நெகிழ்ச்சி

ரோஜா முத்தையா நூலகத்திலிருந்து புத்தகம் எடுக்க உதவி கேட்டு எழுதினேன் இல்லையா, எழுதின பத்து மணி நேரத்துக்குள் சுமார் ஐம்பது பேர் தாங்கள் செல்வதாக எழுதினார்கள். ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் அடைந்தேன். இதில் பத்து பேர் மிக நெருங்கிய நண்பர்கள். ஒரு நண்பர் தமிழக அரசில் ஒரு துறையின் தலைவராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர். அவர்தான் முதலில் தொடர்பு கொண்டவர் என்பதால் அவரிடமே பொறுப்பைக் கொடுத்தேன். வேலை முடிந்தது. இவ்வளவு அன்புக்கும் என் பிரதி உபகாரம் என் எழுத்து மட்டுமே. தீவிரமாக எழுதுவேன்.

வேலையை முதலில் எடுத்துக் கொண்டு என்னைத் தொடர்பு கொள்ளாத நண்பரும் பேசினார். ஸாரி என்றார். ஸாரி எனக்குப் பிடிக்காத வார்த்தை. இதிலிருந்து கற்றுக் கொண்டு மேலே செல்லுங்கள் என்றேன். தகவல் தொடர்பில்தான் கோட்டை விட்டு விடுகிறோம். நானும் செய்கின்ற தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டுதான் தொடர்கிறேன். முக்கியமான விஷயம் என்னவென்றால், அதே தவறை மீண்டும் செய்யக் கூடாது. எல்லாவற்றையும் விட முக்கியம், என்னால் முடியாது என்று சொல்வதற்கும் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். செய்கிறேன் என்று சொல்லி விட்டு சொதப்புவதை விட முடியாது என்று முதலிலேயே சொல்வது சிலாக்கியம். பல நண்பர்கள் முக தாட்சண்யம் கருதியே முடியாது என்று சொல்வதில்லை என்று புரிந்து கொள்கிறேன். அப்படி இருக்கத் தேவையில்லை. எதார்த்தமாக இருந்து பழக வேண்டும்.

நாளை சனிக்கிழமை இரவு இந்திய நேரம் பத்து மணிக்கு அட்லாண்டா நகரின் தமிழ்ச் சங்கம் சார்பாக ஸூம் மூலம் பேசுகிறேன். தலைப்பு கலையும் வாழ்க்கையும். சனி இரவு பத்து மணி என்பதால் நீங்கள் அனைவருமே கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு மணி நேரம் மட்டுமே கச்சேரி. யார் வேண்டுமானாலும் பேச்சைக் கேட்கலாம். கட்டணம் எதுவும் இல்லை. இதை ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் மூலம் கேட்கலாம் என்பதால் பாஸ்வேர்ட் வகையறா தேவையில்லை. அழைப்பிதழில் என் படத்துக்குப் பக்கத்தில் டி. ராஜேந்தர் இருப்பார். அவர் பெயருக்குக் கீழே உரையாடல் என்று இருக்கும். எனக்கும் அவருக்கும் உரையாடல் என்று குழம்ப வேண்டாம். அவர் பேசி முடித்த பிறகு நான் பேசுவேன். ஸூம் தான் என்பதால் மேடை, நேர்ச் சந்திப்பு, மாலை, பொன்னாடை போன்ற ஆடம்பரங்கள் எதுவும் இல்லை. டி.ஆர். பேசி முடித்து படுதா போட்டதும் நான் பேசுவேன். இல்லை, அவரும் நானும்தான் உரையாட வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் அடுத்த ஆண்டு டோக்யோ தமிழ்ச் சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்யலாம். நீங்கள் என்ன ஆசைப்படுகிறீர்களோ அதைச் செய்வதுதான் என் கடமை.

வேறு என்ன? சந்தா/நன்கொடை அனுப்ப விரும்புவோர் அனுப்பலாம். பூனை உணவும் தேவைப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.