உங்களைப் பற்றி... ?
என்னைப் பற்றி என் படைப்புகளின் வழியே அறிந்து கொள்வதுதான் முறையாக இருக்கும்.
படைப்புகள் மூலமாக அல்லாமல் - வெறும் இலக்கியத் தகராறுகள் மூலம் தாங்கள் பரபரப்பு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவே ?
சிந்தனைத் தளத்தில் நடக்கும் விவாதங்களை ' தகராறுகள்' என்று சுருக்குவது வெகுஜனப் பத்திரிக்கைகளின் பார்வை. வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு சிறுபத்திரிக்கைகளில் நடக்கும் எந்தச் செயல்பாடுகளைப் பற்றியும் யாதொரு அறிவும் கிடையாது. கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் உலக இலக்கியத் தரத்துக்கு ஏதேனும் நடந்திருக்கிறது என்றால் அது சிறு பத்திரிகைகள் மூலமாக மட்டும்தான். ஸ்வீடனைச் சேர்ந்த திரைப்பட மேதை பெர்க்மனைப் பற்றி உங்களுக்குத் தெரியவேண்டுமானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் சிறு பத்திரிக்கைகள். எல்லா மொழிகளிலும் வெகுஜனப் பத்திரிகைகள் உண்டு. ஆனால் தமிழ் நாட்டைப் போல் இந்த அளவுக்கு கலை , இலக்கியம் பற்றி எதுவுமே தெரியாத ஞான சூன்யங்களை பிற மொழிகளில் பார்க்க முடியவில்லை. என் பக்கத்து வீட்டிலுள்ள ஒரு மலையாளிக்கு நான் ஒரு எழுத்தாளன் என்று தெரிகிறது. அவர் என் எழுத்தைப் பற்றி என்னுடன் விவாதிக்கிறார். ஆனால் என் வீதியில் உள்ள எந்தத் தமிழருக்கும் நான் ஒரு எழுத்தாளன் என்று தெரியாது. மலையாள இலக்கிய வார இதழ்களில் என் எழுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழில் நான் எழுதிக் கொடுக்க , அதை அவர்கள் மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகின்றனர். I am forced to live as an exile in my own land! இதுதான் இன்றைய தமிழ் எழுத்தாளனின் நிலை.
சினிமா நடிகனின் திருமணத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டு - கோபி கிருஷ்ணன் என்ற அருமையான எழுத்தாளனின் மரணத்தைப் பற்றி எந்தச் செய்தியும் வெளியிடாத ஒரு கலாச்சார சூழலில் எப்படி நான் கலாச்சார சுரணையுணர்வை எதிர்பார்க்க முடியும் ? It's a stinking society. எனவே சிந்தனைத்
தளத்தில் நடக்கும் தத்துவார்த்த விவாதங்களை ' தகராறுகள்' என்று சுருக்கும்
வெகுஜனப் பத்திரிக்கைகளின் மொழியை நீங்களும் பயன்படுத்தாதீர்கள். மேலும் ஒன்று. எனது இணைய தளத்தில் இதுவரை 120 கட்டுரைகள் எழுதியிருப்பேன். மொத்தம் 1000 பக்கங்கள் வரும். இந்த 1000 பக்கங்களில் ஒரு பக்கத்திலாவது நீங்கள் கூறும் தகராறு , பரபரப்பு என்று எதையும் பார்க்க முடியாது.
இணைய இதழ்கள் மூலமாக தமிழ் இலக்கியம் வளரும் வாய்ப்பு உள்ளதா ?
இல்லை. பல இணைய இதழ்கள் குமுதம் , ஆனந்த விகடனின் நீட்சியாகவே உள்ளன. இந்த இணைய இதழ்கள் மூலம் யாரும் எதையும் கற்றுக் கொள்ள முடியாது.
வேறு சில இணைய இதழ்கள் திருவல்லிகேணி பொதுக் கழிப்பிடம் மாதிரி நாறுகின்றன. யார் வேண்டுமானாலும் , எதை வேண்டுமானாலும் இங்கே ' அடித்துச்' சொல்லலாம்.
மூன்று வருட காலம் ஒரு இணைய தளத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்லும் நான்தான் மேற்கண்டவாறு சொல்கிறேன். காரணம் , நிலைமை அப்படி.
பொதுவாகவே விஞ்ஞான முன்னேற்றத்தினால் நமக்குக் கிடைக்க கூடிய சாதனங்கள் பெரும்பாலும் இந்தியாவில் , அதிலும் குறிப்பாக தமிழகத்தில் குப்பைக் கலாச்சாரத்தைப் பெருக்குவதற்கே உதவுகின்றன. சில உதாரணங்களைத் தருகிறேன்.
காகிதம் - Pulp Magazines
வானொலி - அறிவு , கலை, கலாச்சாரம், இலக்கியம் சார்ந்த எல்லாவற்றிலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டு 24 மணி நேரமும் சினிமாப் பாடல்களை ஒளிபரப்புதல்.
தொலைக்காட்சி - சொல்லவே வேண்டியதில்லை. Extension of Tamil Cinema. மேற்கத்திய நாடுகளில் Porn Clubs என்பவை அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட தனியிடங்களில் உள்ளன. இந்தியாவில் அவை தொலைக்காட்சிப் பெட்டி என்ற பெயரில் வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் பெண்ணின் உடம்பை ஒரு நுகர்பொருளாக மாற்றி பெண்ணினத்தைக் கீழ்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது டி.வி.
சினிமா - இலக்கியத்தைப் போன்ற ஒரு மகத்தான கலைச்சாதனமான சினிமா - பெர்க்மன் , கோதார், தார்க்கோவ்ஸ்கி, அகிரா குரசவா போன்ற மேதைகளை உருவாக்கிய சினிமா - தமிழகத்தில் மட்டும் குப்பையாகவும், தமிழ்ச் சமூகத்தை சீரழிக்கும் ஊடகமாகவும் இருந்து வருகிறது.
இதே ரீதியில்தான் கணினி என்ற மிகச் சிறந்த சாதனம் - மனித அறிவுக்கு மிக அதிகபட்ச பயன்பாட்டை உருவாக்கித் தந்திருக்கும் சாதனம் - தமிழர்களுக்கு மட்டும் வேறுவிதமாக உபயோகமாகி வருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் என் கற்பனைக்கே சாத்தியமாகியிராத விஷயங்கள் நொடிப்பொழுதில் இன்று என் கரங்களில் கிடைக்கிறது. உதாரணமாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க்கர் , கெய்ரோவிலிருந்து வரும் அல் அஹ்ரம் போன்ற பத்திரிகைகளை கணினியின் உதவியின்றி நான் வாசிக்க முடியுமா? அமெரிக்கப் பல்கலைக் கழக நூலகங்களுக்கு கணினி மூலமாகவே சென்று அங்குள்ள புத்தகங்களை என்னால் இப்போது வாசிக்க முடிகிறது. கி.மூ ஆறாம் நூற்றாண்டின் கிரேக்க நாடகங்களிலிருந்து இன்றைய வோலே ஸோயிங்கா வரை கணினியிலேயே நான் படித்து விடுகிறேன். ஆனால் தமிழகத்தில் கணினியின் பயன்பாடு என்ன என்பதை நீங்கள் எந்த கணினி மையத்துக்கு வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம். பாரிஸ் நகரத்தில் நான் பார்த்த செக்ஸ் க்ளப்புகளை இக்கணினி மையங்கள் எனக்கு ஞாபகப்படுத்துகின்றன. எனவே தமிழ் இணைய இதழ்களால் இலக்கியம் வளரும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
.jpg)
இன்றைய இளைஞர்களிடையே வாசிக்கும் பழக்கம் எப்படி இருக்கிறது ?
பெரும்பாலான இளைஞர்களுக்கு தமிழும் தெரியவில்லை , ஆங்கிலமும் தெரியவில்லை. இன்றைய கலாச்சார சீரழிவின் அங்கமாகவே இன்றைய கல்லூரிகளையும் நான் பார்க்கிறேன். உதாரணமாக கல்லூரித் தேர்தல்களை எடுத்துக் கொள்ளுங்கள்... மாணவர்களிடையே ரத்த ஆறு ஓடுகிறது. இந்தியா - பாகிஸ்தான் சண்டை மாதிரி ஒரு கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் சண்டை. ஒரு தேசத்துக்குள்ளேயே தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் ஏற்படும் சண்டையைப் போல் ஒரு பஸ் ரூட்டுக்கும் இன்னொரு ரூட்டுக்கும் சண்டை. 7 C ரூட் - கர்நாடகா ; 10 C ரூட் - தமிழ்நாடு. ஒரே கல்லூரிக்குள் பல்வேறு பஸ் ரூட்டில் வருபவர்களுக்குள் சண்டை. வெட்டி மல்லாந்து போகிறார்கள். தில்லியிலுள்ள செயின்ட் ஸ்டீஃபன் கல்லூரி , ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்றவற்றின் கல்வித் தரத்தோடு இங்குள்ள கல்லூரிகளை நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். தில்லி ஜெ.என்.யூ.வில் தெரிதா போன்ற சிந்தனையாளர்களை வரவழைத்துப பேசச் செய்கின்றனர். ஆனால் இங்கே அந்தத் துறைப் பேராசிரியர்களுக்கு தெரிதாவின் பெயர் கூடத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்.
சமூகம் எவ்வழி ; இளைஞர் அவ்வழி.
நான் இளைஞர்களைக் குற்றம் சொல்ல மாட்டேன். அவர்களின் இன்றைய நிலைக்கு முழுமையான காரணம் , பெற்றோரும் ஆசிரியருமே ஆவர். மேலும், மொழியறிவு இல்லாத ஒரு சமுதாயத்தினால் எதையுமே சாதிக்க முடியாது என்பது என் திண்ணமான முடிவு.
தமிழில் ஒரு குறிப்பிட எழுத்தாளராக வலம் வந்த தாங்கள், 'நதியின் சரிதம்' போன்ற தொடர் எழுத நேர்ந்தது ஏன்?
ஒரு நாவலும் இரண்டு சிறுகதைகளும் எழுதியுள்ள ஒரு 25 வயது இளைஞனிடம் கேட்க வேண்டிய கேள்வியை 25 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் என்னிடம் கேட்கிறீர்கள்.
சினிமா, இசை, ஓவியம், நடனம், அரசியல், தத்துவம் என்று பல துறைகளில் நான் எழுதியுள்ள கட்டுரைகள் தொகுக்கப்பட்டால் பத்து தொகுதிகளாக வரக் கூடியவை. அத்தகைய என் எழுத்தோடு பரிச்சயமற்றவர்களே ' நதியின் சரிதம்' பற்றி கேள்வி எழுப்பக் கூடும். தமிழில் எழுத்து சோறு போடாது. அரசாங்க வேலையை ராஜினாமா செய்து விட்டு சோற்றுக்காக அலைந்த போது ' நதியின் சரிதம்' மட்டுமல்ல; சினிமா நடிகைகளை வைத்து கிசுகிசுக்களும் எழுதியிருக்கிறேன்.
உயிர்மை, காலச்சுவடு, தீராநதி, புதிய பார்வை போன்ற Middle Magazines க்கு வாசகர்களுடைய வரவேற்பு உள்ளதா ? இது போன்ற பத்திரிக்கைகள் ' புதுசு...கண்ணா...புதுசு...' போட்டியை சமாளிக்குமா?
இந்தப் போட்டிகளைப் பற்றிக் கவலைப் படுவதெல்லாம் ஒரு எழுத்தாளனின் வேலையல்ல. இலக்கியம் என்பது மாபெரும் கானகத்தினிடையே தென்படும் அருவி. அதைப் பார்க்க வேண்டுமானால் , சில பல சிரமங்களை மேற்கொண்டு கானகத்தின் உள்ளே சென்றால்தான் முடியும். இல்லையேல் வெளியிலிருந்தே பார்த்து விட்டு நீங்கள் உங்களுக்குப் பிரியமான பீட்ஸா கார்னரை நோக்கி நடக்கலாம். ஒரு எழுத்தாளனான நான் உங்களைத் தடுக்க மாட்டேன்.
' அரும்பு' வாசகர்களுக்கு உங்கள் சார்பில் சொல்ல விரும்புவது?
எந்த வேலையில் ஈடுபட்டாலும் அது ஒரு நாளில் பத்து முதல் பன்னிரண்டு மணி நேர உழைப்பை வேண்டி நிற்கிறது. அதை மனதில் கொள்ளுங்கள். எது உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ அதைச் செய்யுங்கள். விருப்பமில்லாத ஒன்றில் எந்த நிர்பந்தமும் கருதி ஈடுபடாதீர்கள்.
சந்திப்பு – அப்சல்
நன்றி: அரும்பு மாத இதழ்
ஜனவரி 2005
|