புரட்சித் துறவி

நான் என்னுடைய பதின்பருவத்தில் தீவிர ஆன்மீகத் தேட்டம் உடையவனாக இருந்தேன்.  ஆன்மீகப் பத்திரிகைகளில் நிவேதிதா என்ற பெயரில் எழுதினேன்.  விவேகானந்தரின் ஞான தீபம் தொகுப்புகளை வாங்கிப் படித்து அவரையே என் மானசீக குருவாக வரித்துக் கொண்டேன்.  தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது (1974-75) சமண சமயம் தொடர்பான என் கட்டுரை ஒன்று தமிழ்நாடு சமண சமயத்தின் குருமார்களால் சிலாகிக்கப்பட்டு பெரியதொரு தொகை பரிசாக வந்தது.  வாரம் ஒருமுறை மௌன விரதம் எல்லாம் இருப்பேன். 

இப்போது என்னுடைய அசோகா நாவலுக்காக ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அம்பேத்கர், விவேகானந்தர் ஆகியோரின் பௌத்தம் பற்றிய கருத்துக்களைப் படித்தேன்.  அப்போது மீண்டும் ஒருமுறை விவேகானந்தரின் உலகை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நம் சிறுவர்களுக்கு விவேகானந்தர் எல்லாம் வெறும் பெயராகவே தெரிந்திருக்கிறது.  அவரைப் பற்றி ஒரு ஐந்து வாக்கியம் எழுது என்றால் எந்த மாணாக்கருக்காவது எழுதத் தெரியுமா?  சினிமா ஹீரோ பற்றி எழுது என்றால் பிஹெச்டி வாங்கும் அளவுக்கு எழுதிக் குவிப்பார்கள். 

விவேகானந்தர் மற்ற துறவிகளைப் போல் இல்லை.  சராசரி மனிதனின் வாழ்க்கை பற்றியும் அவனது சுக துக்கங்கள் பற்றியும் நன்கு அறிந்தவர்.  இந்தியா முழுவதும் சுற்றி வந்தவர். சாதாரணமாக அல்ல.  துறவு நிலையில் அதைப் பரிவராஜகம் என்பார்கள்.  அவரது குரு ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு கையில் ஒரு கமண்டலம், பகவத் கீதை மற்றும் இமிடேஷன் ஆஃப் கிறைஸ்ட் ஆகிய இரண்டு புத்தகங்கள்- இவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு ஐந்து ஆண்டுக் காலம் (1888 – 1893) இந்தியா பூராவும் சுற்றி வந்தார். (கமண்டலம் வேறு, திருவோடு வேறு.  கமண்டலம் என்பது தண்ணீர்க் குடுவை)  இந்தியா முழுவதும் நடந்தும் ரயிலிலும் பயணம் செய்தார்.  ரயில் டிக்கட்டை அவரை அறிந்த சீடர்கள் எடுத்துக் கொடுத்தனர்.  பயணத்தின்போது அவர் தலித்துகள், முஸ்லீம்கள், பிராமணர், மன்னர், கிறித்தவர், குடியானவர் என்று எல்லாருடைய வீடுகளிலும் தங்கினார்.  வீடுகள் இல்லாத போது காட்டிலும் மேட்டிலும் கூடப் படுத்து உறங்கினார்.  ஒருமுறை பிருந்தாவனத்தில் நடந்து கொண்டிருந்தபோது சாலையில் ஒருவர் ஹூக்கா புகைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.  எனக்குக் கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்க, நான் கீழ் ஜாதி ஆயிற்றே என்று சொல்லி அவர் மறுத்து விட்டார்.  சுவாமியும் சரி என்று சொல்லி கொஞ்ச தூரம் போனவர், எல்லா ஆத்மாவும் ஒன்றே என்ற தத்துவத்தை ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு ஏது ஜாதி எல்லாம் என்று நினைத்து மீண்டும் அவரிடமே வந்து கேட்க, அவர் மீண்டும் மறுக்க, இவரே ஹூக்காவை வாங்கிப் புகைத்திருக்கிறார். 

   

ஆரம்ப காலத்தில் அவர் மேற்கத்திய தத்துவத்தாலும் பிரம்ம சமாஜக் கோட்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டிருந்தார். அதன்படி, சிலை வணக்கம் கூடாது, பல கடவுள்களை வணங்கக் கூடாது.  அப்போது விவேகானந்தர் தான் சந்திக்கும் அத்தனை பேரிடமும் கடவுளை உங்கள் கண்களால் பார்த்திருக்கிறீர்களா என்றே கேட்டுக் கொண்டிருப்பார்.  யாராலும் அவருக்கு நேரடியான பதிலைத் தர முடியவில்லை – ஒரே ஒருவரைத் தவிர.  அவர் ராமகிருஷ்ணர்.  உன்னை இப்போது எப்படிப் பார்க்கிறேனோ அதேபோல் கடவுளையும் பார்க்கிறேன் என்றார் ராமகிருஷ்ணர்.  ஆனால் அதற்கு நாம் மிகத் தீவிரமான தியானத்தில் அமர வேண்டும் என்றார்.  தான் கண்டதை விவேகானந்தரும் காணச் செய்தார். 

5 அடி 9 அங்குல உயரமும் கட்டுமஸ்தான தேகமும் கொண்ட விவேகானந்தரிடம் எல்லோரையும் வசியப்படுத்தக் கூடிய ஒரு ஆன்மீக சக்தி இருந்தது.  அவரை சந்தித்த பலரும் இது பற்றி எழுதியிருக்கிறார்கள்.  12 பெப்ருவரி 1894 அன்று அமெரிக்காவில் அவரை மிஸ் குக் என்ற ஜெர்மன் ஆசிரியை சந்தித்திருக்கிறார். சுவாமியின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட அவர் சுவாமியிடம் சென்று அவர் கைகளைக் குலுக்க நீண்ட நேரம் அவர் கைகளைப் பிடித்திருந்தாராம் சுவாமி.  அப்போது தன் கைகளில் உணர்ந்த மின்காந்த அலைகளால் தன் கையை மூன்று தினங்கள் நீரிலேயே நனைக்கவில்லை என்கிறார் மிஸ் குக்.  பார்ப்பதற்கு தங்கச் சிலை இருப்பார் சுவாமி.  மேலும், அவர் ஒரு மல்யுத்த வீரரும் கூட.  அது பற்றி அவரது சீடர்களே அவரிடம் கிண்டல் செய்வார்களாம்.  ”எல்லோரும் கடும் விரதங்களால் மெலிந்து போன சுவாமிகளைத்தான் பார்த்திருக்கிறோம்.  ஆனால் நீங்களோ பயில்வான் சுவாமி.”  உண்மைதான்.  சுவாமி ஒரு connoisseur of food.  சாப்பாட்டுப் பிரியர்.  நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, சுவாமி ஒரு அசைவ உணவுக்காரர். வங்காளிகள் விரும்பிச் சாப்பிடும் ஹில்சாதான் சுவாமிக்கும் பிடித்த மீன்.  அவர் அமெரிக்காவில் இருந்தபோது அங்கே ஹில்சா போன்ற வேறு ஒரு மீனை வாங்கி சமைத்து சாப்பிடுவார்.  முட்டை, மட்டன் எல்லாம் உண்டு.  ஆனால் மாட்டுக் கறி மட்டும் தொடுவதில்லை. அசைவம் அவரது குடும்பப் பழக்கம். அதை அவர் கடைசி வரை விடவில்லை.  மது அருந்த மாட்டார். ஆனால் புகைப் பழக்கம் உண்டு. அதே சமயம், விரதம் இருக்கும் காலகட்டங்களில் மாமிசம், மீன், புகை மூன்றையும் தொட மாட்டார். மேற்கத்திய நாடுகளில் சுவாமியின் இந்தப் பழக்கம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை.  ஆனால் சைவமும் துறவும் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தியாவில் சுவாமியின் பழக்கங்கள் பற்றி ராமகிருஷ்ணரிடம் புகார்கள் சென்றன.  அதற்கு பரமஹம்சர் சொன்னார்: ”நரேன் தகதகவென்று எரிந்து கொண்டிருக்கும் அக்னி. அவன் பன்றிக் கறியும் மாட்டுக் கறியும் கூட சாப்பிடலாம்.  எல்லாவற்றையுமே அவனுடைய அக்னி எரித்துச் சாம்பலாக்கி விடும்.  அவனிடம் கொழுந்து விட்டு எரியும் ஆன்மீக ஒளியை எந்தப் பழக்கமும் ஒன்றும் செய்ய முடியாது.”  மேலும், தான் உருவாக்கிய மடத்தில் கூட ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் என்னென்ன உணவுப் பழக்கமோ அப்படியே வைத்துக் கொள்ளுங்கள், சைவம் அசைவம் பற்றித் தனியாக விதிமுறைகள் கிடையாது என்றே விதித்திருக்கிறார் விவேகானந்தர்.  இது 120 ஆண்டுகளுக்கு முந்தைய கதை. 

பல சந்தர்ப்பங்களில் விவேகானந்தரின் அசைவ உணவுப் பழக்கம் பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஒருமுறை அதற்காக உப்பு கூட போடாமல் வெறும் சோற்றையும் நீரையும் மட்டுமே பல நாட்கள் உண்டு காண்பித்திருக்கிறார். அப்போது அவர்களிடம் சுவாமி சொன்னார், கடவுள் என்ன உங்களைப் போல் முட்டாளா?  ஒரு சின்ன மாமிசத் துண்டா அவருடைய எல்லையற்ற கருணையைத் தடை போட்டு விடும்?  அப்படி இருந்தால் அவர் கடவுளே இல்லையே?” அதேபோல் சைவத்திலும் கடும் காரம், மிளகு மற்றும் மசாலா சாமான்கள் சேர்த்துக் கொள்வார்.  மாமிச உணவின் மீது இவர் ஊற்றிக் கொள்ளும் மிளகாய் சாஸைப் பார்த்து விட்டு மிரண்டு போவார்கள் அமெரிக்கர்கள்.  சுவாமியைப் பார்க்க வரும்போது சிலர் மிளகாய் சாஸ் பாட்டில்களைக் கூட எடுத்து வருவார்களாம். அது பற்றி சுவாமி வேடிக்கையாக ”இந்தியாவை கால்நடையாகச் சுற்றியபோது மற்ற துறவிகளைப் பார்த்தேன்.  சைவ உணவு மட்டுமே சாப்பிடுவோம் என்று சொல்லி அவர்கள் கஞ்சா புகைக்கிறார்கள்.  நான் மிளகாய் சாப்பிடுகிறேன்”

நிறையவே புகைக்கும் பழக்கம் உடையவர் சுவாமி.  அது பற்றிக் கேட்கும்போது “நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது அது பழக்கமாகி விட்டது.  விடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்றார். எப்போது? தன் கடைசி காலத்தில்! அட, விவேகானந்தரே புகைத்தாரே, நாம் புகைத்தால் என்ன என்று ஆரம்பிக்கக் கூடாது.  அவர் ஒரு நாளில் 20 மணி நேரம் உழைத்தார்.  தான் இறக்கப் போகும் நாளைக் கூட மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார்.  அப்படிப்பட்டவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். சுவாமிக்கு அதிசயங்களை நிகழ்த்திக் காட்டுவதில் நம்பிக்கை இருந்ததில்லை.  செய்ய முடியாது என்று இல்லை.  ஆனால் அதிசயங்களால் மனித மனதை மேம்படுத்த முடியாது என்றார் அவர்.  இருந்தாலும் பல முறை அவரது யோக சக்தி பற்றி சீடர்கள் அறிந்து வியந்திருக்கிறார்கள்.  ஒருமுறை ”நான் தியானத்தில் இருக்கும்போது என்னைத் தொட்டுப் பார்” என்று அபேதானந்தரிடம் சொன்னார் சுவாமி.  சீடரும் அவர் தியானத்தில் இருந்தபோது அவர் முழங்காலைத் தொட்டார். மின்சார ஒயரைத் தொட்டது போல் ஷாக் அடித்ததாம்.       

1902-ஆம் ஆண்டு தனது 39-ஆவது வயதிலேயே இந்த உடலைத் துறந்து விட்ட விவேகானந்தர் 1899-இல் தன் சீடர் அபேதானந்தாவிடம் “நான் இன்னும் மூன்று ஆண்டுகள்தான் உயிரோடு இருப்பேன்” என்று சொல்லியிருக்கிறார்.  அபேதானந்தா மட்டும் அல்ல, இன்னும் பலரிடம் தன் மரணத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்து விட்டார்.  அதனால் அந்தக் கடைசி மூன்று ஆண்டுகளும் தினமும் 20 மணி நேரம் வேலை செய்திருக்கிறார்.    

ஒவ்வொரு இந்தியருக்கும் விவேகானந்தர் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். ஜாதிப் பிரிவினை, உடன்கட்டை ஏறுதல் போன்ற பழக்கங்களால் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இந்தியா பற்றி வெளிநாட்டில் மோசமான அபிப்பிராயமே நிலவியது. அந்தக் கருத்துக்களை தன்னுடைய ஐந்தே வார்த்தைகளால் மாற்றினார் விவேகானந்தர். அது: Sisters and brothers of America.” அப்படி இந்த வார்த்தைகள் செய்த மந்திர ஜாலம்தான் என்ன?  1893 செப்டம்பர் 11-ஆம் தேதி சிகாகோ நகரில் நடந்த சர்வதேச மாநாட்டில் விவேகானந்தர் தன் பேச்சை அப்படி ஆரம்பித்தார்.  கரகோஷம் ஓய்வதற்கு இரண்டு நிமிடங்கள் எடுத்தன.  அன்றைய சுருக்கமான உரையில் சுவாமி சொன்னதன் சாரம்:  உலகம் இன்னும் அன்பு மயமாக மாறுவதற்கு நாம் இன்னும் அதிகமான சகிப்புத்தன்மையைப் பின்பற்ற வேண்டும்.  நீதியும் அறமும் புனிதமும் ஒரு மதத்துக்கோ ஒரு இனத்துக்கோ உரித்தானது அல்ல.  என் கடவுளே சிறந்தது, என் மதமே சிறந்தது என்று நாம் யாருமே சொல்ல வேண்டாம்.  மற்றவரிடம் உள்ள சிறந்ததை நாம் எடுத்துக் கொள்வோம்…

நன்றி: குமுதம்

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai