10. நகைச்சுவை மறந்த சமூகம்

ஒரு கவர்ச்சி நடிகை உச்சத்தில் இருந்த சமயம்.  பொறுங்கள், எடுத்த எடுப்பில் அந்த நடிகையின் பெயரைத்தான் தட்டச்சு செய்தேன்.  ஆனால் இப்போதெல்லாம் எந்தப் பெயரைப் போட்டாலும் குண்டாந்தடி அடி விழுகிறது என்பதால் மீண்டும் ஆரம்ப இடத்துக்குப் போய் நடிகையின் பெயரை நீக்கி விட்டு, ஒரு கவர்ச்சி நடிகை என்று போட்டேன்.  அந்த அளவுக்கு ஆகியிருக்கிறது நிலைமை.  சரி, ஆரம்பிக்கிறேன்.  ஒரு கவர்ச்சி நடிகை உச்சத்தில் இருந்த சமயம்.  அவரைச் சந்திக்க நேர்ந்தது.  பேசிக் கொண்டிருந்து விட்டு அன்றைய தினம் கோணல் பக்கங்களில் அந்தச் சந்திப்பு பற்றி எழுதினேன்.  கட்டுரை வந்து ஒரு அரை மணி நேரம் ஆகியிருக்காது.  என் நண்பரான இயக்குனரிடமிருந்து போன்.  அந்தப் பதிவை நீக்கி விடுங்கள். ”ஏங்க, நடிகையை சிலாகித்துத்தானே எழுதியிருந்தேன்?  தப்பாகவோ விமர்சித்தோ எதுவும் எழுதவில்லையே?” என்றேன்.  இருந்தாலும் அவருக்கு ஏகப்பட்ட போன் அழைப்புகளாம்.  தாங்க முடியவில்லையாம்.  மன உளைச்சலில் விழுந்து விட்டாராம்.  ப்ளீஸ் சாரு, அதை நீக்கி விடுங்கள். 

அடத் தக்காளிங்களா என்று வாய்க்குள் திட்டியபடி அந்தப் பதிவை நீக்கினேன்.  அந்த நடிகையை சங்க காலத்துப் பெண்களோடு ஒப்பிட்டு எழுதிய நான் மல்லாக்கப்படுத்துக் கொண்டு துப்பிக் கொள்ள வேண்டியதுதான்; வேறு வழியில்லை.  இருபது ஆண்டுகள் இருக்கலாம்.  இப்போதைய நிலை இன்னும் இறுக்கமாகியிருக்கிறது. 

ஒரு புகழ் பெற்ற நடிகை.  தென்னிந்தியாவே அவர் காலடியில் விழுந்து கிடப்பதாக கமலே எழுதியிருந்தார்.  அவரும் நானும் அவரது நண்பரும் ஒரு விருந்துக்குச் சென்றிருந்தோம்.  பார்க் ஓட்டல்.  (அப்பாடா, பெயரைப் போட்டு விட்டேன்). பேஸ்மெண்ட்டில் விருந்து.  Dry விருந்து என்றதும் மனம் வெறுத்து நைஸாக மேலே ஏறி வந்து லெதர் பாரில் ரெண்டு ரவுண்டு போட்டு விட்டுக் கீழே இறங்கினேன்.  லெதர் பாரில் என்னைப் போலவே நடிகைக்கு நெருக்கமான இன்னொரு பார்ட்டி சரக்கு அடித்துக் கொண்டிருந்தது. 

கீழே வந்து எதையோ கொறித்துக் கொண்டிருந்தபோது நடிகையிடமிருந்து ஒரு மெஸேஜ்.  ”என்ன லெதர் பாரில் சரக்கா?” “அடப்பாவி, இவருக்கு எப்படித் தெரியும்?” என்ற ஆச்சரியத்துடன் பார்த்தால் லெதர் பார் பார்ட்டி அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்தது.  உடனே நான் பதிலுக்கு “என்ன, உங்களுக்கு லெதர் பாரில் எல்லாம் ஸ்பை இருக்கு போல் இருக்கே?” என்று அடித்து வைத்தேன். 

இதில் ஏதாவது தப்பு தெரிகிறதா?  உடனே நடிகை எனக்கு 25 மெஸேஜ் அனுப்பினார்.  என் நண்பரைப் பற்றி நீங்கள் எப்படி ஸ்பை என்று சொல்லப் போயிற்று?  நான் ஆந்திராவிலிருந்து மெட்றாஸுக்கு வந்து நாய் படாத பாடு பட்டுக் கொண்டிருந்த போதிருந்து அவர் என் நண்பர்.  உற்ற நண்பர்.  அவரைப் போய் எப்படி நீங்கள் குற்றம் சாட்டப் போயிற்று, ஆ… ஊ… ஆ… ஊ…”  இதே பாணியில் 25 மெஸேஜ்.  நடிகைக்குப் பைத்தியமே பிடித்து விட்டது போல் தோன்றியது.  அன்று இரவு அவர் தூக்க மாத்திரையைப் போட்டு தற்கொலைக்கு முயலாமல் இருந்ததால்தான் இன்று நான் உங்கள் முன்னே எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இல்லாவிட்டால் ஆயுள் தண்டனைக் கைதிதான்.  ஒரு நடிகையைக் கொன்ற பழி வந்து சேர்ந்திருக்கும்.  அத்தோடு அவருக்கு டாட்டா.  ஆனால் ஒரு கடைசி மெஸேஜ் அடித்தேன். ஒரு ஜோக் அடிக்கக் கூட முடியாத உங்கள் நட்பு எனக்கு வேண்டாம்.  அதைப் பார்த்தும் அவர் ஸாரி சொல்லவில்லை.  அவர் என்ன நினைத்திருப்பார் என்று எனக்கு மிக நன்றாகப் புரிந்தது.  நான் என் கொலைபாதகத் தவறை உணர்ந்து அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பேன் என்று அவர் நினைத்திருப்பார்.  நிச்சயம்.  நான் அதைச் செய்யவில்லையா?  அது மட்டுமல்லாமல் – அதாவது என் கொலைபாதகச் செயலை உணராமல் திமிராக வேறு பேசி விட்டேனா – என் முகத்திலேயே விழிக்க மாட்டேன் என்று சபதம் போட்டிருப்பார்.   உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை திமிர் பிடித்த ஒரு ஆளால்தான் அப்படி நினைக்க முடியும்.  ஏன்யா, நீர் என்னோடு ஜோக் அடிப்பீர், நான் பதிலுக்கு அடித்தால் தீராப்பழியா? அப்போதிருந்தே பகடி செய்வதில் ரொம்ப ஜாக்கிரதையாகத்தான் இருப்பேன். 

தன்னையே பகடி செய்து கொள்பவன் தான் மற்றவரையும் பகடி செய்ய முடியும்.  இத்தனைக்கும் நாம் எல்லோரும் நினைத்து அஞ்சக் கூடியது மரணம்.  அதையே பகடி செய்து ரெண்டு நாள் முன்பு எழுதியிருந்தேன்.  எனக்கான மரண அஞ்சலிக் குறிப்பை ஜெயமோகன் எழுதி நான் படிக்க வேண்டும் என்று.  இதை விட வேறு பகடி என்னய்யா வேண்டும்?  ஐயோ, சொல்லாதீர்கள், சொன்னால் நடந்து விடும் என்று அஞ்சுவார்கள்.  அதற்கும் கூட நான் அஞ்சவில்லை.  இதை விடுங்கள்.  இதுவாவது மரணம் பற்றிய சுய பகடி.  நான் செத்துப் போனால் என்னென்ன நடக்கும், நான் செத்துப் போவதை நானே எப்படி வியாக்கியானம் செய்வேன் என்றெல்லாம் விலாவாரியாகக் கற்பனை செய்து அராத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.  கிட்டத்தட்ட சாரு பற்றிய ஒரு அஞ்சலிக் குறிப்பு.  அதையே ரசித்துப் படித்தவன் நான்.  இங்கே ஒரு ஏகாரம் வருவதைக் கூட நான் வெறுக்கிறேன்.  இப்படிப்பட்ட ஒரு ஆள் இப்படி பகடி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டத்தில் மாட்டிக் கொண்டிருப்பது பெரிய துயரம்தான். 

காரணம், இங்கே உள்ள நகர – பிராமணச் சூழல்தான் என்று நினைக்கிறேன்.  இங்கே வசிக்கும் செட்டியார், முதலியார், தலித், வன்னியர் எல்லோருமே பிராமணர்தான்.  நகரத்தில் எல்லோருமே பிராமணர் மாதிரிதான் இருக்கிறார்கள்; யோசிக்கிறார்கள்.  ஆனால் தஞ்சாவூர் மாவட்ட பிராமணர் வேறு மாதிரி.  அங்கே கிண்டலும் கும்மாளமும் ஆகாயம் வரை பாயும்.  அதிலும் நாகூர் இருக்கிறதே, இம்மாதிரி ஆட்களெல்லாம் தூக்கு மாட்டிக் கொண்டு செத்து விடுவார்கள்; அல்லது, கொலைகாரர்களாகி விடுவார்கள்.  அப்படி ஒரு கிண்டலும் நையாண்டியுமாகக் கழியும் பேச்சும் பொழுதும். இதையெல்லாம் நீங்கள் அந்தக் காலத்துக் கும்பகோணத்து எழுத்தாளர்களின் படைப்புகளில் பார்க்கலாம். 

எங்கள் வீடு ஒரு ரெண்டுங்கெட்டான்.  தெலுங்கும் தமிழும் கலந்த ஒரு கலவை.  பக்கத்து வீட்டு அத்தாச்சி என்னைப் பார்த்து பலர் முன்னிலையில்  ”என்னடா ரவி, இப்படி ஆடுது, உள்ளாக்க ஒண்ணும் போடலியா?” என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?  என் வயது 16.  பதினொன்றாம் கிளாஸ் படிப்பு.  அத்தாச்சியின் வயது 18.  திருமணம் ஆகவில்லை.  என்னை விட வயதானவர் என்ற ஒரே ஒரு உரிமைதான்.  என் அம்மாதான் என் உயிரைக் காப்பாற்றினார்கள் அன்றைக்கு.  ஏண்டி பொத்தாச்சி, எடுத்து வேண்ணா ஓ(ங்) பொத்தல்லதான் வச்சுக்கயேன்…  அவனுக்கு என்ன வந்துச்சு ஆம்பள சிங்கம்.  அப்புறம் ஒனக்குத்தான் முன்னாடி தள்ளிக்கிட்டு நிய்க்கும்.” 

“அய்யய்யோ அத்தெ… நீங்க நிய்க்கிறிங்களா பாக்கவே இல்லியே” என்று சொல்லி விட்டு உள்ளே ஓடி விட்டது அத்தாச்சி. 

எனக்குக் கடைசி வரை ஒன்றுமே புரியவில்லை.  ஆண் பிள்ளைகளுக்கெல்லாம் முன்னே ஆடத்தானே செய்யும்?  ஏன் அத்தாச்சி கிண்டல் செய்கிறது?  அம்மாவிடமும் கேட்க முடியாது.  பேபியிடம் கேட்டேன்.  அதிசயித்துப் போய் விட்டான். 

டேய் நீ ஜட்டி போடுவியா மாட்டியா?

ஜட்டியா, அப்டீன்னா?

அதாண்டா அண்ட்ராயரு?

அதெல்லாம் நைனாதான் போடுவாங்க.  நம்ம ஏன் போடணும்?

”அப்போ இப்படித்தான் கண்ட நாய்ங்களும் கிண்டல் பண்ணும்.  போய் முதல்ல கோமணத்தைக் கட்றா நாயே” என்று சொல்லி விரட்டி விட்டான் பேபி.  அன்றிலிருந்துதான் கோமணம் கட்ட ஆரம்பித்தது.  எனக்கு ஆனால் அம்மா மீதுதான் கோபம்.  இதையெல்லாம் அவர்கள்தானே சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்?  ஆனால் கோமணமும் பெருத்த அவமானத்துக்கு ஆட்பட்ட போது வேறு வழியில்லாமல் நைனாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஜட்டி வாங்கிக் கொண்டேன். 

என் கடைசி அத்தை வீட்டில் இருந்தார்கள்.  என்னை விட நாலைந்து வயதுதான் பெரியவர்கள்.  கோமணத்தைத் துவைத்துக் கொல்லையில் உள்ள கொடியில் காயப்போட்டால் “யாரோட கோமணம் இது?  யார் இங்கே கோமணம் கட்றது?  அதும் இவ்ளோ பெரிய கோமணம்?” என்று மானத்தை வாங்கினார்கள்.  அதெல்லாம் பெரிய கதை.  நாவலில் எழுதலாம்.  எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் தஞ்சாவூரும் நாகூரும் அப்படி.  நாகூர் மண்ணிலேயே பகடி ஓடும்.  அங்கே உள்ள முஸ்லீம் பையன்கள் பேசும் பகடி மொழிகளைக் கேட்டால் இந்த சென்னை நகரவாசிகளுக்குப் பைத்தியம் பிடித்து விடும்.  அந்தப் பையன்களோ “எங்கள் பெண்களிடம் மாட்டினால் சாக வேண்டியதுதான்.  பயங்கரவாதிகள்” என்பார்கள்.  இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த எனக்கு பகடியே தெரியாத சென்னையும் சென்னை நகர மாந்தரும் ஏதோ கொள்ளிவாய்ப் பிசாசுகளைப் போல் தெரிகிறார்கள். 

ரெண்டு தினங்களுக்கு முன் ஒரு பகடி எழுத இருந்தேன்.  பழைய சம்பவம் ஞாபகம் வந்து பயம் வந்து விட்டது.  சென்ற ஆண்டு ஒரு செம பகடி எழுதி என் மகனைப் போன்ற ஒரு எழுத்தாளன் என் மீது கோபம் கொள்ள பெரும் கலவரமாகி விட்டது.  அடக் கடவுளே, ஒரு பகடிக்கா இந்தக் குழப்பம்!  பகடி என்பது வேறு, body shame வேறு என்பது கூட இந்த நகர மாந்தருக்குத் தெரியவில்லை.  நாகூர்ப் பகடி மதத்தையே கிண்டல் செய்கிற அளவுக்குப் போகும்.  யாரும் தப்பாக எண்ண மாட்டார்கள்.  ஜாதிப் பகடி என்பது சர்வ சகஜம்.  எழுதினால் என்னைக் கைமா பண்ணி விடுவார்கள்.  பிறகு அந்தக் கிளாஸிக் பகடியை நீக்கும்படி ஆனது.  உரிமை எடுத்துக் கொள்ள முடியாத இடத்தில் விலகி விடுவதே என் இயல்பு. 

ரெண்டு தினங்களுக்கு முன் சீனிக்கு போன் போட்டு இன்னின்ன மாதிரி எழுதப் போகிறேன், ஏதாவது பிரச்சினை வருமா என்று கேட்டேன்.  எவ்வளவு துயரம் பாருங்கள்.  நான் ஒரு ஜோக் சொல்லப் போகிறேன், யாரும் வருத்தப்பட்டு விடுவார்களா என்று கேட்பது.  வெண்பா பெயர் வரும்.  வெண்பா கோவிப்பாரா?  ஜெயமோகன் பெயர் வரும்.  ஜெயமோகன் கோவிப்பாரா?  அருண்மொழி நங்கை பெயர் வரும்.  அருண்மொழி நங்கை கோவிப்பாரா?  எல்லாவற்றுக்கும் எதிர்மறையிலேயே பதில் சொன்னார் சீனி.  கடைசியில் என் வீட்டுக்குள் கேட்க மறந்து போனேன்.  மறக்கவில்லை.  என்னைப் பகடி செய்து கொள்ள எனக்கு உரிமை இருக்கிறது என்று நினைத்தேன்.  அதற்கும் சிலரிடம் அனுமதி பெற வேண்டும் என்பது தெரியாமல் போய் விட்டது.  கடைசியில் அந்தப் பகடியைக் காயடித்து விட்டேன்.  பகடி செத்து விட்டது. 

எந்த ஒரு சமூகம் பகடியை ரசிக்கத் தெரியவில்லையோ அது மனநோயில் கிடக்கிறது என்று பொருள்.  அந்த வகையில் தமிழ்நாடு மகா பெரிய மனநோயில் கிடக்கிறது.  கேரளம் அப்படி இல்லை.  அங்கே பெரிய பெரிய ஆட்களையெல்லாம் சர்வ சகஜமாகப் பகடி செய்வார்கள்.  இத்தனையும் ஏன் எழுதுகிறேன் என்றால், பத்து நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் போன் செய்து என் பெயரையே நீங்கள் குறிப்பிடுவது இல்லையே என்று விசனப்பட்டார்.  இன்று அவர் பெயரைக் குறிப்பிட வேண்டிய தேவை இருக்கிறது.  ஆனால் அவர் கோவிப்பாரா, நகைச்சுவையை ரசிப்பாரா என்று தெரியவில்லை.  அதனால் ஒரு கவிஞர் என்றே போடுகிறேன்.  ஏனென்றால், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கவர்ச்சி நடிகைக்காக இயக்குனர் பேசியதைப் போலவே ரெண்டு நாளைக்கு ஒரு முறை அதை நீக்குங்கள் இதை நீக்குங்கள் என்று புகார்கள் வந்தவண்ணமே உள்ளன.  இங்கே அரசுத்துறை சென்ஸாரே தேவையில்லை.  ஒவ்வொருத்தருமே literary commissarஆக இருந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இன்று ஒரு கவிஞர் என்று போடுகிறேன்.  பெயர் போடாமல்.  ஆனாலும் பெயர் போட்டால்தான் பகடியை நன்கு ரசிக்க முடியும்.  ஆனால் இந்தக் கொடூரமான, நகைச்சுவை உணர்வற்ற, நோய்க்கூறான சமூகச் சூழலின் காரணமாக கவிஞரின் பெயரைப் போடாமல் ஒரு கவிஞர் என்கிறேன்.

அராத்து செமையாக மிமிக்ரி பண்ணுவார்.  தாமு, கமல் மாதிரி அல்ல.  உயர்தர மிமிக்ரி.  அந்த மாதிரி மிமிக்ரி பாரதிராஜா மட்டுமே செய்து ரசித்திருக்கிறேன். வித்தியாசம் என்னவென்றால், அந்த ஆளாகவே மாறி விடுவது. ஒரு பத்து நிமிடம் பாரதிராஜா கமலாகவே மாறி விடுவார்.  கருணாநிதியாகவே மாறி விடுவார்.  அச்சு அசலாக.  அப்படித்தான் செய்வார் சீனி.  ஆனால் பாரதிராஜாவுக்கும் சீனிக்கும் ஒரு வித்தியாசம், சீனி யாரை மிமிக்ரி செய்கிறாரோ அந்த நபர் அவர் எதிரே இருக்கக் கூடாது.  எனவே என்னை அவர் மிமிக்ரி செய்து நான் பார்க்க இயலாது.  வேண்டுமானால் நான் இல்லாத போது அவர் செய்வதை விடியோ எடுத்துக் காண்பித்தால் பார்க்கலாம்.  உதாரணமாக, எங்கள் செஷன்களில் கவிஞரை மிமிக்ரி செய்வார் பாருங்கள்.   எல்லோருக்கும் சிரித்துச் சிரித்து புரையேறி விடும்.  ஒருமுறை ஒருத்தர் என்னுடைய ரெமி மார்ட்டின் பாட்டிலையே உடைத்து விட்டார்.  சும்மா அவர் மாதிரியே குரல் மாற்றிப் பேசுவது அல்ல.  அது கமல் மிமிக்ரி.  வேஸ்ட்.  ஒரு நாள் நடந்ததைக் கேளுங்கள்.  கவிஞரின் கவிதைகளை ஏதோ புத்தகத்திலிருந்து படிப்பது போல் சரளமாக ஏற்ற இறக்கங்களுடன் கவிஞரைப் போலவே சொல்லிக் கொண்டு போகிறார் சீனி.  மிரண்டு போன நான் ”கவிஞர் இதைப் பார்த்தால் உங்களைக் கொண்டாடித் தள்ளி விடுவார்.  இந்த அளவுக்கு மனப்பாடமாக அவர் கவிதைகளைச் சொல்கிறீர்களே?  அவரே இப்படிச் சொல்வாரா தெரியவில்லையே?” என்றேன்.  (இங்கே கவிஞருக்கு பயந்து கொண்டுதான் பெயரைப் போடாமல் கவிஞர் கவிஞர் என்கிறேன்).

உடனே சீனி கடும் கோபத்துடன் “டோண்ட் இன்சல்ட் மீ சாரு.  எல்லாம் நானே இந்த க்ஷணம் புனைந்ததாக்கும்.  அந்தக் கவிஞர் மாதிரி நானே இட்டுக் கட்டி அதாவது புனைந்து பாடுகிறேன்” என்றார்.  அடுத்து ஒரு நீண்ட கவிதை சொன்னார்.  மறுநாளே கவிஞர் அதே பாணியில் மறுநாள் ஒரு நீண்ட கவிதையை வெளியிட்டார்.  முந்தின நாள் நள்ளிரவில் எழுதினது.  கிட்டத்தட்ட அதே நேரத்தில்தான் சீனியும் அந்தக் கவிதையை எங்களிடையே சொன்னார்! 

வேண்டாம்.  தேவதச்சன் தான் ரொம்பக் கடினமான கவி.  எங்கே ஒரு தேவதச்சன் கொடுங்கள் பார்ப்போம் என்றேன்.  எல்லாம் ஸ்பெஷல் தோசை, முட்டை தோசை மாதிரிதான்.

அடுத்த க்ஷணம் வந்தது தேவதச்சன் கவிதை.  அதுவும் சீனி அந்த க்ஷணமே புனைந்தது. 

இதேபோல் நேற்று நள்ளிரவு சில கவிதைகளை எழுதி முகநூலில் போட்டிருக்கிறார்.  உடனே இந்தக் கூறு கெட்ட சமூகம், எல்லாம் அந்தந்தக் கவிஞரிடமிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள் என்று நினைத்து விட்டன.  காலக் கொடுமை.  ஆனால் நான் பரவாயில்லை.  எடுத்த எடுப்பில் கண்டு பிடித்து விட்டேன்.  இப்போது சீனி எழுதிய கவிதைகள்.  கவனம், இவை சீனி எழுதியவை.  இது எல்லாமே அந்தந்தக் கவிஞரிடமிருந்து எடுத்தது என்று நினைத்து விட்டார்கள் என்று வருந்தினார் சீனி.  சீச்சி, அந்த அளவுக்கு ’ஒரிஜினலாக’ எழுதுகிறீர்கள் என்று பெருமை கொள்ளுங்கள் என்றேன்.  இனி கவிதைகள்:

எறும்பு வரிசையில் திடீரென்று

முகர்ந்து பார்த்துப் பிரியும்

எறும்பைப் போல

சடுதியில் ஒரு மென் முத்தமிட்டு

அவரவர் வழியில்

எதிர்திசையில்

போய்க்கொண்டு இருந்தால் தான்

என்ன ?

– வண்ண தாசன்

ஒரு எறும்பு முத்தமிடுவது போல

பூனைகள் முத்தமிட்டுக்கொள்வது போல

பறவைகள் அலகுகளால்

கொத்திக்கொள்வது போல

மீன்கள் கண நேரத்தில் முத்தமிட்டுப்

பிரிவது போல

டியூஷன் டீச்சர் முதலில்

வந்த மாணவியை

வெடுக்கென முத்தமிடுவது போல

கரண்ட் கட் ஆன போது

நண்பனின் மனைவியை

இருட்டில் மூக்கில்

முத்தவிடுவது போல

எனக்கு கண நேர முத்தங்கள் முத்தங்கள்

வாய்ப்பதில்லை.

நீண்ட நேர முத்தங்களுக்காக

காத்திருக்கிறேன் ,

இரண்டு ரயில்கள்

ஒரே தண்டவாளத்தில் முத்தமிட்டுக்கொள்வதைப்

போல

– மனுஷ்

ஆதி முத்தத்தின்

ஈரம்

மழையாகப் பெய்து கொண்டிருக்கிறது .

உதடுகள்

உறைந்து

நிலங்களாகின

உதடுகள்

உரசிக்கொள்ளும்

ஒவ்வொரு

கணத்திலும்

நிலம்

குளிர்கிறது.

– சாரு நிவேதிதா

நிறைய முத்தங்களைப்

பதுக்கி வைத்திருக்கும்

மலரிடம்

சிறுமி கேட்டாள்

முத்தம்

என்றால் என்ன ?

கன்னத்தில் மகரந்தத்தை

தடவிக்கொண்டே

பதில் சொல்லாத

மலரிடம்

கோபித்துக்கொண்டு

நடக்கிறாள்

சிறுமி .

– தேவதேவன்

அலுவலகம் செல்லும் அப்பா

காரை நகர்த்தும் போது

அம்மாவின் இடுப்பில் இருந்து

குனிந்து கார் கண்ணாடியில்

முத்தமிட்டது குழந்தை .

சிக்னல்கள் தோறும்

பச்சை விளக்கு

எரிந்து கொண்டிருந்தது.

வழியெங்கும் சிதறிக்கிடந்த

குழந்தையின்

முத்தத்தை

பொறுக்கிய படி

காருக்கு வழிவிட்டார்கள்.

குழந்தை

வீட்டில் இருந்தபடியே

இன்னும் சில

முத்தங்களை

உருவாக்கிச் சேமித்தபடி

இருந்தது.

– முகுந்த் நாகராஜன்

குதிரைப் பந்தயத்தில்

ஓடிக்கொண்டிருந்த

வெள்ளைக் குதிரையொன்று

திடீரென்று கறுப்புக் குதிரையொன்றைப் பார்த்து

முத்தமிடத் தீர்மானித்தது.

ஓட்டத்தை நிறுத்தாமலேயே

கருப்புக் குதிரையருகே வந்தது .

குதிரைகளுக்கு முத்தமிடுதல் என்றால்

காலைத்தூக்குதல்

இரண்டு ஓட்டிகளும் தலைக்குப்புற

விழுந்தனர்.

குதிரைகள்

ஓடிக்கொண்டே இருந்தன

அந்த முத்தமிடுதல்

எங்கும் பதிவாகவில்லை.

– தேவ தச்சன்

முத்தம்

வெறும் சத்தமா

அல்ல

யுத்தமா ?

இதுப் பெருங் குற்றமா?

தத்தம் உதடுகளின்

நித்தச் சலனம்

மொத்தக் கலகம்

அதுதான்

நந்திக் கலம்பகம்.

– வைரமுத்து

நேற்றிரவு

யாரை முத்தமிட்டேன்

என்று மறந்து விட்டது

அந்த முத்தமும்

நாளை மறந்து விடும்.

-அராத்து

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai