர்கள் தருகிறார்கள். இலக்கியம் மளிகைக் கடையில் கிடைக்கும் பொருள் அல்ல. இன்று சாருவை தாக்கி எழுதும் பலருக்கும் அந்த உண்மை தெரியும். Subjective ஆக இருக்கும் ஓர் உணர்வை universalஆக மாற்றும் ஒரு மாயாஜாலத்தை ஒவ்வொரு எழுத்தாளரும் செய்கிறார். அதில்தான் ரமணி சந்திரனும், லா.ச.ரா.வும் மாறுபடுகிறார்கள். சுஜாதாவின் ‘நகரம்’ எளிய கதைதான் ஆனால் அதில் மேலே சொன்ன மாயாஜாலம் நடந்திருக்கும். மற்ற கதைகளில் இருக்காது. இந்த subjective – universal பற்றித் தெளிவுபடுத்திய அறிஞர்கள்தான் இன்று சாருவின் மீது சேற்றை வாரி போடுகிறார்கள். திரும்பவும் எனக்குத் தோன்றுவது ஒன்றுதான்: தமிழர்களாகிய நமக்கு இனம் புரியாத பயம் இருக்கிறது. இதிலிருந்து மீள ஒரு வழிதான் இருக்கிறது. பயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். சாரு தன்னை எப்போதுமே வெகுஜன விரோதியாக நிறுவிக்கொள்வதில்லை. அப்படி நிகழ்ந்துவிடுகிறது. சாரு எழுத்தாளர்களுக்காக எழுதினார். இந்தச் சமூகம் எப்படியிருக்கிறது என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள். ஓர் உதாரணம் தருகிறேன்: Prank show ஒன்று பார்த்தேன். அமெரிக்கா – கனாடா போன்ற நாடுகளில் நடக்கும் prank புரிந்துகொள்ளலாம். செல்வம் மிகுந்த நாடு. Prank ஒரு stressbuster. இந்தியாவில் என்ன நடக்கிறது? யூட்யூப் பார்வை எண்ணிக்கையை அதிகரிக்கக் கூத்துக்கட்டி அடிக்கிறார்கள். நாம் மேதாவிகள் என்று கருதும் வர்க்கம் இதை ஆதரிப்பதுதான் கொடுமையாக இருக்கிறது. ஜிம் ஒன்றில் ப்ராங்க் நடக்கிறது. குடியிருப்பில் ப்ராங்க் நடக்கிறது. அவ்வளவும் ஆபாசம். அவ்வளவு வசைகள். அருவருப்பாக இருக்கிறது. அதற்கெல்லாம் உச்சம் ஒரு பல் மருத்துவர் தன்னைச் சந்திக்க வருபவர்களை ப்ராங்க் செய்யச் சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறார். அதுவும் நிகழ்கிறது. உடனே மேதாவிகள் ப்ராங்க் பார்க்கக் கூடாதா என்று கேட்பார்கள். பார்க்கலாம். அது அவரவர் சுதந்திரம் ஆனால் ஒரு professional ethics வேண்டாமா? மருத்துவர் தன் நோயாளிகளை ப்ராங்க் செய்வது – அதுவும் ஒரு மூன்றாம் உலக நாட்டில்… மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் இதுதான் உங்கள் கேளிக்கையா? இப்படியான ஒரு சூழலில்தான் தன் சக எழுத்தாளர்களைப் பார்த்து ஒரு எழுத்தாளன் கேள்விகளை முன் வைக்கிறான். உங்களிடம் சொல்ல பதில் இல்லாததால் இப்படியா செய்வது!?