இசை பற்றிய சில குறிப்புகள் – 2

இந்தியாவைப் பற்றிய அறிஞர்கள் எல்லோருடைய ஒருமித்த கருத்து என்னவென்றால், இந்தியாவின் மிகப் பழமையான கலை கவிதைக்கும் நாடகத்துக்கும் முன்னாலிருந்தே மிக உன்னதமான நிலையில் இருந்தது இசைதான்.  அது மட்டுமல்லாமல் இன்று வரை அந்த இசை மரபு பலப் பல நூற்றாண்டுகளாக தொய்வே இல்லாமல் தொடர்ந்து மிகுந்த உயிர்ப்புத்தன்மையோடும் சிருஷ்டிகரத்தன்மையோடும் இருந்து கொண்டே வருகின்றது.  ஔரங்கசீபின் காலத்தைப் போல வரலாற்றில் இதற்கு ஒருசில விதிவிலக்குகளே இருந்தன.  இலக்கியத்தில் கூட இப்படிப்பட்ட தொடர்ச்சி இல்லை.  இலக்கியம் சமூக மதிப்பீடுகளைக் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பதால் அதற்கு அரசு மற்றும் சமூக ஆதரவு எப்போதும் இருக்க முடியாததால் இலக்கியத்தில் அப்படிப்பட்ட தொடர்ச்சி இல்லாததில் ஆச்சரியமும் இல்லை.  

இந்தியா என்ற நிலப்பரப்பில் இசை ரிக் வேதத்திலிருந்து துவங்குகிறது.  பகவத் கீதையின் பத்தாம் அத்தியாயத்தில் இருபத்து இரண்டாவது சுலோகம் பின்வருவது:

வேதானாம் சாம வேதோஸ்மி தேவானாம் அஸ்மி வாசவ

இந்திரியம் மனஸ் அஸ்மி பூதானாம் அஸ்மி சேதன

இதன் அர்த்தம்: வேதங்களிலே நான் சாம வேதம். தேவர்களிலே நான் இந்திரன்.  நான்கு வேதங்களில் உருவத்தில் மிகவும் சிறியது.  ஆனாலும் கீர்த்தியில் பெரியது. சாண்டோக்ய உபநிஷதமும் கேணோபநிஷதமும் இந்த வேதத்தில்தான் வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் லால்குடியில் இருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருமங்கலம் என்ற கிராமத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு கோவில் உள்ளது.  இதன் மூலவரின் பெயர் சாமவேதீஸ்வரர்.

திருமழிசை ஆழ்வார் தன் பாசுரத்தில் சாம வேதத்தை இப்படி வர்ணிக்கிறார்.  

தூய்மை யோகம் ஆயினாய்! துழாய் அலங்கல் மாலையாய்!

ஆமை ஆகி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவ! நின்

நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல; ஆகிலும்

சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே?

செம்பை வைத்தியநாத பாகவதரின் இந்த அற்புதமான பாடலைக் கேளுங்கள்.  இந்தக் கீர்த்தனையின் முதல் நான்கு நிமிடங்களை மட்டுமாவது கேளுங்கள்.  அதற்குப் பிறகு யாராவது சாஸ்த்ரீய சங்கீதம் அலுப்பூட்டுகிறது என்று சொல்வார்களா பார்க்கிறேன். 

https://raagabox.com/search/?mid=1012494

பல்லவி

சாமகான விநோதினி நீ நாமமே நா ஜீவனமு

அநுபல்லவி

காமதமன மனோரமா நா மனசுன ரமிஞ்சும காமத பதா

நின்னு சதா ப்ரேமதோ நம்மினானு கதா

சரணம்

காமேஷ்வர மூல தனமா நா மனவினி அம்ப வினுமா

காம ஜனகாதுலு பஜிஞ்சே மதுர நாமா

காம சஞ்ஜீவனௌஷதமா ஹேமைஷல புண்ய பலமா

தாமசமேமி லலிதம்மா நா மஹா பாக்யமா ப்ரோவ.

இந்த அற்புதமான கீர்த்தனையை இயற்றியது T.G. கிருஷ்ணய்யர்.  இவர் செம்பை வைத்தியநாத பாகவதரின் சிநேகிதர். திருப்புனித்துராவைச் சேர்ந்தவர்.  வசித்தது சென்னை சாந்தோமின் அருகில் இருந்த லலிதா நகரில்.  அங்கேயே அவர் செம்பை தங்குவதற்கு ஒரு வீட்டையும் கொடுத்தார்.  அப்போது அவர் 155 தெலுங்கு கீர்த்தனைகளை இயற்றி செம்பையிடம் அளித்தார்.  அவற்றை செம்பை கர்னாடக சங்கீதத்துக்கு ஏற்றபடி உருவாக்கினார்.   அந்தக் கீர்த்தனைகளுக்கு கிருஷ்ணய்யர் லலிதா தாஸர் கீர்த்தனைகள் என்று பெயரிட்டார்.   

பின்வருவது வாமனம் நம்பூதிரி பாடிய சாமகான விநோதினி

பின்வருவது செம்பை பாடிய என்னில் கனிந்த என்ற தமிழ்க் கீர்த்தனை.  லலிதா தாஸர் என்ற கிருஷ்ணய்யர். 

***

சாம வேதம்தான் இந்திய சாஸ்த்ரீய சங்கீதத்தின் ஆதிமூலம்.  இதில் உள்ள 1875 சுலோகங்களில் 75 தவிர மற்ற அனைத்தும் ரிக் வேதத்திலிருந்து பெறப்பட்டவை.  அதாவது, பொருள்வாரியாகப் பிரிக்கப்பட்டு, இசையும் சேர்ந்ததாக இருப்பதே சாம வேதம்.  மற்றபடி சாம வேதம் என்று தனியாக, மற்ற வேதங்களிலிருந்து வேறுபட்டு இல்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால், ரிக் வேதத்தின் இசை வடிவமே சாம வேதம்.  சாமன் என்றால் பாடல்.  வேதம் ஞானம்.  சுருக்கமாக, பாடல்களின் புத்தகம் என்று சொல்லலாம்.   இசை மட்டுமல்லாமல் நாட்டியத்தின் ஆதாரமும் சாம வேதம்தான். இசையோடு கூட பற்பல வாத்தியங்களைப் பற்றிய குறிப்புகளும் சாம வேதத்தில் காணக் கிடைக்கின்றன. 

யஜ்ஞங்களின்போது சாம வேத மந்திரங்களை கோஷிப்பது வழக்கம்.  யஜ்ஞம் என்பது தமிழில் வேள்வி, யாகம்.  யஜ் என்றால் வழிபடுதல் என்று பொருள்.   மன்னாத் த்ராயதே இதி மந்த்ர.   மந்திரங்களின் தத்துவத்தை அறிந்து கொள்பவரைக் காப்பாற்றுவது எதுவோ, அதுவே மந்திரம்.  த்ராயதே.  த்ராணம் – காப்பாற்றுதல்.  பரித்ராணாய சாதூணாம். நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக.  இந்த மந்திரங்களை யஜ்ஞங்களின் போது இசையோடு கோஷித்துப் பிரார்த்திப்பதே இந்தியாவின் ஆதி இசை வடிவங்களில் ஒன்று.  அதுதான் சாம வேதம்.  இது இரண்டு பிரிவுகளைக் கொண்டது.  ஒன்று, யோனி மந்த்ர ஸம்ஹிதா.  (யோனி- ஆதாரம்) இரண்டாவது சாம கானம்.  இது பொருள்வாரியாகப் பிரிக்கப்பட்டது.   

சாம வேத கோஷம்: https://www.youtube.com/watch?v=W5WbEDrIVmM

வேத பாராயணம் குறித்து ஒரு நாள் முழுதும் தேடியதில் பின்வரும் காணொளிதான் சிறந்ததாகக் கிடைத்தது.  கேளுங்கள்.

பல நாடுகள் தோன்றியே இராத கால கட்டத்திலேயே இந்தியாவில் இசை என்பது அதன் வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்திருக்கிறது.  உதாரணமாக, நாரத பரிவராஜக உபநிஷதத்தில் ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற notations குறிப்பிடப்படுகின்றன.  பரிவராஜக என்பது அலைந்து திரியும் சந்நியாசி என்று பொருள்.  நாரதர் ஒரு அலைந்து திரியும் சந்நியாசி என்பதால் அந்தப் பெயர்.  சங்கீதத் துறை (musicology) காந்தர்வ தத்துவம் என்று சொல்லப்பட்டது.  பரதரின் நாட்டிய சாஸ்திரம் இன்னொரு உதாரணம்.  இது கி.மு. 800-இல் தொகுக்கப்பட்டதாக இருக்கலாம்.  தொகுக்கப்பட்டது என்று சொல்வதன் காரணம், தொல்காப்பியர் என்மனார் புலவர் என்று சொல்வதைப் போல் பரதருக்கு முன்னதாகவே இருந்த சங்கீத, நாட்டியக் கோட்பாடுகளைத்தான் பரதர் செழுமைப்படுத்தியிருக்க வேண்டும்.  மேலும் வேதங்கள் நாட்டிய சாஸ்திரத்துக்கும் முற்பட்டவை.   அதில் இசைக்காகவே ஒரு வேதம் இருக்கிறது.   

இங்கே ஒரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.  தமிழ் மொழி பேசிய நிலப்பரப்பு கடந்த ஐந்தாயிரம் ஆண்டுகளாகவே அல்லது அதற்கும் முன்னதாகவே கூட வட இந்திய ஆதிக்கத்துக்கு உட்படாமல் தனித்தே இருந்து வந்தது.  இந்திய நிலப்பரப்பின் முதல் சாம்ராஜ்யாதிபதியான அசோகனின் சைன்னியத்தினாலேயே தமிழ் நிலப்பரப்புக்குள் நுழைய முடியவில்லை.  இது பற்றிய மிகப் பெரிய துக்கமும் ஆற்றாமையும் அசோகனின் இறுதி நாள் வரை இருந்தது.   சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் மிக நெருக்கமான உறவுகள் இருந்த போதும் கர்னாடக சங்கீதத்தின் அடிப்படை சாம வேதமாக இல்லை.  அதன் அடிப்படை தமிழ் இசையாகவே இருந்தது.  இது பற்றி சங்கீத அறிஞர் எஸ். ராமநாதனின் சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம் என்ற நூலில் மிக விரிவாக ஆய்வு செய்திருக்கிறார்.  அதையும் ஆபிரஹாம் பண்டிதரின் கருணாம்ருத சாகரம் என்ற பிரம்மாண்டமான புத்தகத்தையும் பற்றி நாம் இந்த நூலின் பிற்பகுதியில் காணலாம்.  அதே சமயம் புகழ்பெற்ற இசை ஆய்வாளர் பி. சாம்பமூர்த்தி பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை இந்தியாவில் ஒரே வகையான இசையே இருந்தது, கர்னாட இசை ஹிந்துஸ்தானி இசை என்ற இரண்டு பிரிவுகளைப் பற்றி நாம் முதன்முதலாக ஹரிபாலாவின் சங்கீத சுதாகரா என்ற நூலில்தான் அறிகிறோம் என்கிறார்.  சங்கீத சுதாகரா கி.பி. 1310 வாக்கில் எழுதப்பட்டது. 

பண்டிட் சியா ராம் திவாரியின் ஜய்ஜய்வந்த்தி

உஸ்தாத் ஃபையாஸ் கான்

இவரை அவசியம் கேளுங்கள்.  அடுத்த வாரம் இவரைப் பற்றி எழுதுகிறேன்.

இந்தக் கட்டுரைத் தொடரை வாசித்தால் மட்டும் போதாது.  இதை எழுதி முடிக்க எனக்கு முழுசாக இரண்டு தினங்கள் பிடித்தன.  உஸ்தாத் ஃபையாஸ் கானைக் கேட்டால் ஹிந்துஸ்தானி இசைக்கு அடிமையாகி விடுவீர்கள். 

அடுத்த திங்கள் இசைக் குறிப்புகளில் சந்திப்போம்.